Thursday, January 27, 2011

New Thamizh Anthem: புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.


மலேசிய எழுத்தாளர் சங்கம் ஜனவரி 23ம் தேதி வெளியிட்டுள்ள
                            புதிய தமிழ் வாழ்த்துப்பாடல்.

http://voiceofthf.blogspot.com/2011/01/blog-post_27.html

பாட்டைக் கேட்டருள்வீர்!

-----------------------

நிலைபெறநீ வாழியவே!
ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மது
இசை: ஆர்.பி.எஸ்.ராஜூ
குரல்: துருவன், பாபு லோகநாதன்


காப்பியனை ஈன்றவளே!
     காப்பியங்கள் கண்டவளே!
   கலைவளர்த்த தமிழகத்தின்
     தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில்
     தனிப்பெருமை கொண்டவளே!
  தமிழரொடு புலம்பெயர்ந்து
     தரணியெங்கும் வாழ்பவளே!

எங்களெழில் மலைசியத்தில்
        சிங்கைதனில் ஈழமண்ணில்
   இலக்கியமாய் வழக்கியலாய்
        இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின்
        புத்தாக்கம் அத்தனைக்கும்
   பொருந்தியின்று மின்னுலகில்
        புரட்சிவலம் வருபவளே!

செவ்வியலின் இலக்கியங்கள்
        செழித்திருந்த பொற்காலம்
    சேர்த்துவைத்த செயுள்வளத்தில்
        செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி
        அறிவுயர்ந்த தற்காலம்
    அழகழகாய் உரைநடையும்
        ஆளுகின்ற புதியவளே!

குலங்கடந்து நெறிகடந்து
        நிலவரம்பின் தடைகடந்து
     கோமகளாய்த் தமிழர்மனம்
கொலுவிருக்கும் தமிழணங்கே!
       நிலவினுக்கே பெயர்ந்தாலும்
    நினதாட்சி தொடருமம்மா!
       நிறைகுறையாச் செம்மொழியே
           நிலைபெறநீ வாழியவே!

Tuesday, January 11, 2011

Eezham pote neelaavanan: ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன்

ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்த நீலாவணன் நினைவு நாள் இன்று

1574248567nee
கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள் கவிஞர் நீலாவணன் 31- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு – குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று “நீங்கள் நூற்றுக் கணக்கானவர்களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்கலாம். சிறுகதையை விட்டு விட்டுக் கவிதையையே எழுதுங்கள்” என்று அன்புக் கட்டளை இட்டார். அதனை ஏற்று நீலாவணன், ஏராளமான சிறந்த கவிதைகளையே எழுதிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் சிறுகதை எழுதுபவர்களிலும் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை எதிர்மாறாக உள்ளது.
1961ல், கல்முனைப் பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். அதன் தலைவராகப் பல வருடங்கள் பொறுப்பேற்று இப்பகுதியின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டார்.
கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுதாளர் சந்திப்புக்கள் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கத்தால் இப்பகுதியில் முதன்முதலாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற நீலாவணன் காலாக இருந்தார்.
அகில இலங்கை ரீதியாக, தினகரன் பத்திரிகை மூலம் (1962ல்) நடைபெற்ற இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, ‘மழைக்கை’ கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கம் நடாத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகவும், இலக்கிய நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ள பசுமை நினைவுகளாகவும் மிளிர்கின்றன. இவை யாவற்றுக்கும் முக்கிய ஆலோசகராகவும் நீலாவணன் விளங்கியதோடு அதற்காக பைசிக்கிள் ஓடி ஆதரவு திரட்டல் போன்ற உடல் உழைப்பு நல்குவதிலும் மிகுந்த உசாராகவே விளங்கினார்.
‘மழைக்கை’ கவிதை நாடகம் கிழக்கிலே (1963ல்) முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிகாலக் கதையைக் கருவாகக் கொண்ட இந்நாடகம் அறுசீர் விருத்தப் பாக்களினால் மிகவும் நயமான பேச்சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகம் ஆகும். இந் நாடகத்தில் மு. சடாட்சரம்- கர்ணன், நீலாவணன்- குந்திதேவி, மருதூர்க்கொத்தன்- கிருஷ்ணன், எம். ஏ. நுஃமான்- இந்திரப் பிராமணன், மருதூர்க்கனி- பிராமணன், கே. பீதாம்பரம்- இந்திரன் என்று பாத்திரமேற்று நடித்தமை குறிப்பிடத்தக்கது. ‘மழைக்கை’ 1964இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.
1966ல் ஜனாப் உஸ்மான் மேர்சா காட்டிய அன்பினால், அவரின் கிழக்குப் பதிப்பகத்தில் ‘பாடும் மீன்’ இதழை -நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு- அச்சிட்டும் அது வெளிவராமலே போயிற்று.
1967ல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து (தலைவர்- சண்முகம் சிவலிங்கம், செயலாளர்- மு. சடாட்சரன், கௌரவ ஆசிரியர்- நீலாவணன், காப்பாளர்- கே. ஆர். அருளையா B.A) ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடாத்தினார். அது இரண்டு இதழ்களே வந்தாலும் அத்ற்கு இலக்கிய உலகில் தனி இடம் உண்டு.
11- 01- 1975ல் இயற்கை எய்தினார்.
1976ல் இவரது ‘வழி’ என்னும் முதலாவது கவிதை நூல் வெளிவந்தது. இது இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது.
1982ல் நீலாவணனது ‘வேளாண்மை’க் காவியம் நூலுருவாக வெளிவந்துள்ளது. 2001ல் ‘ஒத்திகை’ (கவிதைத் தொகுப்பு) வெளிவந்துள்ளது.
இவரது துணைவியார் திருமதி அளகேஸ்வரி சின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர். இவரின் சிரேஷ்ட புதல்வன் சி. எழில்வேந்தன் தற்போது சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப் பணிப்பாளராகக் கடமை புரிகிறார்.
-மு. ச. நவீனன்
—————————————-
06.07.98 முதல் 12.07.98 வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் நிகழ்வின் ஆறாம் நாள் செங்கதிரோன் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்…
