பாய்புலியே! எங்கே உன் சீற்றம்? – பெருஞ்சித்திரனார்
பாய்புலியே! எங்கே உன் சீற்றம்?
இன்னமும் எத்தனை யாண்டுகள் தமிழாஇங்ஙனே உணர்வற்றிருப்பாய்? – நீ
இங்ஙனே உணர்வற்றிறிருப்பாய்?
தின்னும் இனப்பகை உன்றனை மாய்த்தது,
தீராத மடமைநின் இனத்தையே சாய்த்தது,
மன்னும் அடிமையா வாழ்வென வாய்த்தது?
மாளாத துயரையா உன்மரம் காய்த்தது?
எந்தமிழ் மொழிபேணி வருகநீ யாண்டும்,
இழந்தநின் பேராற்றல் எழ, அது தூண்டும்!
வெந்திறல் ஆண்மையொடு நீஎழல் வேண்டும்!
வீழ்கின்ற பகையோடு அடிமையுனைத் தாண்டும்!
வடவர்க்குத் தமிழ்நாடு வாழும்பட் டயமா? s
வல்லதோ ரடிமைக்கு வேண்டும் நயமா?
மடமைக்குத் தமிழ்நாடு மீன்மேயும் கயமா?
மறந்தரும் விறல்தெய்வர் என்றுமவர் வயமா?
நம்மைநாம் வீழ்த்துமோர் நாய்த்தன்மை போலே,
நாம்கண்ட தில்லையிங் கிந்நில மேலே!
தம்மையுந் தாழ்த்தித்தம் இனத்தையும் கீழே
தள்ளுமவ் விழிசெயல் திருத்தாநாய் வாலே!
மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ
முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ!
விழியுண்டு வழியுண்டு! விரைகிலம், நன்றோ?
வீணாக அமர்ந்துண்ண நாம்தென்னங் கன்றோ?
உரிமைக்கு வித்தெல்லாம் உணர்வெல்லாம் மொழியே!
ஊமையன் நெடும்போக்குக் குண்டோநல் வழியே!
நரிமைக்கு நாய்மையோ நாட்டாண்மைக் கழியே!
நயன்மைக்கும் இயன்மைக்கும் உண்டோஓர் பழியே!
விடுதலைப் பயிர்க்கெரு மொழியின்முன் னேற்றம்!
வீணர்க்கும் சோம்பர்க்கும் விளைவுண்டோ மாற்றம்!
படுதலைப் பட்டாயிற் றேன்தடு மாற்றம்?
பாய்கின்ற புலியேறே! எங்கேஉன் சீற்றம்?
– பாவலேறு பெருஞ்சித்திரனார்
Comments
Post a Comment