Monday, November 20, 2017

வேண்டா வரன் கொடை! – சி. செயபாரதன்


வேண்டா வரன் கொடை!   1. பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித்
தாயோ கருவழிப்பாள்  தான்விரும்பி !  – காயிலே
பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ?
கண்ணிரண்டும்  போன கதை !

 1. ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
சூழத்தீ  இட்டது கண்ணகிக்கு ! – வாழாது
மீண்டும் நகைச்சண்டை !  மேனியில்தீ  தங்கைக்கு !
வேண்டாம் வரதட் சணை !

 1. தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் !
கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப
ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுள்ள தாசனே !
வேண்டாம் வரதட் சணை !
அறிவியலர் சி . செயபாரதன், கனடா

எம்மை ஆள எமக்குத் தெரியும்! – ம.குமரவேல்


எம்மை ஆள எமக்குத் தெரியும்!


வடவோர்சிலர் தமிழோர் தமை
வதையே புரிகுவதா – இறை
மதவோர் பலர் இனமோர் நமை
இழிவெனப் பழிப்பதுவா
கரமோடு உளிசெய் நம்கடவுளர்
கருவறை தடுப்பதுவா – மறை
களவொடு சதிசெய் நால்வருணம்
நம்கருப்பத்தில் விதிப்பதுவா
இறையாண்மை இலா மண்ணில்
இருப்பது இறைத்தன்மையா
முறைசாரா முடிமன்னன் தில்லி
வீணமர்வது பழந்தமிழருக்கா
பயனிலாத்தமிழுடன் பண்ணிலா
இசையும் இங்கு பலன்தருமா
பதவிஆசையில் தமிழ்த்துரோகம்
செய்யப்பன்றிகளும் மேவுமா
ஆளுநர் உயர்சாதி தனிஅதிகாரி
உயர்சாதி நீதியரசரும் அரசுத்
தலைமைச் செயலரும் இவர்சாதி
உறங்குதே தமிழ்ச்சாதி தெருவீதி
மறவோர் நாம் திறவோர் நாம்
மறந்தே உறங்குவதா- மதி
பிறழ்வோர் சிரம்தாழ்த்த கரம்
உயர்த்தத் தயங்குவதா
கடுவெள்ளம் காவிரிகண்டதுபோல்
கரைமோதும் அலையெனவே
இடுகாட்டுக்கு இவரை அனுப்பவே
பறைசொல்லிப் பாடுவோமே
கடும் சிலம்பினைஎடடா – கயவர்
விடும் புராணப்புரட்டு இடிடா
தொடக் கைகழுவும் சூதுநிறை
கள்ளரைத் தூரத்தே நிறுத்தடா
ஐந்திணைக்கூட்டம் நாமடா- வட
ஆரியர் ஆதிக்கம் நிறுத்தடா
பைந்தமிழ் வீரம் மானம் காதலை
தகவல் உலகுக்குக் காட்டடா!
– முனைவர் ம.குமரவேல்

Sunday, November 19, 2017

உறக்கம் வருமோ? சொல்வீர்! – மறைமலை இலக்குவனார்

உறக்கம் வருமோசொல்வீர்!


எரிக்கும் வறுமைத் துயர் தாளாமல்
எரியில் மூழ்கிச் சாகத் துடிக்கும்
தமிழ்க்குடி மக்களின் அவலம் ஒருபுறம்;
கல்வி பயின்றிடப் பொருளைத் தேடிக்
கழுத்தை நெரித்திடும் வங்கிக் கடனால்
அல்லலுற்றிடும் மாணவர் ஒருபுறம்;
விரும்பிய கல்வியை வேண்டிப் பெற்றிட
வழியில்லாமல் வாடி வதங்கித்
தற்கொலைக் குழியில் அமிழ்ந்து அழிந்திடும்
பச்சிளங் குருத்துகள் படுதுயர் ஒருபுறம்;
வாடிய பயிரைக் கண்டது,ம் வருந்திச்
சாவூர் சென்றிடும் உழவர் ஒருபுறம்;;
வேலை தேடியே சாலையில் நின்றிடும்
இளைஞர் துன்ப ஓலம் ஒருபுறம்;
துயருறும் மக்கள் அயர்வைப் போக்கிட
வழியெதும் காணா ஆட்சியர் ஒருபுறம்;
இழவொலி கேளாமல் இரும்பு நெஞ்சுடன்
விழாவில் மூழ்கும் இளைஞர் ஒருபுறம்;
ஒப்பனை செய்தே திரையில் வலம்வரும்
மினுக்கிகள் எல்லாம் புத்தரைப் போன்றும்
வள்ளலார் போன்றும் வேடம் அணிந்து
அரசியல் பேசும் நாடகம் ஒருபுறம்;
நாடு நலன்பெறும் நல்வழி நோக்கா
ஊடக வல்லுநர் உண்மை மறந்து
கேடெலாம் சூழ்ந்திடக் கெடுமதி கொண்டே
விட்டில் மனிதர்க்கே விளம்பரம் நல்கிடும்
தொல்லைக் காட்சிகள் பரப்புதல் மறுபுறம்;
உய்வும் உண்டோ? மெய்யும் பொய்யும்
பகுத்துப் பார்த்து விடிவு காண்பரா?
விளம்பர வெளிச்சம் கண்ணை மறைக்குமோ?
தெரிந்தே வீழ்வரோ அழிவுப் படுகுழியில்?
என்றே எண்ணிக் கவலையில் மாழ்கும்
எனக்கு உறக்கம் வருமோ? சொல்வீர்!
(உறக்கமே வராமல் இரவைக் கழித்து வைகறையில் இட்ட பதிவு)
 
 • பேரா.முனைவர் மறைமலை  இலக்குவனா

கசங்கிய காகிதங்களின் கருணைமனு – தமிழ்சிவா

கசங்கிய காகிதங்களின் கருணைமனு


 • நகர நரகத்தில்
கைவிடப்பட்ட கட்டடங்களாய்,
தூய்மையையே காணாத கழிவறைகளாய்,
தூய்மை இந்தியாவில் நாங்கள்!

 • நகரத் திராணியற்ற
நத்தையின் முதுகில்
நான்காயிரம் பலமேற்றியதில்
கல்வி வண்டி கவிழ்ந்தது
எங்கள்மேல்தான்!

 • அந்த இண்டு இடுக்கில்
எட்டிப்பார்த்தவேளையில்
காலைத் திணிக்க இரண்டுறைகள்
நூல்களைத் திணிக்கப் பையுறை
உங்கள் விருப்பத்தைத் திணிக்க நாங்கள்
எங்களைத் திணிக்கப் பள்ளி உந்துகள்
கழுத்துக்குக் கோவணம் மாட்டி
மூளையை அம்மணமாக்கினீர்கள்!

 • எங்கள் நாக்கைக் கசக்கியதில்
நாண்டுகொண்டது எங்கள் மொழி!

 • பள்ளிக்கழிவறையில்
பதைத்துச் செத்தது எங்களுயிர்
அடுக்குமாடி வன்புணர்ச்சியில்
அழுது செத்தது எங்களுயிர்
மாவட்ட ஆட்சியகத்தில்
எரிந்து செத்தது எங்களுயிர்
அகதிகளின் நாட்டில்
அழுகிச் செத்தவையும் எங்களுயிர்களே!

 • மக்கா!
கும்பகோணத்தில்
கருகிச் செத்தவையும்
விடுதலை செய்யப்பட்டபோது
வீறிட்டுச் செத்தவையும் எங்களுயிர்களே!

 • மருத்துவமனையில் உயிர்வளியின்றிக்
கொல்லப்பட்டவையும் எங்களுயிர்களே!

 • கக்கத்தில் இந்தி்(யை)ய வரைபடத்தை இடுக்கிய
காகிதப்பூ “மாமா” காலத்தில்
உரோசாப்பூ மாமாவின் பிறந்தநாள்
குழந்தைமையின் துக்கநாளே!

 • சட்டத்தின் சட்டையில்
சல்லடையாய் ஓட்டைகள்
அதில் கசடுகள் மேலே
கண்ணியங்கள் அதனினும் அதனினும் கீழே கீழே!

 • ஆழ்துளைக் கிணறுகளின்
ஆழத்தில் அழிவதும் எங்களுயிர்
பாலச்சந்திரனாய் மாறித்
துவக்குகளின்
எச்சிலை ஏற்பதும் எங்களுயிர்களே!

 • எல்லா வன்முறைகளின்
சோதனைக்கூடங்கள் நாங்கள்
உங்கள்
சாதனை மண்டபச் சவப்பெட்டியில்
பங்குவைக்கப்பட்ட
பச்சைத் தசைத் துண்டங்கள் நாங்கள்

 • வெட்டியெடுத்த பாறை வடுக்களில்
தேங்கிய நீரில்
மிதப்பதும் நாங்கள்
செஞ்சோலையில் புதைந்த
பூங்குயில்களும் நாங்களே!

 • வாழவழியற்றுத்
திருவோட்டுத் தெருவில்
திரிபவர்களும் நாங்களே
சாக வழியற்றுச்
சாக்கடையோரத்தில் தவம்புரியும்
சந்தனங்களும் நாங்களே!

 • கசங்கிய காகிதங்களில் கருணைமனு
உங்கள் காலடியில்
வழக்கம்போல்…. வழக்கம்போல்…
மிதித்துப் பழகுங்கள் மேதைகளே!!

