Wednesday, September 30, 2015

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 060. ஊக்கம் உடைமை


attai_kuralarusolurai

02.  பொருள் பால்
05.  அரசு இயல்

அதிகாரம் 060. ஊக்கம் உடைமை

எவ்வகைச் சூழலையும் கலங்காது,
எதிர்கொண்டு சமாளிக்கும் மனஉறுதி

 1. ‘உடையர்’ எனப்படுவ(து) ஊக்கம்; அஃ(து)இல்லார்,
      உடைய(து) உடையரோ மற்று?

      ஊக்கம் உடையாரே, ‘உடையார்’;
        மற்றையார், உடையார் ஆகார்.

 1. உள்ளம் உடைமை, உடைமை; பொருள்உடைமை,
      நில்லாது; நீங்கி விடும்.

      ஊக்கமே, நிலைக்கும் பெரும்செல்வம்;
        பொருள்செல்வமோ நில்லாது; நீங்கும்.

 1. ”ஆக்கம் இழந்தேம்” என்(று), அல்லாவார், ஊக்கம்,
      ஒருவந்தம் கைத்(து)உடை யார்.

 வளநலங்களை இழப்பினும், ஊக்கத்தார்,
       “இழந்தோம்” என்று கலங்கார்.

 1. ஆக்கம், அதர்வினாய்ச் செல்லும், அசை(வு)இலா
      ஊக்கம், உடையான் உழை.

      வளநலங்கள், வழிகேட்டுத், தளராத
        ஊக்கத்தான் இடத்திற்கே செல்லும்.

 1. வெள்ளத்(து) அனைய மலர்நீட்டம்; மந்தர்தம்,
      உள்ளத்(து) அனைய(து), உயர்வு.

      நீர்அளவே, மலர்உயரம்; மனிதர்தம்
        ஊக்க அளவே, உயர்வு.

 1. உள்ளுவ(து) எல்லாம், உயர்(வு)உள்ளல்; மற்(று),அது
     தள்ளினும், தள்ளாமை நீர்த்து.

 உயர்வையே, சிந்தி! தள்ளிவிட்டாலும்,
       தள்ளக்கூடாத சிந்தனை அது.

 1. சிதை(வு)இடத்(து), ஒல்கார் உரவோர்; புதைஅம்பில்
      பட்டுப்,பா(டு) ஊன்றும் களிறு.

      அம்புகள் தைத்த யானைபோல்,
        ஊக்கத்தார், அழிவிலும் தளரார்.

 1. உள்ளம் இலாதவர், எய்தார், உலகத்து,
     “வள்ளியம்” என்னும் செருக்கு.

     ஊக்கம்இலார், “வள்ளல் தன்மையோம்”
       என்னும், பெருமையினை, அடையார்.

 1. பரியது, கூர்ங்கோட்ட(து), ஆயினும், யானை
      வெரூஉம், புலி,தாக்(கு) உறின்.

 மாபெரும் யானைகூடச் சிறுபுலி
        தாக்கினால் பெரிதும் அஞ்சும்.

 1. உரம்ஒருவற்(கு), உள்ள வெறுக்கை; அஃ(து)இல்லார்,
      மரம்;மக்கள் ஆதலே வேறு.

      ஊக்கம்தான், உள்ளத்துச் செல்வம்;
        ஊக்கம்இலான், ஆள்உருவில் மரமே.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அதிகாரம் 061. மடி இன்மை)


