Friday, June 3, 2011

Thamizh kadamaigal 10 : தமிழ்க்கடமைகள் 10 தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும் - செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்

தமிழ்க்கடமைகள் 10
தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்
உலகத்தில் பெயரைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் உண்டா? பெயர்க்காகவே, பெயரை நிலைநிறுத்தவே உழைப்பவர்கள் பலரைக் காண்கின்றோமே. ஆதலின் உங்கள் பெயரைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாவா? தமிழராகப் பிறந்த உங்கள் பெயர் தமிழில் அல்லவா இருத்தல் வேண்டும். கிருத்துவராய் இருப்பினும், மகம்மதியராய் இருப்பினும், வேறு எச்சமயத்தினராய் இருப்பினும், தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்.
தமிழ்ப்பெயர்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பெயரைக் கொண்டே பெயரையுடையவர் ஆணா பெண்ணா என்று கூறி­விடலாம். ஆடவர் பெயர் னகார ஒற்றில்(ன்)தான் முடியவேண்டும்.
சங்க இலக்கியக் காலத்தில் சாதிகள் கிடையா. சாதியைக் குறிக்கும் தேவர், நாடார், பிள்ளை, ஐயங்கார் முதலிய பட்டப் பெயர்கள் கிடையா. ன்ஓடு அர்அல்லது ஆர் விகுதி சேர்த்து அழைப்பர்; நக்கீரன்-நக்கீரர்; இறையன்- இறையனார்.
சங்க இலக்கிய காலத்திற்குப் பிறகு தமிழர் பெயர்கள் தமிழில் இல்லாது வேறு மொழிகளில் தோன்றத் தொடங்கிவிட்டன. தமிழன், பெயரில் கூடத் தமிழனாக இல்லை. இன்று ஓர் எழுச்சி- தமிழ், தமிழ், என்ற முழக்கம். நல்ல காலம் பிறக்கின்றது. தமிழன் தமிழ்ப் பெயரை விரும்புகின்றான். அவ்விருப்பம் எங்கும் பரவுக.
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்

Thamizh kadamaigal 9 : தமிழ்க்கடமைகள் 9 அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக- தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா

தமிழ்க்கடமைகள் 9
அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக
மூத்தமொழி இலக்கணத்தால் முதிர்ந்து நிற்கும்
        உலகமொழி தமிழென்று மொழிதல் மட்டும்
மாற்றுவழி யாகாது விஞ்ஞா னத்தின்
        மருந்துமொழி விருந்துமொழி தமிழ்தான் என்று
போற்றுவதும் உலகத்தார் நாட்டார் எல்லாம்
        புரிந்துகொள வைப்பதுவும் ஆகும். இந்த
மாற்றத்தை உடனேநாம் மேற்கொண் டால்தான்
        மடிநீங்கிக் களிபொங்கித் தமிழ்த்தேர் ஓடும்
- தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா:
உங்கள் குரல் தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக் 36


Thamizh kadamaigal 8 : தமிழ்க்கடமைகள் 8 தமிழா நீ எழுச்சி கொள்வாய்- புலவர் புஞ்சையரசன்

தமிழ்க்கடமைகள் 8

தமிழா நீ எழுச்சி கொள்வாய்
தமிழரிங்கு தமிழ்நாட்டில் ஒன்றி உள்ளம்
        தான்குரலே கொடுத்திட்டால் என்றோ அங்கு
தமிழர்க்குத் தமிழ்ஈழம் மலர்ந்திருக்கும்
        தமிழன்தான் இனமொழி நல்உணர்வே இன்றி
தமிழன்தான் வாழுகின்றான் இலங்கை தன்னின்
        தமிழர் வரலாற்றறியாப் பேதையாக
தமிழா நீ எழுச்சி கொள்வாய் எனிலோ நன்றே
        தரணிவாழ் தமிழரெலாம் மகிழ்ச்சி கொள்வார்.
- புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள் : பக்கம்  6

Thamizh kadamaigal 7 : தமிழ்க்கடமைகள் 7 : தமிழ்மொழி ஆக்கத்திற்கு வழிவகை காண்க- தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார்

தமிழ்க்கடமைகள் 7 :  தமிழ்மொழி ஆக்கத்திற்கு வழிவகை காண்க
மொழிவளத்தால் ஒரு நாடு நன்னிலை பெறும். மொழி வளங்குன்றின் வீழ்ச்சியுறும். தமிழ்மொழி பழமையானது. இலக்கண இலக்கியச் செறிவு மிக்கது. அரசரும் குடிகளும் தமிழைப் போற்றிப் புரந்தனர்; அதுகாறும் அவர்கள் வெற்றிக்கு வீழ்ச்சியில்லை. பின்னர் அடிமைவாழ்வில் அகப்பட்டு மொழியை மறந்தனர்; மீளும் வகையின்றி ஆளாத் துயரில் உழல்கின்றனர். எனவே, இவ்விழிநிலைமாறத் தமிழ் இலக்கியங்களையும் பிற நாட்டாரின் கலைத்திறனையும் கற்று முன்னேற வேண்டும். பட்டம் பெற்ற பட்டதாரிகளிற் பலர், தாம் கற்ற கலைத்திறனை,  ஆங்கிலம் அறியாத கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படுமாறு செய்வதில்லை. நமது நாட்டு மக்கள் கல்வியில் முன்னேற வேண்டுமாயின், தம் நாட்டு மொழியிலே அனைத்தையும் கற்றல் வேண்டும். மேனாட்டினரும் வியக்கும் வண்ணம், சப்பானியர், மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக­வே, மதி நலமும், படைநலமும், பொருள் நலமும் பெற்றுத் திகழ்வது, அவர்தம் நாட்டுமொழி அளித்த மதுகையாலேயாம். தாய்மொழிப் பயிற்சியால் ஆங்கில மொழித்திறன் குன்றிவிடுமென்று கூறுவது தவறுடைத்து. இசுலாமியர் பல்கலைக் கழகத்தினர் தோன்றிய காலம்முதல் அருங்கலையனைத்தையும் நாட்டு மொழியாகிய உருது’­வில்­ மாணவர்க்குக் கற்றுத் தரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர். மற்றொரு சாரார், கலை நூற்களைக் கற்றுத் தரத் தாய்மொழியில் கருவிநூற்கள், மரபுச் சொற்கள், வாய்பாடுகள் இல்லையென்கின்றனர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்க தமிழறிஞர் சிலரை ஒன்று சேர்த்துப் பணவுதவி புரிந்தால் இக்குறைபாடு மிக எளிதில் நீங்கிவிடும். கலைநூற்களைத் தமிழ்மொழியில் எழுதுவோர்க்குச் சிறந்த பரிசுகள் வழங்கப்படுமென விளம்பரம் செய்யின் எத்துணை நூல்கள் வெளிவரும் தெரியுமா? எனவே, குறைபாடுகளை நீக்கிவிட்டுத் தமிழ்மொழி ஆக்கம் பெறுவதற்குரிய வழிவகைகளைக் காணவேண்டுவது தமிழர்களின் தலையாய கடமையாகும்.
- தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார்:
தமிழர் மாநாட்டுப் பேருரை (7.8.32): தரவு: தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார் வாழ்வும் பணிகளும் (கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு) : பக்கம்.97-98

Thamizh kadamaigal 6 : தமிழ்க்கடமைகள் 6 : திராவிடன் எனச் சொல்வதா? தமிழன் என்று சொல்லுக - நாவலர் சோமசுந்தர பாரதியார்

தமிழ்க்கடமைகள் 6 :
திராவிடன் எனச் சொல்வதா?
தமிழன் என்று சொல்லுக
தமிழன், தன்னைத் தமிழனென்று கூறிக்கொள்ளவும வெட்கப்­பட்டுத் “திராவிடன், திராவிடன்” என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? “சுயமரியாதை சுயமரியாதை” என்று, ஆரிய மொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி, இப்போதுதான் ‘தன்மானம்’ என்று தமிழாகப் பேசுகிறார்கள். நீங்கள் அண்ணாதுரை பேசும்போது, அவர் பேச்சை அங்கீகரித்தும், அகமகிழ்ந்தும் அடிக்கடி கை தட்டினீர்கள். எனக்கு அதுபோல் கை தட்டாவிட்டாலும் மனத்தையாவது திறந்து வைத்துக் கேளுங்கள். நோய் தீர மருந்து தர முடியாமல் நஞ்சுகொடுத்து ஆளையே இழிவுபடுத்தித் தமிழ்க் கலையை அழிக்க வேண்டா. மக்களுக்கு அறிவூட்டுங்கள். ஆரிய ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள். அதுதான் தக்கவழி!
- நாவலர் சோமசுந்தர பாரதியார்

thamizh kadamaigal 5 : தமிழ்க்கடமைகள் 5:தமிழ் கடன் கொண்டு வளராது - மொழிஞாயிறு தேவநேயப் பாவணர்

தமிழ்க்கடமைகள் 5: எழுத்தையும் சொல்லையும் கடன் வாங்காதே! - மொழிஞாயிறு தேவநேயப் பாவணர்
தமிழ் கடன் கொண்டு வளராது

கடன் வாங்குவதால் தமிழே வளருமென்றே- பலர்
    வலிந்துரைப்பார் மொழிவகை யறியார்
கடன் வாங்கியதே யில்லை தமிழ் அதிலே-பல
    வடசொல்லைப் பகைவர் புகுத்தியதால்- தமிழ்
வளமிகக் குன்றி வருகிறதே
ஒருவறியவன் வணிகம் செய்வதென்றால்-கடன்
    வாங்கியே செய்தல் வகையாகும்
கடன்வளவனும் வீணாய் வாங்கிவரின்- அவன்
    வண்பொருள் குன்றி வருவதுடன் -கடன்
வாங்கியென் றிழிவும் வந்துவிடும்
- மொழிஞாயிறு தேவநேயப் பாவணர்: இசைத்தமிழ்க்கலம்பகம்: ப.98

Thamizh kadamaigal: தமிழ்க்கடமைகள் 4 விடிவுக்கு முடிவெடுப்போம் - த.மாசிலாமணி

தமிழ்க்கடமைகள் 4

விடிவுக்கு முடிவெடுப்போம்
ஆலயத்தில் வழிபாடு தமிழில் இல்லை
          அங்காடிப் பெயர்ப்பலகை தமிழில் இல்லை
ஞாலமதில் தமிழனுக்கு நாடு இல்லை
          நாடின்றிப் போனதனால் நாதியில்லை
சீலமிகு தமிழ் மழலைப் பெயர்களெல்லாம்
          சீர்மேவும் செந்தமிழில் இல்லை இல்லை
ஓலமிடல் நன்றல்ல; ஒன்று சேர்ப்போம்
          ஒருமுறைதான் பிறப்புண்டு; நின்று பார்ப்போம்
திரைஇசையில் தூயதமிழ்ப் பாடல் இல்லை
          திரைப்படங்கள் பெயர்கூடத் தமிழில் இல்லை
கரைபுரளும் காவிரிக்கு உறுதி இல்லை
          கன்னடத்துத் தேசியத்தில் தமிழ்நாடில்லை
திரைகடல் சூழ் ஈழத்தில் அமைதி இல்லை
          தீர்த்துவைக்கப் பாரதமும் விரும்பவில்லை
விரைந்தொன்று சேருங்கள் தமிழர்களே
          விடிவுக்கு முடிவெடுப்போம் வெற்றி காண்போம்
அன்னைத் தமிழ்படிக்க ஆணையிட்டால்
          அடுக்குமா என்கின்றார் தமிழ்ப்பகைவர்
கன்னலின் சாறுதனை ஒதுக்கிவிட்டுக்
          கள்ளினைப் பருகிடுதல் நன்றோ சொல்வீர்
தன்னையே தந்தேனும் தமிழகத்தில்
          தாய்மொழியில் கல்விபெறத் துணையிருப்போம்
என்னவிலை தந்திடவும் தயங்கமாட்டோம்
          என்னதான் விளைவெனினும் துணிந்து நிற்போம்
- த.மாசிலாமணி: நின்று பார்ப்போம்: நந்தன் இதழ் சனவரி 16-31“. 2000


Thamizh kadamaigal 1 : ka.anbazhaganar: தமிழ்க்கடமைகள் 1 : தமிழ் ஆக்கக் கடமைகள் - பேராசிரியர் க.அன்பழகனார்

  (அன்பர்களே! வணக்கம்.
அக்காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ்  இலக்கியங்களில் இருந்து  ஆயிரக்கணக்கிலான மேற்கோள்களை நான் 10 ஆண்டுகளுக்கு முன்னர்த் தொகுத்துத் தமிழ்ச்சிமிழ் என்னும் பெயரில் கணணியச்சிட்டு வைத்துள்ளேன். உறங்கிக் கிடக்கும் மேற்கோள்களை உலகோர் அறியச் செய்ய அவ்வப்பொழுது பதிய விழைகிறேன். தமிழ் உணர்வாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.  முதலில் நம் அனைவரின் உள்ளக்கிடக்கையின் தொகுப்பாக அமைந்த பேராசிரியர் கருத்தைப் பதிகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! )
 
