Skip to main content

பார்த்திபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்! – ஒருவன்


thileepan_pasiyoadu
( ஆவணி 30, 2046 / 15-09-1987 தொடக்கம் புரட்டாசி 10 / 26-09-1987 வரை பன்னிரு நாட்கள் யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் இந்திய அரசை நோக்கி ஐந்து வேண்டுகோள்களுடன் நீர், ஆகாரம் எதுவுமின்றி உண்ணா நோன்பிருந்து மடிந்த ஈகச் செம்மல் திலீபன் (பார்த்திபன்) நினைவாக வடிக்கப்பட்ட கவிதை வரிகள்.)
நல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ
கருகிப்போனதோர் உன்னத ஈகம்!
பசியை வென்ற எங்கள் பாலகனுக்கு…
அன்று, பாரதம் செய்ததோர்   மகா பாதகம்!
ஆறுநாள் நோன்பிற்கே வரமருளும் வேலவன் கூட
அவன் கண்மூடும்வரை   கண்திறக்கவில்லை !
நல்லூர்க் கந்தனும்   கருணையற்றவனானான்!
இந்திய வல்லூறுகள் செய்த பொல்லாத சதி
ஈகத் தீபமொன்றை அணைத்தது விதி
சிந்திய கண்ணீரில் மூழ்கியதே நல்லூரான் வீதி
அகிம்சையே அறமென்ற இந்தியத் தேசம்
ஈழத்தில் செய்த முதல் நாசம் !
பார்த்தீபனின் பட்டினிப்போரால்
வெளுத்துப்போனது பாரதத்தின்   அகிம்சை வேடம்!
‘பஞ்ச வேண்டுதலோடு’ பட்டினிக் கிடந்து போராடி.
பார்த்திபன் மடிந்த போதுதான் மகாத்மாவுக்கும் புரிந்திருக்கும்,
கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில் தான் சாகவில்லையென்று !
வீணர்கள் பார்த்து களிக்க …வீணாகிப் போனதவன் ஈகம் !!
தியாகச் சீலன் திலீபன்
ஈழத்தாய் எல்லாருக்கும் பிள்ளையானவன் ;
இளையவர் அனைவருக்கும் அண்ணனானவன் ;
மகா யாகத்தின் புனிதம் வென்றவன் ;
தியாகத்தின் சிகரம் தொட்டவன் ;
ஈழமண்ணுக்கு இலட்சியத் திலகமிட்டவன்!
அவன் வயிற்றில் பற்றிய தீதான்,
இன்னும் எரிகிறது எங்கள் நெஞ்சிலே…!
அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,
இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே…!!
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்!
இது அன்று அவன் உதிர்த்த தெளிந்த சொற்கள்!
திலீபனின் ஈகம் வெல்லட்டும்!
பார்த்திபன் கனவு பலிக்கட்டும்… !!
இதுதான்…. நம் மனத்தில் என்றும்,
அழியாமல் விதைக்க வேண்டிய இலட்சியச் சொற்கள்!
ஈகச் செம்மல் திலீபனின்
பசியையும் வேட்கையையும் எமதாக்குவோம்!
பேருலகே எதிர்த்தாலும் ….
பார்த்திபன் கனவு ஒருநாள் பலிக்கும்! – அவனது
உன்னத ஈகம் உறுதியாய் வெல்லும்!
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்…!
விடுதலைத் தமிழீழம் மலரட்டும்…!!
இக்கவிதையின் காணொளி வடிவத்தை பார்ப்பதற்கு கீழுள்ள (Youtube) இணைப்பைச் சொடுக்குங்கள். ..
“பார்த்திபன் கனவு” – ஈகையாளி திலீபன் நினைவுக் கவிதை
எழுத்தாக்கம்- தொகுப்பு – குரல் வடிவம் : ‘ஒருவன்’
thalaippu_thamizhkavithaigal-corrected


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்