தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர்
- Get link
- X
- Other Apps
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தேவநேயப் பாவாணர்
By
Venkatesan Sr
First Published : 22 December 2013 11:23 AM IST
தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும், மொழிஞாயிறு என்னும் பட்டத்திற்குரியவராகவும், எவருக்கும் தலைவணங்காத தனித் தமிழ் அரிமா என்னும் பட்டத்திற்கு சொந்தகாரார்தான் தேவநோயப் பாவாணர்.
நெல்லை மாவட்டம் சங்கரநயினார் கோயிலை (சங்கரன்கோவில்) அடுத்து பெரும்புதூரில் 07.02.1902-ல் ஞானமுத்து, பரிபூரணம் தம்பத்தியினருக்கு பாவாணர் நான்காம் மகனாகவும் கடைசிப் பிள்ளையாகவும் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் "தேவநேசன்". 1906-ம் ஆண்டிலே பாவணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர்.
இதையடுத்து தேவநேசன் சிறுபிள்ளையாதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் வளர வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் அவருடய இரண்டாவது அக்காள் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் தேவநேசனை வளர்க்கும் பொறுப்பைக் கனிவுடன் ஏற்றுக் கொண்டார்.
படிப்பு:
திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் உதவியுடன் வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் இருந்த கிருத்துவ நடுநிலைப்பள்ளியில் பயின்றார்.
பிறகு, மேற்கல்வி பயில விரும்பியதாலும், அதற்கு ஆம்பூரில் வாய்ப்பில்லாத காரணத்தால் பாவாணர் தாம் பிறந்த மண்ணாகிய நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டைக்குச் சென்றார். அப்போது இராமநாதபுரம் மாவட்டம் சோழபுரத்தை அடுத்த சியோன் மலை என்னும் முறம்பில் வசித்து வந்த யங் துறை என்பவரின் உதவியோடு பாளையங்கோட்டையில் உள்ள கிறித்துவ ஊழியக் கழக (C.M.S.) உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். பள்ளியிறுதித் தேர்வு (S.S.L.C.) வரை அங்குப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
அக்காலத்தில் தேவநேசன் 5-ஆம் படிவத்திலேயே (V Form) தட்டச்சு, கணக்கு வைப்பு ஆகிய பாடங்களையும், 6-ஆம் படிவத்தில் (VI Form) தமிழ், வரலாறு ஆகிய பாடப் பகுதிகளையும் சிறப்புப் பாடங்களாக எடுத்துப் படித்தார்.
அந்நாட்களில் பாவாணர் ஆங்கிலப் பற்றாளராகவும், ஆங்கிலத்திற் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியிருக்கிறார். பள்ளியிற் பயிலுங்காலத்தில் அவரை எல்லோரும் ‘சான்சன்’ (Samuel Johnson) என்றே அழைப்பர்களாம்.
பாவாணர் தமிழில் எந்த அளவிற்குக் கரை கண்டாரோ, அந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினார்.
அவர் ஆங்கிலத்தில் பேசும்போதும், எழுதும்போதும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தாது அதற்குரிய சிறப்பான சொல்லையே (appropriate word) பயன்படுத்துவது அவருக்கே உரிய தனிச்சிறப்பாகும்.
மிகப் பெரிய மொழியாராய்ச்சியாளரான பாவணர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வடமொழி (சமற்கிருதம்) முதலிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், கிரேக்கம், ஆங்கிலோ சாக்சன் முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றறிந்து, ஆரியப் புல்லரும் வையாபுரிக் கூட்டமும் அஞ்சும் வகையில், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே மூலம் என்ற உண்மையைத் தக்கச் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் தமிழே என்று காட்டிய மொழிப் பேரறிஞர்.
ஆசிரியர் பணி:
1921ம் ஆண்டு ஆசிரியப் பணிக்குச் செல்ல அவர் விரும்பியபோது, அவருக்கு, அவரது ஆசிரியர், பண்டிதர் மாசிலாமணி என்பவர் ஒரு சான்றிதழ் வழங்கினார். அதில் பாவாணரின் பெயரை, "தேவநேசக் கவிவாணன்" என்று குறிப்பிட்டார். பின் அப்பெயரையே தம் பெயராகக் கொண்டார் பாவாணர்.
