Skip to main content

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க! – இலக்குவனார் திருவள்ளுவன்


thamizh

தமிழைப் பேச்சுமொழியாக நிலைக்கச் செய்க!

  தமிழ், தமிழர்களுக்கான கல்விமொழியாகவோ, ஆட்சிமொழியாகவோ, அலுவலக மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ, வணிக மொழியாகவோ, கலை மொழியாகவோ இல்லை என்பது இக்காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் இழிவு சேர்க்கும் நிலையாகும். இவை எல்லாவற்றிலும் மோசமான துயர நிலை என்பது தமிழ் தமிழர்களின் பேச்சுமொழி என்ற நிலையையும் இழந்துவருவதுதான்.
  தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக நிலைப்பதற்குக் குறைந்தது மக்களின் பேச்சுமொழியாகவாவது இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் தமிழில் பேசுவோர் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘‘தமிழை வீட்டில் பேசுகிறோமே! எதற்குத் தமிழ்மொழிக் கல்வி?’’ எனப் பிற மொழிகளை எடுத்தவர்கள் ‘‘பிற மொழிகளைத்தான் பள்ளியில் படிக்கின்றோமே! எதற்குத் தனிப் பயிற்சி தேவை’’ என எண்ணுவதில்லை. மாறாக வீட்டிலும் ஆங்கிலம் முதலான அயல்மொழிகளே ஆட்சிபுரியும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர்.
  தமிழ்நாட்டவருடன் இயைந்து வாழத்தமிழில் பேசவாவது தெரிந்திருக்க வேண்டும் என்ற உணர்வை அனைவரும் பெற வேண்டும். இச்சூழல் ஏற்படின் தமிழ் பிற நிலைகளிலும் முதன்மை பெறும் என்பதில் ஐயமில்லை. மறந்து போன, தொலைந்து போகும் நிலையில் உள்ள மூவா முத்தமிழை என்றும் உள்ள நிலைமொழியாகப் பேணுவதற்குப் பேச்சுமொழி என்ற நிலையையாவது முதலில் உருவாக்க வேண்டும். மாணவ நிலையிலேயே தமிழ், பேச்சு மொழியாக அமைய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்தால் தமிழ் என்றும் வாழும்.
  கடந்த பல ஆண்டுகளாகவே பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் – குறிப்பாக அனைத்து ஆங்கிலவழிப்பள்ளிகளிலும் – தமிழில் பேசினால் தண்டனை என அச்சுறுத்தித் தமிழில் பேசுவது இழிவானது என்பது போன்ற சூழல் இளந்தலைமுறையினரிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாகப் போக்குவதற்குப் பள்ளிக்கல்வித்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தமிழ்வழிப் பள்ளிகளாக இருந்தாலும் ஆங்கிலவழிப் பள்ளிகளாக இருந்தாலும், மத்திய அரசின் பள்ளிகளாக இருந்தாலும், தமிழே கற்பிக்கப்படாத பள்ளிகளாக இருந்தாலும், எல்லாப் பள்ளிகளிலும் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் மாணாக்கர்களும் ஆசிரியர்-பணியாளர்களும் தமிழிலேயே பேச வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். பிற நாள்களில் அவர்கள் எடுத்துள்ள விருப்பமொழியில் பேசலாம். இதற்கெனத் தமிழ் கற்பிக்காத பள்ளிகளில் தமிழ்ப்பேச்சுப் பயிற்சி அளிக்கச் செய்ய வேண்டும்.
  அனைத்து மாணவர்களும் தமிழறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு முதல்வர் அவர்கள், அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் தமிழ் பாடத்திட்டத்தைக் கொண்டுவந்தார். எனினும் பள்ளி நடத்துவோரும் ஆசிரியர்களும் முறையாகச் செயல்படுத்தாமல் அருமையான திட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர்.
  இன்றைய மாணாக்கர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழில் உறவுப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள், விலங்குகள், பறவைகள், செடி, கொடிகள் முதலான உயிரினப் பெயர்கள், வணங்குதல், வாழ்த்துதல் தொடர்பான தொடர்கள், முகவரிகள் முதலான தகவல் விவரங்கள் ஆகியவை தெரியவில்லை. இந்த நிலை தொடரும் வகையில் அரசு வாய்மூடி அமைதி காக்கக் கூடாது.
  தமிழே பேச்சு மொழி என்பதை நடைமுறைப்படுத்தினால் குறுகிய காலத்திலேயே வளரும் தலைமுறையினரைத் தமிழ் அறிந்தவர்களாக மாற்றிவிடலாம். ஆதலின் தமிழ் உணர்வுடனும், தமிழ்நல விழைவுடனும் வளரும் தலைமுறையினரின் மொழியாக வளர்தமிழை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ்மொழியைப் பேச மறுப்பின் அல்லது இந்நடவடிக்கைக்கு எதிராகச் செயல்படின் அவர்கள் அவரவர் மொழி பேசும் மாநிலத்திற்குச் செல்ல வேண்டும். தமிழராக இருந்து கொண்டே தமிழ் பேச மறுப்பின் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காத வண்ணம் செய்ய வேண்டும். ஆனால், அத்தகு நிலை வராது என எண்ணலாம். தமிழ் மக்கள் தமிழிலேயே பேச வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுத்துவிட்டால் அயலவரும் தமிழ் பேசத் தாமாகவே முன்வருவர்.
  தமிழ் பேச்சுமொழியாக நடைமுறையில் இருந்தால்தான் பிற நிலைகளிலும் பயன்பாட்டிற்கு வரும். பயன்பாட்டில் உள்ள மொழிதானே வாழும்! ஆதலின் இக்காலத் தலைமுறையினரின் நாக்குகளில் தமிழ் நடமாட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  “தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர் வாழ்வர்!” என்பதை வலியுறுத்துவார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். ஆதலின் தமிழைப் பேசியாவது வாழ வைத்து நாமும் வாழ்வோம்!
‘வாழ்க தமிழ்!’ என முழங்கிப் பயனில்லை! வாசிப்பில் மறந்து போன தமிழை வாய்மொழியிலாவது நிலைக்கச் செய்வோம்!
பேசுவோம் தமிழை! பேணுவோம் நம்மை!
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்
 தி.பி.2044 / 19 சூலை 2013
Dinamani-logo-main


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்