Monday, March 22, 2010

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: இசை உருவும், மொழிமரபும்!ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. சார்பெழுத்து என்பது ஒன்றைச் சார்ந்து வருவது. ஒன்றினிடத்து பற்றுக்கோடாக வருவது. சார்த்தப்படுவதாலே சார்பெழுத்து என்றானது. இவ்வெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராது, தனித்தும் வராது. ஆய்தம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மையுடையது.""எழுத் தெனப் படுபஅகர முதல் னகர இறுவாய் முப்பஃ தென்பசார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே'' (தொல்.1)÷சார்ந்துவரும் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனும் மூன்றும் மொழியின் மரபிலக்கணமாக வழிவழியாக வந்ததாகும் என தொல்காப்பியர் முதற்பாவிலேயே குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு முன்னோர்களால் பயன்படுத்தும் பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப் பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று வருகிறது. எனவே, வடிவத்தால் மிகப் பழமையானது ஆய்த எழுத்து. வேறு எந்த மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு எழுத்து' என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி' என்றும் பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல் உள்ளதால், இது "ஆய்த எழுத்து' என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து' எனவும் பெயர் பெறும். ""முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன'' (தொல்.2)""பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழிநிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி'' (தொல்.350)என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.ஆய்த எழுத்து, மொழிக்கு இடையில் குற்றெழுத்தை அடுத்து உயிரோடு கூடிய வல்லெழுத்துகளான ""கு, சு, டு, து, பு, று'' என்ற ஆறு எழுத்துகளின் மேல் ஏறிவரும். உதாரணம், எஃகு, கஃசு, கஃடு, உஃது, கஃபு, கஃறு.மேலும், புணர்ச்சி விகாரத்திலும், செய்யுள் விகாரத்திலும் ஆய்தம் பிறக்கும். எனவே, ஆய்தம் எட்டு இடங்களிலும் தோன்றும். (உ.ம்) அவ்+கடிய = அஃகடிய.ஒலியே ஒரு மொழிக்கு முதற்காரணமாகும். காற்று அனுத்திரளின் செயல்பாடு முயற்சி இவைகளால் உண்டாகும் ஒலியே எழுத்து எனப்படும். ஒலி பிறக்க ஒலியுறுப்புகள் செம்மையாகச் செயல்பட வேண்டும். அவ்வகையில் இது தலை, மிடறு, நெஞ்சு, நாக்கு, அண்ணம், மூக்கு, பல், இதழ் ஆகிய எட்டு உறுப்புகளும் செயல்பாட்டு விளக்கம் பெறும்போது சார்பெழுத்தாகிய ஆய்தம் பிறக்கும்.ஆய்தம் இசையையும் உருவையும் அருகித் தோன்றும் என்பதை தொல்காப்பியர்,""ஈறியல் மருங்கினும் இசைமை தோன்று'' (தொல்.39)""இசையினும் உருவினும் அருகித் தோன்றும்மொழிக் குறிப் பெல்லாம் எழுத்தினியலாஆய்தம் அஃகாக் காலை யான'' (தொல்.40)எனும் நூற்பாக்களால் அறியலாம். (உ.ம்) அல்+திணை = அஃறிணை; பல்+துளி = பஃறுளி. ஆனாலும் ஆய்தம் அஃகாக்காலை அரைமாத்திரை அளவில் சுருங்கி நில்லாது உருவும் இசையும் மிகுதியாகும்போது நீண்டே ஒலிக்கும். (உ.ம்) "கஃஃறென்னும்' என்று நிறம் பற்றியும், "சுஃஃறென்னும்' என்று இசை பற்றியும் நீண்டே ஒலிக்கும் என்பது நம் முன்னோர்களின் ஒலி நுட்ப ஆய்வு. இதுமட்டுமல்ல, ஆய்தம் சில இடங்களில் முற்றாய்தமாகவும், குறுக்கமாகவும், அளபெடையாகவும், குறிப்பு மொழியின் கண்ணும் தோன்றும். இஃது, அஃது எனச் சுட்டப்படும் இடங்களில் உரசொலியாகவும், சில இடங்களில் நலிவொலியாகவும் இடம்பெறும். (உ.ம்) ""அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்'' (குறள்:178)ஆய்தம் என்னும் சொல், ஆய்தல் என்னும் சொல்லோடு தொடர்புடையதாக உள்ளது. ஆய்தல் என்பது உள்ளதன் நுணுக்கம் எனும் பொருள்படும். எனவே, ஆய்த ஒலி மிகமிக நுண்ணிய ஓசையைக் குறிக்கவே அக்காலத்தில் பயன்பட்டது என்பது தெளிவாகிறது. இக்காலத்தில், மொழியியலில் அயல்மொழி ஒப்பீட்டு ஆய்வுக்கு இது பெரிதும் துணை நின்று உதவுகிறது.பன்னெடுங்காலமாக ஓலைச்சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் இதன் உருவம் ர்ர், :, -, அப்து என மாறிமாறி அழியாமல், முடிவில் ஃ என இவ்வாறு உருவம் பெற்றது. ஆய்த எழுத்து மொழிமரபு காக்கத் தோன்றிய எழுத்தாகும்.
