Skip to main content

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

அகரமுதல

எனக்குப் பிடித்த திருக்குறள்!

     தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது.
    எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும் அதில் மறைந்திருக்கும் நுட்பமான பொருள்கள் என்னை அதிரவைக்கின்றன. அந்தக் குறள்.
        “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
         சான்றோன் எனக் கேட்டதாய்  (குறள்-69)
    ஒரு குழந்தையை ஒரு தாய் ஈனுகின்ற சமயத்தில்  மகப்பேற்று நேரவழி, குழந்தை பிறக்க   வேண்டும் என்ற அச்சம், தாதி மற்றும் மருத்துவரின் அறிவுரைப் பேச்சு, அந்த ஒரு பொழுதிற்காகப் பத்துமாதங்கள் காத்திருந்த நிலை,
இதற்குக் காரணமான கணவன், தானும் இவ்வாறுதானே நம் தாயிடம் இருந்து பிறந்தோம் என்ற நினைவு, தந்தை, தாய், பக்கத்துவீடு, எதிர்த்த வீட்டுக் குழந்தைகள், எளிதாகக் குழந்தையைப் பெற்றுவந்த தன் தோழி, என்று பல நிலைகளைச் சிந்தித்து, விலா எழும்புகளை வளைத்து, முண்டி வரும் குழந்தையை முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெளிவரச் செய்த அந்தக்கணத்தில், அந்தப்பொழுதில், கண்கள் சோர்ந்து மூடியிருக்க, மயக்கத்தில் பசியும் சூழ்ந்து உடல்முழுக்க வலியால் துடித்த நிலையில், கண் பார்க்க இயலாத நிலையில் ‘வீல்’  என்ற குழந்தையின் அழுகுரல் கேட்ட பொழுதில் கிடைக்கும் இன்பம் உணர்ந்தவர்க்கே விளங்கும்.
    தெய்வப்புலவர் திருவள்ளுவர் தானே தாயாய் மாறி அந்தப் பொழுதிற்குச் சென்று அந்தத் தாயின் இன்ப உணர்ச்சியை உணர்கின்றார். பெரிதுவக்கும் நிலைகள் பெண்ணுக்குப் பல இருப்பினும், அவள் தாய்மை அடையும் அந்தப் பொழுதில் கிடைக்கும் உவகை பெரிதாகும்.
    எனிய மனிதன் ஒருவனுக்கு வயிற்றுப்பகுதியில் எற்படும் வலி அவனைத் தற்கொலைக்குத் துண்டிவிடும். சில சமயம் கொண்ட கொள்கைகளை எல்லாம் கூட அழித்துவிடும்.“திருநாவுக்குகரசர் அப்பராய்” மாறியது வயிற்று வலியால்தானே? ஆனால் குழந்தை ஈனுகின்ற நேரத்தில் அந்த வலி மிகச்சிறிதாய் போகச் செய்யும் அந்த நேர உவகை.      
      ஆனால் அதை விட ஒரு பேருவகை எப்பொழுது வரும். தன் மகன் திருமணத்தில் அவனுக்கு குழந்தைப் பேறு கிடைத்த நேரத்தில், அல்லது அவனுக்கு வேலை கிடைத்த நேரத்தில் அமையுமா? என்றால் ஒரு போதும் இல்லை எனலாம். அதற்குச் சமமான ஒரு நிலை தாய்க்குத் தலைமகன் பிறந்த பொழுதிற்கான இன்பம் ஒரு போதும் பின் வாராது  என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால் அதனை விட ஒரு பொழுது உண்டு.என்கிறார் வள்ளுவர் எங்ஙனம்? கண் குழந்தையைப் பார்ப்பதற்கு முன்பு குழந்தையின்  ‘வீல்’  என்ற சத்தம் அவளுக்கு இன்பம் தருகின்றது.
 “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல” (குறள்-1100)
என்ற நிலை மாறி கண்பார்க்கும் முன்னே ஒலி தந்த இன்பம் ஈன்ற பொழுது. அது ஒளியை புறம் தள்ளிய ஒலியின் தருணம். அதே போன்ற தருணம் ஒலியின் மூலமாகவே வருதல் வேண்டும். அது குழந்தை வளர்ந்து மனிதனாகி, தன் செயல்களால், அறிவினால் அன்பால் கனிந்து தலைவனாகி சிறந்த பண்புடன் திகழும் போது, ஆன்றோர் அவையில் “இவன்தந்தை என்னோற்றான் கொள்” என்று அவை வியப்ப, அவ்வவையில் “இவன் சான்றோன்” என்று ஒரு தாயின் காதில் சான்றோரின் வாக்கு(ஒலி) விழும் சமயத்தில் ஈன்ற பொழுதினால் பெரிதுவப்பாள் என்கின்றார் திருவள்ளுவர்.
வயது முதிர்ந்த தாய் கண் பார்வையின்றிக், கூட்டம் நிறைந்த அரங்கில் தொலைதூரப் பார்வையின்றித் தம் மகன் எங்கிருக்கின்றான் என்று தட்டுத்தடுமாறும் நிலையில் வேறொருவரின் குரலில் இவன் சான்றோன் எனக் கேட்ட நேரத்தில் உள்ள இன்பம் அளவிடற்கரியதுதான். ஆனால் பெரிதுவத்தல் என்றால் பேரின்ப நிலை என்று கொள்ளலாம். உயிரோடு இருக்கின்றேன் என்று மெய்ப்பிப்பதற்காகக் குழந்தை ஒலி யெழுப்பியதும், ஆம் அவன் உயிரோடும், மக்கட்பண்போடும் வாழ்ந்தான் என்று சான்று தந்த சான்றோரின் வாக்கு பேரின்பம் தருவது என்பதை எந்த வலியும் இல்லாமல் வந்த உவகை. வலியில்லாமல் நல்வழியில் கிட்டிய சன்மானம், வலியில்லா இன்பம். 
    இன்னும் ஒரு நுட்பமான செய்தியும் இந்தக் குறட்பாவில் ஒளிந்துள்ளதாக நான் கருதுகின்றேன் நமது தமிழ்ச்சமூகம் தாய் வழிச்சமூகம், சிக்மன் பிராய்டு என்ற மேல்நாட்டு அறிஞன் பால் கவர்ச்சியினால் தந்தையின் பாசம் தலைமகள் மீதும், தாயின் பாசம் தலைமகன் மீதும் அதிகம் இருக்கும்; அஃது ஒரு இனக்கவர்ச்சியின் தாக்கம் என்ற கொள்கையைக் கூறியுள்ளார்.
    ஆயினும் பாச உணர்ச்சி என்ற ஒரு நிலை தந்தையைவிடத் தாய்க்கே தருவது தமிழினம். கருணை, அன்பு, பாசம் என்று சொல்கின்ற நேரத்தில் பெண்ணும், தாயுமே மணக்கண்முன் வருவர். குறிப்பாக ஒரு பெண்ணுக்கு 2000 ஆண்டுகட்கு முன் தமிழினத்தின் மரியாதை தருவது நன்மக்கட்பேறு ஆகும்.  எனவே தான் மலடி என்ற சொல்லை நீக்கியது, உயாந்த நிலையாகும் “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்ற தமிழன் பெண்டிற்கு தரும் உயர்வு மாநிலத்தைப் பெருமைப்படுத்துவதாகும்.
“இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோவாதார் (குறள்-270)
என்று வாழந்தது திருவள்ளுவர் காலம். துறவு நிலையில் உள்ள சிலரைக் காப்பதற்காகப் பலர் இல்லறத்தில் வாழ்ந்த காலம். இல்லறத்தின் மாண்பு விருந்தோம்பல்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
   நல் விருந்து வானத்தவர்க்கு” (குறள்-86)
என்றெல்லாம் வாழ்ந்த காலம். ஒரு பெண் திருமணம் புரிந்து கணவனுடன் பெருமையோடு வாழ்வதை விருந்தினரும், துறந்தாரும் வாழ்த்துவார்கள். ஆயினும், கணவன் இல்லாத நேரத்தில் விருந்தினர்கள் வீட்டிற்கு வருவதில்லை.
கண்ணகி கோவலன் பிரிந்த நிலையில் கலங்கியது கூட ஆன்றோர்க்கு அமுது படைத்திட இயலாமைக்கே! ஆயினும், ஆண்மகன் வீட்டில் இருக்கின்றபோது விருந்தினர் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது. சிறுத்தொண்டர் கதையில் கூட, பைரவ வேடதாரியைச் சிறுத்தொண்டர் மனைவி அமுதுண்ண அழைக்கையில் ஆண்பிள்ளை இல்லா வீட்டில் அடியார்கள் அமுதுண்பதில்லை. யாம் அருகில் உள்ள வாதாபி விநாயகர் கோவிலில் காத்திருப்பதாகச் சொல்லி செல்வதும் இக்கருத்திற்கு வலு சேர்க்கிறது.  எனவே தான் தலைமகனின் வரவு  தலைமகளின் வரவைவிட தாய்க்கு இனிமை தருகின்றது. தமிழனின் இந்த உயர்வு நிலை எங்கே!.
 சிக்மன் பிராய்டின் பாலுணர்ச்சி தத்துவம் எங்கே?..
 தமிழனின் வாழ்வியல் உன்னதத்தை இக்குறட்பாவில் தருகின்றான் வள்ளுவன்.
அத்துடன் தன்மகன் பொருள் ஈட்டி விருந்தோம்பல் செய்ய வழிவகுப்பான் என்ற பெருமையும் ஒரு சேர அவளுக்கு உவகை வரும் தருணம். பயணத்தை தொடங்கி மீண்டும் சிறப்பாக வீடுவந்து சேர்ந்தபிறகு, இறைவனுக்கு நன்றி கூறுவதைப் போன்று தனது பிறவிப்பயனை அடைந்ததாக உணர்கின்றாள் தாய.; பெண்ணின் அணிகலன்களை சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. மணிமேகலை, சிலப்பதிகாரம் என்று பெரும் காப்பியங்களாக ஆக்கிய தமிழன் பெண்கள் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்பது பிறர் வாயால்தான். குறிப்பாகக், கணவன் அல்லது அக்கம்பக்கத்தினர் கூறுகின்ற சொற்களால் என்று பெரும்பாலோர் பொருள் கூறுகின்றனர்.  என்றாலும் அதனை நேரடியாகக் கேட்கும் இன்பத்திற்கு, ஈடாகுமா?
ஆயினும். எனக்கு அதற்கு மாற்றுக் கருத்து உண்டு. பெண்ணைப் போற்றுகின்ற சமூகத்தில் ஒரு மனிதனைச் சான்றோன் என்று சான்றளிக்கும் அவைகளில் எல்லாம் தாயின் முன்னிலையிலேயே செய்கின்ற அவை திருவள்ளுவர் காலத்தில் இருந்திருக்க வேண்டும்.
“ஈன்றவள் கேட்க விருதுகள் ;(Convocation, Prize Distribution)  வழங்கும் மரபு தமிழ்மரபு” அது சிறிது சிறிதாக மாறிப் பெண்களைப் புறந்தள்ளிய காலமாக மாறிப்போனது என்றும் நான் கருதுகின்றேன்.
இக்குறட்பாவில் நுட்பமான செய்திகள்:
  1. ஓளியை ஒலி  முந்தும் – சில இடங்களில்
  2. துன்பம் கூடிய  இன்பம் – துன்பமில்லா இன்பம் என்ற நிலை உண்டு
  3. தமிழன் விருந்து போற்றும் மாண்பால் சிக்மன் பிராய்டு சொல்லும் கோட்பாட்டை வென்றவன்
  4. தகுந்த அரங்கில் தாயின்முன் சான்றோர் தரும் பாராட்டும் அவை அமைப்பு தமிழர்கள் வாழ்வின் ஒரு பகுதி.
  5. பெண்மையைப் போற்றுவதின் மூலம் ஆண்மையைப் போற்றுவது இக்குறள்.
 எனவே, தமிழனின் நாகரிகத்தை பெருமைப்படக்கூறும், இக்குறட்பா எனக்குப் பிடித்த குறட்பாவாகும். காந்தியைப்போல், அப்துல்கலாம் போல் உலகம் முழுதும் தன்மகனைச் சான்றோன் என்று ஒலிக்க அவ்வொலியைக் கேட்டதாயின் செவி தரும் இன்பம், பேரின்பம் என்றால் மிகையாகாது. “சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன். ஆதை மெய்ப்பிக்கும் அரங்கு ஈன்று புறந்தந்த தாய்” தமிழனின் மாண்பு என்னே! என்னே!!
வாழ்க வள்ளுவம்!
வளர்க வையகம்!
இரெ. சந்திரமோகன்
மேனாள்  முதல்வர். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி. தேவகோட்டை

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்