Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை 107. இரவு அச்சம் : வெ. அரங்கராசன்

attai_kuralarusolurai97
திருக்குறள் அறுசொல் உரை
02. பொருள் பால்
13. குடி இயல்
அதிகாரம் 107. இரவு அச்சம்
உழைக்கும் திறத்தர், மானத்தர்,
பிச்சை எடுக்க அஞ்சுதல்.
  1. கரவா(து), உவந்(து)ஈயும், கண்அன்னார் கண்ணும்,
      இரவாமை கோடி உறும்.
மறைக்காது, மகிழ்ந்து கொடுப்பாரிடமும்,
பெறாமை கோடிப் பெருமை.

  1. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து
      கெடுக, உல(கு)இயற்றி யான்
பிச்சையால்தான் வாழ்வுஎன்றால், ஆட்சியான்,
அலைந்து திரிந்து கெடட்டும்.

  1. “இன்மை இடும்பை, இரந்து,தீர் வாம்”என்னும்
      வன்மையின், வன்பாட்ட(து) இல்.
ஏழ்மைத் துன்பத்தைப், பிச்சையாலே
           தீர்ப்பேன் என்பவன், கொடியவன்..

  1. இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே, இடம்இல்லாக்
      காலும், இர(வு)ஒல்லாச் சால்பு.
வறுமையிலும், கைஏந்தாப் பண்பு,
உலகுள் அடங்காத் தகுதியது.

  1. தெள்நீர் அடுபுற்கை ஆயினும், தாள்தந்த(து)
      உண்ணலின், ஊங்(கு)இனிய(து) இல்.
கஞ்சிநீரே என்றாலும், உழைப்பால்
வந்ததை உண்பதே, இனியது.

1066.”ஆவிற்கு நீர்”என்(று) இரப்பினும், நாவிற்(கு)
      இரவின், இளிவந்த(து) இல்.
“பசுவுக்குத்தான் நீர்”எனப் பெற்றாலும்,
நாக்கிற்கு, அதுவும் இழிவுதான்.

  1. இரப்பன், இரப்பாரை எல்லாம், “இரப்பின்,
      கரப்பார் இரவின்மின்” என்று.
“கைஏந்தின், மறைப்பாரிடம் ஏந்தாதீர்”எனக்
கைஏந்தி வேண்டுகிறேன் நான்.

  1. இர(வு)என்னும் ஏமாப்(பு)இல் தோணி, கர(வு)என்னும்
      பார்தாக்கப் பக்கு விடும்.
பிச்சைத் தோணி, மறைத்தல்எனும்
பாறைமீது மோதினால், நொறுங்கும்.

  1. இர(வு)உள்ள, உள்ளம் உருகும்; கர(வு)உள்ள,
      உள்ளதூஉம் இன்றிக் கெடும்.   
பிச்சையை நினைத்தால், மனம்உருகும்;
ஒளிப்பை நினைத்தால், சாகும்.

  1. கரப்பவர்க்கு யாங்(கு)ஒளிக்கும் கொல்லோ….? இரப்பவர்
      சொல்ஆடப், போஒம் உயிர்.
“இல்லை”எனக் கேட்டதும், உயிர்போம்;
மறைத்தார்உயிர், எங்கு ஒளியுமோ….?
பேரா.வெ.அரங்கராசன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்