Skip to main content

காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 – கி.சிவா

(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்டஅரசியல் 1/4 – தொடர்ச்சி)
காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும்
இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 

தூதுப் பொருள்கள்
பொதுவாக, தூது இலக்கியங்களில் எல்லாப் பறவைகளையும் தூதுவிடும் மரபு என்பது இல்லை. “தூது நூல்களில் 35 பொருள்கள் தூதுப்பொருள்களாக அமைந்துள்ளன. அவற்றில், குயில், கூகை ஆகிய இனப்பொருள்களைத் தூது விடுத்தனவாக அமைந்த நூல்கள் இன்று இல்லை” என்று ந.வீ.செயராமன், ‘தூதிலக்கியங்கள்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997, ப.192). அன்னம், மயில், கிளி, மேகம், மைனா, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய அஃறிணைப் பொருள்கள் ஒன்பதையும் உயர்திணையில் தோழியையும் தூதாக அனுப்பலாம் என்று, கி.பி.19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த பிரபந்தத் திரட்டில் (நூற்.30) எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதே கருத்தைப் புகழேந்திப் புலவரால்பாடப்பட்டதாகக் கருதப்படும் ‘இரத்தினச்சுருக்கமும் (நூற்.7) குறிப்பிட்டுள்ளது (மேற்கோள்: தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, 1997,ப.191). இவ்வாறு தூதுவிடுக்கும் பறவையினங்களுள் காக்கை, வெளவால் போன்ற பறவைகளும் பிறவும் விடுபட்டுள்ளன. ஆனால், தெலுங்கில் கவிஞர் குர்ரம் யேசுவா, ‘கப்பிலம்’ என்றொரு நூலை எழுதியுள்ளார். இந்நூல் தமிழில் கவிஞர் தெசிணியால் வெளவால்விடு தூது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிற்கால வளர்ச்சியாகக் காக்கையைத் தூதுவிடுத்துள்ளமைக்குக் காக்கைவிடுதூது  சான்றாகத் திகழ்கின்றது.
காக்கையின் சிறப்புகள்
  தமிழிலுள்ள ‘கா’வெனும் எழுத்தை உலகெலாம் பேசுகின்ற சிறப்புப் பெற்ற காக்கையே, (காக்கையும் தமிழ் பேசுகின்றபோது மனிதராகிய இராசகோபாலாச்சாரியார் தமிழுக்கு எதிராக இந்தியைத் திணிக்கின்றாரே எனும் அங்கதக்குறிப்பு இதன்வழி வெளிப்படுகின்றது) நீ மேன்மை பெற்ற கருமை நிறத்தைக்கொண்டு இருக்கின்றாய் (கருப்பு நிறம் அருவருப்பானது என்ற போலிப் பண்பாட்டுக் கருத்திற்கு எதிராக, இந்தக் கருத்தை முன்மொழிந்துள்ளார்). மாயனை நிறத்தாலும் முருகப்பெருமானை வள்ளல்தன்மையாலும் ஒத்திருக்கின்றாய். உணவு கிடைத்தபோதெல்லாம் உனது இனத்தைக் கூவியழைத்து அவற்றுக்கு இன்பமூட்டி, கிடைத்ததைச் சுற்றத்தோடு பகிர்ந்துண்கின்றாய். இதுவே எம் தமிழரின் ஒப்புரவு (உலக ஒழுக்கம்) என்று உலகிற்கு அறிவிக்கின்றாய்.
உலகில் முதலில் தோன்றியது தென்னாடு. அது தோன்றியநாளிலிருந்து இம்மக்கள் பேசும் மொழி தமிழ்மொழியே என்பதை எந்நாட்டினரும் ஏற்றுக்கொள்ளும்பொருட்டு, பசுவின் கன்றுகூட அம்மா என்றழைக்கும். அதைப் பார்த்துக்கூடத் தாய்மொழிமேல் பற்றுவராததமிழ்மக்களைக் கண்டு சினந்ததால் உன்னுடல் கருகிப்போயிற்றோ!(தற்குறிப்பேற்றம்). பாவிகளாகிய தீயவர்கள் தேனையொத்த செந்தமிழைச் சிதைப்பதற்கு விரையுமுன், அதைத் தடுத்துக் ‘காகா’ (காத்திடுவீர்! காத்திடுவீர்!) என்றே கூவியழைக்கின்றாய். உன்னைப் போன்று தாய்த்தமிழ்மீது பெருங்காதல் கொண்டவர்களை நான் இதுவரை கண்டதில்லை. அகத்திய முனிவர் குடத்திலே அடக்கிய நீரைக் கவிழ்த்துக்கொட்டி, காவிரியாக ஓடவிட்டுத் தமிழகத்து உயிர்களைக் கருணையால் காத்து அருமருந்திற்கொப்பானாய். தமிழ்மொழியைக் காக்கின்றமையால் இந்த மாநிலத்துக்கு அரசனானாய் (அண்டங்காக்கை). கருமை நிறம் என்பது கடவுள் அமைத்திட்ட நிறம். கடவுளுக்கும் அதுவே நிறம். உமையும் திருமாலும் கருமைநிறம் பெற்றதனால் பேரழகும் ஆண்மையும் வாய்க்கப்பெற்றனர். முகிலும் உன்னுடைய நிறத்தைக் காட்டி மழையைப் பெய்யும். இவற்றையெல்லாம் அறியாத மடமைபொருந்தியவர்கள், உனது ஒப்பற்ற கருமை நிறத்தை உணராமல் ‘கருங்காக்கை’ என்று இழிவாகக் கூறுவர்.
 உன்னுடைய ஒப்பற்ற கண்ணைப்பற்றி அறியாதவர்கள், உனக்கு ஒற்றைக்கண்தான்   (பெரியாழ்வார் திருமொழி 3.10.6) என்று கூறுவர். சனியின் உறவு நீயென்பர். சனியின் வேகத்தைக் குறைப்பதற்காகத்தான் தந்திரம் செய்து அவருக்கு நீ வாகனமானாய் என்பதை அறிபவர் யாவரோ? உறங்குகின்ற மக்களின் மயக்கத்தை அகற்ற, காலைப்பொழுதில் வந்து கரைகின்ற அருமணியைப்போன்ற காக்கையே! ஒரு துறவியைப்போல, உயிர் பிரிந்த உடல்களைத் தின்று, அவ்வுடலை உடையவர்க்கு மறுபிறவியளிக்கும் உன்பெருமையெல்லாம் சொல்லுதல் இயலா (1-31) என்று காக்கையையும் அதன் குணம் மற்றும் செயல்களையும் புகழ்ந்து புலவர் பாராட்டுகிறார்.
தேனேயுஞ் செந்தமிழைத் தீயவர்கள் தம்மொழியால்
வீணே சிதைக்க விரையுமுன் – ஆனாதிங்
காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிடுங் காக்கையே – மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைமைசேர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன் – … …         (12-14)

கருமைநிறந் தானுங் கடவுளமைத் திட்ட
பெருமை யடையாளப் பேரே – உருவார்ந்த
பார்வதியும் மாலும் பகர்கருமை பெற்றதனால்
பேரழகும் ஆண்மையும் பெற்றுயர்ந்தார் – தேரின்
கருமுகிலும் மற்றுன் கருணைநிறங் காட்டி
அரிதின் உலகம் அளிக்கும் – … …”           (20-22)
எனவரும் கண்ணிகள் மேற்குறிப்பிட்ட செய்திகளுக்கான சில கண்ணிகளாகும்.

(தொடரும்)
முனைவர் கி.சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம்,
மதுரை-09. மின்னஞ்சல்  : lakshmibharathiphd@gmail.com

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்