தமிழ்அறம் பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா
யார் இவர் ? !
” தமிழைப் பழித்தவனை என்தாய் தடுத்தாலும் விடேன்
எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் தொடேன் “
வஞ்சினம் கூறிய வாதில்புலவன் பாவேந்தர்
வழிவந்த மறவன் தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் !
சங்கத்துமது ரையில்தமிழைப் பங்கப்படுத்திப் பேசிய
ஓங்குபுகழ் அறிஞரெனினும் ஒவ்வாதசொல் லைத்தாங்காது
தமிழைப் பழித்தவர்க்கு தக்கறிவூட்டி கருத்தினை
உமிழ்ந்து தள்ளியதற்கு ஓர்சான்று உண்டன்றோ !
விடுதலையான நம்நாட்டில் கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி இந்தியநாடு சமநிலைகாண நிதிஅமைச்சராகவும்
சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘ பெற்ற ஆர். கே.எசு.
சண்முகம் அவர்கள் புன்முகம்காட்டி பொழிந்தசொல் 1
ஆங்கில மொழியில் ஓங்குபுகழ் ஒலிக்குறிப்புபோல்
பாங்கான தமிழில் யாங்கனும்இல்லை யென்றதற்கு
தூங்கும் தமிழ்ப்புலியை தீண்டியதற்கு ஒப்ப
ஓங்கும் தமிழ்ச்சான்றை ஓராயிரம் சுட்டிக்காட்டி
வாயை அடக்கினார் வாய்மைமேடு இலக்குவனார்
தாயின் சொல்லுக்கு சேய்அடங்கும் தன்மையாகஅறிவை
மேயவந்த அவையே மூச்சடங்கிப் போனதுகாண்!
வாய்திறந்த சொன்னஆர். கே .எசு. மெய்விதிர்த்துப் போனார் !
அவர்தான் இவர் !
” எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ” என்ற
வரிகளைப் படித்தார் வாய்மைமேடுப் பெரியோன்
செறிவான கருத்தினை சீர்புலவன் சொன்னதை
அறிவின் மேம்பாட்டாளன் ஆழ்ந்து சிந்தித்தார்
தெறித்து வீழ்ந்தது தீந்தமிழ்ச் சிந்தனை !
எண்ணையும் எழுத்தையும் சொன்னவன் வள்ளுவன்
பண்ணோடு இயைந்த பழத்தமிழைப் படைத்தவன்யார் ?
தண்தமிழை தகைசால் இன்தமிழைப் படைத்தவனை
விண்பார்க்கு முலகில்எவரும் கண்கொண்டு பார்க்கஇயலா !
விடைகாண இயலாது அடைகாக்கும் கோழியாக
தடைகண்டு இருந்தார் தகுமிகு பெரியோன்
குடைநிழலில் காணுகிற இடைத்துளைவழி ஒளிக்கதிராக
மடைதிறந்த நீரெனசிந்தனை தடையின்றிப் பிறந்தது !
படைத்தவனைக் காணாது அடைத்தாலும் வள்ளுவன்தமிழ்
உடைத்தவனைக் காணமுடியுமென விடை கண்டார்
கடைந்தார் கனித்தமிழை உடைத்தவனைக் கண்டார்
புடைத்தது நெஞ்சம் பூரித்தார் பூவின்மென்மையர்!
காப்பியனின் பதிப்பு பூப்பின்மலராக புலர்ந்தது
மூப்பிற்கு மூப்பாக முத்தமிழைக் காப்பாகஎடுத்து
காப்பியனின் முன்தோன்றல் கண்வளர்த்த தமிழ்ப்பயிரை
கூப்பிய கையுனுள் கொடுவாள் மறைத்து
புல்லென்று அறுக்கப் புறப்பட்டாரை தமிழ்ச்
சொல்லால் அறுத்து அறுவடைசெய் திருந்தான் காப்பியன்
எழுத்துசொல் பொருளெனப் பழுத்த இலக்கணத்தை
வழுத்தும் தொல்காப்பியத்தை பழுத்தஅறிஞன் எடுத்தான் !
வில்லேருழவனாக இல்லாது சொல்லேருழவனாக உழுதான்
பலமுறை ஆழமாகத் தொல்காப்பியத்தை உழுதவன்
கல்எறிந்த பின்கிடைத்த கனியாகப் போற்றி
பல்பொருள் இலக்கணத்தைப் படித்துத் தெளிந்தான் !
தெளிவடைந்த தீந்தமிழ்மகன் ஒளிவு மறைவின்றி
தொல்லுலகில் வாழும் பல்இன மக்களுக்குவழக்
கில்புழங்கும் பொதுமொழியாம் ஆங்கிலத்தில் எழுதின்
தொல்காப்பியத்தின் இலக்கணத்தைத் தொழுது வணங்கிடுவர்
எண்ண மேலீட்டால் எழதுகோல் எடுத்து
வண்ணத் தமிழில் வடித்தெடுத்தார் ; வள்ளுவன்
தலைமுறையாம் இலக்குவனார் விலையில்லா நூல்படைத்தார்
உலைவடித்த சோறாகஅறிவுக் குலைபசியடக்கும் அமுதாக்கினார் !
மொழிப்போராளி இலக்குவனார் மொழிந்த ஆங்கிலநூலின்
முழுப்பொருள் உணர்ந்து வழுவில்லாக் காப்பியத்தை
பழுத்த அறிவுடைய பேரறிஞர் அண்ணா
அழுத்தமாக இவ்வுலகம் அறிந்துகொள்ள இலக்குவனாரின்
தொல்காப்பியத்தை அமெரிக்க ஏல்பல்கலைக் கழகத்திற்களித்தார்
தொல்தமிழின் பெருமையை அல்மொழியாய்க் கருதவிடாது
இல்காப்பியமாக இலங்கைவைத்த இலக்குவனார் தன்புகழை
வெல்லும் தமிழுக்கீந்துநமை விட்டகன்ற நாளின்று !
வணங்குவோம் ! வாழ்த்துவோம் !
-இளையவன் செயா (மா.கந்தையா)
Comments
Post a Comment