கருத்துக்கள்

அருமையாக எழுதியுள்ளார். பாராட்டுகள். இன்றைக்குப் பிற மொழி ஒலி எழுத்துகளைத் தமிழ் வடிவிலேயே பயன்படுத்த ஆய்த எழுத்து பயன்படுகின்றது என்பதையும் இதன் காரணமாக மொழி முதலிலும் (ஃபிரான்சு என்பது போல்)வருவதையும் குறிப்பிட்டிருக்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 1:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பன்முகப் பேராசிரியர் அ.சீ.ரா.மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து "சான்றோர் வாக்கு' எனும் நிகழ்ச்சியில், 1960-களில் ஓர் இனிய குரல், அற்புதமாக நேயர் நெஞ்சங்களை வசீகரிக்கும் வகையில் வரும். இந்தக் குரலின் உரையில் தனித்தன்மை இருக்கும். இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்தான் பேராசிரியர் அ.சீநிவாசராகவன்.தஞ்சை மாவட்டம் கண்டியூரில் 1905-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி பிறந்தார். இவரது தாய்-தந்தை பற்றிய விவரம் அறியக்கிடைக்கவில்லை. நெல்லை மண்ணில் வாழ்ந்து அம் மண் வாசனையை விரும்பியவர். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தாலும், தமிழ் இலக்கியத்தில் ஓர் அறிஞர். நாகப்பட்டினத்தில் பள்ளிப் படிப்பையும், திருச்சி ஜோசப் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின் அக் கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளராக சில காலம் பணியாற்றினார்.சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராக இவர் இருந்தபோது, "சிந்தனை' என்ற தமிழ் மாத இதழையும், "திரிவேணி' என்ற ஆங்கில மாத இதழையும் பதிப்பித்து வெளியிட்டார். இவருடைய சிந்தனை ஏட்டில் அரசியல், விஞ்ஞானம், இலக்கியம் என்று அனைத்து வகையான கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. ராஜாஜி, டி.கே.சி., வரலாற்று ஆசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, அவினாசிலிங்கம் செட்டியார், ஏ.ஜி.வெங்கடாச்சாரி, பெ.நா.அப்புசாமி, இரா.திருமலை, நா.பிச்சமூர்த்தி, நீதிபதி மகராஜன், சுதேசமித்திரன் ஆசிரியர் சீனிவாசன், பி.ஸ்ரீ.ஆச்சார்யா, பெரியசாமிதூரன், தமிழறிஞர் கி.சந்திரசேகரன் போன்றோரின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. அ.சீ.ரா.வின் குறிப்புகள், அவரே வகுளாபரணன் (நம்மாழ்வார் பெயர்) என்ற புனைப் பெயரில் எழுதிய கட்டுரைகளும் சிறப்பாக அமைந்திருந்தன.பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி, நெல்லை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார் அ.சீ.ரா.1951-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வ.உ.சி. கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டபொழுது அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்கும்படி இவரை, அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஏ.பி.சி. வீரபாகு வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அந்தப் பொறுப்பை ஏற்று 19 ஆண்டுகள் அங்கு பணியாற்றியுள்ளார்.20 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். வறுமையில் வாடும் மாணவர்கள், விடுதிக்கோ, கல்லூரிக்கோ பணம் கட்ட முடியவில்லை என்றால், அவர்களுக்குத் தன்னுடைய சொந்தப் பொறுப்பில் இவரே பணத்தைக் கட்டி, அவர்களுடைய கல்விக்கு உதவி செய்துள்ளார்.இவருக்கு இசைக் கலையில் தீராத ஆர்வம் உண்டு. நெல்லையிலும், தூத்துக்குடியிலும் தொடர்ந்து இசை விழாக்களை நடத்தியுள்ளார். முத்துசாமி தீட்சிதரின் இசையின் மீது இவருக்கு மிகுந்த ஈடுபாடு, தமிழிசையின் மீதும் ஆர்வம், பாரதியினுடைய கவிதைகள் மீதும் நாட்டம் உண்டு."வெள்ளைப் பறவை' என்ற படைப்புக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றுள்ளார். ஆங்கிலக் கவிஞர்கள் பிரெüனிங், விட்மன், பிராஸ்ட், வங்கக் கவிஞர் தாகூர் கவிதைகளைத் தமிழில் வழங்கியுள்ளார். பல மொழிகளிலிருந்து தரமான கவிதை, நாடகங்கள், சிறுகதைகளை தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை அ.சீ.ரா.வையே சாரும். ஒன்றுபட்ட நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எங்கெல்லாம் இலக்கிய விழாக்கள் நடைபெற்றாலும் அங்கெல்லாம் இவரும் இருப்பார். மேலும், வேங்கடத்தை தாண்டி தமிழைக் கொண்டு சென்றதில் இவரது பங்கு சிறப்பானது.வெள்ளைப் பறவை (கவிதை), நிகும்பலை, அவன் அமரன், கெüதமி, உதயகன்னி (நாடகம்), மேல்காற்று, இலக்கிய மலர்கள், காவிய அரங்கில், குருதேவரின் குரல், புது மெருகு (இலக்கிய விளக்கம்), திருப்பாவை, திருவெம்பாவை, நம்மாழ்வார், பாரதியின் குரல், கம்பனிலிருந்து சில இதழ்கள் போன்ற இவரது 20-க்கும் மேற்பட்ட படைப்புகள் இன்றைக்கும் சிரஞ்சீவியாகத் திகழ்கின்றன.1948-ஆம் ஆண்டு வெளிவந்த, சிந்தனை இதழில் "கலாசாரமும் வருக்கமும்' என்ற தலைப்பில் அ.சீ.ரா. எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதியைப் படித்தால் அவரது முற்போக்குச் சிந்தனை நன்கு புலப்படும்.""இன்றைக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன் மனிதத் தொகுதியில் குறிப்பிட்ட சில கூட்டத்தார்தாம் காட்டுமிராண்டித் தனத்திலிருந்து வெளியேறி, நாகரிகத்தின் முதற்படியை அடைந்தார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கூட டாஸ்மானியர்கள் காட்டு மிராண்டிகளாய் இருந்தார்கள்.ஆகவே, மனித வருக்கம் முழுவதும் ஒரே காலத்தில் ஒரே சீராக முன்னேறவில்லை என்பது வெளிப்படை. ஏதாவது ஓரிடத்தில் ஒரு கூட்டத்தாரிடம் முன்னேற்றம் ஏற்படாமல் அந்த முன்னேற்றம் பல இடங்களுக்கு பரவியது என்று சொல்வதற்கில்லை. உதாரணமாக, இரும்பு உருக்கும் முறை கருங்கடற் கரையிலிருந்து புறப்பட்டுச் சென்று நீக்ரோவருக்கும், ஸ்காண்டினோவியருக்கும் கிட்டியது; ஆனால், அப்போது ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் போகவில்லை. இந்த ஒரு நூற்றாண்டுக்குள் ஐரோப்பிய நாகரிகம் வியாபாரிகள் மூலமாகவும், பாதிரிகள் மூலமாகவும் உலகெங்கும் பரவிவிட்டது. நேற்று வரையில் ஏணியின் கீழ்ப்படியில் நின்று கொண்டிருந்த அமெரிக்க இந்தியருக்கும், ஆப்பிரிக்க