Sunday, March 17, 2019

திருக்குறள் சுட்டும் தீமைகள் – பேரரசி முத்துக்குமார்

திருக்குறள் சுட்டும் தீமைகள்

  முன்னுரை
     உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் உள்ள சில திருக்குறள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சில எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களை விளக்கும் அதிகாரங்கள்
1.குற்றம் கடிதல் (44)
2.கூடா நட்பு (83)
3.சூது (94)
இந்த மூன்று அதிகாரங்களில் இரண்டினைச் சிறிய விளக்கத்தோடு காண்போம்.
     கூடா நட்பு என்பது மனமார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது. இந்த நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்தி நல்லவர்களைக் கெடுப்பதாகும். இவ்விளக்கமானது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பிடப்படுகிறது.
      இவ்வகை நட்பைப் பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில் குறிப்பிடப்படுபவர்கள் மு.வரததாசனார்,  சாலமன் பாப்பையா ஆகியோராவார்.
 மு.வரததாசனார்:
       அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும்.

சாலமன் பாப்பையா:
       மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
  சூது  என்பது கெட்டதேயே நினைத்தல் ஆகும். இதில் பல குற்றச் செயல்கள் அடங்கியுள்ளன. அவை;
1. ஆணவம்
     மகாபாரத இதிகாசத்தில் துரியோதனன் தன்னுடைய வீரத்தைக் கண்டு ஆணவம் கொள்வது இதற்குச் சான்று. இதனால்  பஞ்ச பாண்டவர்களைச் சூதாட்டத்தில் தன் மாமா சகுனியுடன் சேர்ந்து தோற்கடித்து வனவாசம் அனுப்புகிறான். அவனின் ஆணவக் கொடுமையால் மக்கள் துன்பப்பட்டார்கள். பல தவறுகள் செய்த துரியோதனன் இறுதியில் போரில் மாண்டதைக் கீழுள்ள இக்குறள் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
  நன்றி பயவா வினை (439) 
 1. ஏமாற்றுதல்
     ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் அரசு பொற்கொல்லன் பாண்டிய மன்னனின் மனைவியின் காற்சிலம்பைத் திருடிவிடுகிறான். திருட்டை மறைக்க தன் மனைவியின் சிலம்பை விற்க வந்த அப்பாவி கோவலனிடம் நெருங்கிய நண்பனாகிறான். இறுதியாகக் கோவலனை ஏமாற்றி தூக்குத் தண்டணைக்கு பழியாக்குகிறான். இச்சூழலை இத்திருக்குறளுடன் ஒப்பிடலாம்.
  சொல்வணக்கம் ஒன்னார்கள் கொள்ளற்க வில்வணக்கம்
  தீங்கு குறித்தமை யான். (827)
 1. சூதாட்டம்
     சூதாட்டம் என்பது தீய விளையாட்டுகளில் ஒன்றாகும். இதனால் நிறைய தீமைகள் உண்டு. மகாபாரதத்தின்  சூதாட்டம் இதன் சான்று. திருவள்ளுவர்  குறளை இப்படி எழுதியுள்ளார்.
   சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
   வறுமை தருவதொன்று இல். (934)
மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்
                 சில எடுத்துக்காட்டுகள் 
எடுத்துக்காட்டு 1:
 1. சூதாட்டம்
     மலேசியாவில் உள்ள நிறைய சூதாட்ட மையங்களில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில் நிறைய பேர் பிடிப்பட்டுள்ளனர்.
 1. மனிதக் கடத்தல்
     பாலியல் வணிகத்திற்காகப் பெண்கள், சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள்.
 1. போதைப் பொருள் கடத்துதல்
     போதை மருந்து கடத்தல் என்பது அபினி(heroin)  எனும் முதன்மையான மருந்து ஆகும். போதைப்பொருள் கடத்தல்களுக்கு எதிராக போரிட 1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கையே தூக்குத் தண்டனையாகும்.
 1. மற்றவை
 • திருடுவது
 • கடன் அட்டை மோசடி
 • சீருந்து, ஊர்திகள் திருட்டு
 • கணிணி விளையாட்டுகள்
 • தங்க நகைகள் வாங்குவது
முடிவுரை
எனவே தீமைகளை விளக்கி நல்லதைப் பேணுவோம்.
 மேற்கோள்கள்
1.திருக்குறள் – நருமதா பதிப்பகம்.
2.http://www.tamillexicon.com/thirukkural/porutpaal/natpiyal/kootaanatpu/
 1. https://www.youtube.com/watch?v=dF6nlYAznjA
4.மலேசியாவில் குற்றச் செயல்கள் – விக்கிபீடியா
    பேரரசி முத்துக்குமார்
மாரா இளநிலை அறிவியல் கல்லூரி,
பாரிட்டு பேராக்கு (parit perak, malaysia) 
மின்னஞ்சல்: tmkt5powerstudy@gmail.com

Thursday, March 14, 2019

ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று – நன்னாடன்

அகரமுதல              

ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று!


அறமும் பிறவும் இனிமேல் அழகாய்க் கழுவேறும் 
கொள்கையை விளக்க சிறு குறு கூட்டம் ஆர்ப்பரிக்கும் 
சகலமானவருக்கும் சாராய விருந்து நிறைவேறும் 
சாதியும் சடங்கும் சிறிது காலம் முன்னிலை பெறும் 
பெயர் சூட்டலும் பிள்ளை கொஞ்சலும் பித்தமாக்கும் 
காணும் போதெல்லாம் கனிவான விசாரிப்பு கடமையாகும் 
மாவட்டம் வட்டம் ஒன்றியங்களைச் சந்திப்பது இயல்பாகும் 
மந்திரிக்கு நாமே மகத்துவ மூலிகையாய்க் காட்சியளிப்போம் 
தேர்தல் சந்தை முடியும் வரை விலையுள்ள 
பொருளாய் நாளும் வலம் வருவோம் 
திருவிழாவிற்குப் பின்னே 
மழிக்கப்பட்ட தலையாய் மாறிவிடுவோம்.
_ நன்னாடன்
– எழுத்து, 11.03.2019 

Wednesday, March 13, 2019

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்

அகரமுதல

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3

பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல் தளி என்றும் அதன்பின் தள்ளிவிழும் மழைத்துறல் துளி என்றும் வேறுபடுத்தி மழை நீரை (திவலை) உண்டு வாழும் வானம் பாடியானது நீரின்றி தேம்பினாலும் காவிரி பொய்க்காமல் நீர் வழங்கும் என்ற நுணுக்கம் சார்ந்த கருத்தியலை உணர்த்தும் செய்தியும்,
‘‘கொழுங் காற் புதலமொடு செருந்தி நீடி 

எனும் பாட்டுத் தொகுதியில் மருதநிலத்தின் ஊர் புகுந்து முரண்பட்டோரை ஓடச்செய்து அவர்களது ஊர்களைப் பாழ்படுத்தியதால் நெல் விளைந்த கழனிகள் குவளை மலர்களோடு பிறமலர்கள் மலர்ந்திருந்த பொய்கைகளும் அழிய அதன் உருத்தெரியாமல் மறைவுற்ற அந்த இடங்கள் இரலை மானும் அதன் துணையும் பிளையாடும் இடமாக மாறிதாகவும் அம்பலத்திலுள்ள நெடுந்தூண்கள் பாழ்பட்டு சாய்ந்திருந்த நிலையில் அவற்றின் மீது ஆண் யானைகளும் பெண் யானைகளும் உராய்ந்தனவென்றும் திருவிழா காலத்தின் ஆரவாரம் முடிவு பெற்று விழா மன்றங்களில் நெருஞ்சிப்பூக்கள் பூத்தும் அருகம்புல் தழைத்தும் நரிகள் ஊளையிட்டும் கோட்டான்களும் ஆந்தைகளும் அலறி கூக்குரல் இட்டன என்பதை பதிவு செய்துள்ள பாடலில் கானுயிர்களான யானை, ஆந்தை, கோட்டான், நரி, இரலை மான் போன்றவை வந்து போவதைக் காணுகையில் முக்கியமான செய்தியாக இரலைமான் பற்றிய செய்தியை உணர்ந்தால் “திரிமருப்பு இரலை” என்று இதன் பெயர் என்பதும் இதனை பிற இலக்கியங்களான இராமகாதை “இரலைமான் குன்றம்” (ரிசிபமுக பருவதம்) என்று கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
சங்க இலக்கியம் காட்டும் சில பறவைகள் பற்றிய செய்திகளின் சாரமாக வலியன் வங்கா, கிளி, வானம்பாடி முதலியவற்றை காண்போம்.
வலியன்
இதைக் காரி என்றும் வலியன் என்றும் நிகண்டுகள் குறிக்கும். பிளவை, கஞ்சணம். கயவாய், கிகிணி, கஞ்சரீடம் என்ற பெயர்களும் உண்டு மலையமான் என்ற வேளிர்குடித்தலைவன் தன் குலப்பெயராக இப்பறவையின் பெயரான காரியை கொண்டிருந்ததால் அவனுக்கு திருமுடிக்காரி என்ற பெயரும் கொல்லி மலையை ஆண்ட வில்லில் வல்ல வல்வில் ஓரி தன் குலப்பெயராக ஓரியை (நரியை) கொண்டதால் அவனுக்கு வல்வில் ஓரி என்ற பெயரும் வழங்கியுள்ளதாக வரலாறு காட்டுகிறது. வலியின் (காரி) கண்களைப்போல் கண்ணன் என்ற புலவருக்கு இருந்ததால் அவருக்கு காரிக்கண்ணன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வழக்கத்தை “கட்சியுட் காரி கடிய குரலிசைத்து காட்டும போலும்” என்று குறிக்கின்றது.
‘‘ஆனை இறாய்ஞ்சி “ என்ற பழந்தமிழ்சசொல் காரியின் பெயராக காட்டப்படுகிறது. அதற்குரிய கரணியம் எதுவெனில் பிற வலிய பெரிய பறவைகள் இரைதனைக் கொண்டு செல்லும் போது அவற்றைத் தாக்கி அந்த இரையைத் தட்டிப்பறித்துச் செல்வதால் (இறாய்ஞ்சி-தட்டிப்பறித்தல்) அதற்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் இதன் வலிமை பிற பறவைகளை விஞ்சியிருப்பதால் இப்பெயர் இட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரட்டைவால் கரிச்சான் அல்லது துடுப்புவால் கரிச்சான் அல்லது மலைவாழ்கரிச்சான் என்ற இரட்டை வால்பகுதியைக் கொண்டு இயல்பான கரிச்சானை விடச் சற்றுப் பெரியதாகவும் முரலில் ஒருவித கரகரப்பு மிகுந்த ஒலியை எழுப்புவதால் “கரிச்சுக்கொட்டும் ஒலி” என்று இதனைக் குறிக்கின்றது. கரிச்சுக்கொட்டும் ஒலியுடன் கத்துவால் இந்த ஒலியைப் போல் பூசலுக்கிடையில் நடைபெறும் உரையாடலில் கூட கரிச்சுக்கொட்டுகிறாள்(ன்) என்பதைக் கேட்கலாம். இக்குருவிக்குக் “காரடை” என்ற பெயரும் உண்டு. பறவைகளுக்கு அந்தக்காலத்தில் சாத்தன் சாத்தி என்று உயர்திணைப் பெயர்களை இடும் வழக்கம் உண்டு. அதன் அடிப்படையில் துடுப்புவால் கரிச்சானுக்கு ‘காரடையான் சாத்தான்’ என்ற பேரும் உண்டு. இதற்கு மற்றுமொரு காரணமாக, கரவடமுடைய பண்பினைத் (தந்திரமாக ஏமாற்றும் பண்பு) இப்பறவை கொண்டுள்ளதால் பூனைபோன்று குரல் எழுப்பி வேடர்களை திசைதிருப்பித் தப்பிச் செல்லும் பறவை என்பதால் ‘காரடையான்’ என்று அழைக்கப்படுவதாக மலையாள நாட்டில் தமிழ்நாட்டின் எல்லையோரப்பகுதியில் பொதுவாக வழங்கும் செய்தி; பிற பறவைகளின் (பெரிய பறவைகள் உள்பட) கண்களைத் தன் சிறகால் காயம் உண்டாக்கி அல்லது தாக்கிவிடும் பழக்கம் என்பதால் இதை பறவைகளின் அரசன் என்று அடைமொழியுடன் அழைப்பதும் உண்டு. தமிழில் ‘கோக்கயம்’ என்ற பட்டப்பெயர் உண்டு அதற்கும் பறவைகளின் அரசன் என்ற பொருள் காணலாம். 
இப்பறவை மரத்தின் உச்சியில் கூடு கட்டியிருந்தால் அந்த கூட்டுக்குக் கிழேயுள்ள கிளைகளில் பிற சிறு பறவைகள் கூடு கட்டி வாழுவதாகவும் அதனால் கரிச்சானின் பார்வைக்கும் தாக்குதலுக்கும் பயந்து போய்ச் சிறுபறவைகளை வேட்டையாடும் பெரிய பறவை ஒருங்கிச் சென்றுவிடும் என்றும் பறவையியல் வல்லுநர்கள் குறிப்பர். அதனால் வடமாநிலங்களில் இதற்கு காவல் பறவை என்ற பெயரும் உண்டு.
ஆப்பிரிக்காவில் சினம் மிகுந்த சிறுத்தையின் பெயரால் இப்பறவை அழைக்கப்படுகிறது. அதனால் இப்பறவையை புறப்பொருள் வெண்பாமாலை
‘‘வெட்சி மலையவிரவார் மணி நிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்
என்று சிறப்பிக்கும்.
வங்கா
இப்பறவையின் உடல்பகுதி மஞ்சள் கலந்த கருப்புக் கோடுகள் நிறைந்தாக இருக்கும். மாம்பழத்தான் என்றும் மாங்குயில் என்றும கூறுவர். ஆனால் இது குயில் வகை அல்ல. இப்பறவைக்கு சங்கக் காலத்தில் ‘வங்கா’ என்று பெயர்
‘‘வங்காக் கடந்த செங்காற் பேடை. . . . . . . . . . வென்னாது”
என்று குறுந்தொகைப் பாடலில் வங்கா என்ற பறவையின் பேடையின் மேல் எழால் என்னும் வல்லூறு வீழ்ந்ததால் ஆண் வங்கா நிங்கப்பெற்ற பேடை வங்கா குழலிசைபோல குறுகிய ஒலியுடன் பலதடலை அகவியதாக கூறப்படுகிறது. மயிலின் குரலுக்கு ‘அகவுதல்’ என்பதைப்போல் வங்காவின் குரலுக்கும் அகவுதல் என்ற சொல் தொன்மைநாளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
வேய்ங்குழலின் ஓசையைப்போல் இதன் குரல் இருப்பதாலும் வங்கியம வங்கால் போன்ற இசைக்கருவிகள் தமிழில் உள்ளதாலும் வங்கு என்ற வேர்ச்சொல்லுக்கு உள்ளே துளையாக இருக்கும் பொருள் என்பதை வரையறுத்துக் கூறுவதால் மூங்கிலால் ஆன இயத்தை (புல்லாங்குழல்) ‘வங்கியம்’ என்றும் ஆச்சாமரத்தால் ஆன நீண்ட குழல் கருவியான நாயனத்தை ‘பெருவங்கியம்’ என்றும கூறுவதை ஒப்புநோக்கினால் ‘வங்கா’ என்ற பெயர் சாலப்பொருத்தம் உடையது என்பதை உணரலாம். இதில் கருப்புவங்கா, செவ்வரி வங்கா என்ற இருவகை உண்டு.
செந்தார்க்கிளி

கிளிகளில் பதினேழுவகை உண்டென்று பறவையியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிறுகிளி வகைதான் செந்தார்க்கிளி என்பதாகும். இதன் அழகு வடிவும், தோற்றம், அமைப்பு இவற்றை பேசவந்த இலக்கியமான அகநானூறு ‘‘எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச். . . . . . . . . உயிர்த்தன பால் நாள்” என்று குறிக்கும் வானத்தில் தோன்றுகின்ற வானவில்லை போன்று இருமுனையும் சேராத பச்சைமாலையை கழுத்தில் அணிந்துள்ள சிறுகிளி என்றும் ‘‘தார்” என்ற சொல்லுக்கு இருமுனைகள் ஒன்று சேராத மாலை என்பதால் அதைக் குறிக்கும் வகையில் ஆண்கிளியின் செந்தாரிலும் , பெண் கிளியின் பைந்தாலிலும் முனைகள் ஒன்று சேர்வதில்லை என்பதை,

‘‘பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம்
செந்தார்க்கிள்ளை நம்மொடு கடிந்தோன் என்று அகநானூறும்
ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்
குறுகிளி கடிகஞ் சென்றும். . . .
 என்று நற்றிணையும் பேசும்.
இதுபோல பல உயர்ந்த சிறப்புமிக்க செய்திகளை உள்ளடக்கிய பழந்தமிழ் இலக்கிய பனுவல்களில் விரவியுள்ள வனவியல் செய்திகளை திரட்டினால்  அவற்றைப் படலமாக தொகுக்கலாம்.

அரவரசன்வனஅலுவலர்தேவக்கோட்டை
– சிறகு, பிப்., 23.02.2019 

Tuesday, March 5, 2019

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

அகரமுதல

எனக்குப் பிடித்த திருக்குறள்!

     தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது.
    எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்பமான பொருள்கள் என்னை அதிரவைக்கின்றன. அந்தக் குறள்.
        “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
         சான்றோன் எனக் கேட்டதாய்  (குறள்-69)
    ஒரு குழந்தையை ஒரு தாய் ஈனுகின்ற சமயத்தில்  மகப்பேற்று நேரவழி, குழந்தை பிறக்க   வேண்டும் என்ற அச்சம், தாதி மற்றும் மருத்துவரின் அறிவுரைப் பேச்சு, அந்த ஒரு பொழுதிற்காகப் பத்துமாதங்கள் காத்திருந்த நிலை,
இதற்குக் காரணமான கணவன், தானும் இவ்வாறுதானே நம் தாயிடம் இருந்து பிறந்தோம் என்ற நினைவு, தந்தை, தாய், பக்கத்துவீடு, எதிர்த்த வீட்டுக் குழந்தைகள், எளிதாகக் குழந்தையைப் பெற்றுவந்த தன் தோழி, என்று பல நிலைகளைச் சிந்தித்து, விலா எழும்புகளை வளைத்து, முண்டி வரும் குழந்தையை முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெளிவரச் செய்த அந்தக்கணத்தில், அந்தப்பொழுதில், கண்கள் சோர்ந்து மூடியிருக்க, மயக்கத்தில் பசியும் சூழ்ந்து உடல்முழுக்க வலியால் துடித்த நிலையில், கண் பார்க்க இயலாத நிலையில் ‘வீல்’  என்ற குழந்தையின் அழுகுரல் கேட்ட பொழுதில் கிடைக்கும் இன்பம் உணர்ந்தவர்க்கே விளங்கும்.
    தெய்வப்புலவர் திருவள்ளுவர் தானே தாயாய் மாறி அந்தப் பொழுதிற்குச் சென்று அந்தத் தாயின் இன்ப உணர்ச்சியை உணர்கின்றார். பெரிதுவக்கும் நிலைகள் பெண்ணுக்குப் பல இருப்பினும், அவள் தாய்மை அடையும் அந்தப் பொழுதில் கிடைக்கும் உவகை பெரிதாகும்.
    எனிய மனிதன் ஒருவனுக்கு வயிற்றுப்பகுதியில் எற்படும் வலி அவனைத் தற்கொலைக்குத் துண்டிவிடும். சில சமயம் கொண்ட கொள்கைகளை எல்லாம் கூட அழித்துவிடும்.“திருநாவுக்குகரசர் அப்பராய்” மாறியது வயிற்று வலியால்தானே? ஆனால் குழந்தை ஈனுகின்ற நேரத்தில் அந்த வலி மிகச்சிறிதாய் போகச் செய்யும் அந்த நேர உவகை.      
      ஆனால் அதை விட ஒரு பேருவகை எப்பொழுது வரும். தன் மகன் திருமணத்தில் அவனுக்கு குழந்தைப் பேறு கிடைத்த நேரத்தில், அல்லது அவனுக்கு வேலை கிடைத்த நேரத்தில் அமையுமா? என்றால் ஒரு போதும் இல்லை எனலாம். அதற்குச் சமமான ஒரு நிலை தாய்க்குத் தலைமகன் பிறந்த பொழுதிற்கான இன்பம் ஒரு போதும் பின் வாராது  என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் அதனை விட ஒரு பொழுது உண்டு.என்கிறார் வள்ளுவர் எங்ஙனம்? கண் குழந்தையைப் பார்ப்பதற்கு முன்பு குழந்தையின்  ‘வீல்’  என்ற சத்தம் அவளுக்கு இன்பம் தருகின்றது.
 “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல” (குறள்-1100)
என்ற நிலை மாறி கண்பார்க்கும் முன்னே ஒலி தந்த இன்பம் ஈன்ற பொழுது. அது ஒளியை புறம் தள்ளிய ஒலியின் தருணம். அதே போன்ற தருணம் ஒலியின் மூலமாகவே வருதல் வேண்டும். அது குழந்தை வளர்ந்து மனிதனாகி, தன் செயல்களால், அறிவினால் அன்பால் கனிந்து தலைவனாகி சிறந்த பண்புடன் திகழும் போது, ஆன்றோர் அவையில் “இவன்தந்தை என்னோற்றான் கொள்” என்று அவை வியப்ப, அவ்வவையில் “இவன் சான்றோன்” என்று ஒரு தாயின் காதில் சான்றோரின் வாக்கு(ஒலி) விழும் சமயத்தில் ஈன்ற பொழுதினால் பெரிதுவப்பாள் என்கின்றார் திருவள்ளுவர்.
வயது முதிர்ந்த தாய் கண் பார்வையின்றிக், கூட்டம் நிறைந்த அரங்கில் தொலைதூரப் பார்வையின்றித் தம் மகன் எங்கிருக்கின்றான் என்று தட்டுத்தடுமாறும் நிலையில் வேறொருவரின் குரலில் இவன் சான்றோன் எனக் கேட்ட நேரத்தில் உள்ள இன்பம் அளவிடற்கரியதுதான். ஆனால் பெரிதுவத்தல் என்றால் பேரின்ப நிலை என்று கொள்ளலாம். உயிரோடு இருக்கின்றேன் என்று மெய்ப்பிப்பதற்காகக் குழந்தை ஒலி யெழுப்பியதும், ஆம் அவன் உயிரோடும், மக்கட்பண்போடும் வாழ்ந்தான் என்று சான்று தந்த சான்றோரின் வாக்கு பேரின்பம் தருவது என்பதை எந்த வலியும் இல்லாமல் வந்த உவகை. வலியில்லாமல் நல்வழியில் கிட்டிய சன்மானம், வலியில்லா இன்பம். 
    இன்னும் ஒரு நுட்பமான செய்தியும் இந்தக் குறட்பாவில் ஒளிந்துள்ளதாக நான் கருதுகின்றேன் நமது தமிழ்ச்சமூகம் தாய் வழிச்சமூகம், சிக்மன் பிராய்டு என்ற மேல்நாட்டு அறிஞன் பால் கவர்ச்சியினால் தந்தையின் பாசம் தலைமகள் மீதும், தாயின் பாசம் தலைமகன் மீதும் அதிகம் இருக்கும்; அஃது ஒரு இனக்கவர்ச்சியின் தாக்கம் என்ற கொள்கையைக் கூறியுள்ளார்.