தனது 17 ஆம் வயதில் உயர்நிலைக் கல்வி பயின்றவுடன் தான் பயின்ற சீயோன் மலை உயர்நிலைப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1921-ஆம் ஆண்டு மீண்டும் வட ஆற்க்காடு மாவட்டம் ஆம்பூர் சென்றார். அங்கு அவர் முன்பு கல்வி பயின்ற பள்ளியிலேயே தமிழ் கற்பிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பள்ளி 1922-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவே, திரு. தேவநேசனும் அங்கு உதவித் தமிழாசிரியராகப் பதவி வுயர்வு பெற்றார்.
அவ்வாண்டிலேயே தாம் இளமையில் பயின்ற ஆம்பூர் நடுநிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
ஆம்பூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில், சென்னை திருவல்லிக்கேணி, தாம்பரம் ஆகிய இடங்களில் வித்துவான் பட்டம் பெற்றபின் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். அப்போது 1940 -இல் மொழியாராய்ச்சி நூலான ‘ஒப்பியன் மொழி நூல்’ என்னும் நூலை வெளியிட்டார்.
சேலம் நகராட்சிக் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பாவாணர் ஓரிடத்தில் நிலைத்து பணி செய்யவில்லை.
-1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி வென்றார். அத்தேர்வில் அம்முறை வேறு எவரும் வெற்றி பெற்றிலர் என்பது குறிப்பிடத்தக்கது. "நேசன்" என்பதும் "கவி" என்பதும் வடசொற்கள் என்பதை அறிந்துகொண்ட பின்னர், தம் பெயரைத் "தேவநேயப் பாவாணர்" என அமைத்துக்கொண்டார்.
- 1926ம் ஆண்டு திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கம் நடத்திய தனித் தமிழ்ப் புலவர் தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். இதிலும் அவர் ஒருவரே வெற்றி பெற்றார். பின்னர் பி.ஓ.எல் தேர்வும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதி வென்றார். எம்.ஓ.எல். பட்டம் பெறுவதற்கு "திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே" என்னும் பொருள் குறித்து இடுநூல் எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் அளித்தார். ஆனால் பாவாணரின் இந்நூலை பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. அதற்கு காரணம் ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தோரின் காழ்ப்புணர்ச்சியே ஆகும்.
பல்கலைக்கழகப் பணி:
பல்வேறு போராட்டங்களுக்கும், சிந்தனையின் எண்ண ஒட்டங்களின் முடிவாக 12.7.1956 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆராய்ச்சித் துறையில் ஆய்வராளராகவும் பணியை தொடங்கினார்.
பாவாணர் அண்ணாமலை நகர் சென்று ஐந்தாண்டு காலம் முடிந்தது. ஆறாம் கல்வியாண்டுத் தொடக்கத்தில் துணைவேந்தர் மாறினார். புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப் பற்று சிறிதுமில்லை. பேராசிரியன்மார் பெருமையுணரும் திறமுமில்லை. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கூடித் தமிழுக்குக் கேடு செய்துவிட்டனர். திடுமென்று பாவாணர்க்கு வேலை நீங்கியதாக ஓலை வந்தது. இலக்கணப் புலமையில்லாத முனைவர் சேதுப்பிள்ளையின் திட்டமே இறுதியில் மேற்கொண்டது.
"செத்துங் கொடுத்தான் சீதக்காதி செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர்" என்று மனம் வெதும்பினார் பாவாணர்.
"ஆண்டி எப்போது சாவான்; மடம் எப்போது ஒழியும்" என்று பாவாணர் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாள் காத்திருந்தனர் பலர். முறைப்படி மும்மாத அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அதையும் பல்கலைக் கழகத்தார் பாவாணர்க்குக் கொடுத்திலர். அப்போது, எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று கூறிய பாவாணர் 1961-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினார். அவரோடு தமிழும் வெளியேறியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் பாவாணர் பணி நலம் பாராட்டிய பாவேந்தர் பாவாணர்க்குப் பதிகம் பாடினார்.
"நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று
கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே
தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்
யாவர்க்கும் செய்வதே யாம்"
என்று ‘குயில்’ இதழில் எழுதினார்.
- வறுமை வாட்டியபோதும் வாழ்நாளெல்லாம் சொல்லாய்வுக்காக நூல்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
- 1974ம் ஆண்டு பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்குநராக இருந்தபோது, அவருக்கு மராட்டிய மொழி அகரமுதலி ஒன்று தேவையாய் இருந்தது. அப்போது மூர் அங்காடியில் இராசவேல் என்ற பழைய புத்தக வணிகரிடம் அந்நூல் இருந்தது. அந்த அகராதியைப் பாவாணர் அரசு பணத்தில் வாங்காது தமது பணத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1974 ஆம் ஆண்டு தமிழக அரசு தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி இயக்கத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.
புலமை:
01. சென்னைப் பல்கலைக்கழக வித்துவான்
02. மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர்
03. திருநெல்வேலித் தென்னிந்திய தமிழ்ச்சங்கப் புலவர் என்னும் மூன்று பட்டங்களைப் பெற்றார்.
பாவணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராகவும் அடிமரமாகவும் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவையும் கருதி, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.
பாவணரின் கொள்கை:
திராவிடத்தின் தாய், ஆரியத்தின் (வடமொழி) அடிப்படை தமிழ் என சான்றுகளைல் நிறுவியவர் கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் சொற்கள் சிலவற்றை எடுத்துக்கைட்டி விளக்கியவர்.
- உலக முதன் மொழி தமிழ்
- உலக முதல் மாந்தன் தமிழன்
- அவன் பிறந்தகம் குமரிக்கண்டம்
தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் வடமொழிக்கு மூலம் என்பது அவர்தம் உண்மையான அடிப்படைக் கொள்கைகளில் சிலவாகும்.
விருதுகளும் சிறப்பு பெயர்களும்:
மதுரை தமிழ்க் காப்புக் கழகம் - 12.1.64 அன்று 'தமிழ்ப்பெருங்காவலர்' விருது வழங்கியது.
குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் செந்தமிழ் ஞாயிறு விருது வழங்கினார்.
தமிழக அரசு - செந்தமிழ்ச் செல்வர் விருது வழங்கியது.
எழுதிய நூல்கள்:
01. இசைக் கலம்பகம்
02. இயற்றமிழ் இலக்கணம்
03. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்
04. ஒப்பியன் மொழி நூல்
05. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
06. தமிழர் திருமணம்
07. திராவிடத் தாய்
08. பழந்தமிழாராய்ச்சி
09. இசைத்தமிம் சரித்திரம் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
இறுதி நாட்கள்:
தன்னலம் சிறிதுமின்றி, குலமத வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்த ‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படும் ஞா. தேவநேயப் பாவாணர்.
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றணும் தமிழ் மரபும் என்னும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (05.01.1981) இரவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நொயிலிருந்து மீளாமலேயே 16.01.1981 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.
கருத்துகள்(2)
வெரி குட் நடந்த tnpsc exam நல்ல பலன் தந்தது உங்கள் அறிவு
அரங்கம் பகுதி . நன்றி தினமணி. தேர்வுக்கு முக்கியம் தரும் எந்த பகுதி
தொடரட்டும் .
பதிவுசெய்தவர்
varsha
12/23/2013 01:38
இதற்கான பதில்
முறையற்ற கருத்து
தொடரை எழுதும் வெங்கடேசனுக்கும் வெளியிடும்
தினமணிக்கும் பாராட்டுகள். பேரா.சி.இலக்குவனார் தலைமையிலான
தமிழ்க்காப்புக்கழகம், 12.1.64 அன்று மதுரையில் பாவாணருக்கு வழங்கிய
விருதின் பெயர் 'தமிழ்ப்பெருங்காவலர்' என்பதாகும். இதைக்குறிப்பிடும்
இடத்திலும் வேறு இடங்களிலும் தட்டச்சுப்பிழைகள் உள்ளன. திருத்தி
வெளியிடவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர்,
தமிழ்க்காப்புக்கழகம்
- Get link
- X
- Other Apps