படையல்வாழாமல் வாழ்ந்து மடிவிக்கப்பட்ட  மழலைகளுக்கு

                                  
   தமிழ்சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம்,
மதுரை-625009.
மின்வரி : lakshmibharathiphd@gmail.com

Saturday, November 18, 2017

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார்


இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  02–  சி.இலக்குவனார்

ஆ. பதிப்புரை  & நன்றியுரை


பதிப்புரை(2002)

     தமிழின் தொன்மைச் சிறப்பையும், முதன்மைச் சிறப்பையும், தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும்  உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே!
  சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல்  சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியத்தையும்   அறியும் வாய்ப்பைப் பெற்றிருப்பின் தமிழ் உலக மொழிகளின் தாய் என்பதை நிறுவி இருப்பார் எனப் பன்முறை எடுத்து இயம்பியவர். எனவேதான், தமிழ் இலக்கியமே பழந்தமிழர் வரலாறு அறிவிக்கும் மூலங்களுள் முதன்மையானது  என்பதைக் கூறி  வரலாற்று ஆசிரியர்கள் தமிழ் இலக்கிய அறிவு பெற வேண்டும் என வலியுறுத்தியவர், இன்றைய இலக்கிய எழுத்தோவியர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவரும் பேராசிரியப் பெருந்தகை முனைவர் சி. இலக்குவனார் அவர்கள்தாம்.
  புலவர்களில் பலரே சங்க இலக்கியச் சிறப்பை அறிந்திராத சூழலை மாற்றிப் பொது மக்களும் சங்க இலக்கியங்கள் பற்றி அறியப் பெரும் பேராசிரியர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. இவற்றிற்கு அடிப்படையான நிகழ்வினைப் பேராசிரியர் வரிகளிலேயே  பின்வருமாறு  குறிப்பிடவிழைகின்றேன்:
  “வட்டத் தொட்டிக் குழுவினர் முதன்மையாக இருந்து கம்பர் விழா ஒன்றை நடத்தினர். அவ் விழாவில் சொற்பொழிவாற்றிய திரு. திரிமூர்த்தி என்பார் சங்க இலக்கியங்களை  வங்காளக் குடாக் கடலில் போட வேண்டும்; இரும்புக் கடலை போன்ற அவை யாருக்கு வேண்டும் என்று குறிப்பிட்டார். அங்கு கூடியிருந்த தமிழர் கை கொட்டி ஆர்ப்பரித்து அவ்வுரையை வரவேற்றனர். சங்க இலக்கியத்தின் இனிமையை அறியாததால் அவ்வாறு செய்தனர். கம்பரே சங்க இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றவர் என்பதையும் அவர் அறியார். சங்க இலக்கியக் கடலில் முழுகி எழுந்ததால்தான் இராமாயணத்தை இனிய தமிழில் அவரால் எழுத முயன்றது என்பதனையும் அறிந்திலர். சங்க இலக்கியக் காலமே தமிழிலக்கியத்தின்  ஏன், தமிழர்களின் பொற்காலம். இருபதாம் நூற்றாண்டின் மேலைநாட்டு உயர்ந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டு எண்ணத்தகும் பெருமை படைத்தவை  அவை; இயற்கையையும் மக்கள் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை.  உயர்நலமும் இனிமையும் எழிலும் கொண்டு விளங்கும் சங்க இலக்கியமாம் தமிழர் கருவூலத்தைக் கடலில் கொட்ட வேண்டுமென்று இவர் கூறுதலும் அதனைத் தமிழர்களே வரவேற்பதும் என்ன பேதைமை! சங்க இலக்கியத்தைக் கற்று அதன் இலக்கியத்தைப்பற்றி மக்கள்  அறியுமாறு செய்தலே என் கடனாகும் என்று கருதினேன். கம்பரின் அன்பர்கள் ‘கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்’ என்ற முழக்கத்தைக் கொண்டிருந்தனர். ‘சங்கத் தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம் ‘என்ற முழக்கத்தை யான் மேற்கொண்டேன். ‘சங்க இலக்கியம்’ என்னும் பெயருடன் வார ஏடு ஒன்றைத் தொடங்கினேன். சங்க இலக்கியப் பாடல்களுக்கு விளக்கமும் சங்க காலத் தமிழ் மக்களின் வரலாற்றுச் செய்திகளையும் தாங்கி அது வெளிவந்தது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் தமிழ் எழுச்சி உண்டாக அவ்வேடு பெரிதும் துணைபுரிந்தது.  சங்க இலக்கியம்பற்றி ஏனைய இதழ் ஆசிரியர்களும் கற்றவர்களும் எண்ணத் தொடங்கினர். புலவர்கட்கு மட்டும் அறிமுகமாயிருந்த சங்க இலக்கியம் பொதுமக்கள் முன்னிலையிலும் வரத் தொடங்கியது. இரும்புக் கடலை என இகழப்பட்ட பாடல் இன்சுவை அமுதாகக் கருதப்பட்டது.
  இசைத் தமிழ்ப் பாடல்கள் சில என்னால் இயற்றப்பட்டு இசைமணி சங்கரனாரால் இசையமைக்கப் பெற்று இவ்வேட்டில் வெளிவந்தன. ….  …   ….   …   …   ….   …   …   …   …  …    …    …     …   திரு.கனகசபாபதியும் என்னுடைய இசைப்பாடல்களை அவ்வப்பொழுது பாடுவார்கள்.”
  மேலும் தூய தமிழ்ப் பற்றை மக்களிடையே வளர்த்தலையும் சங்க இலக்கியத்தைப் பரப்புவதையும் கடமையாகக் கொண்டு ‘சங்க இலக்கியம்’, ‘இலக்கியம்’ ஆகிய இதழ்களை நடத்திய பேராசிரியப் பெருந்தகையவர்கள்தமிழர் வாழ்வியலைச் சங்க இலக்கியம் வாயிலாக எடுத்துரைக்கும் இந் நூலையும் படைத்தளித்தார். இந் நூல் மீண்டும் இப்பொழுது வெளியிடப் பெறுகிறது.

இலக்குவனார் திருவள்ளுவன்
(2002 ஆம் ஆண்டு) சென்னை. 600 004

000

நன்றியுரை

 இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) என்னும் இந்நூலில் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள், சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழர் நாகரிகம், வரலாறு, பண்பாடு, நகரம், அரசு, மக்கள், புலவர்கள், மெய்யுணர்வுக் கொள்கை, இல்லறம், வணிகம், போர்கள், முதலானவற்றின் சிறப்புகளை எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்கள். முதலில் 1962இல் புதுக்கோட்டை வள்ளுவர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பொழுது சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் இந்நூல் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. 2002இல் இலக்குவனார் இலக்கிய இணையம்வெளியிடப்பட்ட பின்பு சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இளங்கலை மாணாக்கர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பண்டைத் தமிழர்களின் சிறப்பை அறிய உதவும் தக்கதொரு நூலைப் பாடநூலாகத் தெரிவு செய்துள்ள சிம் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்த்துறையினருக்கும் இணையத்தின் நன்றி. மாணாக்கர்களுக்கும் வேலைவாய்ப்புத் தேர்வர்களுக்கும் பெரிதும் உதவும் இந்நூலை இலக்குவனார் இலக்கிய இணையம் மீண்டும் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது.
  நூல் அச்சிற்குத் துணை நின்ற மூவேந்தர் அச்சகத்தார் (இராயப்பேட்டை, சென்னை 600 014), அட்டை வடிவமைத்த பொறி.தி.ஈழக்கதிர் ஆகியோருக்கும் நன்றி.
பொறி இ.திருவேலன்
தலைவர்
இலக்குவனார் இலக்கிய இணையம்
12, வீணா தோட்டம், இரகுராமன் தெரு
அரும்பாக்கம், சென்னை 600 106
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

Thursday, November 9, 2017

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01– சி.இலக்குவனார்

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்


அ.  முகவுரை, பதிப்புரை

முகவுரை
  இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும்.
  தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றதுவெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன. வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய அறிவு கிடையாது. தமிழிலக்கியமே பழந் தமிழர் வரலாறு அறிவிக்கும் மூலங்களுள் முதனமை பெற்று நிற்கின்றது. அதனை நேரே அறியாது தமிழர் வரலாறு எழுதப் புகின்,  குருடர் கண்ட யானைக் கதை போன்று அமைவது இயல்புதானே!
  இந்நூல், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியலை எடுத்து இயம்புகின்றது; சங்கக் கால மக்களின் கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தோரின், வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்பதைத் தமிழர் அறியத் துணை செய்யும்.
  எனது ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு உதவும் வள்ளுவர் பதிப்பக உரிமையாளர், அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார், இதனையும் செம்மையாக வெளியிட்டு உதவியுள்ளார். அன்னார்க்கு என் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்.
சி.இலக்குவனார்

பதிப்பக முன்னுரை
  சங்கக் காலமே தமிழகத்தின் பொற் காலம் என்பர். அக்காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதைத் தெளிவுறக் கூறுகின்றது இந்நூல்.
 அக்கால மக்கள் எல்லா வகையினும் சிறப்புறவே வாழ்ந்துள்ளனர். உயர் நாகரிகம் பெற்றுள்ளதாகக் கருதப்படும் இவ்விருபதாம் நூற்றாண்டு மக்கள் வாழ்வோடு ஒப்பிட்டு நோக்கின் அக்காலமக்கள் வாழ்வு பல துறைகளில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை இனிதே அறியலாம்.
  மக்கள் வாழ்வியலும் வரலாறும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டு மாணவர்களும், மக்களும், தம்நாட்டு வாழ்வியலையும் வரலாற்றையும் விரும்பிக் கற்றல் வேண்டும். தம் நாட்டு உண்மை வரலாற்றை உலக மக்களுக்கு அறிவிக்கும் முயற்சியிலும் தமிழர் கருத்து செலுத்துதல் வேண்டும்.
 ‘வள்ளுவர் பதிப்பகம்’ இத்துறையில் தம்மாலியன்ற தொண்டைச் செய்து வருகின்றது. தமிழ் மக்களின் பெருமையைத் தரணிக்கு எடுத்துரைப்பதையே தம் தலையாய கடனாகக் கொண்டுள்ளது.
  நிறைந்த உழைப்பும் மிகுந்த பொருட்செலவும் பெற்று வெளிவரும் உயர் ஆராய்ச்சி நூல்களைத் தமிழ் மக்கள் பெற்றுப் பதிப்பகத்தை ஊக்குவித்தாலன்றி மேலும் பல நூல்கள் வெளியிடுதல் இயலாததாகும். ஆதலின் தமிழக மக்கள் ஒல்லும் வகையால் எம் நூல்களைப் பெற்றுத் தாமும் பயனடைந்து எம்மையும் பயனடையச் செய்யுமாறு அன்போடு வேண்டுகின்றோம்.
  இந்நூலாசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் அவர்கள் ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திறனும், தமிழ் உள்ளமும் பெற்ற பெருமகனார் என்பதைத் தமிழுலகம் நன்கு உணர்ந்ததே. அவர்கள், மக்கள் நலனைக் கருதி இந்நூலை எளிய, இனிய, தூய நடையில் எழுதி வழங்கியுள்ளார். அவர்கட்கும், இது அழகுற வெளிவருவதற்கு அச்சுப்பிழைகளைத் திருத்தி உதவிய நண்பர்கள்  புலவர் நடராசனார் அவர்கட்கும், திரு த.உ.நடராசப் பிள்ளை அவர்கட்கும் பதிப்பகம் தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
6.12.62            புதுக்கோட்டை   பதிப்பக உரிமையாளர்
பதிப்பகக் குறிப்பு
 ‘தமிழர்களின் பொற்காலம்’ எனப்படும், சங்கக் கால மக்களின் வரலாற்றை யறியப் பெரிதும் பயன்படும், இந்நூலின் முதற்பதிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகட்குப்பிறகு இவ்விரண்டாம் பதிப்பு வெளியாகின்றது. பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவர் இல்லத்திலும் இந்நூல் இருத்தல் வேண்டும்.
  தமிழர்களின் முற்கால நிலையை அறிந்து இக்கால நிலையை எண்ணி வருங்காலத்திற்குத் திட்டமிடும் செயல்களில் விரைந்து ஈடுபடுதல் கற்றறிந்தார் கடனாகும். எம்பதிப்பக நூல்களை விரும்பிப் பெற்று வரும் அன்பர்கட்கும். பாடநூல்களாக ஏற்றுள்ள சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களுக்கும் எம் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகுக.
6.12.66          புதுக்கோட்டை            பதிப்பக உரிமையாளர்
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

