ஏனில்லை பெரியார் படம்!- தமிழேந்தி
ஏனில்லை பெரியார் படம்!
- தமிழேந்தி
வரலாற்றைத் திருத்தும் வேலை
வழக்கமாய்ப் பார்ப்பான் வேலை
பெரியாரைத் தலைகீ ழாகப்
பிழைபடக்காட்டும் வேலை
சரியாய்அவ் வேலை தன்னைத்
தமிழ்த்தேசம் பேசு வோர்கள்
விரிவாகச் செய்கின் றார்கள்
விதைநெல்லை அவிக்கின் றார்கள்
புராணங்கள் பொய்கள் தம்மைப்
பூணூலார் சதிகள் தம்மை
இராப்பகல் எடுத்துச் சொல்லி
இனமானம் காத்து நின்றார்
திராவிடர் தமிழர் என்றார்
திருக்குறள் மேன்மை சொன்னார்
பொறாமையால் இவரை மாற்றான்
போலன்றோ பழிக்கின் றார்கள்!
ஒருபக்கம் சாதிக் கேடோ
உழைப்பாளர் தமைப்பி ளக்கும்
மறுபக்கம் மதத்தின் ஆட்டம்
மாத்தமிழ் நாட்டு மாண்பின்
திறத்தையே சிதைக்கும்; இந்தத்
தீமைக் கெலாம்ம ருந்து
உரத்தோடே அய்யா தந்த
ஒப்பருங் கருத்தி யல்தான்
காட்டமாய்க் கொதித்தெ ழுந்து
காங்கிரசின் தலையில் போடு
போட்டவர் பெரியார்; சீறும்
புயலாகித் தமிழர் நாடு
கேட்டவர் பெரியார்; இங்குக்
கீழ்ச்சாதி யாம்,நம் மானம்
மீட்டவர் பெரியார்; எல்லா
மேன்மைக்கும் பெரியார் தான்வேர்!
புடைப்பத்தோள் உயர்த்தி நாளும்
புலிவீரம் பேசிப் பேசித்
தடைக்கெல்லாம் பெரியார் செய்த
தவறென்றே சொல்லிச் சொல்லி
முடக்கினர் அவர்ப டத்தை
முள்ளிவாய்க்கால் முற்றந் தன்னில்!
விடைவர லாறு கூறும்
வெறுங்கூச்சல் கரைந்தே போகும்
Comments
Post a Comment