தமிழ் ஆக்கக் கடமைகள்
தாய்மொழியாம் தமிழிலேயே சிந்திக்கவும்
தமிழிலேயே பேசவும் எழுதவும் அதுவும்
தனித்தமிழாகவே சிறக்கவும் உறுதிகொள்வோம்.
உயர்ந்தோர் ஏத்தும் உயர்தனிச் செம்மொழியாய்
உலகமொழிகளுள் மூத்தமுதன் மொழியாய்
முப்பால் வழங்கிய மூலப்பண்பாட்டு மொழியாய்
என்றுமுள தென்றமிழ் வளர்த்திட முனைவோம்.
தமிழன் வாழ்வுக்கும் வளத்துக்கும் மூச்சாய்
உடலுக்கு உணர்வாய் அறிவுக்கு உணவாய்
இனவுரிமைச் சின்ன மென ஒளிரும் தமிழ்மீது
பிறமொழி ஆதிக்கம் இடம்பெற ஒருப்படோம்.
தமிழ்மொழியின் தனியாட்சி நிலை கெடவும்
திரிவுற்ற திராவிட மொழிகளெனப் பிரியவும்
தனித்தமிழ்ச் சொல்வளம் வழக்கு இழக்கவும்
வழிவழிவந்த மரபுச் செல்வங்கள் மறையவும்
சூழ்ந்தவர் வாழ்மொழி வடமொழி ஆதலின்
எழுத்திலும் பேச்சிலும் வடசொல் ஒழிப்போம்.
செந்தமிழ்ச் சொற்றிறம் குன்றாது காப்போம்.
தமிழின் இனிமையும் எழிலும் குன்றிடச் செய்யும்
பிறமொழிச் சொற்கள் எதையும் தவிர்ப்போம்.
அறிவியல் கலைக்கும் ஏற்றதமிழ்ச்சொல் கண்டிடத்
தமிழ்ச்சொல் வேர்கொண்டு புதுச்சொல் படைப்போம்.
பெற்றெடுத்த மக்களுக்குத் தமிழ்ப்பெயர் இடுவோம்.
தத்தம் பெயரையும் தமிழ்ப்பெயராய் மாற்றிடுவோம்.
ஊரும் தெருவும் வணிக நிலையமும் மனையும்
நற்றமிழ்ப் பெயர் கொண்டிட வழிகாண்போம்.
வேற்றுமொழி உயர்வென்பார் தம்முரையைத்
தூவென்று ஒதுக்கிடவும் துணிவுகொள்வோம்.
தமிழ்நாட்டுத் திருக்கோயில் வழிபாடு எல்லாம்
வைதிக மரபில் வடமொழியில் நிகழ்வதை ஒழித்து
தொல் மரபினில் தமிழில் நடத்தச் செய்வோம்.
தமிழர் இல்லங்களில் நிகழும் திருமணவிழா
நீத்தார் வழிபாடு முதலான சடங்குகள் யாவும்
தமிழினில் நடத்திடவும் உறுதி கொள்வோம்.
மழலையர் கல்வி தமிழிலேயே பயிற்றுவிக்கவும்
பள்ளி கல்லூரி மாணவர் எவரும் தமிழ் கற்கவும்
பல்கலையின் துறைகளும் தொழில் நுணுக்கக் கல்வியும்
தமிழிலேயே இயங்கிடவும் வழிகாண்போம்.
தமிழ்க்கல்வி பெறாதார் எவருமே இல்லையாக
முதியோர் கல்வியினால் தமிழறிவு பரப்புவோம்.
விரைந்து முன்னேறும் கணிப்பான் காலத்திலும்
பின்தங்கிய நம்மக்கள் முன்னேற்றம் கண்டிட
அறிவியல் உண்மை அறிந்திடும் ஆற்றல் பெற
கலைச்சொல் ஆக்கப்பணி வளரும் வழி செய்வோம்.
தமிழுக்குக் கேடாகும் ஏடும் இதழும் கைவிடவும்
தமிழுக்கு ஆக்கமாம் ஏடுகளையே ஏற்கவும்
கதை கட்டுரை கவிதை புதின நூலெலாம்
நற்றமிழில் வரைவோரை ஊக்கப்படுத்திடவும்
ஏற்றதொரு உணர்வை மக்களிடையே வளர்ப்போம்.
மக்களை ஈர்க்கும் தொலைக்காட்சி வானொலியில்
தமிழ்நிகழ்ச்சிகளே பெரும்பங்கு இடம்பெறவும்
இந்திமொழித் திணிப்பை விலக்கிடவும் வழிகாண்போம்.
தமிழகத்து இசையரங்குகளில் தெலுங்கில் பாடுவதைச்
சாத்திரிய சங்கீதம்என்னும் சடங்காக்கியோர்
தொன்றுவரும் தமிழிசையைப் புறக்கணிக்கவிடோம்.
சிற்றூரில் கணக்குமுதல் தலைமைச்செயலகம் வரை
தமிழக அரசு நிருவாகம் தமிழிலேயே நடத்திடவும்
சட்டங்கள் எல்லாம் செம்மைத் தமிழில் வரைந்திடவும்
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் வழிகாண்போம்.
மையஅரசின் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்கச்செய்யவும்
இந்தியைத் திணிக்கும் சூழ்ச்சியை வீழ்த்தவும் உறுதி ஏற்போம்.
- இனமானப் பேராசிரியர் க.அன்பழகனார்:
தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ்மாட்சி: பக்கம்.390-391


--