Skip to main content

நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று! – புலவர் தி.வே.விசயலட்சுமி





தலைப்பு-நன்றல்லதை மறத்தல் நன்று, தி.வே.விசயலட்சுமி ; thalaippu_nandrallathaimara_thi-ve-visayalatchumi

நன்றல்லதை அன்றே மறத்தல் நன்று

“ தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு” (குறள்-129)
  தீயினாற் சுடப்பட்டு உண்டான புண் வடுவாக இருப்பினும் மனத்தில் ஆறிவிடும். நாவினாற் சுட்ட வடு மனத்தி லென்றும் ஆறாது என்பது இக்குறட்பாவின் கருத்து. கழிந்த காலமும், விடுத்த அம்பும், சொன்ன சொல்லும் திரும்பிப் பெற முடியாது என்பதும் உண்மையே ‘யாகாவாரயினும் நாகாக்க’ என்பது குறள் நீதி.
  ஒருவன் நண்பன்தான். தன்னை மறந்து கடுஞ்சொற்கள் பேசி விடுகிறான். சில மணித்துளிகளில் நிலைமைக்கு வந்து மன்னிப்புக் கேட்கிறான். உயர்பண்பாளன் உடன் மன்னித்து விடுவான். அதுவே அவன் வாழ்வின் வெற்றி. “குறிப்பாக நாம்வாழ்வில் மறக்க வேண்டியவை இரண்டு 1. பிறர் நமக்குச் செய்த தீங்கு. 2. நாம் பிறர்க்குச் செய்த நன்மை’’ என்பர் ஆன்றோர். வாய்தவறி ஒருவர் சொல்லத்தகாத சொற்களைச் சொன்னால், அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை ஏசியும், இழிசொற்களால் பேசியும் காலம் கழிப்பர் சிலர். இக்காலத்தில்தான் மனிதனிடம் உறங்கிக் கிடக்கும் பெருந்தன்மை என்ற பண்பு முன்வர வேண்டும். ஏதோ ஒரு வேறு உணர்ச்சி வேகத்தில் சொல்லப்பட்ட சொற்களை மறக்க முயல்வதே மனிதனின் கடமை ‘‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’’ என்றார் வள்ளுவப் பெருமான். அவ்வாறு செய்வதால் உலகில் நட்பு பரவும். உலகம் உன்னை விரும்ப வேண்டுமானால். நீ உன்னைத் திருத்திக்கொள். மற்றவர் தவற்றைப் பொறுத்துக் கொள். வன்சொற்கள் பேசுவதை, வன்செயல்கள் திரும்பச் செய்வதை விட்டுவிடு. ‘‘பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்’’ அன்றோ! ஆம்.  பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரை புகழ் உண்டு.
     மேலும் பகையுணர்வு இல்லாமல் கூறப்பட்ட சொற்களுக்கு அளவுக்கு மீறிப் பாராட்டுதல் வேண்டாம். அதாவது முதன்மை கொடுக்காமல் இருப்பது நல்லது. அடிக்கடி பிறர் சொன்ன சொற்களை நினைவு கூர்வதால் வேறு ஏதாவது சொல்லத்தகாத சொற்கள் வெளிவரக் கூடிய நிலைமை ஏற்படக் கூடும். உடலும் உள்ளமும் கெடும்.
   ஆகவே பேச்சு வேகத்திலோ, ஏச்சுப் பேச்சிலோ சொல்லப்பட்ட சுடு சொற்களையும் செவிமடுத்த அன்றே மறந்து விடுதல்/விட்டு விடுதல் இரு தரப்பினர்க்கும் நலம். திருவள்ளுவர் அருளிய குறட்பாக்கள் அனைத்தும் பொதுத்தன்மை நிறைந்தது. நாம் அனைவரும் வள்ளுவர் வழி நின்று வாழ்க்கையில் மேன்மைகள் பல அடைவோம்.
புலவர் தி.வே.விசயலட்சுமி
அலைபேசி : 98415 93517

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்