Wednesday, December 25, 2013

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.
பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.
படிப்பு: தொடக்க கல்வியை சகோதரர் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டார்.
இயக்கம்: கம்யூனிச விவசாய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு. அச்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அடித்தட்டு மக்களின் ஆசைகளையும், ஆவேசங்களையும் பிரதிபலித்தார்.
குடும்பம்: 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞரின் வாழ்வு முடிவடைந்தது.
கற்றல்:
கவிஞர் 1952 இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் நினைவாக கவிஞர் மனைவிக்குக் கடிதம் எழுதும்போது தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.
பட்டுக்கோட்டையின் பன்முக பரிமாணங்கள்
தொடக்கத்தில் விவசாயி, மாடுமேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர் என பன்முக பரிமாணங்கங்களைக் கொண்டவர் நாடக நடிகராக மாறி இறுதியில் கவிஞர் என்ற பெரும் பெயரையும் புகழையும் பெற்றார்.
பட்டுக்கோட்டையாரின் வினா:
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க? என்று சமுதாயத்தை நோக்கி பட்டுக்கோட்டையார் எழுப்பிய கேள்வி.
- 189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்.
- 1955 ஆம் ஆண்டு நல்லதச் சொன்னா நாத்திகனா என்பது அவர் முதல் பாடலாகும். பாரதிதாசனை தன் மானசீக குருவாக ஏற்றுக்க கொண்டார்.
பொதுவுடைமைச் சித்தாந்த பாடல்வரிகள்:
01. "தூங்காதே தம்பி தூங்காதே
சேம்பேறி என்ற சொல் வாங்கதே"
02. "சின்னப்பயலே சின்னப் பயலே
சேதிகேளடா ---------------
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி"
03. "வசதி படைச்சவன் தரமாட்டான்
வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"
"வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுரேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்"
04. "குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா"
05. "திருடாதே பாப்பா திருடாதே
-----------
கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்
போனால் பதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கொடுக்கிற நோக்கம் வளராது" என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை எளிமையாகப் பாடியவர்.
மகத்துவம்
தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும், ஆவேசத்தையும், அற்புதப் பாடல்களாக வடித்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது.
1955ஆம் ஆண்டு 'படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியராக‌ இவரைக் கண்டனர்.
பட்டுக்கோட்டை பாடுவதிலும் வல்லவர். நாடகம், திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர். இதுவே இவரை இயல்பாகவே கவிதை புனைய வைத்தது. 1946இல் தனது 15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார்.
'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே - கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே - கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.
இறுதிக்காலம்:
08.10.1959 ஆம் ஆண்டு தனது 29-ம் வயதில் மரமடைந்தார். திமுகவின் மேடைப் பாடகர். அவர் நடித்த நாடகம் "என் தங்கை, கவியின் கனவு".
பட்டம்: கோயமுத்தூர் தொழிலாளர் சங்கம், மக்கள் கவிஞர் என்ற பட்டத்தையும், பாவேந்தர் விருதினை தமிழக அரசும் வழங்கிக் சிறப்பித்துள்ளது. இவரது பாடல்கள் தமிழகத அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
திரைப்பட உலகில் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியவர். கால் நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற திரையுலக சகாப்த கவிஞர்.
1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு மக்கள் கவிஞர் என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது.
1981ஆம் ஆண்டு தமிழக அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதல்வரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி கௌரவம்மாள் பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
1993ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மணி மண்டபம்:
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை, அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்(6)

பட்டுக்கோட்டையாரின் கருத்துக்கள் தற்போது மட்டுமல்ல எப்போதும் தேவைப்படும் என்பதனை அனைவரும் அறிய வேண்டும், இவரது எளிய கருத்துக்கள் அனைவரும் படித்து வாழ பழகினால் நாட்டிற்கும் ஏன் உலகிற்கே அமைதி தரும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.
பட்டுக்கோட்டையார் என்றாலே அமரர் . திரு. கலியாணசுந்தரம் அவர்களைத்தான் யாருக்கும் நினைவில் வரும் , அவரது இளமை காலத்தில் மதுக்கூரில் சக்கினியர் ஹோட்டலில் இட்லிக்கு மாவு அரைக்கும்போது எதிரில் உள்ள சுவரில் அடுப்பு கரியால் கவிதை எழுதுவாராம் , அதனை பலரும் படித்துவிட்டு அந்த மக்கள் கவிஞரை மனதார பாராட்டுவார்களாம் , இன்றும் அவரது நினைவில் உள்ளவர்கள் மனதார, குறுகிய காலமே வாழ்ந்த ஒப்பற்ற கவிஞரை பெருமையுடன் மற்றவர்களிடம் பேசுவதை நான் பலதடவைகள் செவியுற்று உள்ளேன் . இந்த தமிழுலகம் உள்ள மட்டும் பட்டுக்கோட்டையார் (பாட்டுக்கோட்டையார்) நினைவும் நிலைத்து நிற்கும் . நான் பிறந்த மதுக்கூரில் அவரும் சில காலம் இருந்து உள்ளதை எண்ணி பெருமை அடைகின்றேன் , அவரது கவிதை பாடல் வரிகள் போன்று இனி ஒருவர் சிந்தித்து எழதுவது என்பது , அவரே பிறந்து வந்தால் மட்டும்மே எழுத இயலும் என்பதே உண்மை. கட்டுரையாளர் திரு . வெங்கடேசன் அவர்களுக்கு , மக்கள் கவிஞர் அமரர். திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றிய உயரிய தகவல்களை கட்டுரையின் வடிவில் தந்தமைக்கு என் போன்றோர்களின் நன்றி உரியதாகட்டும் .
நானும் மதுக்கூரை சேர்ந்தவன் தான் என்பதிலும் கவிஞர் அவர்கள் எங்கள் ஊரிலும் இருந்திருக்கிறார் எனும் போது மகிழ்ச்சி அடைகிறேன் கவிஞர் அவர்களின் அணைத்து பாடல்களுமே சிந்தனைக்கு உரியவை எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் "சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா" மிகவும் அருமையான வரிகள் நான் அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல் வரிகள்
இன்றைக்கு தரம் கேட்ட , சமுதாயத்தில் ஒழுக்ககேடுகளை வளர்ப்பவர்கள் எல்லாம், அந்தரங்க உறவுகளை அசிங்கமான வரிகளில் எழுதி "கவிப் பேரரசு" என்றெல்லாம் பட்டம் பெற்றுகொண்டு, அரசியல்வியாதிகளின் அடிவருடி மத்திய மாநில அரசுகளின் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் நபர்களைப் பார்க்கும்போது பட்டுக்கோட்டையார் பாட்டுக்கோட்டையாரக திகழ்கின்றார். அருமையான கட்டுரை நன்றி
பட்டுகோட்டையாரின் பாடல்களை நமது குழந்தைகளுக்கு சொல்லி தருவோம், நமது குழந்தைகளின் எதிர்காலம் வளம் பெற.
பாட்டுக்கோட்டையாய் விளங்கியவர் பட்டுக்கோட்டையார். திரை உலகில் இன்று பாடல் எழுதுபவர்கள் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை முன்னுதாரணமாக வைத்து எழுத வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர்

