வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.
வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது
காதல் வாழ்க்கை
ங. களவியல்
(வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)
- இல்வாழ்க்கை
இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். ‘இல்லாள்’ என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். ‘இல்லான்’ என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே எனத் தமிழ்முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப் போற்றி வாழ்வியலில் அவ்வினத் தலைமையையும் ஏற்றுள்ளனர் என்றும் தெளியலாம். இல்லறம் செம்மையுற்றால்தான் நாட்டில் நல்வாழ்வு உண்டாகும் பல இல்லறங்களால் அமைந்ததே நாடு. [For in as much as every family is part of a state (Aristotle: Politics: Page 78)] இல்லறங்கள் இன்றேல் நாடு ஏது? ஆட்சி எதற்கு?
இல்லறம், நாகரிகத்தின் உயர்நிலையைக் காட்டுவதாகும்; விலங்கு நிலையினின்றும் வேறு படுத்துவதாகும். நினைத்தவுடன் கூடி வெறுத்தவுடன் பிரிந்து போவது மாக்களுக்கு உரியதேயன்றி, உயர் மக்களுக்கு உரியது ஆகாது. ஒருவனும் ஒருத்தியும் காதலால் பிணிப்புண்டு கடிமணம் புரிந்து கொண்டு இல்லறப் பொறுப்பேற்று இனிதே வாழத் தொடங்கிய காலம்தான் மாந்தர் உயர்நிலையும் பண்பாடும் உற்ற காலமாகும் “இல்லறமல்லது நல்லறமில்லை” என்று துணிந்துரைத்ததும் அதனாலேயே யன்றோ? வாழ்வியல் அறம் கூறப் புகுந்த வள்ளுவர் பெருமான் பாயிரத்தின் பின்னர் ‘இல்வாழ்க்கை’ பற்றி எடுத்துரைத்ததும் இதன் ஏற்றத்தைப் புலப்படுத்தும்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (திருக்குறள் 41)
இல்வாழ்வான் என்பான்=இல்லற நெறியில் பொருந்தி வீட்டிலிருந்து வாழ்பவன் என்று சொல்லப்படுபவன், இயல்புடைய மூவர்க்கும்=தத்தமக்குரிய இயல்புகளைப் பெற்றுள்ள மூவர்க்கும், நல்லாற்றின்=அவர்கள் மேற்கொண்டுள்ள கடமைகளை நிறைவேற்ற மேற்கொள்ளும் நல்வழிகளில், நின்ற=நிலைத்து நின்ற, துணை= துணைவனாவான்.
மூவர் யார்?
“பிரமச்சரிய ஒழுக்கத்தான், வனத்தில் சென்று மனையாள் வழிபடத் தவம் செய்யும் ஒழுக்கத்தான், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தான்” என்பர் பரிமேலழகர். இவ்வாறு பிரித்துக் காணுதல் தமிழ் மரபன்று. ‘பிறர் மத மேற்கொண்டு’ கூறியதாகவே பரிமேலழகரும் கூறியுள்ளார். மாணவ நிலை, மனையாளோடு வாழும் நிலை என இரண்டே தமிழர் வாழ்வியல் முறைக்குரியனவாகும்.
“தாய், தந்தை, உறவினர்” என மூவர் என்பாருமுளர். இம்மூவரும் குடும்பத்துக் குரியராதலின் இவர்க்குத் துணையாவான் என்பதில் சிறப்பின்று.
“புலவர், பாடகர், நடன மாந்தர்” என்பர் பரிதி. இவர்களும் இல்லற வாழ்வில் இருப்போர் ஆதலின், இவர்கட்கு இல்லற வாழ்வினரால் அளிக்கப்படும் துணை வேண்டற்பாலதன்று. இல்லற வாழ்வு இல்லாதோர்க்குத்தான் இல்லறத்தான் துணை வேண்டும்.
பேராசிரியர் சக்கரவர்த்தி என்பார் தம் சமண சமயக் கோட்பாட்டின்படி ஆசிரியரை அடுத்துப் பயிலும் மாணவர், தமக்கென வீடு இல்லாது உலகத்தை முற்றும் துறவாது துறவு நிலைக்கு ஆயத்தமாவோர், முற்றும் துறந்த மாமுனிவர் ஆய மூவர் என்பார்.
இல்லறத்தினை முற்றுந்துறந்து முனிவராக வாழும் நிலையும் தமிழர் நெறிக்கு ஒத்ததன்று. ஆகவே, இம்மூவருள் மாணவர்க்கு உதவுதல் ஏற்புடைத்தே. வறியராய் இருப்பினும் கற்றல் தவிர்க்க முடியாத ஒன்று. ‘பிச்சை புகினும் கற்கை நன்றே‘ என்றதூஉம் காண்க. இயல்புடைய மூவருள் மாணவர் ஒரு பிரிவினர். பின்னும் இருவர் யாவர்? பிறர்க்கென வாழும் தொண்டரும் பொருளீட்டி வாழ்தலில் கருத்துச் செலுத்தாது முக்காலத்தையும் அறிந்து உலகுக்கு நல்லன கூறி இன்புறும் அறிவரும் இல்லறத்தாரின் உதவிக்குரியராவார். ஆதலின் இயல்புடைய மூவராவார், மாணவர், தொண்டர், அறிவர் என்று கூறுதல் தகும்.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (திருக்குறள் 42)
துறந்தார்க்கும்=வாழ்வின் துன்ப நிலைக்கஞ்சி வாழ்வினை வெறுத்து விட்டவர்க்கும், துவ்வா தவர்க்கும்=நுகர்தற்குரியனவற்றை நுகர இயலாத வறிய வர்க்கும், இறந்தார்க்கும்=யாவற்றையும் கடந்தவர்க்கும், இல்வாழ்வான் என்பான்=இல்லற வாழ்க்கையினன் என்று கூறப்படுபவன், துணை=துணையாவான்.
உலக வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது; பொறுப்பு மிக்கது. ஆற்றலுக்கேற்ப உழைத்துத் தேவைக் கேற்பப் பெறக் கூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. நெறிமுறைகளைக் கடந்து பிறரை வஞ்சித்து ஏமாற்றிப் பொருள் ஈட்டுதலே இன்ப வாழ்வுக்குத் துணை செய்கின்றது. நேர்மை வழியில் செல்வோர் பொருள் முட்டுப்பாட்டுக்காளாகிக் குடும்பத்தை நடத்த முடியாமல் அல்லல்படுகின்றனர். இவ் வல்லலினின்றும் தப்புவதற்குத் தற்கொலை புரிவோரும் வீட்டை விட்டு வெளிக் கிளம்புவோரும் உளர். வீட்டை விட்டு வெளிக்கிளம்புவோர் இங்குத் துறந்தார் எனப்படுகின்றனர்.
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல்தான் என்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை (திருக்குறள் 43)
தென் புலத்தார்=தென் நாட்டார், தெய்வம்=கடவுள், விருந்து=விருந்தினர், ஒக்கல்=சுற்றத்தார், தான்=தான், என்று ஆங்கு=என்று சொல்லப்படும் முறையில், ஐம்புலத்து=ஐந்து பகுதிகளிலும்,ஆறு=அறநெறிப்படியே. ஓம்பல்=கடமையைக் காத்தல், தலை=முதன்மையாகும்.
(தொடரும்)
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
Comments
Post a Comment