செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்
செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்
இன்தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்துச்
செந்தமிழ் காகச் செந்தீ மூழ்கிய
சின்னச்சாமியைப் போற்றுதும் நாளும்!
தமிழ்மொழி காக்கத் தம்முயிர் ஈயும்
உரவோர் உண்மையை உணர்ந்து ஒழிமின்
மறந்தும் தமிழை மாய்க்கும் புன்செயல்.
எரியில் மூழ்கி எம்தமிழ் காக்க
வேண்டும் சூழ்நிலை விரிதல் நன்றோ?
இந்தியின் முதன்மை எம்தமிழ் அழிக்கும்
அழிசெயல் என்பதை அறியார் யாரே?
நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க
வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும்
வல்வினை ஒழிமின்! வண்டமிழ் போற்றுமின்!
தீந்தமிழ் மறவன் சாமியை நினைத்து
ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே
- தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்,
குறள்நெறி: தை 19, 1995 / 01.02.1964
Comments
Post a Comment