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர்

First Published : 22 December 2013 11:23 AM ISTதனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும், மொழிஞாயிறு என்னும் பட்டத்திற்குரியவராகவும், எவருக்கும் தலைவணங்காத தனித் தமிழ் அரிமா என்னும் பட்டத்திற்கு சொந்தகாரார்தான் தேவநோயப் பாவாணர்.
நெல்லை மாவட்டம் சங்கரநயினார் கோயிலை (சங்கரன்கோவில்) அடுத்து பெரும்புதூரில் 07.02.1902-ல் ஞானமுத்து, பரிபூரணம் தம்பத்தியினருக்கு பாவாணர் நான்காம் மகனாகவும் கடைசிப் பிள்ளையாகவும் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". 1906-ம் ஆண்டிலே பாவணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர்.
இதையடுத்து தேவநேசன் சிறுபிள்ளையாதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் வளர வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் அவருடய இரண்டாவது அக்காள் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் தேவநேசனை வளர்க்கும் பொறுப்பைக் கனிவுடன் ஏற்றுக் கொண்டார்.
படிப்பு:
திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் உதவியுடன் வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் இருந்த கிருத்துவ நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.
பிறகு, மேற்கல்வி பயில விரும்பியதாலும், அதற்கு ஆம்பூரில் வாய்ப்பில்லாத காரணத்தால் பாவாணர் தாம் பிறந்த மண்ணாகிய நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டைக்குச் சென்றார். அப்போது இராமநாதபுரம் மாவட்டம் சோழபுரத்தை அடுத்த சியோன் மலை என்னும் முறம்பில் வசித்து வந்த யங் துறை என்பவரின் உதவியோடு பாளையங்கோட்டையில் உள்ள கிறித்துவ ஊழியக் கழக (C.M.S.) உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். பள்ளியிறுதித் தேர்வு (S.S.L.C.) வரை அங்குப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
அக்காலத்தில் தேவநேசன் 5-ஆம் படிவத்திலேயே (V Form) தட்டச்சு, கணக்கு வைப்பு ஆகிய பாடங்களையும், 6-ஆம் படிவத்தில் (VI Form) தமிழ், வரலாறு ஆகிய பாடப் பகுதிகளையும் சிறப்புப் பாடங்களாக எடுத்துப் படித்தார்.
அந்நாட்களில் பாவாணர் ஆங்கிலப் பற்றாளராகவும், ஆங்கிலத்திற் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியிருக்கிறார். பள்ளியிற் பயிலுங்காலத்தில் அவரை எல்லோரும் ‘சான்சன்’ (Samuel Johnson) என்றே அழைப்பர்களாம்.
பாவாணர் தமிழில் எந்த அளவிற்குக் கரை கண்டாரோ, அந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினார்.
அவர் ஆங்கிலத்தில் பேசும்போதும், எழுதும்போதும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தாது அதற்குரிய சிறப்பான சொல்லையே (appropriate word) பயன்படுத்துவது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.
மிகப் பெரிய மொழியாராய்ச்சியாளரான பாவணர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வடமொழி (சமற்கிருதம்) முதலிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், கிரேக்கம், ஆங்கிலோ சாக்சன் முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றறிந்து, ஆரியப் புல்லரும் வையாபுரிக் கூட்டமும் அஞ்சும் வகையில், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே மூலம் என்ற உண்மையைத் தக்கச் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் தமிழே என்று காட்டிய மொழிப் பேரறிஞர்.
ஆசிரியர் பணி:
1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர்.
தனது 17 ஆம் வயதில் உயர்நிலைக் கல்வி பயின்றவுடன் தான் பயின்ற சீயோன் மலை உயர்நிலைப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1921-ஆம் ஆண்டு மீண்டும் வட ஆற்க்காடு மாவட்டம் ஆம்பூர் சென்றார். அங்கு அவர் முன்பு கல்வி பயின்ற பள்ளியிலேயே தமிழ் கற்பிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பள்ளி 1922-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவே, திரு. தேவநேசனும் அங்கு உதவித் தமிழாசிரியராகப் பதவி வுயர்வு பெற்றார்.
அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
ஆம்பூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில், சென்னை திருவல்லிக்கேணி, தாம்பரம் ஆகிய இடங்களில் வித்துவான் பட்டம் பெற்றபின் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். அப்போது 1940 -இல் மொழியாராய்ச்சி நூலான ‘ஒப்பியன் மொழி நூல்’ என்னும் நூலை வெளியிட்டார்.
சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.
-1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். அத்தேர்வில் அம்முறை வேறு எவரும் வெற்றி பெற்றிலர் என்பது குறிப்பிடத்தக்கது. "நேசன்" என்பதும் "கவி" என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் "தேவநேயப் பாவாணர்" என அமைத்துக்கொண்டார்.
- 1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். இதிலும் அவர் ஒருவரே வெற்றி பெற்றார். பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்.ஓ.எல். பட்டம் பெறுவதற்கு "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. அதற்கு காரணம் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தோரின் காழ்ப்புணர்ச்சியே ஆகும்.
பல்கலைக்கழகப் பணி:
பல்வேறு போராட்டங்களுக்கும், சிந்தனையின் எண்ண ஒட்டங்களின் முடிவாக 12.7.1956 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆராய்ச்சித் துறையில் ஆய்வராளராகவும் பணியை தொடங்கினார்.
பாவாணர் அண்ணாமலை நகர் சென்று ஐந்தாண்டு காலம் முடிந்தது. ஆறாம் கல்வியாண்டுத் தொடக்கத்தில் துணைவேந்தர் மாறினார். புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப் பற்று சிறிதுமில்லை. பேராசிரியன்மார் பெருமையுணரும் திறமுமில்லை. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கூடித் தமிழுக்குக் கேடு செய்துவிட்டனர். திடுமென்று பாவாணர்க்கு வேலை நீங்கியதாக ஓலை வந்தது. இலக்கணப் புலமையில்லாத முனைவர் சேதுப்பிள்ளையின் திட்டமே இறுதியில் மேற்கொண்டது.
"செத்துங் கொடுத்தான் சீதக்காதி செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர்" என்று மனம் வெதும்பினார் பாவாணர்.
"ஆண்டி எப்போது சாவான்; மடம் எப்போது ஒழியும்" என்று பாவாணர் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாள் காத்திருந்தனர் பலர். முறைப்படி மும்மாத அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அதையும் பல்கலைக் கழகத்தார் பாவாணர்க்குக் கொடுத்திலர். அப்போது, எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று கூறிய பாவாணர் 1961-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினார். அவரோடு தமிழும் வெளியேறியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் பாவாணர் பணி நலம் பாராட்டிய பாவேந்தர் பாவாணர்க்குப் பதிகம் பாடினார்.
"நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று
கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே
தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்
யாவர்க்கும் செய்வதே யாம்"
என்று ‘குயில்’ இதழில் எழுதினார்.
- வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
- 1974ம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1974 ஆம் ஆண்டு தமிழக அரசு தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி இயக்கத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.
புலமை:
01. சென்னைப் பல்கலைக்கழக வித்துவான்
02. மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர்
03. திருநெல்வேலித் தென்னிந்திய தமிழ்ச்சங்கப் புலவர் என்னும் மூன்று பட்டங்களைப் பெற்றார்.
பாவணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராகவும் அடிமரமாகவும் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவையும் கருதி, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
பாவணரின் கொள்கை:
திராவிடத்தின் தாய், ஆரியத்தின் (வடமொழி) அடிப்படை தமிழ் என சான்றுகளைல் நிறுவியவர் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சொற்கள் சிலவற்றை எடுத்துக்கைட்டி விளக்கியவர்.
- உலக முதன் மொழி தமிழ்
- உலக முதல் மாந்தன் தமிழன்
- அவன் பிறந்தகம் குமரிக்கண்டம்
தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் வடமொழிக்கு மூலம் என்பது அவர்தம் உண்மையான அடிப்படைக் கொள்கைகளில் சிலவாகும்.
விருதுகளும் சிறப்பு பெயர்களும்:
மதுரை தமிழ்க் காப்புக் கழகம் - 12.1.64 அன்று 'தமிழ்ப்பெருங்காவலர்' விருது வழங்கியது.
குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்கினார்.
தமிழக அரசு - செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கியது.
எழுதிய நூல்கள்:
01. இசைக் கலம்பகம்
02. இயற்றமிழ் இலக்கணம்
03. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்
04. ஒப்பியன் மொழி நூல்
05. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
06. தமிழர் திருமணம்
07. திராவிடத் தாய்
08. பழந்தமிழாராய்ச்சி
09. இசைத்தமிம் சரித்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
இறுதி நாட்கள்:
தன்னலம் சிறிதுமின்றி, குலமத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த  ‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படும் ஞா. தேவநேயப் பாவாணர்.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றணும் தமிழ் மரபும் என்னும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (05.01.1981) இரவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நொயிலிருந்து மீளாமலேயே 16.01.1981 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.

கருத்துகள்(2)

வெரி குட் நடந்த tnpsc exam நல்ல பலன் தந்தது உங்கள் அறிவு அரங்கம் பகுதி . நன்றி தினமணி. தேர்வுக்கு முக்கியம் தரும் எந்த பகுதி தொடரட்டும் .
தொடரை எழுதும் வெங்கடேசனுக்கும் வெளியிடும் தினமணிக்கும் பாராட்டுகள். பேரா.சி.இலக்குவனார் தலைமையிலான தமிழ்க்காப்புக்கழகம், 12.1.64 அன்று மதுரையில் பாவாணருக்கு வழங்கிய விருதின் பெயர் 'தமிழ்ப்பெருங்காவலர்' என்பதாகும். இதைக்குறிப்பிடும் இடத்திலும் வேறு இடங்களிலும் தட்டச்சுப்பிழைகள் உள்ளன. திருத்தி வெளியிடவும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்

அச்சம்

அச்சம்


                                                கல்வியாளர் வெற்றிச்செழியன்
vetrichezhiyan02

அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால்
            உதுவும் நடக்குமா !
அஞ்சி நாமும் முடங்கிவிட்டால்
            உயிரும் நிலைக்குமா !
 fear05
அச்சம் உள்ள நிலையினிலே
            அமைதி கிடைக்குமா !
அஞ்சி வாழும் மக்களிடை
            மகிழ்ச்சி தோன்றுமா !
 fear04
அச்சம் பெற்ற மூளையிலே
            அறிவு மலருமா !
அஞ்சி வாழும் அடிமையரின்
            கொள்கை பிழைக்குமா !
அச்சம் கொண்ட உறவினிலே
            உண்மை இருக்குமா !
அச்சம் உள்ள உயிர்களிடை
            அன்பு தோன்றுமா !
அச்சம் வாழ்வில் இருக்கையிலே
            கலைகள் முகிழுமா !
அச்சம் கொண்ட மனத்தவர்கள்
            படைக்க முடியுமா !
அச்சம் கொண்டு பிழைகளையே
            ஏற்று அமைவதா !
அச்சம் நம்மை ஆளவிட்டு
            அடிமை ஆவதா !
அச்சம் நீங்க உண்மையெனும்
            ஒளியை ஏற்றுவோம் !
அஞ்சாமல் விடுதலையாய்
            வாழ்ந்து காட்டுவோம் !

olivilakku01

அகரமுதல

தமிழைப் போற்ற வாருங்கள்!

தமிழைப் போற்ற வாருங்கள்!

- இளவல்

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
பாடம் படிப்போம் வாருங்கள்!
பாரில் உயர்வோம் வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
கலைகள் பயில்வோம் வாருங்கள்!
களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
ஒன்றாய் ஆட வாருங்கள்!
நன்றாய்ச் சிறக்க வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
நாளும் அறிவோம் வாருங்கள்!
நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்!

அண்ணா! அக்கா! வாருங்கள்!
பள்ளி செல்வோம் வாருங்கள்!
தமிழைப் படிப்போம் வாருங்கள்!
தமிழைப் போற்ற வாருங்கள்!
siruwar attam02

Thursday, December 19, 2013

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணா

நன்று.
மக்கள் அழைப்பதுபோல் அண்ணா என்றே குறிப்பிட்டிருக்கலாம்.
தமிழறிஞர் தலைப்பில் வருவதால் பேரறிஞர் அண்ணாவின் படைப்புச்சிறப்புகளை மேலும் சேர்த்திருக்கலாம். எழுத்துநடை சார்ந்த
மொழிபெயர்ப்பு  மூலம் போல் அமைவது கடினம். எனினும், < No Sentence can begin with because, because, because is a conjunction  >  என்பதை  மூலத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில்,   "எந்தத் தொடரின் தொடக்கத்திலும் அமையாத சொல், 'ஏனென்றால்'; ஏனென்றால்,   'ஏனென்றால்' என்பது இணைப்புச் சொல் "  எனக் குறிப்பது சிறப்பாக அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக்  காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணாதுரை


தமிழ். ஆங்கில, இந்தி என மும்மொழியிலும் முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் முற்போக்கு சீர்திருத்த வாதியானவர்தான் காஞ்சிபுரம் தந்த தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை.
மும்மொழி வித்தகரான இவர் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதியும், இயக்கியும் அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் பெருமை சேர்த்தவர். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதியதன் மூலம் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியும் வந்தார்.
இளமைக் காலம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15, 1909 ஆம் ஆண்டு நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பமான திரு. நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாப் பிறந்தார்.
இவரின் தந்தை ஒருநெசவாளர். தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து வந்தார். மாண வப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமக்கையின் பேரக் குழந்தைகளை த்ததெடுத்து வளர்த்தனர்.
பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த அண்ணாதுரை குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகச் சில காலம் பணிபுரிந்தார்.
கல்வி: 1934 இல் இளங்கலாமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியில் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
ஆசிரியர் பணி:
பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியர் பணியை இடைநிறுத்தி பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
பத்திரிக்கை பணி
1937 முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த காலகட்டங்களில் க்லகத்தா காய்ச்சல், ரிப்பன் மண்பத்து மகான்கள், ஓமன் கடற்கரையிலே போன்ற சிறப்புமிக்க கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரர் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளையும் எழுதினார்.
அரசியலில் நுழைவு: அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார்.(திராவிட நாடு தனி கோரிக்கையை வலியுறுத்தி துவங்கப்பட்டது) 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.
பெரியாருடன் கருத்து வேறுபாடும் திமுக உருவாக்கமும்:
பெரியாரின் தனித்திராவிட நாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளைவரான மணியம்மையாரை பெரியார் மணம் பிரிந்துகொண்டதால் கருத்து வேறுபாடு கொண்டு, அண்ணாதுரை மற்றும் பெரியாரின் அண்ணன் மகனும் பெரியாரின் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக் கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி (17.10.1949) அன்று அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்க தொடங்கினார். இருதியில் 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களின் ஆதரவையும் ஆவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிவிதமான செல்வாக்கை பெற்றது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
அறிஞர் அண்ணாதுரை அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும், அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகளே இவை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை தனி்ப்பட்டு ஒர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதப்படுகின்றது.
கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் அரசிலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் அளித்திடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல் எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்னை பொது வாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும் என்பது அண்ணாவின் கொள்கையாகும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தியா 1950 இல் அரசிலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பின்பு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தன் அங்கீகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1965 இல் அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 27, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராசன் - தாளமுத்து இருவரின் உயிரிழப்பிற்குப் பிறகு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரண்டது. அவ்வாண்டின் இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர் 1940 இல் மதராசு ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இநதிக் கல்வியை விலக்கினார்.
இந்தியாவின் ஆட்சி மொழியக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை
இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது. அது பெரும்பாண்மை மக்களால் பேசப்படுவதால், ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பாண்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பாண்மை பறவை காகம் தானே?
தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும் வரை எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய் மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும், இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது என்றார்.
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.
சட்டப்பேரவையில் அண்ணாதுரை
சட்டப்பேரவையில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
* மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர். நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.
* 1957 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டப்பேரவை தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.
* 1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரஸை அடுத்து உருவெடுத்திருந்துது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்பு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அண்ணாதுரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
* 1967 இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.
