Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 045. பெரியாரைத் துணைக்கோடல்

attai_kuralarusolurai03

02. அறத்துப் பால் 
05. அரசு இயல்
அதிகாரம் 045. பெரியாரைத் துணைக்கோடல்

அனைத்து நிலைகளிலும், தகுதிமிகு
 பெரியாரைத் துணையாகக் கொள்ளல்.

  1. அறன்அறிந்து, மூத்த அறி(வு)உடையார் கேண்மை,
     திறன்அறிந்து, தேர்ந்து கொளல்.

     அறம்அறிந்த, மூத்த அறிவாளர்
       பெருநட்பைத் தேர்ந்து கொள்க.

  1. உற்றநோய் நீக்கி, உறாஅமை முன்காக்கும்,
     பெற்றியார்ப் பேணிக் கொளல்.

     வந்த துயர்நீக்கி, வரும்முன்னர்க்
       காக்கும் பெரியாரைத் துணைக்கொள்.

  1. அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப்
      பேணித், தமர்ஆக் கொளல்.

      பெரியாரை உறவாய்ப் பேணல்
        அரும்செயல்களுள் எல்லாம், அரும்செயல்.

  1. தம்மின் பெரியார், தமர்ஆ ஒழுகல்,
     வன்மையுள் எல்லாம், தலை.

     தம்மைவிடப் பெரியாரை, உறவராய்
       ஆக்கல் தலைசிறந்த வலிமை.

  1. சூழ்வார்கண் ஆக ஒழுகலான், மன்னவன்,
      சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

      ஆட்சியான் சிந்தனையாளரைச் சூழ்ந்துகொள்ள
        வேண்டியவன்; அவரைச் சூழ்க.

  1. தக்கார் இனத்தானாய்த், தான்ஒழுக வல்லானைச்,
     செற்றார் செயக்கிடந்த(து), இல்.

    தக்கவரைத் துணையாகக் கொண்டானைப்,
       பகைவரால் வெல்ல முடியாது.

  1. இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே,
      கெடுக்கும் தகைமை யவர்.

      கண்டிக்கும் துணையாரைக் கொண்டாரைக்,
        கெடுக்க எவராலும் முடியாது.

  1. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்,
      கெடுப்பார் இலானும், கெடும்.

     கண்டிப்பாரை இல்லாத் தனிஆட்சியான்,
        கெடுப்பார் இல்லாமலும் கெடுவான்.

  1. முதல்இல்லார்க்(கு) ஊதியம் இல்லை; மதலைஆம்
      சார்(பு)இல்லார்க்(கு), இல்லை நிலை.

முதல்இல்லார்க்கு வருவாய் இல்லை;
        துணைஇல்லார்க்கு பெருநிலை இல்லை.

  1. பல்லார் பகைகொளலின், பத்(து)அடுத்த தீமைத்தே,
      நல்லார் தொடர்,கை விடல்.

நல்லார் தொடர்பைக் கைவிடுதல,
        பல்லார் பகையைவிடப் பெரும்தீமை.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
ve.arangarasan04

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue