Posts

Showing posts from January, 2014

அவன் பெரியசாமி

Image
செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி - கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை மேய்வதனைக் கண்டு விட்டேன் தேராதான் றன்மகளைப் பெண்டா ளர்க்குத் திட்டமிட்ட செயல்கண்டே னந்தோ நொந்தேன் 3. காப்பதற்குக் கடமைகொண்டார் கயமை கொண்டார் கன்னல்தமி ழன்னாய்நின் வாழ்வைப் போக்க காப்புறையு முழங்கிவிட்டார் நாசம் நாசம் நாங்களினிப் பொறுப்பதிலை யுறங்கோ மொல்லை மாப்பெரிய போர் தொடங்கும் தீயே மூளும் மண்டழலை யென்னுடலி லேற்றி மானங் காப்பதற்கு முன்செல்வேன் வாரீர் வாரீர். காளையரே சிங்கங்காள் என்றான் சென்றான். 4.

சந்தனத் தமிழன்

Image
சந்தனத் தமிழன் - கவிஞர் முருகு சுந்தரம் அமிழ்தமாம் தமிழைக் காக்க ஆருயிர் நெருப்பில் தந்த தமிழவேள் சின்னசாமி தமிழர்க்குப் பெரிய சாமி! உமியினைப் போன்று மக்கள் உலகினில் பலபேர் வாழ இமயத்தைச் சிறிய தாக்கி இவன் புகழ் எழுப்பி விட்டான்! மக்களும் மறவன்; ஆட்டு மந்தையில் பிறந்த வேங்கை. தக்கைகள் நடுவே மின்னும் தனித்தவோர் தங்கக் கூர்வாள்; சக்கைபோல் தமிழ ருக்குள் சந்தனத் தமிழன்; அஞ்சிப் பக்கத்தில் பதுங்கி டாமல் பாய்கின்ற சிங்கக் குட்டி. கொழுந்துவிட் டெரியும் தீயில் குந்திய அப்பா அன்று செழுந்தமிழ்த் துணையி னாலே செவ்வுடல் காத்துக் கொண்டார்! அழிகின்ற உடலி தென்றே அருந்தமிழ்ச் சின்ன சாமி! முழுகினாய் இன்று செந்தீ முத்தமிழ் காக்க வேண்டி! குயிலெலாம் உன்பேர் கூவும்! குன்றத்துத் தென்றல் கூட வெயில் மறைந் திருக்கும் மாலை வேளையுன் புகழை வீசும்! மாயல்தரும் தமிழ நங்கை மாக்கவி வாணர் நாவில் பயிலுறும் காலமெல்லாம் பாடல்நீ பெற்று வாழ்வாய்! - குறள்நெறி பங்குனி 02.1995 / 15.03.1964  - அகரமுதல

மனக்கதவும் திறவாதோ!

Image
மனக்கதவும் திறவாதோ! .. -மதுரை க. பாண்டியன் படர்ந்திட்ட கொடியதனின் பரிதவிப்பைப் போக்குவதற்கே, பாரியெனும் மன்னவனும் தன்தேரைத் தந்திட்டான்! இடர்பட்ட புலவர்தன் வறுமைதனை யொழிப்பதற்கே, இனிமையுறக் குமணனுமே தன்தலையைக் கொடுத்திட்டான்! விடமறுத்த வல்லூற்றின் வன்பிடியை விடுப்பதற்கே. வழங்கிட்டான் தன் தசையை சிபியென்பான் புறவிற்காக! நடனமிடும் மயிலதனின் நலிவுதனை நீக்குதற்கே நல்கிட்டான் சால்வையென நவின்றதுவே வரலாறும்! இந்நாளில் அதுபோல இன் தமிழ்க்காய்த் தன்னுடலை இன்பமோடு எரிதணலில் இட்டுவிட்ட ஏந்தலுமே, இந்நாட்டில் இருக்கின்றான்! இன்னுருவாய் வாழ்கின்றான்! இகமுழுது போற்றுசின்னச் சாமியெனும் பேராளன்! மந்தமதி கொண்டோரின் அந்தகா ராமெடுக்க மண்ணகத்தில் மகிமையுற மாண்டவழி கண்டவனும்! முந்தியெழு ஞாயிறது தருமுணர்வால் அவன் செயலால் மாநிலத்தில் மதியற்றோர் மனக்கதவும் திறவாதோ? - குறள்நெறி: பங்குனி 02.1995 / 15.03.1964                                                        - அகரமுதல இதழ் 10

செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்

Image
செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் . இன்தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்துச் செந்தமிழ் காகச் செந்தீ மூழ்கிய சின்னச்சாமியைப் போற்றுதும் நாளும்! தமிழ்மொழி காக்கத் தம்முயிர் ஈயும் உரவோர் உண்மையை உணர்ந்து ஒழிமின் மறந்தும் தமிழை மாய்க்கும் புன்செயல். எரியில் மூழ்கி எம்தமிழ் காக்க வேண்டும் சூழ்நிலை விரிதல் நன்றோ? இந்தியின் முதன்மை எம்தமிழ் அழிக்கும் அழிசெயல் என்பதை அறியார் யாரே? நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும் வல்வினை ஒழிமின்! வண்டமிழ் போற்றுமின்! தீந்தமிழ் மறவன் சாமியை நினைத்து ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே - தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், குறள்நெறி: தை 19, 1995 / 01.02.1964