அடையாளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்
அகரமுதல
158, ஐப்பசி 14, 2047 / அட்டோபர் 30, 2016
என்னுயிரே! பொன்மொழியே!
உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும்
ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க
இக்கணமே நீவருவாய் என்றன் நாவில்
இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்!
எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள்
ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே!
தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால்
தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்!
நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன்
நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்!
திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம்
திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து
பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது
பைந்தமிழே எனக்கிங்குப் பயமும் ஏது?
முக்காடு போடவைப்பேன் மீண்டும் அந்த
மூடர்கள் முத்தமிழைப் பழிக்க வந்தால்!
கத்திக்கு என்னிடத்தில் வேலை இல்லை
கண்ணீரைத் துடைகின்ற செயலே போதும்!
புத்திக்கு வேலைதந்து மூர்க்கத் தோடு
புல்லுருவிக் கூட்டத்தைப் பூண்டோ டொழிப்பேன்!
எத்திக்கும் இன்தமிழைப் பரப்பிச் செல்லும்
என்பேச்சை நானும்தான் கேட்க மாட்டேன்!
முத்தமிழே உயிரென்று இடித்துச் சொல்லி
முன்னேறத் தடைவந்தால் மூச்சை யாவேன்!
என்நாட்டை இழந்தவழி எண்ணிப் பார்த்தால்
எதிரிமுகத்தி லெழுதுகோல் துப்பித் தீர்க்கும்!
பொன்னான நேரத்தைச் செலவு செய்து
போகின்றோம் எதற்காக? உணர்வை மீட்க!
இன்றெம்மின் வாழ்வுற்ற அடையா ளத்தை
இழப்பதற்கா இத்தனைநாள் பாடு பட்டோம்!
கன்றுக்குப் பசுமீதும் உள்ள காதல்
கழுத்தறுத்துப் போட்டாலும் கண்ணுள் வாழும்!
Comments
Post a Comment