1948இல் எழுதத் தொடங்கிய நீலாவணனை அவர் கே. சி. நீலாவணன் எனும் பெயரில் ‘சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய ‘பிராயச்சித்தம்’ சிறுகதையே இலக்கிய உலகிற்கு எழுத்தாளனாக அறிமுகப்படுத்திற்று. இவரது முதற்கவிதை 1948ம் ஆண்டிலே தினகரன் பாலர் கழகத்தில் பிரசுரமாகி இருந்தாலும் கூட கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953இல் சுதந்திரனில் வெளிவந்த ‘ஓடி வருவதென்னேரமோ?’ எனும் கவிதை மூலமே கவிஞராக அறிமுகம் ஆனார். இவரது இறுதிக் கவிதை ‘பொய்மை பொசுங்கிற்று’ என்பதாகும்.
கே. சி. நீலாவணன், நீலாவண்ணன், நீலா சின்னத்துரை, மானாபரணன், இராமபாணம், எழில்காந்தன், சின்னான் கவிராயர், எறிகுண்டுக் கவிராயர், கொழுவு துறட்டி, அமாச்சி ஆறுமுகம், வேதாந்தன், சங்கு சக்கரன் எனும் புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம் ஆகிய வடிவங்களில் ஆக்கங்களைப் படைத்தாரெனினும் கவிதைத் துறையே அவரைப் புகழ்பூக்க வைத்தது என்பதாலும், தனது ஊரான பெரிய நீலாவணை மீது கொண்ட பற்றினால் சூடிக் கொண்ட நீலாவணன் எனும் பெயரே நிலைத்துவிட்டது என்பதாலும் எழுத்துலகில் கவிஞர் நீலாவணன் என்றே தடம்பதித்தார்.
1960களில் ஈழத்து இலக்கிய முகாமில் முற்போக்கு என்றும் பிற்போக்கு என்றும் சொற்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தனது இலக்கிய கொள்கை நற்போக்கு என்று நாடிய அணி சேராத் தனித்துவக் கவிஞன் நீலாவணன்.
நீலாவணன் கவிதைகள் ஓசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இன்பம் தரும் லயமும், தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை அவர் ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவன் புகளேந்தியின் பெயர் தமிழுலகில் ‘வெண்பாவிற்புகழேந்தி’ என்று நிலைத்துவிட்டது போல் – ஈழத்து இலக்கிய உலகில் ‘வெண்பாவிற் பெரியதம்பி’ என புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல் ‘ சந்தக்கவிதைக்கு நீலாவணன்’ என்ற சங்கதியும் எழுத்துலகில் நின்று நிலைக்கும்.
#வேகமும், திவிரமும், முன்கோபமும் இவர் இயல்பான குணங்களெனினும் மனிதநேயப்பண்பும், நகைச்சுவை உணர்வும் நீலாவணனிடம் நிறைந்திருந்தன.
#மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை.
மட்டக்களப்பின் கவிதைப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை இம்மண்ணின் நாட்டார் பாடல்களே. இங்கு மட்டக்களப்பு பிரதேசம் எனக் கூறப்படுவது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக் குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்டு இலங்கிய நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பில் காலங்காலமாக எழுதா இலக்கியமாகத் திகழ்ந்த நாட்டார் பாடல்கள் (கிராமியக் கவிகள்) மட்டக்களப்பின் பேச்சுமொழியில் இம்மண்ணின் மண்வாசனை கமழும் வகையிலேயே புனையப்பட்டவை. இப்பாடல்களெல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே. எனினும் செந்நெறி இலக்கியங்கள் என வரும் போது விபுலானந்த அடிகளார் மற்றும் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் கவிதைப் பாரம்பரியத்தின் அடியொற்றி மட்டக்களப்பு மண் ஆனது பல கவிஞர்களை ஈன்றெடுத்துள்ள போதிலும் இவர்களில் எவருமே -கவிஞர் நீலாவணனைத் தவிர- ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும் அம்மக்களின் வஞ்சகமில்லாத வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடித்துத் தரவில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் ‘வேளாண்மை’க் காவியம்.
1960களில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தைச் ஸ்தாபித்து வழி நடாத்தியதின் மூலம் கல்முனைப் பிரதேசத்திலே எழுத்தாளர் பரம்பரையொன்றை நீலாவணன் உருவாக்கினார். மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி, அன்பு முகையதீன், மு. சடாட்சரன், கல்முனைப் பூபால், மருதூர்வாணன், பாலமுனை பாறூக், எம். ஏ. நுஃமான், முல்லைவீரக்குட்டி, கனகசூரியம், சத்தியநாதன், நோ. மணிவாசகன், ஆனந்தன் என்று ஓர் இலக்கியப் பட்டாளமே அவரின் அரவணைப்பில் உருவானது. கல்முனையிலே, அவரின் இலக்கியச் சகாக்களாக சண்முகம் சிவலிங்லம், பாண்டியூரன், ஜீவா ஜீவரத்தினம், பஸீல் காரியப்பர், ஈழமேகம் பக்கீர்தம்பி ஆகியோர் விளங்கினர். இலங்கையின் எந்தவொரு தனிப்பிரதேசத்திலும் கல்முனைப் பிரதேசத்தைப் பால் அதிக எண்ணிக்கையான இலக்கியவாதிகள் இருந்ததில்லை. இவ்விலக்கியவாதிகள் அனைவரும் கவிஞர்கள் என்பது இன்னுமொரு சிறப்பு. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணனே.
