Monday, October 31, 2016

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்! – தி. வே. விசயலட்சுமி
தலைப்பு-பெண்ணடிமையர், தி.வே.விசயலட்சுமி ; thalaippu_penadimaiyar_thive-visayalatchumi

பெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம்!

 1. கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை
திண்ணமுறக் காப்போம் தெளிந்து.
 1. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர்
மங்கி யழிவரே தாழ்ந்து.
 1. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள்
கண்ணிருந்தும் கண்ணற் றவர்.
 1. இருவர் மனம்ணைந்தால் பெண்ணடிமை எண்ணம்
வருமா? ஆய்ந்துநீ பார்
 1. பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய்
மண்ணாய் மரமாய் மதி.
 1. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப்
போராடி வாழ்பவளே பெண்.
 1. மகளிரைத் தாயுருவில் வைக்காத பேதையை
மக்களாய் எண்ணோம் மதித்து.
 1. நெருப்பும் பொறுப்புமே பெண்ணாம்; வெறுப்பால்
செருப்பாக்கின் சேரும் இழிவு.
09. ஒன்றேமுக் காலடிநூல் காட்டும் பெண்ணுயர்வை
நின்றே நினைத்து வாழ்.
10.வள்ளுவர் உண்மையைக் கொள்ளுவர் பெண்ணடிமை
தள்ளுவார் சீர் அள்ளுவர்.

(படம்-நன்றி : குட்டிச்செய்திகள் / www.kuttynews.com )

தி.வே.விசயலட்சுமி ; thi-ve-visayalatsumy
புலவர் திருக்குறள் தி. வே. விசயலட்சுமி 

Sunday, October 30, 2016

அடையாளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்

தலைப்பு-அடையாளத்தை இழக்காதே-அம்பாளடியாள் ; thalaippu_adaiyaalathai_ambaaladiyaal
அடையா ளத்தை  இழப்பதற்கா பாடுபட்டோம்!

என்னுயிரே! பொன்மொழியே!
உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும்
ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க
இக்கணமே நீவருவாய் என்றன் நாவில்
இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்!
எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள்
ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே!
தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால்
தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்!
நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன்
நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்!
திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம்
திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து
பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது
பைந்தமிழே எனக்கிங்குப் பயமும் ஏது?
முக்காடு போடவைப்பேன் மீண்டும் அந்த
மூடர்கள் முத்தமிழைப் பழிக்க வந்தால்!
கத்திக்கு என்னிடத்தில் வேலை இல்லை
கண்ணீரைத் துடைகின்ற செயலே போதும்!
புத்திக்கு வேலைதந்து மூர்க்கத் தோடு
புல்லுருவிக் கூட்டத்தைப் பூண்டோ டொழிப்பேன்!
எத்திக்கும் இன்தமிழைப் பரப்பிச் செல்லும்
என்பேச்சை நானும்தான் கேட்க மாட்டேன்!
முத்தமிழே உயிரென்று இடித்துச் சொல்லி
முன்னேறத் தடைவந்தால் மூச்சை யாவேன்!
என்நாட்டை இழந்தவழி எண்ணிப் பார்த்தால்
எதிரிமுகத்தி லெழுதுகோல் துப்பித் தீர்க்கும்!
பொன்னான நேரத்தைச் செலவு செய்து
போகின்றோம் எதற்காக? உணர்வை மீட்க!
இன்றெம்மின் வாழ்வுற்ற அடையா ளத்தை
இழப்பதற்கா இத்தனைநாள் பாடு பட்டோம்!
கன்றுக்குப் பசுமீதும் உள்ள காதல்
கழுத்தறுத்துப் போட்டாலும் கண்ணுள் வாழும்!

கவிஞர் அம்பாளடியாள்

Thursday, October 27, 2016

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.31. இல்வாழ் வுயர்வு

தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்

இல்வாழ்வியல்

31. இல்வாழ் வுயர்வு

 1. இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல்.
இல்வாழ்வு என்பது குடும்பத்துடன் வாழ்வது ஆகும்.
 1. எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம்.
எதிர்பால் துணையுடன் வாழ்வது மிகச் சிறந்தது ஆகும்.
 1. இல்வாழ் வார்கட னில்லற மியற்றல்.
இல்வாழ்க்கைக்கு உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தலே இல்வாழ்க்கை நடத்துபவரின் கடமை ஆகும்.
 1. என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம்.
எப்பொழுதும் விவசாயத்தில் ஈடுபடுவதே இல்லறம் ஆகும்.
 1. இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே.
இல்வாழ்க்கை நடத்துபவர் இல்லை எனில் இவ்வுலகம் இல்லை(ஏனெனில் இவரே எல்லோர்க்கும் உணவளிப்பவர்)
 1. இன்னிலை யெவற்றினு நன்னிலை யென்ப.
மக்கள் நான்கு நிலைகளில் வாழ்ந்தனர்.
பிரம்மச்சர்யம் -திருமணத்துக்கு முந்திய கல்வி கற்கும் பருவம்.
இல்வாழ்வான் -திருமணம் செய்து வாழும் பருவம்.
வானப்பிரசுதம் -திருமணம் செய்து இல்வாழ்க்கையில் தமது கடமைகளை முடித்துத் துறவறம் எய்தும் பருவம்.
சந்நியாசம் – துறவு வாழ்க்கை.
இல்வாழ்க்கை நிலை என்பது மற்ற மூன்று நிலைகளைவிட சிறந்த நிலை ஆகும்.
 1. எந்நிலை யவர்க்கு மில்வாழ் வார்துணை.
எல்லா நிலையில் வாழ்பவர்களும் இல்வாழ்வாரைச் சார்ந்தே வாழ்கின்றனர்.
 1. அந்நிலைப் பெருக்கே யரசென வறிக.
குடும்ப அமைப்பின் மிகப் பெரிய வடிவமே அரசாட்சி ஆகும்.
 1. அதற்கா நன்முத லன்பெனும் பொருளே.
குடும்ப அமைப்பின் மூலதனம் அன்பே ஆகும்.
 1. அதிலாம் பயன்க ளறமுத னான்கே.
இல்வாழ்வான் அறம், பொருள், இன்பம், வீடுபேறு இவற்றை அடைவான்

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum