Saturday, June 29, 2013

தமிழும் சைவமும்

தமிழும் சைவமும்

எல்லாம்வல்ல இறைவனுக்குப் பழைய தமிழ் நூல்களிலும் வட நூல்களிலும் வழங்கிய முக்கண்ணான், உருத்திரன் முதலான பல பெயர்கள் இருக்க, அவற்றுள் ஒன்றான "சிவன்' என்னும் பெயர் மட்டும் ஏனைப்பெயர்கள் எல்லாவற்றினுஞ் சிறந்ததாக எடுக்கப்பட்டு முதல்வனுக்கு வழங்கலானதும், அப்பெயரின் வழியே முழுமுதற் கடவுளை வழிபடுந் தமிழரது கொள்கை அல்லது மதம் "சைவம்' எனப் பெயர் பெறலானதும் மிக்க பழமையுடைய தொன்றென்பதும் மற்றைப் பண்டை மக்களிற் பலர் அச்சொல்லையே இறைவனுக்குச் சிறந்த பெயராக வைத்து வழங்கியவாற்றால் அறியப்படுகின்றது.
÷ஏபிரேயர் தாம் வணங்கிப்போந்த கடவுளைச் "சிகோவா' என்றே அழைத்தனர். உரோமர் அதனைச் "சூபிதர்' என்றே அழைத்தனர்; இவ்வயலவர் வழங்கிய அச்சொற்களெல்லாஞ் "சிவ' என்னுஞ் சொல்லின் திரிபேயன்றி வேறல்ல. மேல்நாடுகளில் அஞ்ஞான்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரின் வாயிலாக "சிவ' என்னுஞ்சொல் அயல்நாட்டு நாகரிக மக்களிடையே பரவினாற்போற், சிவபிரானைக் குறிக்கும் ஏனைப் பெயர்ச்சொற்கள் அம் மக்களிடையே பரவக் காணாமையின், வடக்கிருந்த பழந்தமிழர் வழங்கிய "சிவ' என்னுஞ் சொல்லே ஏனையெல்லாவற்றினும் மிக்க பழமையுடைத் தென்பது தெளியப்படா நிற்கும். அதனாற்றான், "சிவ' என்னுஞ்சொல் தமிழர் வணங்கிய முழுமுதற் கடவுளுக்குச் சாலச்சிறப்புப் பெயராகவும், அவரது மதம் அச்சொல்லின் வழியே "சைவம்' என்னுஞ் சிறப்புப் பெயருடையதாகவும் வழங்கி, நிலைபெறலாயினவென்று ஓர்ந்து கொள்க.
(மறைமலையடிகளின் "தமிழர் மதம்' நூலிலிருந்து...)

Sunday, June 23, 2013

'திருப்புகழ்' தமிழ்!

"திருப்புகழ்' தமிழ்!

அருணகிரிநாதர் அருளிய அருமைத் திருப்புகழில் "தமிழ்' பற்றிய பெருமைக்குரிய கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழில், ஒரு மலரின் வடிவம் போன்றது இயற்றமிழ்; வண்ணம் போன்றது இசைத்தமிழ்; வாசம் போன்றது நாடகத் தமிழ். மூன்று பண்புகளும் ஒன்றாய்க் கலந்து அதே சமயம் தனித்தனிச் சிறப்புடன் திகழ்கிறது திருப்புகழ்.
""இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறி'' என்று திருவண்ணாமலை திருப்புகழில் வருகிறது.
செம்மையான தமிழ்; அதாவது தூய்மையான தமிழ்.
"அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது.
மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. ""தன் தமிழின் மிகுநேய முருகேசா'' என்று சிறுவாபுரி திருப்புகழிலும் ""தண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே'' என்று பழனி திருப்புகழிலும் வருகின்றன.
தமிழ்ச் சொற்கள் அமிழ்தினும் இனியன. பொருள் வளமும் அழகு நலமும் பொலிவன. அருணைவள்ளல் நிம்பபுரம் திருப்புகழில் ""வந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதமம் அருள்வாயே'' என்று முருகனிடம் வேண்டுகிறார்.
தமிழ் மொழியை ஆய்ந்து மெய்மை காணும் வழியை, அதன் நுட்பத்தை சங்கத்தில் இருந்த புலவர்களுக்கு முருகன் விளக்கி அருளினார். "கலையுணர் புலவன்' என்றே முருகனுக்கு ஒரு பெயருண்டு.
தெரிதமிழ் - ஆய்ந்து காணும் தமிழ். ""தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே'' என்று சிதம்பரம் திருப்புகழில் வருவது காண்க.
மகிழ்சியினால் ஆர்த்துப் பாடும் இசைப்பாட்டை "தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே'' என்று அருணகிரிநாதர் பொதுத் திருப்புகழில் கூறுகிறார். காவடி தூக்கி துள்ளி ஆடும் பக்தர்கள் பாடும் நொண்டிச்சிந்து, கண்ணிகள் "தெள்ளுதமிழ்' எனப்படும்.
ஆதி சிவன் பெற்ற தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ் மொழிகளில் முற்பட்டது; முதன்மையானது ""முந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி'' என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.
தித்திக்கும் தமிழ் - இன்பத்தமிழ், இனிய தமிழ் எனப்படும். பொதியமலை முனிவனின் மனம் நனிமகிழ, அவர் புகழ, செவி குளிர இனிய தமிழை குமரன் பேசுகிறான்.
""சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே''
தமிழைப் பயில்கின்றபோது சொற்களின் பொருள்கள் நயனங்கள் முன் சுந்தரக் காட்சியாய்த் தெரிகின்றன. எனவே, சித்திரத் தமிழ் என்றருளினார்.
வளைந்தும், சுழிந்தும், நீட்டியும், சுவையுணர்வுடன், கலையுணர்வுடன் எழுத்துகள் அமைந்த தமிழ்! எழுத்தழகு, சொல்லழகு, கருத்தழகுடன் இதயம் கவரும் உதய ஒளித்தமிழ்!
""செஞ்சொல் சேர் சித்ரத்தமிழில் உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ?'' என்று குடந்தைத் திருப்புகழில் சந்தக்கவிமணி சாற்றுகிறார்.
ஞானம்பெற மிக எளிதான வழி ஒன்று உண்டு. அது நம் தாய்மொழியை மனம் படிந்து பயில்வதுதான். தெளிந்த மெய்ப்பொருள்களைக் கொண்ட தமிழ் ஞானத்தமிழ் ஆகும்.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் தமிழ் நாவாரப்பாடும் ஞானத்தமிழ். பூவாரம் (பூமாலை) வாடிவிடும்; பாவாரம் (பாமாலை) என்றும் பட்டொளி வீசி தகதக எனப் பளிச்சிடும். ""சேனக்குரு கூடலில் அன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து'' என்று சீர்காழி திருப்புகழில் வருகிறது. இவ்வாறு பலவகைத் தமிழ்களைப் பாடிப் பரவியுள்ள அருணகிரிநாதரை என்றென்றும் (குறிப்பாக இன்று) நினைவுகூர்வது சாலப்பொருந்தும்.
இன்று : அருணகிரிநாதர் (ஆனி-மூலம்) குருபூசை

Sunday, June 9, 2013

தள்ளியே நில்லுங்கள்... - முத்தொள்ளாயிரப் பாடல்

தள்ளியே நில்லுங்கள்...

இக்காலத்துப் பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதை ஒரு கலையாகவே கற்றுள்ளனர். மேலும், "என் மகன் பத்து வேலைகளைப் பத்து விரல்களால் செய்வான்' என்று பாராட்டிப் பேசுவதைப் பல வீடுகளில் கேட்கலாம். சங்ககாலத் தாய், போருக்குச் சென்ற தன் மகனைப் பற்றிப் பெருமிதத்தடன் பேசும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. இவை எல்லாம் ஆறறிவு படைத்த மனித குலத்தோரின் திறமைகள். ஆனால், நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அப்படி ஓர் அற்புதமான ஆற்றலைக் கொண்டது சோழ மன்னன் கிள்ளியின் பட்டத்து யானை. அந்த யானை அப்படி என்ன செய்ததாம்?
சோழனுக்கு ஒரு குணமுண்டு. போர் செய்யத் தொடங்கிவிட்டால், வடக்கு, தெற்கு என்று அனைத்துத் திசைகளிலும் உள்ள இடங்களை எல்லாம் வென்ற பின்னரே ஊர் திரும்புவான். அவனது வெற்றியில் பட்டத்து யானையின் பங்கு என்ன தெரியுமா? போராற்றலும், பேராற்றலும் கொண்ட அந்த யானை, ஒரு காலால் கச்சியம்பதி என்னும் காஞ்சியை மிதிக்கிறது. பின்னர் அடுத்த காலை உயரே தூக்குகிறது. அது கீழே இறங்கும்போது வடக்கே உள்ள நீர்வளம் மிக்க உஜ்ஜயினி (உஞ்சை) நகரம் நசுங்கி அழிகிறது.
பிறகு, அதன் சீற்றம் தென்னிலங்கைத் தீவை நோக்கித் திரும்புகிறது. மூன்றாவது காலால் ஈழம் மிதிபடுகிறது. அதற்குள் போர் முடிந்து விடுகிறது. எதிர்ப்பதற்கு யாரும் இல்லை; மன்னன் ஊர் திரும்புகிறான் என்றவுடன், வேறு வழியின்றி யானையும் ஊர் திரும்புகிறது. எனவே, கிள்ளியின் களிறு தனது நான்காவது காலை அவனது தலைநகரான உறையூரில் ஊன்றி உள்ளே நுழைகிறதாம்!
அடடா! எப்படிப்பட்ட கற்பனை! பாடலைப் படிக்கும் போதே யானையின் வேகமும், வீரமும், சீற்றமும், திறனும் நம் கண்முன்னே காட்சிகளாக விரிகின்றனவே! சற்றுத் தள்ளியே நில்லுங்கள்... கிள்ளியின் யானை இதோ வருகிறது... அந்த முத்தான முத்தொள்ளாயிரப் பாடல் இதுதான்:
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்உஞ்சை தான்மிதியாப் - பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநம்
கோழியர்கோக் கிள்ளி களிறு.