Wednesday, November 8, 2017

புறநானூற்றுச் சிறுகதைகள்: நா. பார்த்தசாரதி: பரணர் கேட்ட பரிசு


புறநானூற்றுச் சிறுகதைகள்

5. பரணர் கேட்ட பரிசு

  பரணர் அந்தச்செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய்யென்பதா? அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா! எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர்.
  அப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும்? உண்மையில் அது சிறிது அருவருப்பை உண்டாக்கக்கூடிய செய்திதான்.
  “கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் பட்டுப் போர்வை அளித்த சிறப்பால் பாவலர் பாடும் புகழை உடையவன்.
 ஆவியர் குடிக்கு மன்னன். ‘வையாவிக்கோப் பெரும்பேகன்’ என்ற பெரும் பெயர் பெற்றவன். அத்தகையவன் ஒழுக்கத்துக்கும், பண்பாட்டுக்கும் முரணான செயலில் இறங்கியிருந்தான். கற்பிலும் அழகிலும் சிறந்தவளாகிய தன் மனைவி கண்ணகியை மறந்தான். தலைநகருக்கு அருகிலிருந்த ‘முல்லைவேலி நல்லூர்’ என்ற ஊரில் வசிக்கும் அழகி ஒருத்தியிடம் சென்று மயங்கிக் கட்டுண்டிருந்தான். இந்தச் செய்தியைக் கேட்டபோதுதான் பரணர் இதை நம்ப முடியாமல் தவித்தார்.
 செய்தியை உறுதி செய்து கொள்வதற்காகப் பேகனின் அரண்மனைக்குச் சென்றார். அரண்மனையில் பேகனைச் சந்திக்க முடியவில்லை. அவன் சில வாரங்களாக அரண்மனைக்கே வருவதில்லை என்றும் முல்லைவேலி நல்லூரில் அந்த அழகியின் வீட்டிலேயே தங்கிவிட்டான் என்றும் அமைச்சர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார் பரணர்.
  பேகனுடைய மனைவி கண்ணகியைக் கண்டார். கண்ணகி என்ற பெயரில் நடமாடிய துயர ஒவியத்தைக் கண்டார் என்பது தான் பொருத்தம். அழுது அழுது சிவந்த கயல்விழிகள் மைதீட்டுதலை மறந்து பல நாட்களான இமைகள் எண்ணெய் தடவி வாரிப் பூச்சூடிக் கொள்ளாமல் குலைந்துகிடந்த கூந்தல், பறிகொடுக்க முடியாத பொருளை யாரோ உரிமையில்லாதவள் பறித்துக் கொண்டு போய் விட்டாளே அந்த ஏக்கம் தங்கிப் படிந்த முகம்.
   கண்ணகி கண்ணகியாக இருக்கவில்லை. கை பிடித்த கணவன் கணவனாக இருந்திருந்தால் அவளும் கண்ணகியாக இருந்திருப்பாள். வள்ளல், மன்னன், கொடையாளி என்று ஊரெல்லாம் புகழத்தான் புகழ்கிறது. ஆனால், அந்தக் கொடையாளிக்கு ஒழுக்கத்தின் வரம்பு புரியவில்லை. பொன்னைக் கொடுக்கலாம்; பொருளைக் கொடுக்கலாம்; அவை கொடைதன் மனைவியின் இடத்தையே யாரோ ஒரு பெண்ணுக்குக் கொடுத்துவிடுவதா கொடை? பேகன் ஒழுக்கம் என்ற உயரிய பதவியிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டான். கண்ணகி நடமாடும் துயரமாகி அந்த அரண்மனையே கதியாக இருந்து வந்தாள்.
  பரணருக்கு எல்லா விவரங்களும் தெளிவாகப் புரிந்தன. தன்னுடைய அன்புக்குரியவனான வள்ளலின் நிலை எவ்வளவிற்குத் தாழ்ந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தார். ‘மனைவி என்ற பொறுப்பான பதவியை ஆளும்’ ஒரு பெண் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம்; ஆனால், எந்த ஆண்மகனின் இதயத்தில் அந்தப் பொறுப்பை அவள் வகிக்கின்றாளோ, அங்கிருந்தே உருட்டித் தள்ளப்பட்டால் அவளால் அதை இழக்க முடியுமா?”
  நினைக்க நினைக்கப் பரணருக்கு உள்ளம் கொதித்தது. பேகனை அவன் மனைவிக்கு மீட்டுத் தரமுடியுமானால் அதுவே தம் வாழ்நாளில் தாம் செய்த தலைசிறந்த நற்செயலாக இருக்கும் என்ற உறுதி மாத்திரம் அவர் மனத்தில் ஏற்பட்டது.
