திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்
01. அறத்துப் பால்
03. துறவற இயல்
அதிகாரம் 037. அவா அறுத்தல்
பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,
முழுமை யாகவே அறுத்[து]எறிதல்.
- அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,
தொடரும் பேராசைதான், எல்லா
உயிர்களின் பிறப்புகட்கும் விதை.
- வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,
விரும்பின், பிறவாமையை விரும்பு;
விருப்புக்கெடின், இல்லை பிறப்பு.
- வேண்டாமை அன்ன விழுச்செல்வம், ஈண்(டு)இல்லை;
எதையும் விரும்பாமையே, ஒப்புமை
இல்லாத மிகச்சிறந்த செல்வம்
.
- தூஉய்மை என்ப(து), அவாஇன்மை; மற்(று)அது,
பேராசை இல்லாமையே, மனத்தூய்மை;
வாய்மையால்தான் அதுவும் வாய்க்கும்.
- அற்றவர் என்பார், அவாஅற்றார்; மற்றையார்,
பேராசை இல்லாரே, துன்பம்இல்லார்;
மற்றையார் துன்பம்உள்ளார் ஆவார்.
- அஞ்சுவ(து), ஓரும் அறனே; ஒருவனை
யாரையும், ஏய்த்துவிடும் பேராசைக்[கு]
அஞ்சுதல் அறம்ஆம். ஆராய்க.
- அவாவினை ஆற்ற அறுப்பின், தவாவினை,
பேராசை முழுவதையும் போக்கின்,
விரும்பும் நல்செயல்கள் வந்துசேரும்.
- அவாஇல்லார்க்(கு), இல்ஆகும் துன்பம்; அஃ(து)உண்டேல்,
பேராசை இல்லாதார்க்கே, பேரின்பம்;
உள்ளார்க்கோ, மேன்மேலும் துன்பம்.
- இன்பம் இடையறா(து) ஈண்டும், அவாஎன்னும்,
துன்பத்துள் பெரும்துன்பம் பேராசை
கெட்டால், இன்பத்துள் பெரும்இன்பமே.
- ஆரா இயற்கை அவாநீப்பின், அந்நிலையே,
நிறையாத பேராசையின் நீக்கம்,
பெயராத இன்பத்தின் ஆக்கம்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
Comments
Post a Comment