Saturday, September 22, 2018

வன்மை எனக்குஅருள்வாய்! – இளவல்

அகரமுதல

வன்மை எனக்குஅருள்வாய் !

அன்புள்ள இறைவனே
என்வேண்டுதல் கேட்டருள்வாய்
வன்மை எனக்குஅருள்வாய் – நீ
எண்ணும் முடிவை ஏற்பதற்கு
பொறுத்தருள்வாய் என்னை நீ – நான்
வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின்
எனை அழைத்திடல் ஏற்றதென
நினைத்திடில் உடனே நீ
வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல்
கழிபேரன்பு கொண்டோர்க்கே
என்றனுக்கு உதவிடுவாய்
தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே
ஏனென்று கேட்பையோ
உன்விழைவே சாலச்சிறந்ததுஎன
ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும்
உதவிடுவாய்  ஓ இறைவா
அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய்
உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும்
அச்சத்தினாலன்று
என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே

– இளவல்

Tuesday, September 18, 2018

பெரியார் யார்? – கவிவேந்தர் கா.வேழவேந்தன்

அகரமுதல

பெரியார் யார்? 


மலம் அள்ளும் தொழிலாளி இல்லாவிட்டால்,
வாழும் ஊர் நாறிவிடும்; மேலும் மேலும்
பலதொற்று நோய்களெலாம் பரவும்; வாட்டும்!
பல்வேறு வகை உடைகள் சுமந்து சென்று
சலவைசெயும் பாட்டாளி இல்லையென்றால்
தனித்தோற்றம் நமக்கேது? எழிலும் ஏது?
விலங்கினின்று வேறுபட்டோன் மனிதன் என்னும்
விழுமியம்தான் நமக்குண்டா? பொலிவும் உண்டா?
சிகைதிருத்தி அழகூட்டும் உயர்பாட் டாளி
திருநாட்டில் இல்லாமற் போனால், நாமும்
குகைமனிதக் குரங்குகள்போல், கரடி கள்போல்
கொடுமைமிகு தோற்றமுடன் இருப்போம்! நன்கு
வகைவகையாய் உடைநெய்து எழிலைச் சேர்க்கும்
வண்மைமிகு நெசவாளி இல்லா விட்டால்,
அகம்மகிழ அணிகின்ற ஆடை ஏது?
அன்றாட நாகரிகம் தழைத்தல் ஏது?
வசிப்பதற்கே வீடுகட்டும் நற்பாட் டாளி
மண்மீது இலையென்றால் காப்பும் ஏது?
பசியோட்டும் ஏருழவன் இல்லா விட்டால்,
பாரகத்தில் உயிர்ஏது? உலகே ஏது?
விசித்திரமாய் இவரெல்லாம் ‘சூத்திரர்’ என்றார்
வீண்வருண ஆரியர்கள்! ‘கீழோர்’ என்றார்!
பொசுக்கிட்டார் அவர்வாதம் பெரியார்! வீரப்
புரட்சியினால் ‘சமநீதி’ பெற்றுத் தந்தார்!
கவிஞர் வேழவேந்தன்
கவிவேந்தர் கா.வேழவேந்தன் (முன்னாள் அமைச்சர்)
விடுதலை 16.09.2018
 

Monday, September 17, 2018

வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே! – கவிஞர் கலி.பூங்குன்றன்

அகரமுதல

வாழ்க எங்கள் பெரியாரே! வீழ்க ஆரியப் புரியாரே!

ஆடு மாடு ஆடு மாடு
ஓட்டி வந்த ஓட்டி வந்த
இலம்பாடிக் கூட்டம் ஒன்று
இலம்பாடிக் கூட்டம் ஒன்று
இந்துத்துவா என்று சொல்லி
இந்துத்துவா என்று சொல்லி
மேயப்பார்த்தது!
ஈரோட்டுக் கையிருப்பு
ஈரோட்டுக் கையிருப்பு
கனலைக் கண்டதும்
கனலைக் கண்டதும்
தலைதெறிக்க தலைதெறிக்க
ஓட்டம் பிடித்தது.
இப்பொழுதோ இப்பொழுதோ
குலுக்கி மினுக்கி
குலுக்கி மினுக்கி
ஆன்மிக மோகினியாக
ஆன்மிக மோகினியாக
ஆலிங்கனம் ஆலிங்கனம்
செய்யத் துடிக்குது – ஆரியம்
செய்யத் துடிக்குது!
எந்த வேடம் எந்த வேடம்
போட்டாலென்ன, போட்டாலென்ன
குத்திக் கிழித்தால் குத்திக் கிழித்தால்
கூடிக் குலவும் கூடிக் குலவும்
ஈறும்பேனும் ஈறும்பேனும்
பார்ப்பனீயமே!
ஆர்.எசு.எசு. என்றாலும் ஆர்.எசு.எசு. என்றாலும்
பா. ச.க. என்றாலும் பா. ச.க. என்றாலும்
இரத்தம் குடிக்கும் இரத்தம் குடிக்கும்
பார்ப்பனீய பார்ப்பனீய
மூட்டைப் பூச்சிகளே!
முக மூடிகளை முக மூடிகளை
மாற்றினாலும் மாற்றினாலும்
ஈரோட்டு நுண்ணாடி
ஈரோட்டு நுண்ணாடி
இருக்கும் வரை இருக்கும் வரை
பலிக்காது பலிக்காது
பார்ப்பனரின் பார்ப்பனரின்
பாஞ்சாலித்தனமே!
கலைஞரும் கலைஞரும்
கண்மூடினார் கண்மூடினார்
கன்னக்கோல் வைக்கலாம்
கன்னக்கோல் வைக்கலாமென்று
கணக்குப் போட்டாலோ கணக்குப் போட்டாலோ
கணக்கு முடிக்க கணக்கு முடிக்க
கருஞ்சட்டைப் பட்டாளம்
கருஞ்சட்டைப் பட்டாளம்
 தயார் தயார் தயார் தானே!
ஒரு நடிகரின் ஒரு நடிகரின்
புழக்கடையில் புழக்கடையில்
தவம் கிடக்கும்
தவம் கிடக்கும்
காவிக் கூட்டமாம் காவிக் கூட்டமாம்
புளியோதரைகள் புளியோதரைகள்
புலிகளிடம் புலிகளிடம்
பூச்சிக் காட்டுவதா?
புறப்பட்ட இடத்திற்கே புறப்பட்ட இடத்திற்கே
போக வேண்டும் போக வேண்டும்
எச்சரிக்கையே!
பெரியாரின் பெரியாரின்
போர்க்குணத்தை போர்க்குணத்தை
இந்தியாவின் இந்தியாவின்
மண்ணெல்லாம் மண்ணெல்லாம்
கொண்டு செல்வோமே!
இந்தியாவின் இந்தியாவின்
பெயர் மாறி பெயர் மாறி
ஈரோடென்னும் ஈரோடென்னும்
கொடி பறக்கும், கொடி பறக்குமே!
வாழ்க நம் பெரியாரே!
வீழ்க ஆரியப் புரியாரே!
-கவிஞர் கலி.பூங்குன்றன்
விடுதலை 17.09.2018 ஞாயிறுமலர் பக்கம் 1

Sunday, September 16, 2018

பெரியாரைப் படி! உரிமையைப் பிடி! – கவிஞர் கண்மதியன்

அகரமுதல

இளைய சமூகமே!

பெரியாரைப் படி!

எரிமலையாய் எழுந்துன்

 உரிமையைப் பிடி!


காற்றும் மழையும் புயலும் – இங்கே
காண்ப துண்டோ நாட்டின் எல்லை? ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த
இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை? போற்றும் மனித நேயம் – ஒன்றே
புத்தியில் கொண்ட தந்தை பெரியார்
ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’
இம்மண் கண்ட மானுட ஏக்கம்!

கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த
மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார்!
விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும்!
மேற்கிலோர் கதிரோன் சென்றால் இங்கே
கிழக்கிலோர் கதிரோன் பெரியார் – வந்தார்!
கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கென்(று)
உலகெலாம் பெரியார் பகுத்தறிவு – வெளிச்சம்
உலாவர மடமைகள் பூண்ட(து) அச்சம்!

உயரத்தி லிருந்து கண்ணன் – என்பான்
ஓதிய தாக உளறி வைத்த
உயர்ந்தான் தாழ்ந்தான் என்னும் – ஆரியர்
உளுத்துப் போன வர்ண பேதக்
கயமை நெறிகள் யாவும் – பெரியார்
கடைக்கண் பார்வை கண்ட போது
புயலில் சிக்கிச் சாய்ந்த – அந்தப்
பூவாழை மரமாய்ப் பிய்ந்து போனது!

சாதி மதங்கள் இருக்கும் – வரையில்
சரித்திரச் சண்டைகள் இருந்தே தீரும்!
நீதியின் நிழலாய் இருக்கும் – பெரியார்
நிமிர்ந்துள இமயம் ஆவார்! யாரும் மோதிடின் பொடியாய்ப் போவார்! – ஆல
மரத்தை அருகுபுல் ஆட்டல் உண்டோ ? வேத மந்திர மாய- மான்கள் வேட்டைப்புலியிடம் மீளல் உண்டோ ?

கடவுளர் கதைகள் வீழ்த்திய – பெரியார்!
கண்களில் பகுத்தறிவைப் பாய்ச்சிய பெரியார்!
மடமைப் பழமைகள் மாற்றிய – பெரியார்!
மானுடர் காதல்மணம் மலர்த்திய பெரியார்!
இடஒதுக் கீட்டைக் கொணர்ந்த – பெரியார்!
ஏளனப் பெண்ணடிமை ஒழித்த பெரியார்!
மடைதிற வெள்ளமாய்க் குறளொளி- ஏற்றி
மனஇருள் கீதையை மாய்த்த பெரியார்!

பெரியார்போல் மண்ணில் பிறந்தார் – இல்லை!
பெரியார்போல் பதவிகள் துறந்தார் இல்லை!
பெரியார்போல் வாழ்ந்து காட்டினார் – இல்லை!
பெரியார்போல் பகுத்தறி வூட்டினார் இல்லை!
பெரியாரே உலகப் பகுத்தறி(வு) – எல்லை!
பெரியாரே ஆரியப் பாம்புக்குத் தொல்லை!
பெரியாரை இளைய சமூக – மேபடி!
எரிமலையாய் எழுந்துன் உரிமை யைப்பிடி!
– கவிஞர் கண்மதியன்
கவிஞர் கண்மதியன்
கவிஞர் கண்மதியன்
விடுதலை 16.09.2018

மறைமலையடிகள் – சிராப்பள்ளி மாதேவன்

அகரமுதல

மறைமலை என்னும் மாமலையே

சிராப்பள்ளி மாதேவன்

Saturday, September 15, 2018

தமிழ் – ச.சுதாகர்தமிழ்

தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட
அமிலம் போல் ஆசை நெஞ்சரிக்க,
தொடங்கினேன் கற்க தொல் காப்பியம்.
குடம்தேன் எறும்பு குடிக்க முயல்வதுபோல்
எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்;
என் உயிர் உள்ள வரை,
உணவு போல் உயிர்மொழித் தமிழை
மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே!
ச.சுதாகர்

Friday, September 14, 2018

எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்

 அகரமுதல

எம்மை மகிழ்விப்பாய்!


என் எழுதுகோல் களத்தில்
உன்பெயர்தான் முளைக்கிறது
என் இதழ்ச் செடியில்
உன்பெயர்தான் பூக்கிறது
என் மன ஊஞ்சலில்
உன்பெயர்தான் ஆடுகிறது
என் கண்ஆடிகளில்
உன்பெயர்தான் தெரிகிறது
என் செவி மணிகளில்
உன்பெயர்தான் ஒலிக்கிறது
என் புத்தகத் தோட்டத்தில்
உன்பெயர்தான் மணக்கிறது
என் இல்லக் கோயிலில்
உன்பெயர்தான் குடியுள்ளது
என் எண்ண வானத்தில்
உன்பெயர்தான் பறக்கிறது
என் வாணாளில் வந்து
எம்மை மகிழ்விப்பாய்!

– இளவல்