கலித்தொகை பாடியோர்

இந்த வாரக் கலா இரசிகன்

காலம் ஏன் சிலரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சில சம்பவங்களையும், நிகழ்வுகளையும், நடத்திக் காட்டுகிறது என்பது விளக்க முடியாத புதிர். ஒருவேளை நான் "தினமணி' நாளிதழுக்கு வராமலே இருந்திருந்தால், நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல தமிழ் வளர்த்த சான்றோரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படாமலே போயிருக்கும்.
கம்பன் பெயர் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கூட்டத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்தவர் திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தைக் கட்டிக் காத்தவர் மட்டுமல்ல, கம்பனில் தோய்ந்த எத்தனை எத்தனையோ அறிஞர்களை அன்றைய ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டப் பகுதியினருக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார் என்றால் உடனே நினைவுக்கு வருவது இரண்டுதான். முதலாவது, அவர் நம்மிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை. ஏதோ உடன்பிறந்தவர்போல அவர் சகஜமாகப் பழகும் பாங்கு, யாராக இருந்தாலும் அவரை நேசிக்க வைத்துவிடும். இரண்டாவதாக, அவரது விருந்தோம்பல். என்னைப் போல, அவரது வீட்டிற்குப் போய் அந்த விருந்தோம்பலை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் சுகம். திகட்டடித்து விடுவார்.
தான் தில்லிக்குப் போனது, பண்டித ஜவஹர்லால் நேருவை தீன்மூர்த்தி பவனத்தில் சந்தித்தது, அவரிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசியது போன்றவற்றை மாரிமுத்துச் செட்டியாரே சொல்லிக் கேட்க வேண்டும். எத்தனை முறை சொன்னாலும் அவருக்கும் சலிக்காது. எத்தனை தடவை கேட்டாலும் நமக்கும் புளிக்காது. அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்வார்.
தமிழக அரசு கம்பன் விருது அறிவித்தபோது திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார், கோவை நஞ்சுண்டன், ராஜபாளையம் முத்துக்கிருஷ்ண ராசா, மதுரை சங்கர சீத்தாராமன், காரைக்குடி பழ. பழனியப்பன் முதலிய மூத்த கம்பன் கழக நிர்வாகிகளுக்கெல்லாம் அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். கம்பன் புகழ் பரப்பும் பேச்சாளர்களைக் கௌரவிப்பது எத்தனை முக்கியமோ, அதைவிட அந்தப் பேச்சாளர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து, சாமானியத் தமிழனும் கம்பன் கவியமுதைப் பருக வழிகோலும் கம்பன் கழகத்தவர்களை விருது கொடுத்து கெüரவிப்பது அதைவிட அவசியம்.
திருப்பத்தூர் மாரிமுத்துச் செட்டியார் சனிக்கிழமை காலை 11 மணிக்குக் காலமாகி விட்டார் என்கிற செய்தி கேட்டதுமுதல், எதையோ இழந்துவிட்டதுபோல இதயம் கனக்கிறது. கம்பன் கழகப் பணிகள் தொடர்வதும், தொடர்ந்து சிறப்பாக ஆண்டுதோறும் திருப்பத்தூரில் கம்பன் விழா நடைபெறுவதும்தான் மாரிமுத்துச் செட்டியாருக்கு செய்யும் நிஜமான அஞ்சலியாக இருக்க முடியும்!

------------------------------------------------------------------

1940-ஆம் ஆண்டு மார்ச் 9, 10 நாள்களில், சென்னையில் "கலித்தொகை மாநாடு' ஒன்று ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் தலைமையில் நடந்தது. கலித்தொகையில் வரும் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்கிற ஐந்து பகுதிகளைப் பற்றியும் முறையே, கே. ஞானம்பாள் அம்மையார், வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, வித்துவான் மு. வரதராசன், வித்துவான் நடேச சர்மா, இளவழகனார் ஆகிய ஐந்து தமிழறிஞர்கள் விரிவுரை நிகழ்த்தினர்.
"கலித்தொகை'யில் அவரவர்க்குத் தரப்பட்ட பகுதி பற்றி நுண்மான் நுழைபுலத்துடன் அந்தந்த அறிஞர்கள், இனியும் சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் ஒன்றுமில்லை என்று சொல்லுமளவுக்கு விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேருடைய கருத்துகளை இங்கே பதிவு செய்வது அவசியம்.
தான் எடுத்துக்கொண்ட "குறிஞ்சிக் கலி' பற்றிப் பேச வந்த வித்துவான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, "கலித்தொகை'யை இயற்றியது ஒருவரா, ஐவரா என்கிற சர்ச்சையை முதலில் எழுப்பி, அதற்கு முற்றும் வைக்கிறார்.
""பெருங்கடுங்கோள் பாலை, கபிலன் குறிஞ்சி
மருதனிள நாகன் மருதம், அருஞ்சோழன்
நன்லுத் திரன்முல்லை, நல்லந்து வானெய்தல்
கல்வியலார் கண்ட கலி''
என்கிற வெண்பா கலித்தொகை புலவர் ஐவரால் பாடப்பட்டதாகத் தெரிவிப்பதை ஆதாரமற்ற கட்டிவிட்ட வெண்பா என்று நிறுவிய பிறகுதான், "குறிஞ்சிக் கலி' பற்றிய விளக்கத்திற்கே செல்கிறார் இராசமாணிக்கனார்.
""சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைப் புலவராக இருந்த கே.என். சிவராஜப் பிள்ளை, "கலித்தொகை' ஆசிரியர் ஒருவரே என முடிவு கட்டினார். இவ் வெண்பா எந்தக் கலித்தொகை ஏட்டிலும் இல்லை. மாயமாய் வந்ததாகும். இது முற்றிலும் ஆதாரமற்ற, இக்காலப் புலவர் எவரோ கட்டிவிட்ட பொய்யாகும் என்பதே சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறையினரான எஸ். வையாபுரிப் பிள்ளை, வித்துவான் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் ஆகியோர் கருத்துமாகும்'' என்று விளக்கி அந்தச் சர்ச்சைக்கே முற்றுப்புள்ளி வைக்கிறார்.
"மருதக் கலி' பற்றிய தனது சொற்பொழிவை முடிக்கும்போது பேராசிரியர் மு.வ., ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அது இன்றைக்கும் பொருத்தமான கருத்து.
""கலித்தொகையைக் கற்று அறிந்து ஏத்துதல் நமது கடமை. ஆனால், உண்மையை ஆராயுங்கால், தமிழர் கலை நூல்களைக் கற்பதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை என்றே தெரிகிறது. மொழி ஆக்கம் பெற்றாலன்றிக் கலை ஆக்கம் பெறுமோ? இங்கு தாய்மொழியாகிய தமிழிலேயே எழுதுதல், பேசுதல், வழக்காடுதல், அரசாளுதல் ஆகிய எல்லாம் நடைபெறும் நாள் வந்தாலன்றி நமது எண்ணம் ஈடேறுமோ?''
இரண்டு நாள்கள் நடந்த அந்தக் கலித்தொகை மாநாட்டுச் சொற்பொழிவுகளை அப்படியே தொகுத்து, தலைவர் முன்னுரையுடன் 1940} ஆம் ஆண்டிலேயே புத்தகமாக வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இப்போது மறுபதிப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறது. கலித்தொகை ஆய்வில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களும், ஏன், சராசரித் தமிழுணர்வாளரும்கூடத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அற்புதமான பல கருத்துகளும், கலித்தொகைச் சிந்தனைகளும், அற்றைநாள் தமிழர்தம் வாழ்வு நெறிகளும் அவர்தம் சொற்பொழிவில் காணக் கிடக்கின்றன.
இதுபோன்ற இலக்கியச் சொற்பொழிவுகள், ஆய்வரங்கங்கள் போன்றவை பல்கலைக்கழக வளாகங்களுக்கு உள்ளே முடங்கிப் போய்க் கிடக்காமல், எப்போது தமிழர்தம் மத்தியில் வெகுஜன விருப்பத்துடன் நிகழுமோ, அப்போதுதான் தமிழ் வளர்ச்சி காணும். அந்த நாளும் வந்திடாதோ...?

------------------------------------------------------------------

கவிஞர் வீ. சிவசங்கர் என்கிற இளைஞர் எழுதிய "மழையை ரசிக்கும் வானம்' என்கிற கவிதைத் தொகுப்பு, புத்தக மதிப்புரைக்காக வந்திருந்தது. எடுத்துப் புரட்டினேன். என்னை ஈர்த்தது "அரசியல்வாதி' என்கிற கவிதை.
போலீஸ்காரன் மகன் திருடனானான்;
வாத்தியார் பிள்ளை மக்கானான்;
வைத்தியர் பிள்ளை நோயாளியானான்;
ஆனால், அரசியல்வாதியின் பிள்ளை மட்டும் அவனைப் போலவே ஆனான்!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்