* 1962 இல் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியனரே வியக்கும் விதமாக மிக சாதுர்யமாக பதில் அளித்தார். பேரவையில் அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு  அண்ணாதுரை அவர்கள் நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.
மொழிப்புலமை
ஒருமுறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிசோதிப்பதற்காக அவரிடம், "ஏனென்றால்" என்ற வார்த்தையை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்ற கேட்டனர். அதற்கு அண்ணாதுரை அவர்கள்,
"No Sentence can begin with because, because, because is a conjunction" அதாவது எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தையை ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல் என்றார்.
இலக்கியப் பங்களிப்புகள்
அண்ணாதுரை மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக அடுக்கு மொழிகளுடன்., மிக நாகரிகமான முறையில் அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறனும், எழுத்தாற்றலும் பெற்றவர்.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி(1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி(1949) மற்றும் ஓர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.
இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்க பலமாக விளங்கியவர்கள் டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.
மறைவு
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969 இல் மரணமடைந்தார். அவர் பொடி நுகரும் பழக்கம் உடையவர் இதனால் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி, இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் பொன்மொழிகள்
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு; அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. (வேலைக்காரி நாடகத்தில்-1945)
அண்ணாதுரையின் முதல் படைப்புகள்
முதல் கட்டுரை - தமிழில் மகளிர் கோட்டம் - 19.03.1931
முதல் கட்டுரை - ஆங்கிலத்தில் MOSCOW mobparade - 1932
முதல் சிறுகதை - கொக்கரக்கோ - 11.02.1934
முதல் கவிதை - காங்கிரஸ் ஊழல் - 09.12.1937
முதல் கடிதம் - பகிரங்க்க் கடிதம் 02.09.1938
முதல் குறும் புதினம் - கோமளத்தின் கோபம் - 07.1939
முதல் புதினம் - வீங்கிய உதடு - 23.03.1940
முதல் நாடகம் - சந்திரோதயம் - 05.06.1943
அண்ணாதுரை புனைப்பெயர்கள்
செளமியன், பரதன், நக்கீரன், வீரன், குறம்போன், துறை, வீனஸ், சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்பேோக்கன், சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர்.
நினைவுச் சின்னங்கள்
* தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது.
* அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
* சென்னை மெரினா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
* எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச் செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன.
* வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம்  திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
* 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
* 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

Wednesday, December 18, 2013

தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

- திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன்
விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்!
வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்!
balachandran2
அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்!
ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்!
பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள்
பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்!
எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும்
ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்!
வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை
வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா?
எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும்
இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே!
பறித்தவாழ்வை யார்தருவார்? பாவிகளே! பிள்ளை
பெற்றவளின் வயிறெரியப் பச்சை மண்ணைச் சுட்டீர்!
முறித்தீர்கள் மூர்க்கர்காள்! முருங்கையிளஞ் செடியை!
முனைமுகத்தில் கரிகாலன் முறைசெய்து ஒறுப்பான்!
ஓடிநின்று ஒளியவில்லை; உளறவில்லை வெறியால்
உன்மத்தம் பிடித்தவரை ஒளிர்விழியால் எரித்தான்!
வாடிநின்று வாழ்வதனை வேண்டவில்லை யிளையோன்!
விடுதலைக்கு வாளேந்தி வெற்றிதேடும் மரபோன்!
பாடியாடிப் பனிமலராய்ப் பழகுமவன் உயிரைப்
பன்றிகளாம் சிங்களரே பாய்ந்துவந்து எடுத்தார்!
கூடிநின்று கொக்கரித்துக் குலக்கொழுந்தைக் கொன்றார்!
கொடுங்கோற் சிங்களர்கள் கூண்டோடு ஒழிக!
pulipadai1
விடுதலையே வேண்டிநின்றோம்! வேறென்ன கேட்டோம்?
விலையாகச் சிங்களரெம் வாழ்வுரிமை தீய்த்தே
படுகொலைகள் செய்ததனை படமெடுத்தும் வைத்தார்!
படஞ்சொல்லுங் கொடுமையினை பார்க்கவிழி மறுக்கும்!
கெடுதலையே செய்தார்கள் கேட்ட நெஞ்சும் வெடிக்கும்!
கீழோர்கள் சிங்களரே கெடுகவென்று ஒலிக்கும்!
நடுநின்று நயன்மையினை நல்கவில்லை ஞாலம்!
நைந்திருக்கும் தமிழீழம் நாடுவது ஞாயம்!
எரித்தவரை யெரித்துமீள யெழுந்தினிது வாழ
என்றுமெங்கள் கரிகாலன் ஈழநிலம் ஆள
கரிகாலன் காலமிதில் கன்னலீழங் காண
காடுநீங்கி களம்வென்று கவலையின்றி வாழ
நரிக்கூட்ட வஞ்சகத்தால் நலிந்தயினம் நிமிர
ஞாலத்தில் தமிழீழ நாடென்றும் ஒளிர
மரித்தபுலி மாவீரர் உயிர்த்தெழுந்து வருக!
மண்மீட்க மண்பிளந்து மாவீரர் யெழுக!
இழக்கயினி எதுவுமில்லை! எழுந்தெதிர்த்து வெல்வோம்!
எல்லாளன் புலிப்படையில் எல்லோருஞ் சேர்வோம்!pulipadai2
பழக்கமில்லை மண்டியிட்டு! பாரதிர எழுவோம்!
படைதிரட்டி யாளியென பகைவரினை அடுவோம்!
முழக்கமிட்டு முரசுகொட்டி முனைமுகத்தில் வெல்வோம்!
முடிசூடுந் தமிழன்னை முகமலர வாழ்வோம்!
பழந்தமிழைப் பழிக்கின்ற பகையதனைத் தீய்ப்போம்!
படைத்திமிரால் தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!
LTTE force1

புதிது புதிதாய் சிந்தனை செய்


புதிது புதிதாய் சிந்தனை செய்


                                                                                                -கல்வியாளர் வெற்றிச்செழியன்
புதிது புதிதாய் சிந்தனை செய் – நீ
உலகம் புதிதாய் எழுந்திட செய் – நம்
உலகம் புதிதாய் எழுந்திட செய்.
புதிய தென்பது  பழையதன் வளர்ச்சி
புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி
விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி
வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி
                                                                                                புதிது
தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை
தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை
முழுவதும் திடுமென மாறு வதில்லை
முயற்சிகள் இன்றி, மேல் ஏறுவதில்லை.
                                                                                                புதிது
உள்ளது சிறத்தல் வளர்ச்சியின் முதற்படி
உள்ளதை இழத்தல் அழிவின் அடிப்படை
உள்ளத்தின் எண்ணமே முடிவுகள் செய்யும்
உள்ளுவோம் உயர்வாய், உயர்வாய்ச்  செய்வோம்.
                                                                                                புதிது
பழகிய வழியினில் ஆற்றுநீர் செல்லும் river
பழமையும் சூழலும் தன்வழி இழுக்கும்.
முழுமன விருப்புடன் முறைப்பட எண்ணி
முழுதாய் முயன்றால் மாற்றங்கள் நிகழும்.
                                                                                                புதிது
வாழும் உலகம் நம்முடை வீடு
வாழும் வகையினில் அமைத்திடின் நிலைக்கும்
வாழப் பிறந்தோம் நமக்கிது வாய்ப்பு
வாழும் வகையினில் வாழ்வதே சிறப்பு
                                                                                                புதிது

Thursday, December 12, 2013

பூவுலகம் மகிழ்ச்சியின் எல்லை…..

 -முனைவர். ப. பானுமதி

aashira bhanumathi
கேவலம் மரணத்திடம்
ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாகப் பரிட்சித்துப் பார்.

  இவை உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள்  தலைமையாளர் திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும் துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும் மரணப் படுக்கையில் இருந்த போது,
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்!
. . .               . . .                     . . . 
ஆலாலமுண்ட வனடி சரணென்ற மார்க்கண்டன் – தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன் – இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன் அரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்

என்று காலனை நாலாயிரம் காதம் அகலுமாறு விரட்டுவான். இன்றைய இளைஞர்கள் பாரதியைப் போல, வாசுபாயைப் போல மரணத்தை மிரட்டாமல் தொலைவில் விரட்டாமல் இவர்களே சென்று காலனைத் தழுவிக் கொள்கிறார்கள்.
  இரு நாள் முன்னர் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியே இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்து, விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்து, பல பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்று, ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டியில் தேர்வு ஆகும் வரை முயற்சியும் உழைப்பும் கொண்ட அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் நட்பு என்கிறார்கள்.
  அறிவும் திறமையும் நிறைந்த இது போன்ற இளைய மன்பதை  தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கும் தன்னை இவ்வுலகில் பிறப்பித்துச் சீராட்டி வளர்த்த வீட்டிற்கும் கல்வியிலும் விளையாட்டிலும் பிற கலைகளிலும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்வி நிலையங்களுக்கும் என்று பல்லோருக்கும் மிகப் பெரிய  இரண்டகத்தைச் செய்கின்றார்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறலாம்.
  இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதன் மூலமாக இவர்களுக்காகப் பல்வேறு வகையிலும் உதவிய அத்தனை பேரின் மனத்தையும் இவர்களைப் பற்றி அவர்கள் கண்ட கனவுகளையும் அவர்களது நம்பிக்கையையும் படுகொலை செய்கிறார்கள்.
  இருபால் இளைஞர்கள் இப்படித் தற்கொலை செய்து கொள்வதற்குக் கூறப்படும் காரணமும் பெரிதாக இருப்பதில்லை. வலுவான காரணங்கள் அற்று இளைஞர்களின் தற்கொலை  நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. 
  உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பதினைந்து  அகவை முதல் முப்பது அகவைக்குள் இருக்கும் இருபால் இளைஞர்கள‌ே என்கின்றது ஆய்வு அறிக்கை. இளைஞர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்குப் பல்வேறு காரணிகள் இருப்பினும் காதல் தோல்வி, கல்வித் தோல்வி, வேலையின்மை, வறுமை இவை நான்குமே முன்னணியில் இடம் பிடிக்கின்றன.
      இந்தியாவில் மன நோயால்  அன்றாடம் 400 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் உலக  நலவாழ்வு மையத்தின் புள்ளியல் விவர கணக்கெடுப்புக் கூறுகிறது. இவர்கள் மன நோயால் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று கூறினாலும் அந்த மன நோய்க்குக் காரணிகளாக அமைவன மேற்சொன்ன நான்கில்  ஒன்றாகத்தான் இருக்கின்றன.
  தம் குழந்தைகளுடன் நட்புடன் அமர்ந்து பேசி, அவர்களின்  சிக்கல்களை அறிந்து, அவற்றைத் தீர்க்கும் வழி கூறி, அவர்களிடம் மன முதிர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தாத பெற்றோர்கள் தற்கொலைகளுக்கு முதற்காரணம் எனலாம்.
  பணத்தை நோக்கிய ஓட்டத்தில் இருக்கின்ற பெற்றோர்களுள் சிலர் தங்கள்  வழித்தோன்றல் இறந்தபின் அந்த நினைவு நாளை ஆதரவற்ற சிறார் ஆசிரமங்களைத் தேடிச் சென்று  நிகழ்த்துகின்றனர். உணவு, உடை என்று அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுத்து விட்டால் தம் கடமை முடிந்து விட்டதாகப் பெற்றோர் சிலர் நினைக்கின்றனர்.
“சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே சீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதற்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்தப் பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