கலித்தொகை பாடியோர்

இந்த வாரக் கலா இரசிகன்

காலம் ஏன் சிலரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும், நடத்திக் காட்டுகிறது என்பது விளக்க முடியாத புதிர். ஒருவேளை நான் "தினமணி' நாளிதழுக்கு வராமலே இருந்திருந்தால், நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல தமிழ் வளர்த்த சான்றோரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படாமலே போயிருக்கும்.
கம்பன் பெயர் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கூட்டத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தைக் கட்டிக் காத்தவர் மட்டுமல்ல, கம்பனில் தோய்ந்த எத்தனை எத்தனையோ அறிஞர்களை அன்றைய ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டப் பகுதியினருக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார் என்றால் உடனே நினைவுக்கு வருவது இரண்டுதான். முதலாவது, அவர் நம்மிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை. ஏதோ உடன்பிறந்தவர்போல அவர் சகஜமாகப் பழகும் பாங்கு, யாராக இருந்தாலும் அவரை நேசிக்க வைத்துவிடும். இரண்டாவதாக, அவரது விருந்தோம்பல். என்னைப் போல, அவரது வீட்டிற்குப் போய் அந்த விருந்தோம்பலை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் சுகம். திகட்டடித்து விடுவார்.
தான் தில்லிக்குப் போனது, பண்டித ஜவஹர்லால் நேருவை தீன்மூர்த்தி பவனத்தில் சந்தித்தது, அவரிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசியது போன்றவற்றை மாரிமுத்துச் செட்டியாரே சொல்லிக் கேட்க வேண்டும். எத்தனை முறை சொன்னாலும் அவருக்கும் சலிக்காது. எத்தனை தடவை கேட்டாலும் நமக்கும் புளிக்காது. அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்வார்.
தமிழக அரசு கம்பன் விருது அறிவித்தபோது திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார், கோவை நஞ்சுண்டன், ராஜபாளையம் முத்துக்கிருஷ்ண ராசா, மதுரை சங்கர சீத்தாராமன், காரைக்குடி பழ. பழனியப்பன் முதலிய மூத்த கம்பன் கழக நிர்வாகிகளுக்கெல்லாம் அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கம்பன் புகழ் பரப்பும் பேச்சாளர்களைக் கௌரவிப்பது எத்தனை முக்கியமோ, அதைவிட அந்தப் பேச்சாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து, சாமானியத் தமிழனும் கம்பன் கவியமுதைப் பருக வழிகோலும் கம்பன் கழகத்தவர்களை விருது கொடுத்து கெüரவிப்பது அதைவிட அவசியம்.
திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார் சனிக்கிழமை காலை 11 மணிக்குக் காலமாகி விட்டார் என்கிற செய்தி கேட்டதுமுதல், எதையோ இழந்துவிட்டதுபோல இதயம் கனக்கிறது. கம்பன் கழகப் பணிகள் தொடர்வதும், தொடர்ந்து சிறப்பாக ஆண்டுதோறும் திருப்பத்தூரில் கம்பன் விழா நடைபெறுவதும்தான் மாரிமுத்துச் செட்டியாருக்கு செய்யும் நிஜமான அஞ்சலியாக இருக்க முடியும்!

------------------------------------------------------------------

1940-ஆம் ஆண்டு மார்ச் 9, 10 நாள்களில், சென்னையில் "கலித்தொகை மாநாடு' ஒன்று ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் தலைமையில் நடந்தது. கலித்தொகையில் வரும் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்கிற ஐந்து பகுதிகளைப் பற்றியும் முறையே, கே. ஞானம்பாள் அம்மையார், வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, வித்துவான் மு. வரதராசன், வித்துவான் நடேச சர்மா, இளவழகனார் ஆகிய ஐந்து தமிழறிஞர்கள் விரிவுரை நிகழ்த்தினர்.
"கலித்தொகை'யில் அவரவர்க்குத் தரப்பட்ட பகுதி பற்றி நுண்மான் நுழைபுலத்துடன் அந்தந்த அறிஞர்கள், இனியும் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவுக்கு விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேருடைய கருத்துகளை இங்கே பதிவு செய்வது அவசியம்.
தான் எடுத்துக்கொண்ட "குறிஞ்சிக் கலி' பற்றிப் பேச வந்த வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, "கலித்தொகை'யை இயற்றியது ஒருவரா, ஐவரா என்கிற சர்ச்சையை முதலில் எழுப்பி, அதற்கு முற்றும் வைக்கிறார்.
""பெருங்கடுங்கோள் பாலை, கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம், அருஞ்சோழன்
நன்லுத் திரன்முல்லை, நல்லந்து வானெய்தல்
கல்வியலார் கண்ட கலி''
என்கிற வெண்பா கலித்தொகை புலவர் ஐவரால் பாடப்பட்டதாகத் தெரிவிப்பதை ஆதாரமற்ற கட்டிவிட்ட வெண்பா என்று நிறுவிய பிறகுதான், "குறிஞ்சிக் கலி' பற்றிய விளக்கத்திற்கே செல்கிறார் இராசமாணிக்கனார்.
""சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைப் புலவராக இருந்த கே.என். சிவராஜப் பிள்ளை, "கலித்தொகை' ஆசிரியர் ஒருவரே என முடிவு கட்டினார். இவ் வெண்பா எந்தக் கலித்தொகை ஏட்டிலும் இல்லை. மாயமாய் வந்ததாகும். இது முற்றிலும் ஆதாரமற்ற, இக்காலப் புலவர் எவரோ கட்டிவிட்ட பொய்யாகும் என்பதே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறையினரான எஸ். வையாபுரிப் பிள்ளை, வித்துவான் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் ஆகியோர் கருத்துமாகும்'' என்று விளக்கி அந்தச் சர்ச்சைக்கே முற்றுப்புள்ளி வைக்கிறார்.
"மருதக் கலி' பற்றிய தனது சொற்பொழிவை முடிக்கும்போது பேராசிரியர் மு.வ., ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அது இன்றைக்கும் பொருத்தமான கருத்து.
""கலித்தொகையைக் கற்று அறிந்து ஏத்துதல் நமது கடமை. ஆனால், உண்மையை ஆராயுங்கால், தமிழர் கலை நூல்களைக் கற்பதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை என்றே தெரிகிறது. மொழி ஆக்கம் பெற்றாலன்றிக் கலை ஆக்கம் பெறுமோ? இங்கு தாய்மொழியாகிய தமிழிலேயே எழுதுதல், பேசுதல், வழக்காடுதல், அரசாளுதல் ஆகிய எல்லாம் நடைபெறும் நாள் வந்தாலன்றி நமது எண்ணம் ஈடேறுமோ?''
இரண்டு நாள்கள் நடந்த அந்தக் கலித்தொகை மாநாட்டுச் சொற்பொழிவுகளை அப்படியே தொகுத்து, தலைவர் முன்னுரையுடன் 1940} ஆம் ஆண்டிலேயே புத்தகமாக வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இப்போது மறுபதிப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. கலித்தொகை ஆய்வில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களும், ஏன், சராசரித் தமிழுணர்வாளரும்கூடத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அற்புதமான பல கருத்துகளும், கலித்தொகைச் சிந்தனைகளும், அற்றைநாள் தமிழர்தம் வாழ்வு நெறிகளும் அவர்தம் சொற்பொழிவில் காணக் கிடக்கின்றன.
இதுபோன்ற இலக்கியச் சொற்பொழிவுகள், ஆய்வரங்கங்கள் போன்றவை பல்கலைக்கழக வளாகங்களுக்கு உள்ளே முடங்கிப் போய்க் கிடக்காமல், எப்போது தமிழர்தம் மத்தியில் வெகுஜன விருப்பத்துடன் நிகழுமோ, அப்போதுதான் தமிழ் வளர்ச்சி காணும். அந்த நாளும் வந்திடாதோ...?

------------------------------------------------------------------

கவிஞர் வீ. சிவசங்கர் என்கிற இளைஞர் எழுதிய "மழையை ரசிக்கும் வானம்' என்கிற கவிதைத் தொகுப்பு, புத்தக மதிப்புரைக்காக வந்திருந்தது. எடுத்துப் புரட்டினேன். என்னை ஈர்த்தது "அரசியல்வாதி' என்கிற கவிதை.
போலீஸ்காரன் மகன் திருடனானான்;
வாத்தியார் பிள்ளை மக்கானான்;
வைத்தியர் பிள்ளை நோயாளியானான்;
ஆனால், அரசியல்வாதியின் பிள்ளை மட்டும் அவனைப் போலவே ஆனான்!