அயல்மொழி எதற்கடா தமிழா? - கவிக்கொண்டல்
அயல்மொழி எதற்கடா தமிழா?
- கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்
அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில்
அயல்மொழி எதற்கடா? – தமிழா
அயல்மொழி எதற்கடா?
முன்னைய மொழியாம் மூவா மொழியெனும்
முத்தமிழ் நமதடா! – அது
எத்துணைச் சிறந்ததடா!
வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி
ஆட்சிக் கொரு மொழியா? -வழி
பாட்டுக் கொரு மொழியா?
பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி
பலமொழி எதற்கடா? – தமிழா
பலமொழி எதற்கடா?
தமிழில் பேசு தமிழில் எழுது
தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத்
தமிழில் வழிபடுவாய்!
தமிழில் கல்வியைக் கற்பதே மேன்மை
தமிழில் பெயர் சூட்டு – பிள்ளைக்குத்
தமிழில் பெயர் சூட்டு!
அம்மா அப்பா அத்தை மாமா
அழகாய்ச் சொல்லிருக்க – தமிழா
ஆங்கிலச் சொல் லெதற்கு?
மம்மி டாடி ஆண்ட்டி அங்கிள்
மழலைகள் அழைப்பதுவா? – தமிழ்
மதிப்பை இழப்பதுவா?
Comments
Post a Comment