இனிதே இலக்கியம்! 4 – முத்தொழில் ஆற்றுநரே தலைவர் : – இலக்குவனார் திருவள்ளுவன்

 thalaippu_inidheilakkiyam02

4

 ulakam_yaavaiyum
முத்தொழில் ஆற்றுநரே தலைவர்
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகி லா விளை யாட்டுடை யார், அவர்
தலைவர்! அன்னவர்க் கேசரண் நாங்களே!
  கவிப்பேரரசர் கம்பர் தம்முடைய இராமகாவியத்தில் எழுதிய தற்சிறப்புப்பாயிரம்.
  “உலகங்கள் யாவற்றையும் தாம் உள்ளவாறு படைத்தலும் அவ்வுலகங்களில் உள்ள அனைத்து வகை உயிர்களையும் நிலைபெறச்செய்து காத்தலும் அவற்றை நீக்க வேண்டிய நேரத்தில் நீக்கி அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் இடைவிடாமல்(நீங்கலா) அளவற்ற(அலகுஇலா) திருவிளை யாடல்களாகப் புரிபவர் யாரோ, அவரே எங்கள் தலைவர்! அவரிடமே நாங்கள் அடைக்கலமாகிறோம்!
என்கிறார் கம்பர்.
  குறிப்பிட்ட கடவுள் எனக் குறிக்காமையால் கடவுள் நம்பிக்கை உள்ளவர் யாவருமே தத்தம் கடவுளை வணங்கும் வகையில் பொதுவாக அமைந்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
  உலகம் முதலான பொதுவான சொற்களால் முதல் பாடலைத் தொடங்குதல் தமிழ் மரபு. அதற்கிணங்கக் கம்பர் உலகம் என்னும் சொல்லுடன் தம் படைப்பைத் தொடங்கி உள்ளார்.
 உலகம் என்றோ உலகம் முழுமை என்றோ கூறாமல் அனைத்து உலகங்களையும் எனக் கம்பர் குறிப்பிட்டுள்ளது, இப்புவி உலகம் தவிர வேறு பிற உலகங்கள் உள்ளன என்னும் இன்றைய அறிவியல் கருத்தைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதன் தொடர்ச்சியை உணர்த்துகிறது.
இலக்குவனார் திருவள்ளுவன்
ilakkuvanar Thiruvalluvan

Tuesday, September 29, 2015

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்

attai_kuralarusolurai

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 059. ஒற்று ஆடல்

உள்,வெளி நாடுகளில், எல்லா
நடப்புக்களையும், உளவு பார்த்தல்

 1. ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,
      தெற்(று)என்க, மன்னவன் கண்.

      உளவும், உளவியல் நூல்தெளிவும்
        ஆட்சியரிடம் அமைதல் வேண்டும்.

 1. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்
      வல்அறிதல், வேந்தன் தொழில்.

      எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,
        ஆட்சியான் உளவால் ஆராய்க.

 1. ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்
      கொற்றம், செயக்கிடந்த(து), இல்.

      நிகழ்வனவற்றை, உளவால் உணரா
        ஆட்சியால் ஏதும் ஆகாது.

 1. வினைசெய்வார், தம்சுற்றம், வேண்டதார், என்(று),ஆங்(கு)
      அனைவரையும், ஆராய்வ(து) ஒற்று.

      பணியார், உறவார், பகையார்என,
        எல்லாரையும் உளவு பார்க்க.

 1. கடாஅ உருவொடு, கண்அஞ்சா(து), யாண்டும்
      உகாஅமை வல்லதே, ஒற்று.

      மாறுவேடம், அஞ்சாமை, அறிந்ததை
        வெளியிடாமை, உளவின் கூறுகள்.

 1. துறந்தார் படிவத்தர் ஆகி, இறந்(து)ஆராய்ந்(து),
     என்செயினும், சோர்(வு)இல(து), ஒற்று.

 தவவேடத்தோடு, எவ்இடத்தும் புகுந்து,
       ஆபத்திலும் வேவு பார்க்க.

 1. மறைந்தவை கேட்கவற்(று) ஆகி, அறிந்தவை
     ஐயப்பா(டு) இல்லதே, ஒற்று.

 மறைவான செய்திகளையும், உளவு
        பார்த்து, ஐயம்இலாது தெளிக.

 1. ஒற்(று)ஒற்றித், தந்த பொருளையும், மற்றும்ஓர்
      ஒற்றினால், ஒற்றிக் கொளல்.

      உளவுச் செய்திகளை, ஒன்றோடு
        ஒன்றை ஒப்புஆய்ந்து ஏற்க.

 1. ஒற்(று)ஒற்(று), உணராமை ஆள்க, உடன்மூவர்
      சொல்தொக்க, தேறப் படும்.

      ஒருவரை ஒருவர் உணராவாறு,
        ஒற்றர் ஒற்றுக்களை ஒப்புஆய்க.

 1. சிறப்(பு)அறிய, ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்,
     புறப்படுத்தான் ஆகும், மறை.
 ஒற்றர்க்கு வெளிப்படையாய்ச் சிறப்புச்
       செய்தால், மறைவு வெளிப்படும்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
அதிகாரம் 060. ஊக்கம் உடைமை