'திருப்புகழ்' தமிழ்!

"திருப்புகழ்' தமிழ்!

அருணகிரிநாதர் அருளிய அருமைத் திருப்புகழில் "தமிழ்' பற்றிய பெருமைக்குரிய கருத்துகள் சிறப்பிடம் பெறுகின்றன. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழில், ஒரு மலரின் வடிவம் போன்றது இயற்றமிழ்; வண்ணம் போன்றது இசைத்தமிழ்; வாசம் போன்றது நாடகத் தமிழ். மூன்று பண்புகளும் ஒன்றாய்க் கலந்து அதே சமயம் தனித்தனிச் சிறப்புடன் திகழ்கிறது திருப்புகழ்.
""இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறி'' என்று திருவண்ணாமலை திருப்புகழில் வருகிறது.
செம்மையான தமிழ்; அதாவது தூய்மையான தமிழ்.
"அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே'' என்று கொங்கணகிரி திருப்புகழ் கூறுகிறது.
மன வெம்மையை மாற்றித் தணிக்கும் மழைத்துளிகள்போல் குளிர்ந்த சொல் முத்துக்கள் தமிழில் நிரம்ப உள்ளன. ""தன் தமிழின் மிகுநேய முருகேசா'' என்று சிறுவாபுரி திருப்புகழிலும் ""தண்தமிழ் சேர் பழனிக்குள் தங்கிய பெருமாளே'' என்று பழனி திருப்புகழிலும் வருகின்றன.
தமிழ்ச் சொற்கள் அமிழ்தினும் இனியன. பொருள் வளமும் அழகு நலமும் பொலிவன. அருணைவள்ளல் நிம்பபுரம் திருப்புகழில் ""வந்த சரணார விந்தமதுபாட வண்தமிழ் விநோதமம் அருள்வாயே'' என்று முருகனிடம் வேண்டுகிறார்.
தமிழ் மொழியை ஆய்ந்து மெய்மை காணும் வழியை, அதன் நுட்பத்தை சங்கத்தில் இருந்த புலவர்களுக்கு முருகன் விளக்கி அருளினார். "கலையுணர் புலவன்' என்றே முருகனுக்கு ஒரு பெயருண்டு.
தெரிதமிழ் - ஆய்ந்து காணும் தமிழ். ""தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே'' என்று சிதம்பரம் திருப்புகழில் வருவது காண்க.
மகிழ்சியினால் ஆர்த்துப் பாடும் இசைப்பாட்டை "தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே'' என்று அருணகிரிநாதர் பொதுத் திருப்புகழில் கூறுகிறார். காவடி தூக்கி துள்ளி ஆடும் பக்தர்கள் பாடும் நொண்டிச்சிந்து, கண்ணிகள் "தெள்ளுதமிழ்' எனப்படும்.
ஆதி சிவன் பெற்ற தமிழ் அகத்தியன் வளர்த்த தமிழ் மொழிகளில் முற்பட்டது; முதன்மையானது ""முந்துதமிழ் மாலைக் கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி'' என செந்தூர்த் திருப்புகழில் பாடியுள்ளார்.
தித்திக்கும் தமிழ் - இன்பத்தமிழ், இனிய தமிழ் எனப்படும். பொதியமலை முனிவனின் மனம் நனிமகிழ, அவர் புகழ, செவி குளிர இனிய தமிழை குமரன் பேசுகிறான்.
""சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகமகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே''
தமிழைப் பயில்கின்றபோது சொற்களின் பொருள்கள் நயனங்கள் முன் சுந்தரக் காட்சியாய்த் தெரிகின்றன. எனவே, சித்திரத் தமிழ் என்றருளினார்.
வளைந்தும், சுழிந்தும், நீட்டியும், சுவையுணர்வுடன், கலையுணர்வுடன் எழுத்துகள் அமைந்த தமிழ்! எழுத்தழகு, சொல்லழகு, கருத்தழகுடன் இதயம் கவரும் உதய ஒளித்தமிழ்!
""செஞ்சொல் சேர் சித்ரத்தமிழில் உன் செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ?'' என்று குடந்தைத் திருப்புகழில் சந்தக்கவிமணி சாற்றுகிறார்.
ஞானம்பெற மிக எளிதான வழி ஒன்று உண்டு. அது நம் தாய்மொழியை மனம் படிந்து பயில்வதுதான். தெளிந்த மெய்ப்பொருள்களைக் கொண்ட தமிழ் ஞானத்தமிழ் ஆகும்.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத் தமிழ் நாவாரப்பாடும் ஞானத்தமிழ். பூவாரம் (பூமாலை) வாடிவிடும்; பாவாரம் (பாமாலை) என்றும் பட்டொளி வீசி தகதக எனப் பளிச்சிடும். ""சேனக்குரு கூடலில் அன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து'' என்று சீர்காழி திருப்புகழில் வருகிறது. இவ்வாறு பலவகைத் தமிழ்களைப் பாடிப் பரவியுள்ள அருணகிரிநாதரை என்றென்றும் (குறிப்பாக இன்று) நினைவுகூர்வது சாலப்பொருந்தும்.
இன்று : அருணகிரிநாதர் (ஆனி-மூலம்) குருபூசை

Comments

  1. இனிக்க வைக்கிறது தமிழின் சுவை...

    வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
  2. உங்கள் இணையதளத்திற்கு எனது பாராட்டுகள், உங்களை போன்ற இணையதளத்தின் சேவை தமிழுக்கு தற்போது தேவை, இந்நிலையில் நான் ஒன்றை குறிப்பிட்டு கூற ஆசை படுகிறேன். சங்க
    இலக்கியங்களின் அறிய தொகுப்புகளை http://www.valaitamil.com/literature என்ற இணையதளம் தொகுத்து வைத்துள்ளது. அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சங்க இலக்கிய வலைவரியைத் தெரிவித்தமைக்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்