நீக்ரோவருக்கும், தாகிதியருக்கும், எழுதப் படிக்கவும், மோட்டார் ஓட்டவும் தெரிந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மெல்ல வளர்ந்த நாகரிகம் நாலைந்து தலைமுறைக்குள் இவர்களுக்குக் கிடைத்து விட்டது. வருக்க அமைப்பும் பண்பும் மாறாமல் இருக்கும்பொழுதே கலாசாரம் எவ்வளவு வேகமாக மாறமுடியும் என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?'' என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழில் கலைக் களஞ்சியம் உருவாக்கப்பட்ட போது அது எவ்வாறு அமையவேண்டும் என்பது பற்றி அ.சீ.ரா. அவரது சிந்தனை இதழில் (டிசம்பர், 1948) வகுளாபரணன் என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். டி.கே.சி.யின் வட்டத்தொட்டி விவாதத்திலும் இருப்பார். எட்டயபுரத்தில், கல்கி நிறுவிய பாரதி நினைவு மண்டபம் திறப்பு விழாவிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.கம்பன், பாரதி, ஆழ்வார்கள், சைவ இலக்கியங்களில் மட்டும் அல்லாமல், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற பல தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர், இந்த இலக்கியங்களில் உள்ள மெய்ப்பாட்டையும், காட்சிகளையும் சுவையாக, இனிமையாக தன்னுடைய சொற்பொழிவுகளில் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினார்.கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பன்னாட்டு இராமாயண மாநாடு போன்றவற்றில் கலந்து கொண்டுள்ளார். 1966-ஆம் ஆண்டில் கருமுத்து தியாகராஜன் செட்டியார் தலைமையில் நடந்த மதுரை தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் தமிழ் பயிற்றுமொழி அவசியம் தேவையென்று குரல் கொடுத்தார். ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற மாறன் செந்தமிழ் மாநாட்டில் பிற மதத் தலைவர்களைப் பங்குபெற அழைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார். அ.சீ.ரா.வுக்குத் தெரியாத விஷயங்கள், செய்திகள் இல்லையென்றே கூறவேண்டும்.இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி, 1967-ஆம் ஆண்டு போப்பாண்டவர் இவரை கெüரவித்துள்ளார்.கடந்த 2005-ஆம் ஆண்டில் இவருடைய நூற்றாண்டு விழா நடந்தேறியது. இவருடைய படைப்புகள் அனைத்தும் சென்னை, மயிலாப்பூர் அல்லயன்ஸ் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, கொல்கத்தா மு.சீனிவாசனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. அந்தத் தொகுதி பல இலக்கிய ரசனைகள், சுவைகள், அரிய செய்திகள் இடம் பெற்ற அற்புதப் பெட்டகமாகும். சீனிவாசராகவன் என்றும், அ.சீநிவாசராகவன் என்றும் இரண்டு வகையாகவும் இவரைக் குறிப்பிடுவர். தருமபுர ஆதீனம் வழங்கிய பட்டமான "செந்தமிழ்ச் செம்மல்' என்றும், பேராசிரியர் என்றும் அழைக்கப்பட்ட அ.சீ.ரா. 1975-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி காலமானார்.ஆங்கில - தமிழறிஞர், பேராசிரியர், படைப்பாளி, சொற்பொழிவாளர், கவிஞர், பத்திரிகையாளர், இசை ஆர்வலர், மாணவர்களின் பாதுகாவலர் எனப் பன்முகம் கொண்ட பேராசிரியர் அ.சீ.ரா.வின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.