புவியரசரும் கவியரசரும்

புவியரசரும் கவியரசரும்

தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு  தஞ்சாவூரிலேயே தங்கியிருந்து  கி.பி. 1676 முதல் 1855 வரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்களுள் இரண்டாம் சரபோஜி முக்கியவானவர்.  இவர் 1798 முதல் 1832 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளார்.  ஸ்வார்ட்ஸ் பாதிரியாருடன் மிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த இரண்டாம் துளஜா மன்னர் தனக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தினால் கி.பி. 1787-இல் சரபோஜியை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொண்டார்.
÷சரபோஜி அரசுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னமேயே ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இவ்வுலக வாழ்வை விட்டுச் சென்று விட்டார்.
÷சரபோஜி தன் ஆசிரியர் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடமிருந்து ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல மொழிகளைக் கற்றுக் கொண்டார்.  மராட்டி, தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சிறந்த கல்வியறிவு உடைய இவர் தமிழ், சம்ஸ்கிருதம், மராட்டி ஆகிய மொழிகளில் 19 நூல்கள் வரை இயற்றியிருக்கிறார்.
÷அரசியல் ஈடுபாடு அதிகம் இல்லாத காரணத்தினால் இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், மருத்துவம், சோதிடம், வான்நூற்கலை போன்ற பல்வேறு கலைகளில் ஆர்வம் காட்டி, அவற்றைக் கற்பதிலும் அக்கலைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதிலும் தம் வாழ்நாளைச் செலவிட்டிருக்கிறார்.
÷திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலியில் சைவ வேளாளர் மரபில் பிறந்த வேதநாயகர், ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அழைப்பின் பேரில் அவருடன் தஞ்சாவூருக்கு வந்தார். சரபோஜியும், வேதநாயகரும் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் இணைந்தே கல்வி கற்றனர்.  வேதநாயகர் பாதிரியாரின் இல்லத்திலேயே தங்கியிருந்து கல்வி கற்றார். இருவரில் வேதநாயகர் சரபோஜியைவிட மூன்று வயது மூத்தவர்.  அதனால், சரபோஜி வேதநாயகரை "அண்ணா' என்றே அன்புடன் அழைத்து வரலானார்.
÷சரபோஜி அரசுப் பொறுப்பை ஏற்றவுடன் தம் அவைக்களப் புலவர்களில் வேதநாயகருக்கும் வாய்ப்பளித்தார். அரசகவியாக, சமஸ்தான வித்துவானாக நியமித்தார். வேதநாயகருக்குக் குடியிருப்பதற்கு நிலமும் ஆண்டுதோறும் ஐம்பது வராகனும் அளித்தார். அரசகவியான பின் திங்கள்தோறும் ரூ.35 சம்பளமாகக் கொடுப்பதற்கு ஒழுங்கு செய்தார்.
÷நோவாவின் கப்பல் பாட்டை இயற்றி சரபோஜியின் முன்னிலையில், வேதநாயகர் பாட்டொன்று பாடி,
 மிக்க சரபோ சேந்திரன் மன்னவன் கேட்க (நோவாவின் பேழை)
சாத்திரக் கப்பற் றமிழரங் கேற்றித்
தஞ்சை அயினசு சரபோசேந்திரன் வாழ்க (நோவாவின் பேழை)
என்று பாடியதைக் கேட்ட மன்னர் மகிழ்ந்து 100 வராகன் பரிசிலாக அளித்தார். அதன்பின்னர் ஜே.சி. கோலேப்பையரின் அனுமதிப்படி பெத்லகேங் குறவஞ்சியை எழுதிய வேதநாயகர், சரபோஜி முன்னிலையில் அவையில் அரங்கேற்றினார். சரபோஜி 1832-இல் இயற்கை எய்தியபோது உள்ளமுருகி,
""அன்னையும் பிதாவோ மன்னவா நீயோ
அதிகமார் என்பதை அறியேன்...''
என்று பாடிய கையறுநிலைப் பாடலைக்
கேட்டு கூடியிருந்தோர் கண்கள் எல்லாம் குளமாயின.
÷புவியரசரும் கவியரசரும் தம் ஆசிரியர் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஆழ்ந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்தனர். வேதநாயகர் தாம் பாடிய பல பனுவல்களில் தம் ஆசிரியரைப் பாராட்டிப் போற்றிக் கூறியுள்ளார். எலிசாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்து நாளடைவில் இடையறாது கிரியை செய்தது போலவே, பெரும் விசுவாசியான ஸ்வார்ட்ஸ் பாதிரியாருடைய ஐரோப்பியச் சால்வை வேதநாயகர் மேல் விழுந்தது. இதுவே பிற்காலத்தில் வேதநாயகர் பல பனுவல்களை இயற்றுவதற்கு ஏதுவாக இருந்தது.
÷நெல்லையிலிருந்து தஞ்சாவூருக்குக் கொண்டு வந்த சிறிய 11 வயதுச் செடியான வேதநாயகர் 91 வயது வரை ஆண்டவருக்கு மகிமையாகத் தஞ்சாவூரிலேயே வேரூன்றி உழைத்து, தம் பெயருக்குப் புகழைச் சூட்டுவிக்கும் கவியரசராகத் திகழ்வதற்கு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் பெரிதும் காரணமாயிருந்தார். ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றித் தமிழ் இலக்கிய உலகில் ஏற்றதோரிடத்தைப் பெற்றுள்ளார்.
÷சரபோஜி பன்மொழிப் புலவராகத் திகழ்ந்ததுடன் அமையாமல், சரசுவதி மகால் நூலகத்தை மிகச்சிறந்ததொரு நூல்நிலையமாக மாற்றியிருக்கிறார். மருத்துவத்தில் சிறந்த ஆர்வம் காட்டிய மன்னர் தஞ்சாவூரில் இந்திய மருந்தகம் ஒன்றையும் மேலைநாட்டு மருந்தகம் ஒன்றையும் அமைத்து அவற்றுக்குப் பல நல்கைகளையும் தந்துள்ளார்.
÷திருவையாற்றில் தமிழும் சம்ஸ்கிருதமும் இசையும் கற்பிக்கும் கல்லூரியை நிறுவியிருக்கிறார். தம் அவைக்களத்தில் பன்மொழிப் புலவர்களுக்கு ஆதரவு நல்கியிருக்கின்றார். இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் இருந்த மிகச்சிறந்த இசைவாணர்கள், அறிஞர்கள் முதலானோரை தஞ்சாவூருக்கு வரவழைத்து அவர்களுக்குப் பல சிறப்புகளைச் செய்திருக்கிறார்.
÷இவ்வாறு புவியரசராகிய சரபோஜியும் கவியரசராகிய வேதநாயகரும் பல அரும் பணிகளைத் தமிழுலகுக்கு ஆற்றியுள்ளனர்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்