தள்ளியே நில்லுங்கள்... - முத்தொள்ளாயிரப் பாடல்

தள்ளியே நில்லுங்கள்...

இக்காலத்துப் பெண்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதை ஒரு கலையாகவே கற்றுள்ளனர். மேலும், "என் மகன் பத்து வேலைகளைப் பத்து விரல்களால் செய்வான்' என்று பாராட்டிப் பேசுவதைப் பல வீடுகளில் கேட்கலாம். சங்ககாலத் தாய், போருக்குச் சென்ற தன் மகனைப் பற்றிப் பெருமிதத்தடன் பேசும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. இவை எல்லாம் ஆறறிவு படைத்த மனித குலத்தோரின் திறமைகள். ஆனால், நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அப்படி ஓர் அற்புதமான ஆற்றலைக் கொண்டது சோழ மன்னன் கிள்ளியின் பட்டத்து யானை. அந்த யானை அப்படி என்ன செய்ததாம்?
சோழனுக்கு ஒரு குணமுண்டு. போர் செய்யத் தொடங்கிவிட்டால், வடக்கு, தெற்கு என்று அனைத்துத் திசைகளிலும் உள்ள இடங்களை எல்லாம் வென்ற பின்னரே ஊர் திரும்புவான். அவனது வெற்றியில் பட்டத்து யானையின் பங்கு என்ன தெரியுமா? போராற்றலும், பேராற்றலும் கொண்ட அந்த யானை, ஒரு காலால் கச்சியம்பதி என்னும் காஞ்சியை மிதிக்கிறது. பின்னர் அடுத்த காலை உயரே தூக்குகிறது. அது கீழே இறங்கும்போது வடக்கே உள்ள நீர்வளம் மிக்க உஜ்ஜயினி (உஞ்சை) நகரம் நசுங்கி அழிகிறது.
பிறகு, அதன் சீற்றம் தென்னிலங்கைத் தீவை நோக்கித் திரும்புகிறது. மூன்றாவது காலால் ஈழம் மிதிபடுகிறது. அதற்குள் போர் முடிந்து விடுகிறது. எதிர்ப்பதற்கு யாரும் இல்லை; மன்னன் ஊர் திரும்புகிறான் என்றவுடன், வேறு வழியின்றி யானையும் ஊர் திரும்புகிறது. எனவே, கிள்ளியின் களிறு தனது நான்காவது காலை அவனது தலைநகரான உறையூரில் ஊன்றி உள்ளே நுழைகிறதாம்!
அடடா! எப்படிப்பட்ட கற்பனை! பாடலைப் படிக்கும் போதே யானையின் வேகமும், வீரமும், சீற்றமும், திறனும் நம் கண்முன்னே காட்சிகளாக விரிகின்றனவே! சற்றுத் தள்ளியே நில்லுங்கள்... கிள்ளியின் யானை இதோ வருகிறது... அந்த முத்தான முத்தொள்ளாயிரப் பாடல் இதுதான்:
கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்உஞ்சை தான்மிதியாப் - பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநம்
கோழியர்கோக் கிள்ளி களிறு.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்