மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: இசை உருவும், மொழிமரபும்!



ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. சார்பெழுத்து என்பது ஒன்றைச் சார்ந்து வருவது. ஒன்றினிடத்து பற்றுக்கோடாக வருவது. சார்த்தப்படுவதாலே சார்பெழுத்து என்றானது. இவ்வெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராது, தனித்தும் வராது. ஆய்தம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மையுடையது.""எழுத் தெனப் படுபஅகர முதல் னகர இறுவாய் முப்பஃ தென்பசார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே'' (தொல்.1)÷சார்ந்துவரும் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனும் மூன்றும் மொழியின் மரபிலக்கணமாக வழிவழியாக வந்ததாகும் என தொல்காப்பியர் முதற்பாவிலேயே குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு முன்னோர்களால் பயன்படுத்தும் பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப் பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று வருகிறது. எனவே, வடிவத்தால் மிகப் பழமையானது ஆய்த எழுத்து. வேறு எந்த மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு எழுத்து' என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி' என்றும் பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல் உள்ளதால், இது "ஆய்த எழுத்து' என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து' எனவும் பெயர் பெறும். ""முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன'' (தொல்.2)""பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழிநிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி'' (தொல்.350)என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.ஆய்த எழுத்து, மொழிக்கு இடையில் குற்றெழுத்தை அடுத்து உயிரோடு கூடிய வல்லெழுத்துகளான ""கு, சு, டு, து, பு, று'' என்ற ஆறு எழுத்துகளின் மேல் ஏறிவரும். உதாரணம், எஃகு, கஃசு, கஃடு, உஃது, கஃபு, கஃறு.மேலும், புணர்ச்சி விகாரத்திலும், செய்யுள் விகாரத்திலும் ஆய்தம் பிறக்கும். எனவே, ஆய்தம் எட்டு இடங்களிலும் தோன்றும். (உ.ம்) அவ்+கடிய = அஃகடிய.ஒலியே ஒரு மொழிக்கு முதற்காரணமாகும். காற்று அனுத்திரளின் செயல்பாடு முயற்சி இவைகளால் உண்டாகும் ஒலியே எழுத்து எனப்படும். ஒலி பிறக்க ஒலியுறுப்புகள் செம்மையாகச் செயல்பட வேண்டும். அவ்வகையில் இது தலை, மிடறு, நெஞ்சு, நாக்கு, அண்ணம், மூக்கு, பல், இதழ் ஆகிய எட்டு உறுப்புகளும் செயல்பாட்டு விளக்கம் பெறும்போது சார்பெழுத்தாகிய ஆய்தம் பிறக்கும்.ஆய்தம் இசையையும் உருவையும் அருகித் தோன்றும் என்பதை தொல்காப்பியர்,""ஈறியல் மருங்கினும் இசைமை தோன்று'' (தொல்.39)""இசையினும் உருவினும் அருகித் தோன்றும்மொழிக் குறிப் பெல்லாம் எழுத்தினியலாஆய்தம் அஃகாக் காலை யான'' (தொல்.40)எனும் நூற்பாக்களால் அறியலாம். (உ.ம்) அல்+திணை = அஃறிணை; பல்+துளி = பஃறுளி. ஆனாலும் ஆய்தம் அஃகாக்காலை அரைமாத்திரை அளவில் சுருங்கி நில்லாது உருவும் இசையும் மிகுதியாகும்போது நீண்டே ஒலிக்கும். (உ.ம்) "கஃஃறென்னும்' என்று நிறம் பற்றியும், "சுஃஃறென்னும்' என்று இசை பற்றியும் நீண்டே ஒலிக்கும் என்பது நம் முன்னோர்களின் ஒலி நுட்ப ஆய்வு. இதுமட்டுமல்ல, ஆய்தம் சில இடங்களில் முற்றாய்தமாகவும், குறுக்கமாகவும், அளபெடையாகவும், குறிப்பு மொழியின் கண்ணும் தோன்றும். இஃது, அஃது எனச் சுட்டப்படும் இடங்களில் உரசொலியாகவும், சில இடங்களில் நலிவொலியாகவும் இடம்பெறும். (உ.ம்) ""அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்'' (குறள்:178)ஆய்தம் என்னும் சொல், ஆய்தல் என்னும் சொல்லோடு தொடர்புடையதாக உள்ளது. ஆய்தல் என்பது உள்ளதன் நுணுக்கம் எனும் பொருள்படும். எனவே, ஆய்த ஒலி மிகமிக நுண்ணிய ஓசையைக் குறிக்கவே அக்காலத்தில் பயன்பட்டது என்பது தெளிவாகிறது. இக்காலத்தில், மொழியியலில் அயல்மொழி ஒப்பீட்டு ஆய்வுக்கு இது பெரிதும் துணை நின்று உதவுகிறது.பன்னெடுங்காலமாக ஓலைச்சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் இதன் உருவம் ர்ர், :, -, அப்து என மாறிமாறி அழியாமல், முடிவில் ஃ என இவ்வாறு உருவம் பெற்றது. ஆய்த எழுத்து மொழிமரபு காக்கத் தோன்றிய எழுத்தாகும்.
கருத்துக்கள்

அருமையாக எழுதியுள்ளார். பாராட்டுகள். இன்றைக்குப் பிற மொழி ஒலி எழுத்துகளைத் தமிழ் வடிவிலேயே பயன்படுத்த ஆய்த எழுத்து பயன்படுகின்றது என்பதையும் இதன் காரணமாக மொழி முதலிலும் (ஃபிரான்சு என்பது போல்)வருவதையும் குறிப்பிட்டிருக்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 1:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்