எந்நாளோ? – இறைக்குருவனார்
எந்நாளோ? – இறைக்குருவனார்
கனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப்
புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ?
அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி
வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ?
கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப்
பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ?
திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே
அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல் எந்நாளோ?
அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன்
முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ?
கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி
முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ?
நாடும்இனமும் நன்மொழியும் நந்தமிழர்
பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ?
உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்
தழைத்துப் பலவளனும் தாம்பெறுதல் எந்நாளோ?
சாதிகுலம் பிறப்பால் சழக்கிட்டு மாய்கின்ற
தீதிரிந்தே நன்மை திகழுநாள் எந்நாளோ?
வாழ்வெல்லாம் பாட்டாகி வளங் கொழித்த நந்தமிழர்
பாழ்மொழிவேற் றிசைக்கடிமை பழிக்குநாள் எந்நாளோ?
திரைப்படமும் பிறகலையும் தீந்தமிழ்நன் மணம் பரப்பி
உரைக்கலரும் பெருமையுடன் உயர்வுறுநாள் எந்நாளோ?
கண்டறியாப் புதுமைகளைக் கண்டுகண்டு நந்தமிழர்
தண்டமிழிற் செய்தே நாமுயர்தல் எந்நாளோ?
நன்றி : குறள்நெறி 15.05.1966
Comments
Post a Comment