நீலாவணனுடன் நெருக்கமாயிருந்த ஏனைய சமகால இலக்கிய நண்பர்களாக எஸ். பொன்னுத்துரை, இளம்பிறை எம். ஏ. றஃமான், அண்ணல், இலங்கையர்கோன், ராஜபாரதி, மண்டூர் சோமசுந்தரப்பிள்ளை, வ. அ. இராசரத்தினம், கனக செந்திநாதன், ஏ. ஜே. கனகரத்னா, மஹாகவி ஆகியோர் இருந்துள்ளனர். இவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்போராக கல்முனையிலே டாக்டர் எம். முருகேசபிள்ளை அவர்களும், கே. ஆர். அருளையா B. A. அவர்களும் திகழ்ந்துள்ளனர். இவரது படைப்புகளுக்குக் களம் கொடுத்த பத்திரிகையாளர்களில் சுதந்திரன் எஸ். டி. சிவநாயகம், தினகரன் ஆர். சிவகுருநாதன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் எப். எக். ஸி. நடராசா, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் ஆகியோர் இவரது எழுத்துக்களையிட்டு பெருமிதம் கொண்ட மூத்த தலைமுறை அறிஞர்களாவர்.
நீலாவணன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர் முறையாக வெளிப்படுத்தப் படவில்லை என்ற விடயம் மிகவும் விசனிக்கத்தக்கது. பல்கலைக்கழகப் பின்புலத்தில் பட்டம் என்ற அங்குசத்தை வைத்துக் கொண்டு ஈழத்து இலக்கிய உலகின் விமர்சனத் துறையை ஒரு காலத்தில் ஆக்கிரமித்துக் கொண்ட பேராசிரியர்களும் அவர்களது மாணவ சகாக்களும் தாங்கள் வரித்துக் கொண்ட கலை, இலக்கிய, அரசியல் கோட்பாட்டு முகாம்களுக்குள் முடங்காதவர்களை ஈழத்து இலக்கிய உலகில் இருட்டடிப்புச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டவர்களுள் கவிஞர் நீலாவணன்ய்ம் ஒருவர். எனினும் நீலாவணன் மறைவுக்குப் பின் இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். அந்த வகையில் நீலாவணன் மறைவிற்குப் பின் கலாநிதி சி. மௌனகுரு எழுதிய “கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்” என்ற நீலாவணன் பற்றிய நூல் முற்குறிப்பிட்ட பேராசிரியர்கள் விட்ட பிழைக்கு பின்னால் வந்த மாணவ சகாக்கள் தேடிய பிரயச்சித்தம் போலும். எனினும் நீலாவணன் உயிர்வாழ்ந்த காலத்திலேயே டொமினிக் ஜீவா அவர்களின் ‘மல்லிகை’ மே 1970 இதழில் நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டதை பாராட்டாமல் இருக்க முடியாது. இவரைப் பற்றிய குறிப்பை சி. பி. சத்தியநாதன் எழுதியிருந்தார்.
நீலாவணன் நூல்கள்
நூல்: வழி
ஆசிரியர்: நீலாவணன்
முதற்பதிப்பு: மே,1976
வெளியீடும் உரிமையும்: திருமதி. நீலாவணன், பெரிய நீலாவணை, கல்முனை.
அட்டை: எஸ். கே. சௌந்தராஜன் (சௌ)
அச்சு: றெயின்போ பிரிண்டர்ஸ், 231, ஆதிரிப் பள்ளித் தெரு,
கொழும்பு- 13
நூல்: வேளாண்மை (குறுங்காவியம்)
ஆசிரியர்: நீலாவணன்
முதற்பதிப்பு: 1982 செப்டெம்பர்
அசுப்பதிவு: அமுதா அச்சகம், மூதூர்
வெளியீடு: தங்கம் வெளியீடு, மூதூர்.
அட்டைப்படம்: நிர்மல்
உரிமை: திருமதி. நீலாவணன்
நூல்: ஒத்திகை- நீலாவணன் கவிதைகள்
முதற்பதிப்பு: மே 31, 2001
நூல் ஆசிரியர்: நீலாவணன்
பதிப்புரிமை: எஸ். எழில்வேந்தன்
வெளியீடு: நன்னூல் பதிப்பகம், 48/3, புனித மரியாள் வீதி, கொழும்பு- 15, இலங்கை. தொலைபேசி- 526495
E-mail: seventhan@yahoo.com
அச்சிடுபவர்: யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், கொழும்பு 13.
நீலாவணன் பற்றிய நூல்கள்
நூல்: கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்
ஆசிரியர்: கலாநிதி சி. மௌனகுரு
முதற் பதிப்பு: மார்ச் 1994
வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை- 600002
நூல்: நீலாவணன்- எஸ். பொ. நினைவுகள்
ஆசிரியர்: எஸ். பொ.
வெளியீடு: காலம் (கனடா) வெளியீட்டுடன் இணைந்து மித்ர வெளியீடு, 375-10, ஆற்காடு சாலை, சென்னை- 600024, இந்தியா
முதற்பதிப்பு: செப்ரெம்பர் 1994. உரிமைப் பதிவு
அமைப்பு: இளம்பிறை எம். ஏ. ரஹ்மான்.
}

Monday, January 3, 2011

Ilakkuvanar centenary poems: இலக்குவனார் நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதைகள்


இலக்குவனார் நூற்றாண்டு விழா

கவியரங்கக் கவிதைகள்

natpu
இளவரசு அமிழ்தன்          

“தொல்காப்பியமும் திருக்குறளின் படி நடந்தார் இலக்குவனார்
இறுதிவரை தமிழ் மூச்சென்று வாழ்ந்தார்”
கவிஞர் குமாரசாமி  :
இலக்குவ னார்தமிழ் மேகம் – இவர்
எந்தமிழ் மழையாலே தீர்த்தார் தாகம்
இலக்(கு)கியவர் பெயரிலும் உண்டு – தமிழ்
எங்குமே ஒளிவீச இசைத்தவர் அன்று
தமிழாலே வாழ்ந்தவர் பல்லோர் – இவர்
தமிழோடு வாழவே சிறைசென்ற நல்லார் !
தமிழையே அகமாக்கிக் கொண்டார் – இன்பத்
தமிழன்றி இவர்வேறு சுகமென்ன கண்டார்?
    
கவிஞர் வி.செ. கந்தசாமி  :
எம்மொழி செம்மொழி ஏற்றமிகு மொழி
என்றெமக் குணர்த்தியவர்
அம்மொழி தன்னை இகழ்ந்த தருக்கரை
அழித்திட ஆர்த்தவராம்
காப்போமென மொழி என்றேயுரைத்துக்
களம்பல கண்டவராம்
மீட்போம் இழந்த புகழை என்றே
மேன்மை கொண்டவராம்
ஒல்காப் புகழ்தொல் காப்பியத் திற்கே
உரையும் கண்டவராம்
தொல்லுல கெல்லாம் அந்நூல் பரவிடத்
தொகுத்தனர் ஆங்கிலத்தில்
இது மரபுக் கவிதை வரிசையில் அசையை இசையோடு பாடினார் என மறைமலையனார் பாராட்டினார்.
கவிஞர் குமரி அமுதன் :
“இலக்கியச் செழுமை கொண்ட
எந்தமிழ் மொழியின் மைந்தர்
இலக்குவனார்தம் தொண்டு
இன்று நாம் போற்றல் நன்று
இலக்கிய உணர்வை ஊட்ட
இலக்கியம் என்றோர் ஏட்டை
இலக்குவனார் தாம் அன்றே
இன்புறத் தந்தார் நன்றே”
புலவர் இளஞ்சேரல்  :
“ஒல்காப் பெரும்புகழ் தொல்காப் பியத்தை
ஆங்கில மொழியில் ஆக்கம் செய்தவர்
அறிஞர் அண்ணா அன்பிற் குரியவர்
குவலயம் போற்றும் குறள்நெறி தழைக்க
முறையாய் குறள்நெறி முனைந்து நடத்தினார்”
இந்தி எதிர்ப்பிலே இருட்சிறை சென்றவன்
ஆர்க்கும் கடல் போல் யார்க்கும் அடங்கா
போர்க்குணம் கொண்ட புலிநிகர் மறவன்”
கவிஞர் வெற்றி வேந்தன்  :
இலக்குவனார் எனும் பெயரைக் கேட்டுவிட்டால் போதும்
இந்நாட்டில் தமிழ்ப்பகைவர் நடுநடுங்கிப் போவார்!
இருபதாம்நூற் றாண்டிலிவர் இணையற்ற புலவர்
இமயம்போல் உயர்ந்து நின்ற இனமான மறவர்
இருளகற்ற உதித்தெழுந்த ஆதவனைப் போல்
ஏற்றமுடன் தமிழுக்குத் தொண்டு செய்த ஏந்தல்!
திருக்குறளின் நெறியதனில் மக்களெல்லாம் வாழ்ந்து
திக்கெட்டும் தமிழ்மொழியை வளமாக்கப் பகன்றார்!
அருந்தமிழின் வரலாற்றைப் புவியறியச் செய்தார்
அயல்மொழியின் ஆதிக்கம் தனையெதிர்த்து வாழ்ந்தார்!
கவிஞர் அருள்நம்பி :
இலக்குவனார் என்றாலே போதும் நெஞ்சில்
இலக்கணமும் இலக்கியமும் ஒன்றாய் தோன்றித்
தலைக்கணமே இல்லாத அறிவை நல்கும்
தன்னலமே இல்லாத அன்பை நல்கும்
உலைக்களத்தில் கொழுந்துவிடும் தீயைப் போல
ஒண்டமிழின் நல்லுணர்வை உளத்தில் நல்கும்
அலைவீசும் கடல்போலே ஒவ்வொர் நாளும்
அருந்தமிழில் புதுப்பொருளைத் தேடச் சொல்லும்!
கவிதாயினி திலகலக்ஷ்மி :
பேராசிரியராய் நன் முறையில் பணியாற்றி
ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதியவர்
உயர்தனிச் செம்மொழி தமிழுக்காக
அயர்விலாது நாளும் உழைத்தார்
இந்தியை எதிர்த்ததனால் சிறையில்
இன்னல் பலவும் ஏற்றவர்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றே
எங்கும் தமிழ் பரவிட நினைத்தவர்
வெண்பாவூர் செ. சுந்தரம் :
“நூற்றாண்டு நாயகர்;  நுண்மாண் நுழை புலத்தார்
போற்றீண்டு அன்னார் புகழ்நெறியை – ஏற்றுவதே
செந்தமிழ்க்கு நாமிங்கே செய்யும் சிறப்(பு) அவர்தான்
நந்தமிழ் நாட்டின் நலம்
இலக்கணந்தான்; சங்க இலக்கியந்தான்; நம்மின்
இலக்குவனார் செம்மொழிதான்; காட்டின் – மலைக்குகைவாழ்
சிங்கத்தின் சீற்றந்தான்; செந்தமிழ்க்கோர் தீங்கென்றால்
அங்கமெலாம் கக்கும் அனல்”
கவிஞர் கா. முருகையன் :
இலக்குவனார் எனும் பெயரைச் சொல்லும் போதே
இன உணர்வும் மொழி உணர்ஹவம் எழுமே நெஞ்சில்!
தலை முறையில் தமிழுக்கும் தமிழ ருக்கும்
தம் வாழ்நாள் முழுமைக்கும் உழைத்து நின்றார்!
சிலபேர் போல் ஒருபோதும் தமிழைச் சொல்லிச்
சில்லரைகள் இவர் சேர்த்த தில்லை! ஆனால்
மலையெனவே எதிர்ப்புகளுக் கஞ்சி டாமல்
மாத்தமிழைக் காத்திடவே சிறைக்கும் சென்றார்.
பாவலர் மயிலை வண்ணதாசன் :
தனித் தமிழ் தழைத்திட நாளும் உழைத்தார்
தன் தாயை விட மேலாய் மொழி காத்தார்
குறள் நெறி பாதையில் அவர் நடந்தார் – தமிழை
குறை சொல்லி வாழ்வோரை உடன் கண்டித்தார்.
அவர் அஞ்சி ஓடி மறைந்ததும் இல்லை – பிறருக்கு
அடிமையாய் என்றும் வாழ்ந்ததும் இல்லை – தமிழ்
கடல் கடநது வாழ்ந்திட செயல்புரிந்தார் – அவர்
காலம் தன்னில் களிப்புற்று வெற்றிகண்டார்.


Comments