    ஆயினும் பாச உணர்ச்சி என்ற ஒரு நிலை தந்தையைவிடத் தாய்க்கே தருவது தமிழினம். கருணை, அன்பு, பாசம் என்று சொல்கின்ற நேரத்தில் பெண்ணும், தாயுமே மணக்கண்முன் வருவர். குறிப்பாக ஒரு பெண்ணுக்கு 2000 ஆண்டுகட்கு முன் தமிழினத்தின் மரியாதை தருவது நன்மக்கட்பேறு ஆகும்.  எனவே தான் மலடி என்ற சொல்லை நீக்கியது, உயாந்த நிலையாகும் “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்ற தமிழன் பெண்டிற்கு தரும் உயர்வு மாநிலத்தைப் பெருமைப்படுத்துவதாகும்.
“இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோவாதார் (குறள்-270)
என்று வாழந்தது திருவள்ளுவர் காலம். துறவு நிலையில் உள்ள சிலரைக் காப்பதற்காகப் பலர் இல்லறத்தில் வாழ்ந்த காலம். இல்லறத்தின் மாண்பு விருந்தோம்பல்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
   நல் விருந்து வானத்தவர்க்கு” (குறள்-86)
என்றெல்லாம் வாழ்ந்த காலம். ஒரு பெண் திருமணம் புரிந்து கணவனுடன் பெருமையோடு வாழ்வதை விருந்தினரும், துறந்தாரும் வாழ்த்துவார்கள். ஆயினும், கணவன் இல்லாத நேரத்தில் விருந்தினர்கள் வீட்டிற்கு வருவதில்லை.
கண்ணகி கோவலன் பிரிந்த நிலையில் கலங்கியது கூட ஆன்றோர்க்கு அமுது படைத்திட இயலாமைக்கே! ஆயினும், ஆண்மகன் வீட்டில் இருக்கின்றபோது விருந்தினர் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது. சிறுத்தொண்டர் கதையில் கூட, பைரவ வேடதாரியைச் சிறுத்தொண்டர் மனைவி அமுதுண்ண அழைக்கையில் ஆண்பிள்ளை இல்லா வீட்டில் அடியார்கள் அமுதுண்பதில்லை. யாம் அருகில் உள்ள வாதாபி விநாயகர் கோவிலில் காத்திருப்பதாகச் சொல்லி செல்வதும் இக்கருத்திற்கு வலு சேர்க்கிறது.  எனவே தான் தலைமகனின் வரவு  தலைமகளின் வரவைவிட தாய்க்கு இனிமை தருகின்றது. தமிழனின் இந்த உயர்வு நிலை எங்கே!.
 சிக்மன் பிராய்டின் பாலுணர்ச்சி தத்துவம் எங்கே?..
 தமிழனின் வாழ்வியல் உன்னதத்தை இக்குறட்பாவில் தருகின்றான் வள்ளுவன்.
அத்துடன் தன்மகன் பொருள் ஈட்டி விருந்தோம்பல் செய்ய வழிவகுப்பான் என்ற பெருமையும் ஒரு சேர அவளுக்கு உவகை வரும் தருணம். பயணத்தை தொடங்கி மீண்டும் சிறப்பாக வீடுவந்து சேர்ந்தபிறகு, இறைவனுக்கு நன்றி கூறுவதைப் போன்று தனது பிறவிப்பயனை அடைந்ததாக உணர்கின்றாள் தாய.; பெண்ணின் அணிகலன்களை சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. மணிமேகலை, சிலப்பதிகாரம் என்று பெரும் காப்பியங்களாக ஆக்கிய தமிழன் பெண்கள் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்பது பிறர் வாயால்தான். குறிப்பாகக், கணவன் அல்லது அக்கம்பக்கத்தினர் கூறுகின்ற சொற்களால் என்று பெரும்பாலோர் பொருள் கூறுகின்றனர்.  என்றாலும் அதனை நேரடியாகக் கேட்கும் இன்பத்திற்கு, ஈடாகுமா?
ஆயினும். எனக்கு அதற்கு மாற்றுக் கருத்து உண்டு. பெண்ணைப் போற்றுகின்ற சமூகத்தில் ஒரு மனிதனைச் சான்றோன் என்று சான்றளிக்கும் அவைகளில் எல்லாம் தாயின் முன்னிலையிலேயே செய்கின்ற அவை திருவள்ளுவர் காலத்தில் இருந்திருக்க வேண்டும்.
“ஈன்றவள் கேட்க விருதுகள் ;(Convocation, Prize Distribution)  வழங்கும் மரபு தமிழ்மரபு” அது சிறிது சிறிதாக மாறிப் பெண்களைப் புறந்தள்ளிய காலமாக மாறிப்போனது என்றும் நான் கருதுகின்றேன்.
இக்குறட்பாவில் நுட்பமான செய்திகள்:
 1. ஓளியை ஒலி  முந்தும் – சில இடங்களில்
 2. துன்பம் கூடிய  இன்பம் – துன்பமில்லா இன்பம் என்ற நிலை உண்டு
 3. தமிழன் விருந்து போற்றும் மாண்பால் சிக்மன் பிராய்டு சொல்லும் கோட்பாட்டை வென்றவன்
 4. தகுந்த அரங்கில் தாயின்முன் சான்றோர் தரும் பாராட்டும் அவை அமைப்பு தமிழர்கள் வாழ்வின் ஒரு பகுதி.
 5. பெண்மையைப் போற்றுவதின் மூலம் ஆண்மையைப் போற்றுவது இக்குறள்.
 எனவே, தமிழனின் நாகரிகத்தை பெருமைப்படக்கூறும், இக்குறட்பா எனக்குப் பிடித்த குறட்பாவாகும். காந்தியைப்போல், அப்துல்கலாம் போல் உலகம் முழுதும் தன்மகனைச் சான்றோன் என்று ஒலிக்க அவ்வொலியைக் கேட்டதாயின் செவி தரும் இன்பம், பேரின்பம் என்றால் மிகையாகாது. “சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன். ஆதை மெய்ப்பிக்கும் அரங்கு ஈன்று புறந்தந்த தாய்” தமிழனின் மாண்பு என்னே! என்னே!!
வாழ்க வள்ளுவம்!
வளர்க வையகம்!
இரெ. சந்திரமோகன்
மேனாள்  முதல்வர். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி. தேவகோட்டை

Monday, March 4, 2019

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3: அ. அரவரசன்

[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை:1/3 தொடர்ச்சி]

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3

மேலும் கலித்தொகை தரும் பாடல் வரிகள் பொதிந்துள்ள பல நூறு பாடல்களின் ஒரு பாடலில் ‘அரக்கு’பற்றிய செய்தி உள்ளது. அரக்கு பற்றிய செய்தியில் மகாபாரதம் தோன்றிய காலத்தில் அரக்குமாளிகை இருந்ததாக வரும் தகவலின் தொன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் உலவி வருகின்றது. எனினும் மனித வாழ்வுக்கு நற்பயன் தரும் பூச்சிகளில் (தேனீ, பட்டுப்பூச்சி போன்றவை) அரக்குப் பூச்சியும் ஒன்று. 1787 இல் சான்கேர் என்ற பிரெஞ்சு தேசத்து பூச்சியியல் அறிஞர் கண்டு பிடித்து அதன் வாழ்க்கைச் சுழற்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ‘காக்சிடே’ என்ற பூச்சிக் குடும்பத்தை சேர்ந்த அரக்குப் பூச்சியின் விலங்கியல் பெயர் இலேக்கிபர் இலேக்கா என்பதாகும். 
ஆனால் அரக்கு பற்றிய சங்கப்பாடல்களில் குறிப்பாக கலித்தொகையில் “பாலைக்கலி” பகுதியில் இடம் பெற்றுள்ள.
‘‘வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர் என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்கு இல்லை கதழ்எரி சூழ்ந்தாங்கு
களிதிகழ் கடாஅத்த கடுங்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்
ஒள்ளுரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத்தன்
எழு. . . . . . கவினே
என்ற பாடலில் அரக்கு பற்றிய விவரம் விரவியுள்ளன. இதில் அரக்கு மாளிகையை நெருப்பு சூழ்ந்துகொண்டபோது பாண்டவர்கள் எப்படி வெளியேறினார்களோ அது மதங்கொண்ட யானை உள்ளே அகப்பட்டுக்கொள்ள அதிலிருந்து அது எப்படி மீண்டதோ அதுபோல் உளது என்றும் யானை தன் கூட்டத்தைக் காப்பாற்ற அத்தீயை மிதித்து அழித்து வெளியேறியது ஒருங்கிணைத்து பாடியுள்ளமை வியப்புக்குரியது எனில் அதுமிகையில்லை.
நெருப்பு போன்ற வெப்பத்தை உமிழும் காடு துடிபோலும் வடிவுடைய கால்களைக் கொண்ட கன்று கலக்கி சேறாக்கி சிறிது நீரையும் காதல் துணையென விளங்கும் பிடிக்கு முன்னே ஊட்டிவிட்டு அதன்பிறகே தான் உண்ணும் களிறும் உளது என்ற காட்சியினையும் தன் அன்பைக் கவர்ந்து கொண்ட மெல்லிய மென்புறா கோடையின் வெப்பத்தில் தளர்ந்து வருந்தும்பொது தனது மெல்லிய சிறகை விரித்து நிழல் அளித்து வெப்பத்தின் தீமையை அதன் தாக்கத்தால் ஏற்பட்ட வருத்தத்தை போக்கும் ஆண்புறாவும் உளது என்ற காட்சியினையும் மலைமேல் வளரும் மூங்கில பட்டுப் போய்விடும் அளவில் கதிரவனின் திரண்ட கதிர்கள் காய்வதால் காட்டுவழியில் செல்லும் போக்கு இயலாது போகும் கொடுமையான தன்மையுடைத்து என்று நினைத்து நிழல் தரும் மரம் இல்லாமையால் வருந்தும் மடப்பம் மிக்க பெண்மானை வெயில் படாமல் தன் உடல் நிழலைக்கொடுத்து பாதுகாக்கும் கலைமானும் உளது என்ற நிகழ்வையும் ஒரே பாட்டில் படம் பிடித்துக் காட்டும் பாங்கு எண்ணி மகிழத்தக்கது. என்பதில் உள்ள நுட்பம் சார்ந்த வனவியலில் தொக்கிநிற்கும உள்ளீட்டு பாத்திர நுணுக்கம் என்பது வாழ்வியல் மேன்மை என்பதே. அதாவது தலைவனின் மேலான பண்பினால் தலைவியின் துன்பம் நீங்கும் என்ற மறைபொருள் நமக்கு முருகியல் நோக்கில் காட்டும் பாடம் என்பதை உணர்த்தத்தான்.
. . . . . . . .அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே. . . . . . . .பிடியூட்டி பின் உண்ணும் களிறு
என்றும்
‘‘இன்பத்தின் இகந்து ஒரீஇ இலைதீந்த உவமையால்
துன்புறூஉம் தகையவே. . . . . . . .
. . . . . . 
மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரத்தனரே!என்றும் கூறப்பட்டுள்ளன.
‘‘கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரும் தகயைவே காடு. . . . . . . . . . . . .தன் நிழல் கொடுத்தளிக்கும் கலை எனவும் உரைத்தனரே!
என்ற பாடலில் புறா, யானை, மான் (கடமான்) என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து காட்டில் வாழ்கின்ற உயிரினத்தின் பாசப்பிணைப்பை வனவியலோடு வாழ்வியலை கலந்து அறிதல் உணர்வாக அன்பின் செழுமையை பாடியமை நமக்கான பண்பாட்டு தடம் ஆகும்.
உயர்ந்த மரங்கள் நிறைந்த வனம். அதில் புலியுடன் மோதிய யானை தன் வலியால் அதனை வென்று தளர்ச்சியோடு மலைச்சாரலில் படுத்துறங்கும்போது கனவிலும் அது நிகழக்கண்டு வெகுண்டெழுந்து தன்முன்னே மலர்ந்து நிற்கும் வேங்கை மரத்தை அந்த புலியாகவே கருதி அதன்மீது சாடிப் பாய்ந்து, அந்த மரத்தை மோதி அழித்து விட்டுச் சினம் குறைந்த பின்னர்த் தன்னுடைய அறியாமையால் வந்த ஆணவத்தால் அழிந்த மரத்தைக்கண்டு அந்த யானை நாணியதாக ஒரு நெகிழ்ச்சியான சித்திரத்தைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது. அதனை,
‘‘கொடு வரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் . . . . . கனவில் கண்டு கதும் என வெரீஇய. .
எனும் பாட்டு வரிகளின் மூலம் உணர்த்தும் போக்கு புலவனின் கற்பனைத் திறத்தின் உச்சம் எனலாம்.
முல்லைக் கலியின் முத்தான பாடல் ஒன்றில் கொன்றை, காயா, வெட்சி, பிடவு, முல்லை, கஞ்சாங்குல்லை, குருந்தம். காந்தள், பாங்கர் என்று மலையிலும் மரம் செறிந்த காட்டிலும் மலர்ந்த பல்வகை மலர்களால் ஆன கண்ணியைச் சூடி இளைஞர்கள் கொல்லேறு தழுவுதல் காட்சி நடைபெற்றதை விவரித்த புலவர் பெருந்தகை அதன் பிற்பட்ட பாடலில் வளைந்து வெண்கோடுகளைக் கொண்ட சிவந்த எருதுபோன்ற வீருகொண்டு போரிடவல்ல காளைகள் புகுந்த சிங்கமும் குதிரையும், களிறும், முதலையும் கலந்து போரிடும் மலைச்சாரல் என்று அதனைக் காட்சிப்படுத்தியதை,
‘‘வளையுபு மலிந்த கோடணி சேயும் ….. போலும்”
என்று பாடுவதன் மூலம் மனநிறைவைத் தருகின்றார்.
இதன் முற்பகுதியில் குறிக்கப்பட்டுள்ள மலர்வகையிலும் குறிஞ்சிப்பாட்டின் குறிக்கப்பட்டுள்ள மலர்வகையிலும் ‘‘கஞ்சாங் குல்லை” என்ற மலர் குறிக்கப்பட்டுள்ளதை நாம் நுணுகி பார்த்தால் தற்போதைய அரசியல் சட்டப்படி இநத தாவரம் சட்டவிரோதமாக பயிரிடப்படும் தாவரவகையில் பட்டியலிடப்பட்டுள்ள முதன்மைவகை சட்டவிரோத மனமயக்க மற்றும் போதைபயிர் வகையாக சுட்டப்பட்டுள்ள ‘கஞ்சா’ என்ற செடிவகை தான் இது என்பதை உணரலாம்.
சங்கக் காலத்தில் மகளிர்கள் கூந்தலில் அணியும் மலராகவும் ஆடவர்கள் கழுத்தில் அணியும் மலராகவும் வடிவமைக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட இத்தாவரம் காலத்தின் அடிச்சுவட்டின் தொன்மை மறந்த காலத்தில் நலம்கெடுக்கும் பூவாக ஒதுக்கப்பட்டு இன்று இத்தாவரம் உலகிலே எங்கும் பயிரிடப்பட்டாலும் அது அனைத்துலக நாடுகளின் போதைத் தடுப்புச் சட்டத்தின் கடும்பிடிக்குள் சிக்கிவிடும் என்பதே இன்றைய வரலாறு நமக்குக் காட்டும் உண்மை என்பதை உணர வேண்டும்.
காதலன் விரைந்து வந்து வரைந்து கொள்ளாது வெளிநாடு சென்று விட்டதால் பெண்ணிய பண்புகளை இழந்து ஓயாது புலம்பிய ஒரு நங்கை காதலன் வரக் கண்டதும் பண்டுபோல் ஆகிவிட்டாள் . இஃதை ஊரார் பார்த்துப் பாராட்டியதை,
‘‘அகலாங் கண் இருள் நீக்கி அணிநிலாத் திகழ்ந்தபின் ……நீத்தான்
என்ற பாடலின் மூலம் வெளிப்படும் கருத்தினை நெஞ்சகத்தில் ஏற்றிப் பார்த்தால் வஞ்ச எண்ணம் கொண்டு நான் வாசித்த யாழ் ஓசை கேட்ட அசுணப்பறவையின் மீது அன்பு காட்டாது அதன் உயிர்போகும் படி பறையறைந்து ஒலி எழுப்பினாற்போல் ஒருவன் முன்னே இன்பம் அளித்து பின்னர் அந்த இன்பத்தோடு என்னுடைய உயிரையும் பொக்கும் படி என்னைக் கைவிட்டான் . . . என்ற செய்திதனை உணர முடிகிறது. இப்பாடலில் வரும் ‘இசையறிபுள்’ என்ற அசுணமா (அசுணம்) என்ற பறவையை எண்ணுகிறபோது ஏறக்குறைய பதிமூன்றாம நூற்றாண்டிலேயே உலகிலிருந்து மறைந்துபோன பறவையின் வரலாற்றை அறியவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.
(தொடரும்)
அரவரசன்வனச் சரக அலுவலர்(ப.நி.)தேவக்கோட்டை
– சிறகு, பிப்., 23.02.2019