Thamizh kadamaigal 1 : ka.anbazhaganar: தமிழ்க்கடமைகள் 1 : தமிழ் ஆக்கக் கடமைகள் - பேராசிரியர் க.அன்பழகனார்

  (அன்பர்களே! வணக்கம்.
அக்காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ்  இலக்கியங்களில் இருந்து  ஆயிரக்கணக்கிலான மேற்கோள்களை நான் 10 ஆண்டுகளுக்கு முன்னர்த் தொகுத்துத் தமிழ்ச்சிமிழ் என்னும் பெயரில் கணணியச்சிட்டு வைத்துள்ளேன். உறங்கிக் கிடக்கும் மேற்கோள்களை உலகோர் அறியச் செய்ய அவ்வப்பொழுது பதிய விழைகிறேன். தமிழ் உணர்வாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.  முதலில் நம் அனைவரின் உள்ளக்கிடக்கையின் தொகுப்பாக அமைந்த பேராசிரியர் கருத்தைப் பதிகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! )
 
தமிழ் ஆக்கக் கடமைகள்
தாய்மொழியாம் தமிழிலேயே சிந்திக்கவும்
தமிழிலேயே பேசவும் எழுதவும் அதுவும்
தனித்தமிழாகவே சிறக்கவும் உறுதிகொள்வோம்.
உயர்ந்தோர் ஏத்தும் உயர்தனிச் செம்மொழியாய்
உலகமொழிகளுள் மூத்தமுதன் மொழியாய்
முப்பால் வழங்கிய மூலப்பண்பாட்டு மொழியாய்
என்றுமுள தென்றமிழ் வளர்த்திட முனைவோம்.
தமிழன் வாழ்வுக்கும் வளத்துக்கும் மூச்சாய்
உடலுக்கு உணர்வாய் அறிவுக்கு உணவாய்
இனவுரிமைச் சின்ன மென ஒளிரும் தமிழ்மீது
பிறமொழி ஆதிக்கம் இடம்பெற ஒருப்படோம்.
தமிழ்மொழியின் தனியாட்சி நிலை கெடவும்
திரிவுற்ற திராவிட மொழிகளெனப் பிரியவும்
தனித்தமிழ்ச் சொல்வளம் வழக்கு இழக்கவும்
வழிவழிவந்த மரபுச் செல்வங்கள் மறையவும்
சூழ்ந்தவர் வாழ்மொழி வடமொழி ஆதலின்
எழுத்திலும் பேச்சிலும் வடசொல் ஒழிப்போம்.
செந்தமிழ்ச் சொற்றிறம் குன்றாது காப்போம்.
தமிழின் இனிமையும் எழிலும் குன்றிடச் செய்யும்
பிறமொழிச் சொற்கள் எதையும் தவிர்ப்போம்.
அறிவியல் கலைக்கும் ஏற்றதமிழ்ச்சொல் கண்டிடத்
தமிழ்ச்சொல் வேர்கொண்டு புதுச்சொல் படைப்போம்.
பெற்றெடுத்த மக்களுக்குத் தமிழ்ப்பெயர் இடுவோம்.
தத்தம் பெயரையும் தமிழ்ப்பெயராய் மாற்றிடுவோம்.
ஊரும் தெருவும் வணிக நிலையமும் மனையும்
நற்றமிழ்ப் பெயர் கொண்டிட வழிகாண்போம்.
வேற்றுமொழி உயர்வென்பார் தம்முரையைத்
தூவென்று ஒதுக்கிடவும் துணிவுகொள்வோம்.
தமிழ்நாட்டுத் திருக்கோயில் வழிபாடு எல்லாம்
வைதிக மரபில் வடமொழியில் நிகழ்வதை ஒழித்து
தொல் மரபினில் தமிழில் நடத்தச் செய்வோம்.
தமிழர் இல்லங்களில் நிகழும் திருமணவிழா
நீத்தார் வழிபாடு முதலான சடங்குகள் யாவும்
தமிழினில் நடத்திடவும் உறுதி கொள்வோம்.
மழலையர் கல்வி தமிழிலேயே பயிற்றுவிக்கவும்
பள்ளி கல்லூரி மாணவர் எவரும் தமிழ் கற்கவும்
பல்கலையின் துறைகளும் தொழில் நுணுக்கக் கல்வியும்
தமிழிலேயே இயங்கிடவும் வழிகாண்போம்.
தமிழ்க்கல்வி பெறாதார் எவருமே இல்லையாக
முதியோர் கல்வியினால் தமிழறிவு பரப்புவோம்.
விரைந்து முன்னேறும் கணிப்பான் காலத்திலும்
பின்தங்கிய நம்மக்கள் முன்னேற்றம் கண்டிட
அறிவியல் உண்மை அறிந்திடும் ஆற்றல் பெற
கலைச்சொல் ஆக்கப்பணி வளரும் வழி செய்வோம்.
தமிழுக்குக் கேடாகும் ஏடும் இதழும் கைவிடவும்
தமிழுக்கு ஆக்கமாம் ஏடுகளையே ஏற்கவும்
கதை கட்டுரை கவிதை புதின நூலெலாம்
நற்றமிழில் வரைவோரை ஊக்கப்படுத்திடவும்
ஏற்றதொரு உணர்வை மக்களிடையே வளர்ப்போம்.
மக்களை ஈர்க்கும் தொலைக்காட்சி வானொலியில்
தமிழ்நிகழ்ச்சிகளே பெரும்பங்கு இடம்பெறவும்
இந்திமொழித் திணிப்பை விலக்கிடவும் வழிகாண்போம்.
தமிழகத்து இசையரங்குகளில் தெலுங்கில் பாடுவதைச்
சாத்திரிய சங்கீதம்என்னும் சடங்காக்கியோர்
தொன்றுவரும் தமிழிசையைப் புறக்கணிக்கவிடோம்.
சிற்றூரில் கணக்குமுதல் தலைமைச்செயலகம் வரை
தமிழக அரசு நிருவாகம் தமிழிலேயே நடத்திடவும்
சட்டங்கள் எல்லாம் செம்மைத் தமிழில் வரைந்திடவும்
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் வழிகாண்போம்.
மையஅரசின் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்கச்செய்யவும்
இந்தியைத் திணிக்கும் சூழ்ச்சியை வீழ்த்தவும் உறுதி ஏற்போம்.
- இனமானப் பேராசிரியர் க.அன்பழகனார்:
தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ்மாட்சி: பக்கம்.390-391


--

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue