திலீபனைப் படம் பிடித்த கவி கத்தூரி
நிறுத்திப் படித்த நிகரில்லாக் கவிதை !
அழகென்றால் என்ன ?
உடல் அழகு, கல்வியழகு, கவிதையழகு என்று
எத்தனையோ விதமாக அழகுகள் பேசப்படுகின்றன. எல்லா அழகுகளுக்கும் மனிதன் தன்
வசதிக்கேற்ப வரைவிலக்கணம் வகுத்திருக்கிறான். அழியும் அழகை நம்பி ஆகா
இதுவல்லவோ அழகென்று ஓடி ஏமாறுவோர் உலகில் பலர் உண்டு.
ஆனால் அழியா அழகென்று ஒன்றிருக்கிறது.
அதுதான் மனிதனை என்றும் உற்சாகமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அழகை
அடையாளம் காணும் உணர்வை இறைவன் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளித்து
வைத்திருக்கிறான். மற்றவரின் கருத்துப் பாதிப்பிற்கு உட்படாமல் உண்மையான
அழகைக் கண்டு பிடிக்க அந்த உணர்வால் மட்டுமே இயலும்.
நாம் வீதியால் நடந்து போகிறோம் ! எண்ணற்ற
பூக்கள் வழி நெடுகிலும் பூத்துக் கிடக்கின்றன. எல்லாவற்றையும்
பார்த்தபடியே நடக்கிறோம். திடீரென ஒரு பூவை மட்டுமே பார்க்க வேண்டுமென்று
மனம் தூண்டுகிறது. நிற்கிறோம் ! திரும்பிச் செல்கிறோம் அந்தப் பூவை மட்டும்
திரும்பிப் பார்க்கிறோம். பக்கச் சார்பற்று, பரிந்துரைகளற்று மீண்டும் ஒரு
முறை கவனிக்கத் தூண்டிய உணர்வே உண்மை அழகினைக் காணும் அடையாளம்.
இப்படி வரிசையாக அழகைக் காணும் படிகளை
அமைத்துச் சென்றால்தான் கத்தூரியின் கவிதை மலர்களின் அழகைப் புரிந்து கொள்ள
முடியும். நல்லு}ரில் திலீபன் உயிரில் வினக்கேற்றி வேள்வி செய்து
கொண்டிருக்கிறான். அவன் முன் பெரும் பெரும் கவிஞர்களெல்லாம் கூடி நின்று
கவி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
திலீபன் அழைப்பது சாவையா – இந்த
சின்ன வயதில் அது தேவையா ?
கவி வரிகள் காற்றில் வருகின்றன. அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
நல்லூரின் வீதியிலே நடந்தது வேள்வி –
நாலு நாளில் சரிந்தது மெய்!
இப்படித் தொடர்கின்றன கவிச்சரங்கள்.
அத்தனையையும் கேட்டபடியே படுத்திருக்கிறான் திலீபன். இந்தக் கவிதைகள்
காலத்தை வென்ற கவிதைகள் ! அவற்றைப் பாடிய கவிஞர்கள் வணக்கத்திற்கு
உரியவர்கள். திலீபன் உயிர் வாழ வேண்டுமென்ற மக்களின் மன உணர்வுகளை
வடித்துத் தந்த கவிதைகள் அவை.
ஆனால் கவிதைப் போக்கில் சட்டென வந்தது
ஒரு மாற்றம். திடீரென ஒருத்தி வந்தாள்; “திலீபன் சிரித்தபடியே சாவை
ஏற்பான்!” என்று கவிபாடினாள். ஒரு கணம் எல்லாரும் துணுக்குற்றனர். அவளையே
திரும்பிப் பார்த்தனர். அப்படி எல்லோரையும் நின்று திரும்பிப் பார்க்க
வைத்த கவிதைக்கு சொந்தக்காரிதான் கத்தூரி.
அந்தக் கவிதையைக் கேட்டதும் சோர்ந்து
கிடந்த திலீபனின் முகத்தில் சூரிய ஒளி. மல்லிகை வெடித்தது போலச் சிரிப்புப்
படர்ந்தது. சட்டென்று விழித்தெழுந்து கஸ்து}ரியை அன்பொழுக நோக்கினான்.
மறுபடியும் அதைப் படிக்கும்படி வேண்டினான். எந்தக் கவிதையையுமே திரும்பிப்
படியுங்கள் என்று கேட்காது சோர்வடைந்திருந்த திலீபன் திடீரென எழுந்து
இந்தக் கவிதையை மட்டும் திருப்பிப் படிக்கச் சொல்கிறானே ஏன்?
திலீபனின் ஆத்மா தெய்வத் தன்மை
பொருந்தியது. உணவையும் நீரையும் கூட உதறியெறிந்த உன்னதமான ஆத்மா! விருப்பு
வெறுப்புகளைக் கடந்த நேர்மை கொண்டது. அந்த ஆத்மா இவளுடைய கவிதையை மீண்டும்
கேட்க ஆசை கொண்டதே ஏன் ?
இனித் தொடக்கத்தில் பூக்களுக்காகச் சொன்ன
எடுத்துக்காட்டையும் இந்த நிகழ்வையும் ஒரு தடவை ஒப்பிட்டுப் பாருங்கள்.
கவிதைகளில் அழகு கத்தூரியின் கவிதைகள்தான் என்பதை எளிதாகப் புரிந்து
கொள்வீர்கள். அன்று அந்த அழகான கவிவரிகள் இப்படித்தான் திலீபனுடன் பேசின.
திலீபன் அண்ணா !
உங்களுக்குப்
பசியால் பார்வைமங்குவது
எனக்குத் தெரிகிறது.
இங்கிருக்கும் மக்கள் கூட
உங்களுக்கு
மங்கலாய்த் தெரிகிறார்கள்
ஆனால்
தமிழீழம் மட்டும்
தெளிவாகத் தெரிகிறது.
கவிதையைக் கேட்ட திலீபன் திகைத்தான். உண்மையைச் சொன்னாளே ஒருத்தி! அவன்
உள்ளம் பதை பதைத்திருக்க வேண்டும். அடுத்த வரிகளில் எல்லார் இதயங்களிலும்
அவள் இடியாய் இறங்கினாள்,
திலீபனண்ணா !
எனக்குத் தெரியும்
நீங்கள் சாகும்போதும்
சிரித்துக் கொண்டே சாவீர்கள்!
அவள் அன்று சொன்னது பொய்க்கவில்லை திலீபன் சிரித்தபடியே மடிந்தான். திலீபனுக்காகப் பேசிய அவளுடைய அடுத்த வரிகள்.
மௌனமாய் அழைக்கும்
மரணித்த நண்பர்களிடம்
போகப் போகிறேன்
என்று
மக்களிடம் சொல்கிறீர்கள்.
என்று கேட்டவள் அவன் மனத்தில் இருந்த ஓர் சங்கடமான கேள்விக்கான
விடையையும் அந்த அவையின் முன் வைக்கிறாள். மகாத்மா காந்தி நீர் அருந்தி
உண்ணா நோன்பிருந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி,
அவர்கூட
நீர் அருந்தி நீண்ட நாட்கள்
நினைவோடு இருந்தாரே!
நீங்கள்
ஏன் அண்ணா அருந்தக் கூடாது ?
எனக்குத் தெரியும்
நீங்கள் அருந்தமாட்டீர்கள் !
தமிழீழ வேட்கைக்குத்
தண்ணீர் அருந்த மாட்டீர்கள் !
அவன் தண்ணீரும் அருந்த மாட்டானென்பதை
இரும்பு வரிகளால் அவள் எடுத்துரைத்தாள். அவன் ஏன் தண்ணீரும் அருந்தக்
கூடாது? தண்ணீர் அருந்தியிருந்தால், உண்ணா நோன்பை நிறுத்தியிருந்தால்
வரலாற்றில் திலீபன் இந்த இடத்தைப் பெற்றிருக்க முடியாது ! ஆகவேதான் அவன்
நீரை அருந்தக் கூடாது என்றாள் ! இந்த நிகழ்விற்கு வரலாற்றில் நல்லதோர்
சான்றுண்டு. அன்று தமிழ் கவிதையின் சுவைக்காக உயிர்தந்த ஒரேயொரு தமிழ்
அரசனான நந்திவர்மனின் வாழ்வின் இறுதிப் பகுதியையும் நல்லு}ரில் நடந்த இந்த
நிகழ்வையும் ஒரு தடவை ஒப்பிட்டு நோக்கினால் இந்த உண்மையை உணரலாம்.
‘கலம்பகம்’ என்பது ஓர் தமிழ்ப் பாடல்
வடிவம். அதை யாராவது ஒருவர் மீது இன்னொருவர் பாடினால் அப்பாடலைக் கேட்பவர்
சுடலையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடலுக்கும் அவர் மீது
ஒவ்வொரு விறகுக் கட்டையாக அடுக்கிச் செல்வார்கள். இறுதிப் பாடல் வந்ததும்
விறகுகள் தீப்பற்றிக் கொள்ளும். கேட்பவரும் உயிருடன் தீப்பற்றி எரிய
வேண்டியதுதான். இதனால் கலம்பகம் பாடுவதைக் கேட்க உலகில் எவருமே
முன்வருவதில்லை. ஆனால் ஒருவன் முன் வந்தான். அவனே மேலே சொன்ன நந்திவர்மன்.
உயிரைவிடத் தமிழின் சுவையே மேலென உயிர்தந்த உலகின் ஒரேயொரு தமிழன்.
இந்த நந்திவர்மனுக்குப் பிறகு தமிழ்ப்
பாடல் கேட்டு, தமிழுக்காகப் பட்டினி நெருப்பில் கருகி உயிர் தந்தவனே
ஈகையாளி திலீபன். அவன் நீரை அருந்தினாலோ உயிர் மீண்டாலோ அன்று நடந்த
வேள்விக்குப் பொருள் இல்லை. அவள் பாடிய தமிழுக்கும் உயிரில்லை! சுடலை வந்த
நந்திவர்மன் மீண்டும் வீடு திரும்புவானா ? நினைத்துப் பாருங்கள்.
