Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’-ஆய்வுநூல் 8 – மறைமலை இலக்குவனார்


thalaippu_ilakkuvanarinpazhanthamizh_maraimalai
  ‘தமிழ்மொழி, முண்டா, திராவிடம், ஆரியம் எனும் மூன்றினாலும் உருவாயது’ என்று வையாபுரி(ப்பிள்ளை) கூறுகிறார் (History of Tamil language and literature, p. 5).  தமிழ்மொழியைத் திராவிடத்திற்கு அயலான ஒன்றாக வையாபுரியார் கருதுவது வியப்பையளிக்கிறது என்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.  ‘தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்’ (மே.ப. ப.177) என வியக்கும் பேராசிரியர், ‘ஒரயான் (Oraon) என்ற மொழி திராவிடக் குழுமொழிகளுள் திருத்தம் பெறாதனவற்றுள் ஒன்று என்று அறிஞர் கால்டுவெல் நிலைநாட்டி இருப்பதை அறியாது, அதனை முண்டா மொழி என்று அழைக்கிறார்’ (மே.ப.  ப.178) என வையாபுரியாரின் வழுவைச் சுட்டுகிறார்.
இத் தவறான அணுகுமுறைக்குக் காரணமாக விளங்கும் நிலைப்பாட்டையும் பேராசிரியர் விளக்குகிறார்.  ‘மொழிநூல் ஆராய்ச்சியாளரில் சிலரும், வரலாற்று ஆராய்ச்சியாளரில் சிலரும், திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறினர் என்றும், அவர்கட்கு முன்னர் இங்குவாழ்ந்த முண்டர்கள் அல்லது கொலேரியர்களை வென்றனர் என்றும் கூறுவது மரபாகிவிட்டது’ என்றுரைக்கும் பேராசிரியர் ‘திராவிடர்கள் (தமிழர்கள்) இந் நாட்டில் தோன்றியவர்களே என்பதும் இங்கிருந்துதான் வெளிநாடுகட்குச் சென்றனர் என்பதும் இற்றை ஆராய்ச்சியால் புலப்படும் உண்மையாகும்’ என அறுதியிட்டுரைக்கிறார் (மே.ப.).
பேராசிரியர் காலத்தில் கிடைத்த சான்றுகளைக் காட்டிலும் மிகுதியான சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.  சிந்துவெளி எழுத்துகள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மண்பாண்டச் சில்லுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி தமிழர்கள் வந்தேறிகள் அல்லர் என்பதை வலியுறுத்துகின்றன.  நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள புதிய கற்காலக் கற்கோடரியில் தமிழ் எழுத்துகள் காணப்படுவதாகக் கிடைத்த செய்தி தமிழ் எழுத்துகளின் தொன்மையையும் பழந்தமிழரின் கல்வியறிவையும் பாருக்குப் பறைசாற்றும் என்பதில் ஐயமில்லை.
புதிய கற்காலத்திலேயே தமிழர்க்குத் தனித்த எழுத்துமுறை இருந்தது என்னும் செய்தி இந்தியாவில் தொன்மைவாய்ந்த எழுத்துமுறை தமிழருடையதே என்பதையும் கடன் கொடுக்கும் உயர்நிலையிலேயே தமிழ் இருந்தமையையும் வலியுறுத்துகிறது.
இன்று இந்தியர் நாகரிகம் என்று அழைக்கப்படுவதில் பெரும்பகுதி பழந்தமிழர் நாகரிகமேயாகும்’ (மே.ப. ப.210) என்னும் பேராசிரியரின் முடிபு உண்மை; வெறும் புகழ்ச்சியன்று.
தமிழ்மொழியின் எழுத்துமுறை, இலக்கியவளம், சொல்லாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பேராசிரியர் இலக்குவனார் பழந்தமிழ் மாட்சியையும் தமிழர்தம் நாகரிகத் தொன்மையையும் பற்றிய தரவுகளைத் தொகுத்துரைக்கிறார்.  காலப் போக்கில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகள் அவரது கூற்றை வலியுறுத்தும் வகையில் விளங்குவது குறிப்பிடத் தக்கதாகும்.
(தொடரும்)
பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue