வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 4.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:3. தொடர்ச்சி)
வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது
காதல் வாழ்க்கை
ங. களவியல்
(வரிசை எண்கள் / எழுத்துகள்
‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.)
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து (48)
ஆற்றின் ஒழுக்கி=நல்நெறியில் பிறரை ஒழுகச் செய்து அறன் இழுக்கா=அறநெறியினின்று மாறுபடாத, இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, நோற்பாரின்=தவம் செய்வாரின் வாழ்க்கையைவிட, நோன்மை யுடையத்து=தாங்கும் தன்மை மிகுதியும் உடையது.
இல்லற நெறியை மேற்கொண்டு மனையாளொடு வாழ்கின்றவர் பெரியவரா? இல்லறத்தை வெறுத்துத் துறவுநிலை மேற்கொண்டுள்ளவர் பெரியவரா? என்ற கேள்வி எழுமேல், இல்லற நெறியில் வாழ்கின்றவரே பெரியவர் என்பது தெற்றென விளங்கும். இல்லற நெறியில் வாழ்கின்றவர் தாமும் அறநெறியில் ஒழுகிப் பிறரையும் அங்ஙனம் அறநெறியில் ஒழுகத் துணைபுரிகின்றார். உணவு, உறைவிடம் முதலியன பெறுவதற்கு இல்லறத்தாரின் துணை துறவறத்தார்க்கு வேண்டற்பாலது. இல்லறத்தாரின்றித் துறவறத்தார் வாழ இயலாது. ஆதலின், இல்லற வாழ்வே துறவற வாழ்வினும் பொறுப்பும் கடமையும் சிறப்பும் மிக்கதாகும்.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று (திருக்குறள் 49)
அறன்=அறநெறி, எனப்பட்டதே=என்று சிறப்பித்துச் சொல்லப் பட்டதே, இல்வாழ்க்கை=இல்லற வாழ்க்கை நெறியாகும், அஃதும்=அவ்வில்லற வாழ்க்கை நெறியும், பிறன் பழிப்பது இல்லாயின்=பிறனால் பழிக்கப்படுவது இல்லையானால், நன்று=மிகப் பெருமையுடையதாகும்.
வசையொழிய வாழ்வதே வாழ்க்கையாகும் என்பது வள்ளுவர் கருத்து (திருக்குறள் 240). ஆதலின் இல்லற வாழ்வு பிறனால் பழிக்கப்படாமலிருத்தல் வேண்டும் என்றார். ’நன்று’ என்பதன் பொருள் ’பெரிது’ என்பதாகும். ’நன்று பெரிதாகும்’ என்பது தொல்காப்பிய நூற்பா. ஆகவே, அறநெறி வாழ்வு எனப்படும் இல்லற வாழ்வு பிறனாலும் பழிக்கப்படாமல் இருக்குமாயின் மிகப் பெரிதாகும் என வள்ளுவர் பெருமான் அறிவுறுத்துகின்றார் என்று கருதுதல் வேண்டும்.
’அஃதும்’ என்பதனைத் துறவறத்தைச் சுட்டுவதாகப் பொருள் கொண்டு, “துறவறம் பிறரால் பழிக்கப் படுவதுஇல்லையாயின் இல் வாழ்க்கை யோடு ஒரு தன்மைத்தாக நன்று” எனப் பரிமேலழகர் பொருள் உரைக்கின்றார். சுட்டுச்சொல் ஒரு தொடரில் வரும் (தோன்றியும் தோன்றாமலும்) பெயரையே சுட்டி நிற்பது இயல்பு. ஆதலின் அஃதும்‘ என்னும் சுட்டு ’அறன்‘ என்பதனையே சுட்டுவதாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து. ’அஃதும்’ என்பதில் உள்ள உம்மை சிறப்பும்மையாகும். ’பட்டதே’ என்பதில் உள்ள
‘ஏ’ தேற்றப் பொருளில் வந்ததாகும்.
பரிமேலழகர் காலத்தில் துறவறம் மக்களால் போற்றப்பட்டு வந்திருத்தல் வேண்டும். துறவற நிலையினை மேற்கொண்டோர் பலர் கூடா ஒழுக்கம் உடையோராய் மக்களை வஞ்சித்து வாழ்ந்திருத்தல் வேண்டும். ஆதலின் இல்லறத்தினும் துறவறம் தாழ்வுடைத்து என்ற கருத்தினைப் பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளார் எனத் தெரிகின்றது.
துறவறம் மேற்கொள்வது இல்லறத்தார்க்குத் தொண்டு செய்யவே. ஆதலின், உண்மைத் துறவு நிலை உயர்ந்தோரால் போற்றத்தக்கதே!இல்லறத்துக்குத் துணையாய் உள்ள துறவறத்தை இல்லறத்தோடு ஒப்பிட்டுக் காணுதல் முறையன்று. துறவறத்தார் மேற்கொண்டுள்ள தொண்டின் மேன்மையால் இல்லறத்தாரால் நன்கு மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்ததும் வருவதும் உலகம் அறிந்ததே. அதனால் இல்லறம் துறவறத்தினும் தாழ்வுடைத்து என்று கருதுதல் பொருந்தாது. துறவறத்தினும் இல்லறமே ஏற்றமுடைத்து என்ற பரிமேலழகர் நிலைநாட்ட முயன்றுள்ளது பாராட்டத்தக்கது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (திருக்குறள் 50)
வையத்துள்=உலகில், வாழ்வாங்கு=வாழும் நெறி முறைப்படி, வாழ்பவன்=வாழ்கின்றவன், வானுறையும்= வானுலகில் வாழும், தெய்வத்துள்=கடவுளுடன் வைக்கப்படும்=ஒப்பிட்டு மதிக்கப்படுவான்.
மாந்தன் நிலையைவிட உயர்ந்த நிலை கடவுள் நிலையாகும். மாந்தன் நிலை குற்றம் செய்வதற்கு இடம் உடையது. கடவுள் நிலை குற்றங்கட்கு அப்பாற்பட்டது. குற்றமற்ற நிலையே கடவுள் நிலையாகும்.
மக்கள் குற்றமற்றவர்களாக வாழவேண்டும். அப்பொழுதுதான் இவ்வுலகம் துன்பங்களினின்று விடுதலை பெற இயலும். கசடறக் கற்று, கற்ற வழியில் மக்கள் ஒழுகில் குற்றங்களுக்கு இங்கு இடமில்லை. குற்றமற்று வாழ வேண்டுமென்பது, மக்கள் வாழ்க்கைக்கு இயலாது என்று சிலர் கருதிவிடுகின்றனர்; கடவுள் பிறப்பினர்க்குத்தான் குற்றமற்று வாழ முடியும் என்று கூறித் தம் குற்றங்களுக்கு அமைதி தேடுகின்றனர். வள்ளுவர் பெருமானுக்கு இக்கருத்து உடம்பாடன்று. மாந்தனும் கடவுளாகலாம். எப்பொழுது? உலகில் வாழும் அறநெறிப்படி வாழ்ந்தால். ஆகவே, ஒவ்வொருவரும் இல்லறம் ஏற்று வாழும் அறமுறைப்படி வாழுங்கள் அவ்வாறு வாழுகின்றவன் இவ்வுலகில் இருப்பவனே யாயினும் வானுலகில் உறைவதாகக் கூறப்படும் கடவுளாகவே கருதப்படுவான் இல்லற நெறியே இனிய கடவுள் நிலைக்கு மக்களை இட்டுச் செல்லும்.
(தொடரும்)
குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
Comments
Post a Comment