தமிழின் இறுதிச் சுவை கண்டவன்; உயிரை
வைத்துப் பூசை செய்ய ஆசை கொண்டதில்லை. கலம்பகம் கேட்க சுடலையில் படுத்தவன்
மறுபடியும் எழுவதும், வாழ்வதும் தமிழின மரபல்ல. அதைப் புரிந்தவன் திலீபன்.
அதனால்தான் கத்தூரியின் கவிதை அவனைச் சட்டெனக் கவர்ந்தது. ஆம்! அந்தப்
பன்னிரு நாட்களாக திலீபன் தனக்குத் தானே ஈமவிறகு அடுக்கிச் செல்லும்
கமுக்கத்தைக் கத்தூரியின் கவிதைகளே உலகுக்குச் சொல்லி வைத்தன ! ஆகவேதான்
நிறுத்திப் படித்த நிகரில்லா கவிதையாகிறாள் கத்தூரி. இப்படியே மில்லரைப்
பற்றியும் அவள் பாட வந்தபோது,
மரணத்தைக் கண்டு சிலர்
தேர்(கார்)பிடித்துச் சென்ற நேரம்
நீ
மரணத்தையே தேரில்(காரில்) ஏற்றிச்
சென்றவன்.
என்றாள். அடுத்து அன்னை பூபதிக்காக அடியெடுத்தபோது,
உறுதிப் படுத்தப்படாத
உலக அழிவு
ஓர் நாள்
உண்மையாகிப் போனாலும்
அதன்பின் வரும்
யாருமே அறியாத
தொடக்கம் ஒன்றில்
பூபதியின் பெயர்
பொறிக்கப் பட்டிருக்கும் !
பிறிதொரு முறை
பிறந்து வரமாட்டாள் என்பது
பிழையறப் புரிகிறது
இறந்து போனவர்க்குத்தானே
இன்னோர் பிறப்பு
இருக்க முடியும்.
இதுவே கத்தூரியின் கவியழகு. எப்போதுமே
அழகுக்கு ஓர் சிறப்பியல்புண்டு. உலகில் எல்லாமே மனத்தைவிட்டு நீங்கிவிடும்
ஆனால் நீங்காமல் இருப்பது அழகு ஒன்று மட்டுமே. அந்த அழகின் வடிவாகப் பூத்து
நிற்பனவே கத்தூரியின் கவிதைகள். இந்தக் கவிதைகளைப் படிப்பவர்கள் ஒன்றைப்
புரிந்து கொள்ளலாம். மாவீரர்கள் எல்லாம் மறுபடியும் பிறப்பார்கள்
என்பார்கள் ஆனால் கத்தூரி மட்டும் மறுபடியும் வரமாட்டள்! ஏனென்றால் அவள்
ஏற்கெனவே கவிதைகளாகப் பிறந்துவிட்டாள்.
இந்தப் பெண்கவி கத்தூரி ஆனையிறவுப்
படைத்தள மோதலில் 1991இலேயே வீரச்சாவடைந்து விட்டாலும் இன்றைய நிகழ்வையே தன்
கவியில் பாடி வைத்துவிட்டு சென்றிருப்பதே இதற்குச் சான்றாகும். வல்லரசுகள்
இனியென்ன செய்யும் என்ற கவிதையில்,
வல்லரசுகளே!
நீங்கள்
வாழ்வதற்காக
வாழ்பவர்களை
வதைப்பவர்கள் !
என்று கூறியவள் அடுத்து வல்லரசு நாடுகளின் உள்ளார்ந்த இயல்பைக் கூறும்போது,
ஆணிவேரை
அறுத்துவிட்டு
வாடாது நிற்க
நீர் ஊற்றுபவர்கள் !
என்று அழகாக நையாண்டி செய்கிறாள்.
வல்லரசுகள் தங்களது பயங்கரவாதப் பட்டியலை உருவாக்காத காலத்திலேயே அவள் ஒரு
பட்டியலை உருவாக்கினாள். அந்தப் பட்டியலை வெளியிட்டு தன் வாழ்வை நிறைவு
செய்து கொண்டாள்.
நாளைய செயற்கைப் புயலுக்கு
சொந்தம் கொண்டாடப் போகும்
பன்னாட்டுப்
பயங்கர வாதிகள் நீங்கள் !
என்று வல்லரசுகளைப் பட்டியலிட்டு
நிறைவடைகின்றன இக்கவி வரிகள். எம்மைப் பயங்கரவாதிகள் பட்டியலில்
சேர்த்தோருக் கெல்லாம் ஓர் கவிப் பட்டியலே தயாரித்த கத்தூரியின் கவி
அழகிற்கு இணையெங்கு தேட முடியும் ?
இவளின்
உயிரற்ற உடலை
உள்ளே வைத்திருப்பதால்
காலந்தோறும்
கல்லறை ஒன்று
போற்றப்படுகிறது!
http://tigersland.s5.com/niruthipadikka.html
Comments
Post a Comment