 தாம் வந்த காரியங்களை எல்லாம் மறந்து, உடனே முல்லைவேலி நல்லூருக்குப் புறப்பட்டார். ஆடல் பாடல்களில் சிறந்த அழகிகள் வசிக்கும் ஊர் அது. ஊரைச் சுற்றி எங்கு நோக்கினும் அடர்ந்து படர்ந்து பூத்துச் சொரிந்திருக்கும் முல்லைக் கொடிகள் காடுபோல மண்டிக் கிடந்தன. ‘முல்லைவேலி’ என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருந்தது. ஊருக்கு மட்டுமில்லை; ஊரிலுள்ள அழகிகளின் வாயிதழ்களுக்கு உள்ளேயும்சீவி முடித்த கருங்குழலிலும்கூட முல்லைப் பூக்கள்தாம் வேலியிட்டிருந்தன. அந்த ஊர்ப் பெண்கள் சிரித்தால் முல்லை உதிர்ந்தது. சிங்காரித்தாலோ, கூந்தலில் முல்லை மலர்ந்தது. ஆண் பிள்ளையாகப் பிறந்தவன் எத்தனை திடசித்தம் உடையவனாக இருந்தாலும் கவரக்கூடிய அழகிகள் அவர்கள்.
  “இப்படி ஒழுக்கத்தை அடிமை கொள்ளும் அழகு நிறைந்த அந்த ஊருக்கு ‘நல்லூர்’ என்று பெயரின் பிற்பகுதி அமைந்திருந்ததுதான் சிறிதுகூடப் பொருத்தமில்லாமல் இருந்தது. ஆண் பிள்ளைக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஒழுக்கமும் பண்பாடும் அழிவதற்குக் காரணமான அழகு அமையக்கூடாது. ஒழுக்கத்தையும் அறிவையும் பண்பாட்டையும் வளர்க்கின்ற கருவியாகப் பயன்பட வேண்டும், தூய அழகு” அந்த ஊருக்குள் நுழையும்போது பரணருக்கு இத்தகைய சிந்தனைகளே உண்டாயின.
  அங்குமிங்கம் ஊருக்குள் அலைந்து திரிந்த பின்னர் பேகனைக் கவர்ந்த அழகியின் வீட்டைக் கண்டுபிடித்தார்.
  பேகன் உள்ளேதான் இருந்தான். பரணர் வாயிலில் நின்று கூப்பிட்டார். முதலில் ஒரு பெண்ணின் தலை உள்ளிருந்து தெரிந்தது.அந்த அழகிய முகம்,போதையூட்டுகிற அந்தக் கவர்ச்சி, பரணரே ஒரு கணம் தம் நிலை மறந்தார். அவள்தான் பேகனை மயக்கிய பெண்ணரசியாக இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.
 பெண்ணின் தலை மறைந்ததும் பேகன் வெளியே வந்தான். அப்போதிருந்த அவன் தோற்றத்தைக் கண்டு புலவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கலைந்து பறக்கும் தலைமயிர்; பூசிய சந்தனம் புலராத மார்பு; கசங்கிய ஆடைகள்; சிவந்த விழிகள். அவனை நோக்கிய அவர் கண்கள் கூசின. வீட்டுவாயிலில் போற்றி வணங்கத்தக்க புலவர் வந்து நின்று கொண்டிருப்பதைக் கண்ட பேகன் அந்த நிலையில் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல விழித்தான்.
  “நான் இப்போது என் கண்களுக்கு முன்பு யாரைக் காண்கிறேன்? கடையெழு வள்ளல்களில் ஒருவனும் ஒழுக்கம் மிகுந்தவனுமாகிய பேகனா, என் முன் நிற்பது?”
  பரணருடைய சொற்கள் பேகன் மனத்தில் தைத்தன. அவன் பதில் பேசவில்லை. அப்படியே குனிந்த தலை நிமிராமல் நின்றான்.
  “பேகன் கருணை மிகுந்தவன் என்றல்லவா எல்லோரும் சொல்கிறார்கள்? தோகை விரித்தாடும் மயிலைக் கண்டு குளிரால் நடுங்குவதாக எண்ணிக்கொண்டு போர்வையை எடுத்துப் போர்த்திய வள்ளலாமே அவன்?”
 வார்த்தை அம்புகளைத் தாங்கிக்கொண்டு அடித்து வைத்த சிலையென நின்றான் பேகன். “ஏதேதோ வீண் சந்தேகப்படுகிறேனோ நான்? நீதான் பேகனாக இருக்கவேண்டும். உன்னைப் பார்த்தால் பேகன் மாதிரிதான் இருக்கிறது.”
 “போதும்! பரணரே! இன்னும் என்னை வார்த்தைகளால் கொல்லாதீர்கள். நான்தான் நிற்கிறேன். உங்கள் பழைய பேகன்தான். வேண்டியதைக் கேட்டு வாங்கிக்கொண்டு போகலாம்.”
 அவனால் பொறுக்க முடியவில்லை. அவருக்குப் பதில் கூறிவிட்டான். பதிலில் தன் குற்றத்தை உணர்ந்த சாயையைவிட ஆத்திரத்தின் சாயைதான் மிகுதியாக இருந்தது.
  “ஓகோ என் ஒழுக்கத்தைப் பற்றிக் கேட்க நீர் யார்? நீர் ஏதாவது பரிசில் பெற்றுப்போக வந்திருந்தால், அதை கேட்டு வாங்கிக் கொண்டு செல்லுங்கள்” என்று நீ கோபப்படுகிறாய் போலிருக்கிறது.
  “ஆமாம்! கோபம்தான். வீணாக என் மனத்தை ஏன் புண்படுத்துகிறீர்? விருப்பமிருந்தால் உமக்கு வேண்டிய பரிசிலைக் கேட்டு வாங்கிக்கொண்டு என்னை விடும். என் விருப்பப்படி நான் இருந்தால் அதைக் கேட்க நீர் யார்?”
 பேகனுக்கு உண்மையிலேயே கோபம்தான் வந்துவிட்டது.
  “அப்படியா? சரி! நான் எனக்கு வேண்டிய பரிசிலைக் கேட்கட்டுமா?”
 “நன்றாகக் கேளும்! மறுக்காமல் தருகிறேன். கொடுப்பதில் என்றும் எப்போதும் எந்த நிலையிலும் நான் பின்வாங்குவதில்லை. ஆனால் என் சொந்த வாழ்க்கைவிருப்பங்களில் மட்டும் பிறர் தலையிட வந்தால் நான் அதை விரும்பவில்லை.”
  “நான் விரும்பியது எதுவாக இருந்தாலும் கேட்கலாமல்லவா?”
 “திரும்பத் திரும்ப விளையாடுகிறீரா என்னோடு? உமக்கு வேண்டுமென்பதைக் கேளுமே!” “இதோ என் விருப்பத்தைக் கேட்கிறேன். எனக்கு நீதான் வேண்டும்.”
 “என்ன?” பேகன் திடுக்கிட்டான். “ஏன் விழிக்கிறாய்? விரும்பியதைக் கேள்’ என்றாய், கேட்டுவிட்டேன். நீ சொன்ன சொல் தவறும் வழக்கத்தை இன்னும் மேற்கொள்ளவில்லையானால் சொன்னபடி உன்னை எனக்குக் கொடு!”
 “நானா வேண்டும்? என்ன விளையாட்டு இது புலவரே? நான் எதற்கு உமக்கு? என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்?”
  “என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? முதலில் வாக்கைக் காப்பாற்று.”
 “சரி? என்னையே கொடுக்கிறேன். இதோ எடுத்துக் கொள்ளும் உம் விருப்பப்படி செய்யும்.”
  “மகிழ்ச்சி, அரசே இப்போது நீ என் உடைமை. ஆகையால் நான் சொல்லுகிறபடி யெல்லாம் கேட்க வேண்டும்.”
  “ஆம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.”
  “அப்படியானால் இப்போது என்னோடு புறப்படு! போகலாம்.”
 “எங்கே புறப்பட வேண்டும், பரணரே எதற்காக” பேகன் தயக்கத்தோடு கேட்டான்.
 “எங்கே, எதற்காக என்றெல்லாம் கேட்க நீ என்ன உரிமை பெற்றிருக்கிறாய்? நீ எனக்குச் சொந்தம். நான் கூப்பிடுகிறேன். வா! தயங்குவதற்குக்கூட உனக்கு உரிமை இல்லையே?”
  வேறு வழியில்லை. தட்டிக் கழிக்க முடியாமல் பரணரைப் பின்பற்றி நடந்தான் பேகன், பரணர் முன்னால் நடந்தார். தனக்கு மன மயக்கமூட்டிய அந்த அழகியின் வீட்டைத் திரும்பி நோக்கிக் கொண்டே பேகன் வேண்டா வெறுப்பாகச் சென்றான். இருவரும் ஒரு தேரில் ஏறிக் கொண்டு தலைநகரை நோக்கிச் சென்றனர். பரணர் அவனை அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு போனார். இருவரும் அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். புலவர் பேகனின் மனைவி கண்ணகியிடம் அவனை அழைத்துக் கொண்டு போனார்.
  புலவரும் தன் கணவனும் வருவதைக் கண்ட கண்ணகி கண்ணிரைத் துடைத்துக் கொண்டு எழுந்திருந்து நின்றாள்.
 “பேகா எனக்குச் சொந்தமான உன்னை நான் இவளுக்குக் கொடுத்திருக்கிறேன். இனிமேல் நீ இந்தக் கண்ணகி ஒருத்திக்குத்தான் உரியவன். உடல் மட்டுமில்லை, உன் உள்ளமும் இவளுக்கே உரிமை!”
  கண்ணகிக்கு ஒன்றுமே புரியவில்லை. பேகன் தலைகுனிந்து நின்றான். புலவர் இருவரையும் மனத்திற்குள் வாழ்த்திக் கொண்டே அங்கிருந்து சென்றார். ஒரு பெண்ணுக்கு அவளுடைய உயிரினும் சிறந்த பொருளை மீட்டுக் கொடுத்த பெருமை அவருக்கு சாதாரணமான பெருமையா அது?
மடத்தகை மாமயில் பணிக்குமென் றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக
பசித்தும் வாரேம் பாரமும் இலமே!
களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந்துறையுநர் நடுங்கப் பண்ணி
அறஞ்செய் தீமோ அருள்வெய் யோயென
இஃதுயாம் இரந்த பரிசில் அஃதிருளின்
இனமணி நெடுந்தேர்ஏறி
இன்னா துறைவி அரும்படர்களைமே (புறநானூறு-145)
(மடத்தகை =மெல்லிய இயல்பையுடையபனிக்கும் = குளிரும்படாஅம் = போர்வைகெடாஅ = கெடாதஇசை = புகழ்கடாஅ = மதம்கலிமான்= எழுச்சியையுடைய குதிரைகள்கருங்கோடு = கரிய கோட்டை உடையஅருள் வெய்யோய்=அருளை விரும்புகிறவனே,இன்னாதுறைவி = துயரத்தோடு வசிக்கின்ற கண்ணகிஅரும்படர் = அரிய துன்பம்களைமே = போக்குவாயாக.
(மேலே கண்ட நிகழ்ச்சிகள் பாடலின் கருத்தைத் தழுவி எழுதியவை).
தீபம் நா. பார்த்தசாரதி