Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 059. ஒற்று ஆடல்

attai_kuralarusolurai

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 059. ஒற்று ஆடல்

உள்,வெளி நாடுகளில், எல்லா
நடப்புக்களையும், உளவு பார்த்தல்

  1. ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும்,
      தெற்(று)என்க, மன்னவன் கண்.

      உளவும், உளவியல் நூல்தெளிவும்
        ஆட்சியரிடம் அமைதல் வேண்டும்.

  1. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்
      வல்அறிதல், வேந்தன் தொழில்.

      எல்லார்க்கும் எல்லாமும் கிடைப்பவற்றை,
        ஆட்சியான் உளவால் ஆராய்க.

  1. ஒற்றினான் ஒற்றிப், பொருள்தெரியா மன்னவன்
      கொற்றம், செயக்கிடந்த(து), இல்.

      நிகழ்வனவற்றை, உளவால் உணரா
        ஆட்சியால் ஏதும் ஆகாது.

  1. வினைசெய்வார், தம்சுற்றம், வேண்டதார், என்(று),ஆங்(கு)
      அனைவரையும், ஆராய்வ(து) ஒற்று.

      பணியார், உறவார், பகையார்என,
        எல்லாரையும் உளவு பார்க்க.

  1. கடாஅ உருவொடு, கண்அஞ்சா(து), யாண்டும்
      உகாஅமை வல்லதே, ஒற்று.

      மாறுவேடம், அஞ்சாமை, அறிந்ததை
        வெளியிடாமை, உளவின் கூறுகள்.

  1. துறந்தார் படிவத்தர் ஆகி, இறந்(து)ஆராய்ந்(து),
     என்செயினும், சோர்(வு)இல(து), ஒற்று.

 தவவேடத்தோடு, எவ்இடத்தும் புகுந்து,
       ஆபத்திலும் வேவு பார்க்க.

  1. மறைந்தவை கேட்கவற்(று) ஆகி, அறிந்தவை
     ஐயப்பா(டு) இல்லதே, ஒற்று.

 மறைவான செய்திகளையும், உளவு
        பார்த்து, ஐயம்இலாது தெளிக.

  1. ஒற்(று)ஒற்றித், தந்த பொருளையும், மற்றும்ஓர்
      ஒற்றினால், ஒற்றிக் கொளல்.

      உளவுச் செய்திகளை, ஒன்றோடு
        ஒன்றை ஒப்புஆய்ந்து ஏற்க.

  1. ஒற்(று)ஒற்(று), உணராமை ஆள்க, உடன்மூவர்
      சொல்தொக்க, தேறப் படும்.

      ஒருவரை ஒருவர் உணராவாறு,
        ஒற்றர் ஒற்றுக்களை ஒப்புஆய்க.

  1. சிறப்(பு)அறிய, ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்,
     புறப்படுத்தான் ஆகும், மறை.
 ஒற்றர்க்கு வெளிப்படையாய்ச் சிறப்புச்
       செய்தால், மறைவு வெளிப்படும்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
அதிகாரம் 060. ஊக்கம் உடைமை


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue