காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 3/4 – கி.சிவா
(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்டஅரசியல் 2/4 – தொடர்ச்சி)
காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும்
இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 3/4
தமிழின் தொன்மையும் ஆரியத்தின் சீர்குலைப்பும்
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலே பிறந்து, கடல்கோளால் அழிந்துபோன குமரிக் கண்டத்தில் செழித்து வளர்ந்த தமிழ்மொழி, ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப்பட்ட’ (தொல்காப்பியப் பாயிரம்) எல்லையில் வழங்குவதாயிற்று. இப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அடுத்தவர்க்குத் துன்பம் செய்யாத இயல்பினர். எதிரிகளையும் மன்னிக்கும் பண்பினர். ஆதரவற்று ஏதிலிகளாய் வருகின்றவர்களை அன்புடன் காத்திடும் குணம் படைத்தவர்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறம்.192) என்றெண்ணும் நற்சிந்தை உடையவர்கள். தெய்வம் ஒன்றென்று உணர்ந்தவர்கள் (ஒருவனே தேவன்). கீழ் மேல் என்று பாகுபாடு காட்டாமல், “பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்” (குறள்.972) என்பதைப் பொன்போல் போற்றி மதிப்பவர்கள். ‘தன்னேரில்லாத தமிழ்’ (தண்டியலங்காரம்) ஆழ்கடலில் மூழ்கிப்போனதைப்பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டேயிராமல், அதை மீண்டும் புத்துயிர்பெற்று எழச்செய்து, மூவேந்தர்களும் தம் கண்போல் காத்தனர். முச்சங்கம் வைத்துப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்துப் போற்றினர். அதற்குத் தேவர்களும் அறியாத திறமளித்தனர் (சமற்கிருதம் தேவபாசை எனும்கருத்துடையவர்களுக்குத் தேவர்களாலும் அறிமுடியாததன்மையைப் பெற்றது தமிழ்மொழி என்று இடித்துரைக்கிறார், வெள்ளைவாரணர்).
இவ்வாறு, மக்களனைவரும் தாயெனப் போற்றிப் பாதுகாத்த, தனித் தமிழை, அதன் அருமை பெருமை சீர்மையென எதுவும் தெரியாத, தெளிவில்லாத சொற்களைப் பேசும் ஆரியர்கள், கெடுத்துச் சிதைத்ததோடு நில்லாமல், நக்கீரரிடத்தில் சென்று, “ஆரியம் நன்று, தமிழ் தீதென” உரைத்தனர் (ஆரியம் வல்ல கொண்டான் என்னும் குயவன்). வெகுண்ட கீரர், இப்பழிச்சொற்களைச் சொன்னவன் இறக்கும்படி ஒரு பாடல் பாடினார்2. தங்கள் தவற்றினுக்கு வருந்தி, உடனிருந்தவர்கள் அவனை மீண்டும் உயிர்பெறச் செய்யும்படி அவரிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். பெருந்தன்மையோடு மன்னித்த கீரர், அவன் உயிர்பெற்று எழும்படி மற்றோரு பாடலைப் பாடினார்3. அதையெல்லாம் மறந்த ஆரியர்கள், தற்போது கீரர் பெருமகனார் இல்லையே என்ற மதப்பினால், நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாமென்று கருதி, சிதைவு மொழியாகிய ஆரியம் எனும்அம்பைச் செலுத்தித் தமிழைப் புண்படுத்துகிறார்கள் என்று, தமிழின் பெருமையையும் அதன்மீது வடமொழியைத் திணித்துச் செய்யும் அழிம்புகளையும் உள்ளக்குமுறலோடு புலவர் வெளிப்படுத்தியுள்ளார் (கண்ணிகள் 32-48).
இராசகோபாலனின் உழைப்பும் வஞ்சனையும்
சேலத்தையடுத்த ஓர் ஊரிலுள்ள (இன்றைய தருமபுரி மாவட்டம் தொரப்பள்ளி) ஐயங்கார் மரபில் பிறந்த இராசகோபாலன் என்பவர், தம்முடைய கடும் உழைப்பினால், ஆங்கிலமொழியைக் கற்று, வழக்குரைஞரானார். இந்தியநாடு வெள்ளையர்களால் கீழ்நிலைக்குத் தள்ளப்படுவதைக் கண்டு மனம் வருந்தினார். இந்தநிலையை மாற்ற மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டினார். ஆங்கிலேயர்க்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிச் சிறைசென்றார். அதனால், மக்களால் தென்னாட்டுக் காந்தியெனப் போற்றப்பட்டார். தான் பிறந்த குடியையும் வேதநெறியையும் ஆறுதொழிலையும் மறந்து காந்தியடிகளின் மகனுக்குத் (தேவதாசுகாந்தி) தன் மகளைத் (இலட்சுமி) திருமணம் செய்துவைத்தார். வெள்ளையர் அரசைத் தகர்க்க மகாத்மாகாந்தி என்னை அனுப்பிவைத்தார் என்று பலசொல்லி, வஞ்சனையால் மக்களை ஏய்த்து, மஞ்சள்பெட்டியில் (அந்தக் காலத்தில் வாக்குப்பெட்டியின் நிறம்) தீப்பெட்டிச் சின்னத்தில் வாக்களிக்கச் செய்து, முதலமைச்சரானார். தமிழக மக்களுக்காகத் தன்னலமற்று உழைக்கவேண்டிய தலைவர் அமருமிடத்தில், தனக்கு ஆதரவாளரான இராசனைக் (முசிறிப் பகுதியைச் சார்ந்த பிராமண குலத்தவர்) கொல்லைப்புறவழியே கொண்டுவந்தார். தமிழைக் கட்டாயப் பாடமொழியாக ஆக்காமல், பிழைப்புக்காக ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் கற்று, அறவே செந்தமிழைப்புறந்தள்ளியவர்களாகத் தமிழர்களை மாற்றினார். இவ்வாறு செய்வதன்மூலம், தமிழர்களை மட்டிகளாய் மாற்றித் தம்மடியின்கீழே வைத்துக்கொள்ள நினைத்தார்.
இவையெல்லாம் போதாவென்று, ‘தூய்மையில்லாததேய்ந்தமொழியாம்’ ஆரியத்தின் இழிசொல்லாய், உருது முதலியபன்மொழிச் சொற்களைக் கடன்பெற்று உருவாக்கப்பட்ட, இழிவுதரும் இந்தியைப் பள்ளிக்கூடப் பிள்ளைகள் யாவரும், ஆங்கிலத்தோடு சேர்த்துப் பயில வேண்டுமெனக் கட்டாயச் சட்டமொன்றை இயற்றினார். இச்செயல் அடாதென்று உணர்ந்த தமிழறிஞர்களும் ஆர்வலர்களும்கூடிக் கிளர்ச்சி செய்தனர். அவர்களுடைய உண்மைப் போராட்டத்தைப் பொருட்படுத்தாத இராசகோபாலன், அவர்களைச் சிறையிலடைத்தார் (இன்று மது வேண்டாமென்று போராடுபவர்களைத் தமிழ்நாட்டரசு சிறையில் அடைப்பதைப்போல) (கண்ணிகள் 49-82). இதனைப் பின்வரும் கண்ணிகளில் விளக்குகிறார்.
“…. ….. ….. – வருந்துமிந்தி
எம்மைந்தர்க் கென்றும் இளவயதி லேறாதால்
அம்மைத் தமிழும் அழியுமால் – செம்மையிலா
இத்திட்டஞ் செந்தமிழர்க் கேற்புடைத்தன் றென்றரற்ற
அத்தகையோர் தம்மை அறிவிலியென் றெத்திறத்தும்
தன்னேரிலாப் பெரியோர் தம்மை யிழித்துரைத்தே
எந்நாளும் மாறா வசையுரைத்தும் – உன்னாது
தான்கொணர்ந்த கட்டாய இந்தி தனையெதிர்க்கும்
மேன்மைத் தமிழர்களை வெஞ்சிறையிற் றான்வைத்தார்”(78-82)
மேலும், சாதியை மேன்மையாய்ப் போற்றுகின்ற இராசகோபாலர், துறவிகளையும் குழந்தைகளுடன் பெண்டிரையும்4 தொண்டர்களையும் புலவர்களையும் சிறையிலடைத்தார். தாய்மொழியின்மீது அளவுகடந்த பற்றினால் போராடி, கைக்குழந்தைகளுடன் பெண்டிர் சிறைசென்ற கொடுமை இதற்குமுன் தமிழகத்தில் நடந்ததில்லை.
இவற்றையெல்லாம் கண்ட தமிழர்களின் உள்ளங்கள், ‘மறைகளைக் கற்றுப் பஞ்சாங்கம் சொல்லி, மக்களை வஞ்சித்து, அவர்களிடமிருந்து பொருள் பறிக்கும் பார்ப்பனர்களுடைய நெஞ்சமானது கருங்கல்லோநீண்ட மரமோ வஞ்சகத்தை உருக்கிச்செய்த அரமோ அருளையும்அருளாளர்களையும் தாக்குகின்ற கொடிய வாளோ? என்றெல்லாம் கவலைப்பட்டுக் கருகிப்போயின’ (கண்ணிகள் 94-96) என்பதைப் புலவர் கவலையுடன் இவ்வுலகினர்க்குத் தெரிவிக்கிறார்.
முனைவர் கி.சிவா
உதவிப் பேராசிரியர் (தற்.),
தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி,
தெப்பக்குளம், மதுரை-09.
மின்னஞ்சல் : lakshmibharathiphd@gmail.com
சான்றெண் குறிப்புகள்
- முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி – அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்கசுவா கா
(ந.மு.வேங்கடசாமி நாட்டார் – நக்கீரர் – சாரதா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, அக்.2006, பக்.10-11. உண்மையில் முதற்பதிப்பு 1919).
- ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் – சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா (நக்கீரர், 2006, ப.11).
இப்பாடல்கள் நக்கீரரின் பெயரில் யாரோ ஒருவரால் பாடப்பட்டவை
- சீதம்மாள் மங்கையர்க்கரசி (3), நச்சினார்க்கினியன் (1) ஆகிய குழந்தைகளுடனும் ‘திராவிடன்’ ஆசிரியர் அருணகிரியின் மனைவி உண்ணாமுலையம்மையார் மகள் தமிழரசியுடன் (1) சிறைபுகுந்தனர். இப்படிப் பற்பலர் தங்களது குழந்தைகளுடன் சிறையிலடைக்கப்பட்டனர். மேலும் பலரின் பெயர்களும் குழந்தையின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திஎதிர்ப்புப் போராட்ட வரலாறு, ப.118
Comments
Post a Comment