பூவுலகம் மகிழ்ச்சியின் எல்லை…..
-முனைவர். ப. பானுமதி
கேவலம் மரணத்திடம்
ஏன் அச்சம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாகப் பரிட்சித்துப் பார்.
இவை உடல்நலம்
குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள்
தலைமையாளர் திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும்
துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும் மரணப்
படுக்கையில் இருந்த போது,
“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்!
. . . . . . . . .
ஆலாலமுண்ட வனடி சரணென்ற மார்க்கண்டன் – தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன் – இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன் அரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்”
என்று காலனை நாலாயிரம் காதம் அகலுமாறு விரட்டுவான். இன்றைய இளைஞர்கள் பாரதியைப் போல, வாசுபாயைப் போல மரணத்தை மிரட்டாமல் தொலைவில் விரட்டாமல் இவர்களே சென்று காலனைத் தழுவிக் கொள்கிறார்கள்.
இரு நாள் முன்னர் மாணவி ஒருவர்
தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்து, விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்து, பல பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்று, ஒலிம்பிக்கு
விளையாட்டுப் போட்டியில் தேர்வு ஆகும் வரை முயற்சியும் உழைப்பும் கொண்ட
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் நட்பு என்கிறார்கள்.
அறிவும் திறமையும் நிறைந்த இது போன்ற
இளைய மன்பதை தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தான் பிறந்து வளர்ந்த
நாட்டிற்கும் தன்னை இவ்வுலகில் பிறப்பித்துச் சீராட்டி வளர்த்த
வீட்டிற்கும் கல்வியிலும் விளையாட்டிலும் பிற கலைகளிலும் அவரது வெற்றிக்கு
உறுதுணையாக இருந்த கல்வி நிலையங்களுக்கும் என்று பல்லோருக்கும் மிகப்
பெரிய இரண்டகத்தைச் செய்கின்றார்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறலாம்.
இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதன்
மூலமாக இவர்களுக்காகப் பல்வேறு வகையிலும் உதவிய அத்தனை பேரின் மனத்தையும்
இவர்களைப் பற்றி அவர்கள் கண்ட கனவுகளையும் அவர்களது நம்பிக்கையையும்
படுகொலை செய்கிறார்கள்.
இருபால் இளைஞர்கள் இப்படித் தற்கொலை
செய்து கொள்வதற்குக் கூறப்படும் காரணமும் பெரிதாக இருப்பதில்லை. வலுவான
காரணங்கள் அற்று இளைஞர்களின் தற்கொலை நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்த வண்ணமே
இருக்கின்றன.
உலகம் முழுவதும் தற்கொலை செய்து
கொள்பவர்கள் பெரும்பாலும் பதினைந்து அகவை முதல் முப்பது அகவைக்குள்
இருக்கும் இருபால் இளைஞர்களே என்கின்றது ஆய்வு அறிக்கை. இளைஞர்கள் இவ்வாறு
தற்கொலை செய்து கொள்வதற்குப் பல்வேறு காரணிகள் இருப்பினும் காதல் தோல்வி, கல்வித் தோல்வி, வேலையின்மை, வறுமை இவை நான்குமே முன்னணியில் இடம் பிடிக்கின்றன.
இந்தியாவில் மன நோயால் அன்றாடம் 400 பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும்,
இதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் உலக நலவாழ்வு மையத்தின் புள்ளியல்
விவர கணக்கெடுப்புக் கூறுகிறது. இவர்கள் மன நோயால் தற்கொலை செய்து
கொள்கின்றனர் என்று கூறினாலும் அந்த மன நோய்க்குக் காரணிகளாக அமைவன
மேற்சொன்ன நான்கில் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
தம் குழந்தைகளுடன் நட்புடன் அமர்ந்து
பேசி, அவர்களின் சிக்கல்களை அறிந்து, அவற்றைத் தீர்க்கும் வழி கூறி,
அவர்களிடம் மன முதிர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தாத
பெற்றோர்கள் தற்கொலைகளுக்கு முதற்காரணம் எனலாம்.
பணத்தை நோக்கிய ஓட்டத்தில் இருக்கின்ற
பெற்றோர்களுள் சிலர் தங்கள் வழித்தோன்றல் இறந்தபின் அந்த நினைவு நாளை
ஆதரவற்ற சிறார் ஆசிரமங்களைத் தேடிச் சென்று நிகழ்த்துகின்றனர். உணவு, உடை
என்று அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுத்து விட்டால் தம் கடமை முடிந்து
விட்டதாகப் பெற்றோர் சிலர் நினைக்கின்றனர்.
“சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு – அட
சின்னச் சின்ன அன்பில்தானே சீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதற்கு – அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்தப் பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை”
இந்த வைர வரிகளை விரும்புகிறவர்கள் பணத்தை மதிக்க மாட்டார்கள். பிறர் மூச்சுக்காக தாம் வாழ்வது பேரானந்தம் என்பதை உணர்வார்கள்.
ஒரு புறம் அவர்களுக்கென்று தனிப்பட்ட
உரிமை இல்லாமையும் மறுபுறம் கட்டுப்பாடற்ற உரிமையும் என்னும் இரு
வகையிலும் இளைஞர்கள் தள்ளாடிக்கொண்டு இருப்பதையும் இக்காலத்தில் காண
முடிகிறது. இவையெல்லாம் இளைய மன்பதையை மனநோயாளிகளாக மாற்றுவதைத் தவிர வேறு
என்ன செய்து விட முடியும்?
குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும்
அன்பும் அரவணைப்பும் இல்லாத உரிமை, வெறுமையைத்தான் உருவாக்கும். அந்த
வெறுமை காலப்போக்கில் சலிப்பாய் மாற்றம் பெற்று விடுகிறது. தனித்து
விடப்படும் இளைஞர்களில் சிலர் சலிப்பின் தொடக்க நிலையில் எப்போதும் கணினி,
கைப்பேசி என்னும் இயந்திரங்களுடன் இயங்கவும் இயந்திரமாகவே இயங்கவும்
தொடங்கி விடுகின்றனர். இந்த இயந்திர வாழ்க்கை அவர்களைத் திசை மாற்றி
விடுகின்றது.
அந்த மாய உலகில் கிடைக்கும் புதிய
புதிய நட்பில் மனம் மகிழ்கின்றனர். உண்மை இல்லாதவர்களே பெரும்பாலும்
உலாவும் வலையுலகில் காணும் நட்பில் தோல்வியைத் தழுவுகின்றனர். அதன்
முடிவில் மரணத்தைத் தழுவும் முடிவுக்கு வருகின்றனர். இரு நாளுக்கு முன்
தற்கொலை செய்து கொண்ட பெங்களூரைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவி
சீலாவின் தற்கொலைக்கு முகநூல் நட்பே காரணம். “லைக் போட்டதால் லைஃப் போனது”
என்னும் தலைப்பில் தினகரன் நாளிதழில் இந்நிகழ்வு வெளியாகியிருந்தது.
எத்தனை பெற்றோர் இதனைப் பார்த்திருப்பர் என்று தெரியவில்லை.
மதிப்பெண்களை முன்னிறுத்தும் கல்வி முறை, மதிப்பெண்களை
வாங்க வைப்பது மட்டுமே தம் கடமை என்று மதிப்பெண்களை நோக்கி மட்டுமே
மாணவர்களை நகர்த்தும் ஆசிரியர்கள் ஆகிய இவை இளைய மன்பதையின் தற்கொலைக்குப்
பின்புலமாக அமைந்திருக்கும் மிக முதன்மைக் காரணங்கள் என்பதை எவராலும்
மறுத்துக் கூற இயலாது. ஆனால் ஆசிரியர்கள் அவ்வாறு நடந்து கொள்ள கல்வி முறை, பணிபுரியும் கல்வி நிலையங்களின் நிருவாகம், பெற்றோர்கள் ஆகிய எல்லாம் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
ஆசிரியர்கள், ‘குழந்தைகளின் இரண்டாம்
பெற்றோர்’ என்பார்கள். இளைய மன்பதையின் பள்ளிப் பெற்றோர்களாகிய
ஆசிரியர்கள் ஆளுமையை வளர்க்க முயற்சி செய்தலோடு மாணவர்களிடம் நடத்தையில்
மாற்றம் ஏற்பட்டால் அவர்களுடன் அன்புடன் தனித்துப் பேசிக் சிக்கல்களை
அறிந்து முறையாக வழி வழிநடத்துதல் இவற்றுக்குப் பெரும் தீர்வாக அமையும்.
ஒவ்வொரு மாவட்டமும் இந்தக்
கணக்கெடுப்பை எடுத்து எந்தெந்த முறையில் எத்தனை பேர் தற்கொலை செய்து
கொண்டனர் என்னும் பட்டியலை வெளிப்படையாக இட்டு வருகின்றன. இதன் மூலமும்
தற்கொலை எண்ணம் இளைய மன்பதைக்கு மிகுதியாகிறதோ என்றும் அச்சம் கொள்ள
வேண்டியிருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்க்கும் இளைஞர்கள் இத்தனை பேர்
தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்கள். அது அப்படி ஒன்றும் கடினமானதாக
இருக்காது போலும்; ஆகவே அம்முறைகளில் எதேனும் ஒரு முறையில்
நாமும் முயலலாம் என்று நினைத்து விடுவார்களோ என்னும் அச்சமும் எழுவதைத்
தடுக்க இயலவில்லை. இந்தக் கணக்கெடுப்பும் புள்ளி விவரங்களும் உறுதியாகத்
தேவைதான் என்றபோதும் இவை வெளிப்படையாக வெளியிடுவது தேவையா என்றும்
சிந்திக்க வேண்டியுள்ளது.
எல்லாவற்றையும் கொண்டாடும் அல்லது நிகழ்த்தும் நாம் இதையும் நடத்துகிறோம். செப்டம்பர் 10ஆம் நாள் உலகத் தற்கொலை முயற்சி தடுப்பு நாளாக (World Suicide Prevention Day) நிகழ்த்தப்படுகிறது. இந்தநிகழ்வு நாளில் ஊர்வலம், பொதுக்கூட்டம் என்று பல்வகையிலும் விழிப்புணர்வை இளைய மன்பதைக்கு ஏற்படுத்தி வருகிறது.
தனிமனிதர்கள் பலர் சேர்ந்ததே ஒர்
அமைப்பு. ஆகவே எதற்கும் அமைப்புகளையே நம்பிக்கொண்டிராமல் ஒவ்வொரு தனி
மனிதரும்கூடத் தம் அக்கம் பக்கத்தில் இருக்கும் இளைஞர்களின் இயல்பில்
மாற்றம் தெரிந்தால் அவர்களைக் கண்காணிப்பது, அன்பு காட்டுவது, தகுந்த அறிவுரை வழங்குவது முதலிய முயற்சிகளின் மூலம் அவர்களின் மனச் சலிப்பைப் போக்கி மகிழ்வாக இருக்கச் செய்யலாம்.
இளைஞர்கள் தற்கொலை என்னும் இந்தச்
சிக்கலைப் பொருத்த வரை பல்முனைத் தாக்குதலே இதனைப் புறமோடச் செய்யும்
உத்தியாக இருக்கும். ஒரு கை ஓசையாக இல்லாமல் மன்பதையின் எல்லாப்
பக்கங்களில் இருந்தும் முயன்றால் இளைய மன்பதையைத் தற்கொலை என்னும்
பேரழிவில் இருந்து பாதுகாக்கலாம்.
Comments
Post a Comment