Skip to main content

தமிழ் – உயர்தனிச்செம்மொழி ! : மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ

moulaviumarjahfermanbayee

உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !


எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை
இசுலாத்தின் வழியினிலே வைத்தவனே !
எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை
எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !
எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு
இனிதான தமிழ்தாயைத் தந்தவனே !
அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான்
அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் !
அலஃகம்து லில்லாஃக் ….
சொல்வதற்கு இயல்பான செந்தமிழே ! – ஏழு
சுரங்களுக்குள் இசையான பைந்தமிழே !
நல்ல நெறி நாடகத்தின் நறுந்தமிழே ! – நீ
நான்குதிசை போற்றி நிற்கும் செம்மொழியே !
கற்கண்டில் எப்பக்கம் இனிக்குமென்றால் – அதைக்
கடிக்கின்ற பக்கமெல்லாம் இனிக்குமென்போம் ! – (அதுபோல)
பொற்புடைய பைந்தமிழே ! பெட்டகமே !! – உன்னைப்
படிக்கின்ற படைப்பெல்லாம் இனிமையென்போம் !
சேரசோழ பாண்டியரின் மடிகளிலே – நீ
சிரித்து வந்த சரித்திரத்தைப் போற்றுகின்றேன் !
வீரமா முனிவரையும் மயங்கவைத்து – அவரும்
உன் புகழைப் பாடியதில் வியந்து நின்றேன் !
கம்பன் உமர் வள்ளுவரின் மனங்களிலே – நீ
கருப்பொருளாய் விளைந்ததையும் கண்டுகொண்டேன் !
உம்புகழே உனக்குத் தனி செழுமை தர – நீ
உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !
ஒரு கோடிப் பக்கங்கள் இயற்றுகின்ற – பெரும்
உயர்வான காவியங்கள் உனக்குள் உண்டு !
ஒன்றரைக்கும் மேற்போகா வரிகளுக்குள் – நல்ல
உரைகூறும் தகுதிகளும் உனக்கேயுண்டு !
உயர்ந்த தனிச் செம்மொழியே தமிழ்மொழி தான் – இதை
உரையாடும் செந்தமிழர் உயர்ந்தவர்தாம்
உயிர்போலக் காத்துவந்தால் உயர்ந்தவர் நாம் – எமக்கு
உயர்தமிழும் உயிர் தீனும் ஒன்றே தான்.
            – மர்ஃகூம் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue