இலக்கிய யானைகள் எட்டு! – பு.சீ. கிருட்டிணமூர்த்தி
ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள்
நெல்லையைச் சார்ந்த வடிவேற் கவிராயர்
என்பவர் இலங்கையில் இருந்தபோது, யாழ்ப்பாணம் நமச்சிவாய(முதலியார்) என்பவர்,
யாழ்ப்பாணம் திருவானைக்கோட்டையில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணியர் மீது
ஒரு கோவை பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வடிவேற் கவிராயர்
கோவையைப் பாடி முடித்துக் கொடுத்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ச்
சங்கத்தில் ஒரு பாராட்டு விழா நடந்தப்பட்டது. அப்பாராட்டு விழாவில், இவரைச்
சோதிக்க விரும்பிய ஒரு புலவர், ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள் வருமாறு
சிவபெருமான் மீது பாடல் பாடவேண்டும் என்றார். அதற்கு இணங்க உடனே கவிராயர்,
விடையானை யிடத்திலா விடையானை
மலர்க்கரத்தில் விளங்குஞ்சூலப்
படையானைச் செனிப்புமரிப் படையானை
யடியவரைப் பாது காக்க
மிடையானை யுரியுடுத்தும் இடையானை
மதிநதியு மின்னுஞ் செய்ய
சடையானைக் கருணைதரச் சடையானைத்
தொழுதுகவி சாற்றாய் நெஞ்சே.
என்று பாடினார். “தனது வாகனமாக எருது
உடையவனை, இடுப்பில் அரவமாகிய பாம்பை வைத்திருப்பவனை, தனது மலர்க் கரத்தில்
சூலத்தை ஆயுதமாகக் கொண்டவனை, பிறப்பும் இறப்பும் அடையாதவனை, தனது
அடியவர்களைப் பாதுகாக்கும் மேலானவனை, தோலை உடுத்தும் இடுப்பை உடையவனை,
சந்திரனையும் கங்கையையும் கொண்டுள்ள சடைத் தலையுடையவனை, கருணையை வழங்க
சலிப்பு அடையாதவனைத் தொழுது புகழ்க் கவிதையைச் சொல்வாய் மனமே!” என்பது
பாடலின் பொருள்.
இப்பாடலைப் பாடியதும், வேறொரு புலவர், “முரண் தொடையிலும் எட்டு யானைகள் வருமாறு பாடவேண்டும்’ என்றார். வடிவேற் கவிராயரும்,
படியானைச் சுருதிதனைப் படித்தானைத்
தனைத்துணையென் பகர்வார்க் கெல்லாம்
குடியானை நஞ்சமுதாய்க் குடித்தானை
இதழித்தார் குலவும் வேணி
முடியானை முப்புரத்தை முடித்தானைச்
சராசரங்கள் மூழ்கி னாலும்
மடியானை வினைப்பயனை மடித்தானைக்
கவிபாடி வணங்காய் நெஞ்சே.
என்று பாடினார். “யாருக்கும் படிந்து
இராதவனை, சுருதிதனைப் படித்தவனை, தன்னைத் துணை என்று கூறுபவர்களுக்கெல்லாம்
– குடிபுகுந்து துணை இருப்பவனை, நஞ்சை அமுதமாகக்கொண்டு குடித்தவனை,
இழிந்தார்க்கு உலவும் (தலை மயிர்) முடித்து உள்ளவனை, முப்புரத்தையும்
முடிவுக்குக் கொண்டு வந்தவனை, சராசரமாகிய உலகமே மூழ்கினாலும் – தான்
அழியாதவனை, பிறர் செய்த வினையின் பயனை மடியச் செய்தவனை புகழ்ப் பாடல் பாடி
வணங்க வேண்டும் நெஞ்சமே” என்னும் பொருள்படப் பாடினார். அவையில் உள்ளோர்
வடிவேற் கவிராயாயரின் திறமையைப் பாராட்டி மகிழ்ந்தனராம்.
-பு.சீ. கிருட்டிணமூர்த்தி
Comments
Post a Comment