Skip to main content

தொப்புள்கொடி உறவுதனை விடுதல் நன்றா? – குருநாதன்

thamizh

அழிந்துவரும் மொழியா?

‘அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாம்’
ஐ.நா. வின் இக்கூற்றைச் செவிம டுப்பீர்;
கழிந்துவரும் வாழ்க்கையிலே தமிழைக் காக்க
கட்டாயம் போர்த்தொடுப்பீர்; உலகில் மற்ற
மொழியறிவு பெறுவதற்குத் தடையா சொன்னோம்
மூத்தமொழி தாய்மொழியைப் போற்றச் செய்வோம்;
விழிப்புணர்ச்சி இல்லையெனில் கெடுப்ப தற்கு
விரைவாக வந்திடுமே வீணர்க் கூட்டம்!
ஐந்திணையின் அழகுதனை எடுத்து ரைத்த
அழியாத இலக்கியத்தை இழக்கப் போமோ?
செந்தமிழைப் பேரறிஞர் பலரும் காத்த
செழிப்பான வரலாறு அழிதல் நன்றா?
பைந்தமிழில் பேசுதற்கு நாணு கின்றோம்;
படித்தறிந்து போற்றுதற்குத் தமிழைப் போல
எந்தமொழி உண்டுசொல்வீர்! மொழியைக் காக்க
இயக்கப்போர் செய்தற்கு விரைவீர் இன்றே!
மற்றமொழி படிப்பதிலே ஆர்வம் கொண்டு
முன்னேற்ற வளர்ச்சிக்குத் தடையா சொன்னோம்;
பெற்றெடுத்து நம்மையெல்லாம் வளர்த்த தாயை
பேருக்குச் சுமக்கின்ற புல்லர்க் கூட்டம்
தொற்றிக்கொள்ள பிறமொழிக்குக் கைக்கொ டுத்துத்
தொப்புள்கொடி உறவுதனை விடுதல் நன்றா?
சுற்றிவந்தால் பிறநாட்டு மொழிகள் தம்மில்
சுடரொளியாய்த் தாய்த்த்தமிழ்தான் இருத்தல் காணீர்!
gurunathan



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்