Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 047. தெரிந்து செயல் வகை

attai_kuralarusolurai03

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 047. தெரிந்து செயல் வகை

நன்மை, தீமை போன்றவற்றை
நன்குஆய்ந்து செய்யும் செய்முறைகள்.

  1. அழிவதூஉம், ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும்
      ஊதியமும், சூழ்ந்து செயல்.

       ஆவது, அழிவது, பின்விளைவது
       போன்றவற்றை ஆய்ந்து செய்க.

  1. தெரிந்த இனத்தோடு, தேர்ந்(து)எண்ணிச் செய்வார்க்(கு),
     அரும்பொருள் யா(து)ஒன்றும், இல்.

     செயல்முறைகளைத் தேர்ந்தாரோடு கலந்து
     செய்வார்க்கு முடியாச்செயல் இல்லை.

  1. ஆக்கம் கருதி, முதல்இழக்கும் செய்வினை,
      ஊக்கார், அறி(வு)உடை யார்.

      வருவாய்க்காக, முதல்இழக்கும் செயலை
   அறிவார் செய்யத் தூண்டார்.

  1. தெளி(வு)இல் அதனைத் தொடங்கார், இளி(வு)என்னும்,
      ஏதப்பா(டு) அஞ்சு பவர்.

      இழிவுஆம் கேட்டிற்கு அஞ்சுவார்,
        தெளிவுஇல் செயல்கள் தொடங்கார்.

  1. வகைஅறச் சூழா(து) எழுதல், பகைவரைப்,
      பாத்திப் படுப்ப(து)ஓர் ஆறு.

     செய்முறைகளை ஆராயாத செயல்தொடக்கம்,
        பகைவர் வெற்றிக்கு வழி.

  1. செய்தக்க அல்ல, செயக்கெடும்; செய்தக்க,
      செய்யாமை யானும் கெடும்.

     செயத்தகாத செய்தல், செயத்தகுவன
        செய்யாமை இரண்டுமே கேடு.

  1. எண்ணித் துணிக, கருமம்; துணிந்தபின்,
     ‘எண்ணுவம்’ என்ப(து), இழுக்கு.

   ஆராய்ந்து செயலைத் தொடங்கு;
       தொடங்கியபின், ஆராய்தல் தவறு.

  1. ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று,
      போற்றினும், பொத்துப் படும்.

      செய்முறைப்படி முயலா முயற்சி,
        பற்பலர் உதவினும் தோற்கும்.

  1. நன்(று)ஆற்றல் உள்ளும், தவ(று)உண்[டு], அவர்அவர்
     பண்(பு)அறிந்(து), ஆற்றாக் கடை.

     அவர்அவர் பண்பை அறியாது,
       நல்லது செய்தாலும், கெட்டதுஆம்.

  1. எள்ளாத, எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு
      கொள்ளாத, கொள்ளா(து) உலகு.

      உயர்ந்தார் இகழ்ந்த – ஏற்றுக்
        கொள்ளாத எச்செயலையும், செய்யற்க.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்