இந்த வைர வரிகளை விரும்புகிறவர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். பிறர் மூச்சுக்காக தாம் வாழ்வது பேரானந்தம் என்பதை உணர்வார்கள்.
  ஒரு புறம் அவர்களுக்கென்று தனிப்பட்ட உரிமை  இல்லாமையும் மறுபுறம்  கட்டுப்பாடற்ற உரிமையும்  என்னும் இரு வகையிலும் இளைஞர்கள் தள்ளாடிக்கொண்டு இருப்பதையும்  இக்காலத்தில் காண முடிகிறது. இவையெல்லாம் இளைய  மன்பதையை மனநோயாளிகளாக மாற்றுவதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும்?
  குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் அன்பும் அரவணைப்பும் இல்லாத  உரிமை, வெறுமையைத்தான் உருவாக்கும்.  அந்த வெறுமை காலப்போக்கில் சலிப்பாய் மாற்றம் பெற்று விடுகிறது. தனித்து விடப்படும் இளைஞர்களில் சிலர் சலிப்பின் தொடக்க நிலையில் எப்போதும் கணினி, கைப்பேசி என்னும் இயந்திரங்களுடன் இயங்கவும் இயந்திரமாகவே இயங்கவும்  தொடங்கி விடுகின்றனர். இந்த இயந்திர வாழ்க்கை அவர்களைத் திசை மாற்றி விடுகின்றது.
  அந்த மாய உலகில் கிடைக்கும் புதிய புதிய நட்பில் மனம் மகிழ்கின்றனர். உண்மை இல்லாதவர்களே பெரும்பாலும் உலாவும் வலையுலகில் காணும் நட்பில் தோல்வியைத் தழுவுகின்றனர். அதன் முடிவில் மரணத்தைத் தழுவும் முடிவுக்கு வருகின்றனர்.  இரு நாளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பெங்களூரைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவி சீலாவின் தற்கொலைக்கு  முகநூல் நட்பே காரணம். “லைக் போட்டதால் லைஃப் போனது” என்னும் தலைப்பில் தினகரன் நாளிதழில் இந்நிகழ்வு வெளியாகியிருந்தது. எத்தனை பெற்றோர் இதனைப் பார்த்திருப்பர் என்று தெரியவில்லை.
  மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்வி முறை, மதிப்பெண்களை வாங்க வைப்பது மட்டுமே தம் கடமை என்று மதிப்பெண்களை நோக்கி மட்டுமே மாணவர்களை நகர்த்தும் ஆசிரியர்கள் ஆகிய இவை இளைய மன்பதையின்  தற்கொலைக்குப் பின்புலமாக அமைந்திருக்கும் மிக  முதன்மைக் காரணங்கள் என்பதை எவராலும் மறுத்துக் கூற இயலாது. ஆனால் ஆசிரியர்கள் அவ்வாறு நடந்து கொள்ள கல்வி முறை, பணிபுரியும் கல்வி நிலையங்களின் நிருவாகம், பெற்றோர்கள் ஆகிய எல்லாம் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
  ஆசிரியர்கள், ‘குழந்தைகளின் இரண்டாம் பெற்றோர்’ என்பார்கள். இளைய  மன்பதையின் பள்ளிப் பெற்றோர்களாகிய ஆசிரியர்கள் ஆளுமையை வளர்க்க முயற்சி செய்தலோடு மாணவர்களிடம் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டால் அவர்களுடன் அன்புடன் தனித்துப் பேசிக் சிக்கல்களை அறிந்து முறையாக வழி வழிநடத்துதல் இவற்றுக்குப் பெரும் தீர்வாக அமையும்.
  ஒவ்வொரு மாவட்டமும் இந்தக் கணக்கெடுப்பை எடுத்து எந்தெந்த முறையில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்னும் பட்டியலை வெளிப்படையாக இட்டு வருகின்றன. இதன் மூலமும் தற்கொலை எண்ணம் இளைய  மன்பதைக்கு மிகுதியாகிறதோ என்றும் அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும் இளைஞர்கள் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்கள். அது அப்படி ஒன்றும் கடினமானதாக இருக்காது போலும்; ஆகவே அம்முறைகளில் எதேனும் ஒரு முறையில் நாமும் முயலலாம் என்று நினைத்து விடுவார்களோ என்னும் அச்சமும் எழுவதைத் தடுக்க இயலவில்லை. இந்தக் கணக்கெடுப்பும் புள்ளி விவரங்களும்  உறுதியாகத் தேவைதான் என்றபோதும் இவை வெளிப்படையாக வெளியிடுவது தேவையா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
  எல்லாவற்றையும் கொண்டாடும் அல்லது  நிகழ்த்தும் நாம் இதையும்  நடத்துகிறோம். செப்டம்பர் 10ஆம் நாள் உலகத் தற்கொலை முயற்சி தடுப்பு  நாளாக (World Suicide Prevention Day) நிகழ்த்தப்படுகிறது. இந்தநிகழ்வு நாளில் ஊர்வலம், பொதுக்கூட்டம் என்று  பல்வகையிலும் விழிப்புணர்வை இளைய  மன்பதைக்கு ஏற்படுத்தி வருகிறது. 
  தனிமனிதர்கள் பலர் சேர்ந்ததே ஒர் அமைப்பு. ஆகவே எதற்கும் அமைப்புகளையே நம்பிக்கொண்டிராமல் ஒவ்வொரு தனி மனிதரும்கூடத் தம் அக்கம் பக்கத்தில் இருக்கும் இளைஞர்களின் இயல்பில் மாற்றம் தெரிந்தால் அவர்களைக் கண்காணிப்பது, அன்பு காட்டுவது, தகுந்த அறிவுரை வழங்குவது முதலிய முயற்சிகளின் மூலம் அவர்களின் மனச் சலிப்பைப் போக்கி மகிழ்வாக இருக்கச் செய்யலாம்.
  இளைஞர்கள் தற்கொலை என்னும் இந்தச் சிக்கலைப் பொருத்த வரை பல்முனைத் தாக்குதலே இதனைப் புறமோடச் செய்யும் உத்தியாக இருக்கும். ஒரு கை ஓசையாக இல்லாமல்  மன்பதையின் எல்லாப் பக்கங்களில் இருந்தும் முயன்றால் இளைய மன்பதையைத் தற்கொலை என்னும் பேரழிவில் இருந்து பாதுகாக்கலாம். 

Wednesday, December 11, 2013

வழி சொல்வீர்! – தங்கப்பா

வழி சொல்வீர்! – தங்கப்பா


ma.ila.thangappa 1
உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால்
  உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை
குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்!
  குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ?

தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை
  தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே!
உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில்.
  உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே!

பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப்
  பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்!
மறவுணர்ச்சி முழுதழிந்தான்;  மானங்  கெட்டான்;
  வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே!

நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும்
  நீறாகிப் போனபின்னர் ஊதி ஊதி . . .
வெறுப்புத்தான் வருகுதையா! பயனும் இல்லை!
விட்டிடவும் மனமில்லை! வழி சொல்வீரே!
தரவு : பேரா. அறிவரசன்

அயல்மொழி எதற்கடா தமிழா? - கவிக்கொண்டல்

அயல்மொழி எதற்கடா தமிழா?

- கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
 kavikondal senguttuvan 1
அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில்
அயல்மொழி எதற்கடா? – தமிழா
அயல்மொழி எதற்கடா?
முன்னைய மொழியாம் மூவா மொழியெனும்
முத்தமிழ் நமதடா! – அது
எத்துணைச் சிறந்ததடா!
வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி
ஆட்சிக்   கொரு மொழியா? -வழி
பாட்டுக் கொரு  மொழியா?

பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி
பலமொழி எதற்கடா? – தமிழா
பலமொழி எதற்கடா?
தமிழில் பேசு தமிழில் எழுது
தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத்
தமிழில் வழிபடுவாய்!
தமிழில் கல்வியைக் கற்பதே மேன்மை
தமிழில் பெயர் சூட்டு – பிள்ளைக்குத்
தமிழில் பெயர் சூட்டு!
அம்மா அப்பா அத்தை மாமா
அழகாய்ச் சொல்லிருக்க – தமிழா
ஆங்கிலச் சொல் லெதற்கு?
மம்மி டாடி ஆண்ட்டி அங்கிள்
மழலைகள் அழைப்பதுவா? – தமிழ்
மதிப்பை இழப்பதுவா?

எந்நாளோ? – இறைக்குருவனார்

எந்நாளோ? – இறைக்குருவனார்

 iraikuruvanar 1
கனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப்
புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ?
அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி
வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ?
கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப்
பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ?
திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே
அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல்  எந்நாளோ?
அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன்
முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ?
கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி
முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ?
நாடும்இனமும் நன்மொழியும்  நந்தமிழர்
பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ?
உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்
தழைத்துப் பலவளனும் தாம்பெறுதல்  எந்நாளோ?
சாதிகுலம் பிறப்பால் சழக்கிட்டு மாய்கின்ற
தீதிரிந்தே நன்மை திகழுநாள் எந்நாளோ?
வாழ்வெல்லாம் பாட்டாகி வளங் கொழித்த  நந்தமிழர்
பாழ்மொழிவேற் றிசைக்கடிமை பழிக்குநாள் எந்நாளோ?
திரைப்படமும் பிறகலையும் தீந்தமிழ்நன் மணம் பரப்பி
உரைக்கலரும் பெருமையுடன் உயர்வுறுநாள் எந்நாளோ?
கண்டறியாப் புதுமைகளைக் கண்டுகண்டு நந்தமிழர்
தண்டமிழிற் செய்தே நாமுயர்தல் எந்நாளோ?

நன்றி : குறள்நெறி 15.05.1966