Ilakkuvanar centenary poems: இலக்குவனார் நூற்றாண்டு விழா கவியரங்கக் கவிதைகள்


இலக்குவனார் நூற்றாண்டு விழா

கவியரங்கக் கவிதைகள்

natpu
இளவரசு அமிழ்தன்          

“தொல்காப்பியமும் திருக்குறளின் படி நடந்தார் இலக்குவனார்
இறுதிவரை தமிழ் மூச்சென்று வாழ்ந்தார்”
கவிஞர் குமாரசாமி  :
இலக்குவ னார்தமிழ் மேகம் – இவர்
எந்தமிழ் மழையாலே தீர்த்தார் தாகம்
இலக்(கு)கியவர் பெயரிலும் உண்டு – தமிழ்
எங்குமே ஒளிவீச இசைத்தவர் அன்று
தமிழாலே வாழ்ந்தவர் பல்லோர் – இவர்
தமிழோடு வாழவே சிறைசென்ற நல்லார் !
தமிழையே அகமாக்கிக் கொண்டார் – இன்பத்
தமிழன்றி இவர்வேறு சுகமென்ன கண்டார்?
    
கவிஞர் வி.செ. கந்தசாமி  :
எம்மொழி செம்மொழி ஏற்றமிகு மொழி
என்றெமக் குணர்த்தியவர்
அம்மொழி தன்னை இகழ்ந்த தருக்கரை
அழித்திட ஆர்த்தவராம்
காப்போமென மொழி என்றேயுரைத்துக்
களம்பல கண்டவராம்
மீட்போம் இழந்த புகழை என்றே
மேன்மை கொண்டவராம்
ஒல்காப் புகழ்தொல் காப்பியத் திற்கே
உரையும் கண்டவராம்
தொல்லுல கெல்லாம் அந்நூல் பரவிடத்
தொகுத்தனர் ஆங்கிலத்தில்
இது மரபுக் கவிதை வரிசையில் அசையை இசையோடு பாடினார் என மறைமலையனார் பாராட்டினார்.
கவிஞர் குமரி அமுதன் :
“இலக்கியச் செழுமை கொண்ட
எந்தமிழ் மொழியின் மைந்தர்
இலக்குவனார்தம் தொண்டு
இன்று நாம் போற்றல் நன்று
இலக்கிய உணர்வை ஊட்ட
இலக்கியம் என்றோர் ஏட்டை
இலக்குவனார் தாம் அன்றே
இன்புறத் தந்தார் நன்றே”
புலவர் இளஞ்சேரல்  :
“ஒல்காப் பெரும்புகழ் தொல்காப் பியத்தை
ஆங்கில மொழியில் ஆக்கம் செய்தவர்
அறிஞர் அண்ணா அன்பிற் குரியவர்
குவலயம் போற்றும் குறள்நெறி தழைக்க
முறையாய் குறள்நெறி முனைந்து நடத்தினார்”
இந்தி எதிர்ப்பிலே இருட்சிறை சென்றவன்
ஆர்க்கும் கடல் போல் யார்க்கும் அடங்கா
போர்க்குணம் கொண்ட புலிநிகர் மறவன்”
கவிஞர் வெற்றி வேந்தன்  :
இலக்குவனார் எனும் பெயரைக் கேட்டுவிட்டால் போதும்
இந்நாட்டில் தமிழ்ப்பகைவர் நடுநடுங்கிப் போவார்!
இருபதாம்நூற் றாண்டிலிவர் இணையற்ற புலவர்
இமயம்போல் உயர்ந்து நின்ற இனமான மறவர்
இருளகற்ற உதித்தெழுந்த ஆதவனைப் போல்
ஏற்றமுடன் தமிழுக்குத் தொண்டு செய்த ஏந்தல்!
திருக்குறளின் நெறியதனில் மக்களெல்லாம் வாழ்ந்து
திக்கெட்டும் தமிழ்மொழியை வளமாக்கப் பகன்றார்!
அருந்தமிழின் வரலாற்றைப் புவியறியச் செய்தார்
அயல்மொழியின் ஆதிக்கம் தனையெதிர்த்து வாழ்ந்தார்!
கவிஞர் அருள்நம்பி :
இலக்குவனார் என்றாலே போதும் நெஞ்சில்
இலக்கணமும் இலக்கியமும் ஒன்றாய் தோன்றித்
தலைக்கணமே இல்லாத அறிவை நல்கும்
தன்னலமே இல்லாத அன்பை நல்கும்
உலைக்களத்தில் கொழுந்துவிடும் தீயைப் போல
ஒண்டமிழின் நல்லுணர்வை உளத்தில் நல்கும்
அலைவீசும் கடல்போலே ஒவ்வொர் நாளும்
அருந்தமிழில் புதுப்பொருளைத் தேடச் சொல்லும்!
கவிதாயினி திலகலக்ஷ்மி :
பேராசிரியராய் நன் முறையில் பணியாற்றி
ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல எழுதியவர்
உயர்தனிச் செம்மொழி தமிழுக்காக
அயர்விலாது நாளும் உழைத்தார்
இந்தியை எதிர்த்ததனால் சிறையில்
இன்னல் பலவும் ஏற்றவர்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றே
எங்கும் தமிழ் பரவிட நினைத்தவர்
வெண்பாவூர் செ. சுந்தரம் :
“நூற்றாண்டு நாயகர்;  நுண்மாண் நுழை புலத்தார்
போற்றீண்டு அன்னார் புகழ்நெறியை – ஏற்றுவதே
செந்தமிழ்க்கு நாமிங்கே செய்யும் சிறப்(பு) அவர்தான்
நந்தமிழ் நாட்டின் நலம்
இலக்கணந்தான்; சங்க இலக்கியந்தான்; நம்மின்
இலக்குவனார் செம்மொழிதான்; காட்டின் – மலைக்குகைவாழ்
சிங்கத்தின் சீற்றந்தான்; செந்தமிழ்க்கோர் தீங்கென்றால்
அங்கமெலாம் கக்கும் அனல்”
கவிஞர் கா. முருகையன் :
இலக்குவனார் எனும் பெயரைச் சொல்லும் போதே
இன உணர்வும் மொழி உணர்ஹவம் எழுமே நெஞ்சில்!
தலை முறையில் தமிழுக்கும் தமிழ ருக்கும்
தம் வாழ்நாள் முழுமைக்கும் உழைத்து நின்றார்!
சிலபேர் போல் ஒருபோதும் தமிழைச் சொல்லிச்
சில்லரைகள் இவர் சேர்த்த தில்லை! ஆனால்
மலையெனவே எதிர்ப்புகளுக் கஞ்சி டாமல்
மாத்தமிழைக் காத்திடவே சிறைக்கும் சென்றார்.
பாவலர் மயிலை வண்ணதாசன் :
தனித் தமிழ் தழைத்திட நாளும் உழைத்தார்
தன் தாயை விட மேலாய் மொழி காத்தார்
குறள் நெறி பாதையில் அவர் நடந்தார் – தமிழை
குறை சொல்லி வாழ்வோரை உடன் கண்டித்தார்.
அவர் அஞ்சி ஓடி மறைந்ததும் இல்லை – பிறருக்கு
அடிமையாய் என்றும் வாழ்ந்ததும் இல்லை – தமிழ்
கடல் கடநது வாழ்ந்திட செயல்புரிந்தார் – அவர்
காலம் தன்னில் களிப்புற்று வெற்றிகண்டார்.


Comments

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்