தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்

இல்வாழ்வியல்

31. இல்வாழ் வுயர்வு

  1. இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல்.
இல்வாழ்வு என்பது குடும்பத்துடன் வாழ்வது ஆகும்.
  1. எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம்.
எதிர்பால் துணையுடன் வாழ்வது மிகச் சிறந்தது ஆகும்.
  1. இல்வாழ் வார்கட னில்லற மியற்றல்.
இல்வாழ்க்கைக்கு உரிய விதிகளைப் பின்பற்றி நடத்தலே இல்வாழ்க்கை நடத்துபவரின் கடமை ஆகும்.
  1. என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம்.
எப்பொழுதும் விவசாயத்தில் ஈடுபடுவதே இல்லறம் ஆகும்.
  1. இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே.
இல்வாழ்க்கை நடத்துபவர் இல்லை எனில் இவ்வுலகம் இல்லை(ஏனெனில் இவரே எல்லோர்க்கும் உணவளிப்பவர்)
  1. இன்னிலை யெவற்றினு நன்னிலை யென்ப.
மக்கள் நான்கு நிலைகளில் வாழ்ந்தனர்.
பிரம்மச்சர்யம் -திருமணத்துக்கு முந்திய கல்வி கற்கும் பருவம்.
இல்வாழ்வான் -திருமணம் செய்து வாழும் பருவம்.
வானப்பிரசுதம் -திருமணம் செய்து இல்வாழ்க்கையில் தமது கடமைகளை முடித்துத் துறவறம் எய்தும் பருவம்.
சந்நியாசம் – துறவு வாழ்க்கை.
இல்வாழ்க்கை நிலை என்பது மற்ற மூன்று நிலைகளைவிட சிறந்த நிலை ஆகும்.
  1. எந்நிலை யவர்க்கு மில்வாழ் வார்துணை.
எல்லா நிலையில் வாழ்பவர்களும் இல்வாழ்வாரைச் சார்ந்தே வாழ்கின்றனர்.
  1. அந்நிலைப் பெருக்கே யரசென வறிக.
குடும்ப அமைப்பின் மிகப் பெரிய வடிவமே அரசாட்சி ஆகும்.
  1. அதற்கா நன்முத லன்பெனும் பொருளே.
குடும்ப அமைப்பின் மூலதனம் அன்பே ஆகும்.
  1. அதிலாம் பயன்க ளறமுத னான்கே.
இல்வாழ்வான் அறம், பொருள், இன்பம், வீடுபேறு இவற்றை அடைவான்

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum