Skip to main content

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்

அகரமுதல

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3

பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல் தளி என்றும் அதன்பின் தள்ளிவிழும் மழைத்துறல் துளி என்றும் வேறுபடுத்தி மழை நீரை (திவலை) உண்டு வாழும் வானம் பாடியானது நீரின்றி தேம்பினாலும் காவிரி பொய்க்காமல் நீர் வழங்கும் என்ற நுணுக்கம் சார்ந்த கருத்தியலை உணர்த்தும் செய்தியும்,
‘‘கொழுங் காற் புதலமொடு செருந்தி நீடி 

எனும் பாட்டுத் தொகுதியில் மருதநிலத்தின் ஊர் புகுந்து முரண்பட்டோரை ஓடச்செய்து அவர்களது ஊர்களைப் பாழ்படுத்தியதால் நெல் விளைந்த கழனிகள் குவளை மலர்களோடு பிறமலர்கள் மலர்ந்திருந்த பொய்கைகளும் அழிய அதன் உருத்தெரியாமல் மறைவுற்ற அந்த இடங்கள் இரலை மானும் அதன் துணையும் பிளையாடும் இடமாக மாறிதாகவும் அம்பலத்திலுள்ள நெடுந்தூண்கள் பாழ்பட்டு சாய்ந்திருந்த நிலையில் அவற்றின் மீது ஆண் யானைகளும் பெண் யானைகளும் உராய்ந்தனவென்றும் திருவிழா காலத்தின் ஆரவாரம் முடிவு பெற்று விழா மன்றங்களில் நெருஞ்சிப்பூக்கள் பூத்தும் அருகம்புல் தழைத்தும் நரிகள் ஊளையிட்டும் கோட்டான்களும் ஆந்தைகளும் அலறி கூக்குரல் இட்டன என்பதை பதிவு செய்துள்ள பாடலில் கானுயிர்களான யானை, ஆந்தை, கோட்டான், நரி, இரலை மான் போன்றவை வந்து போவதைக் காணுகையில் முக்கியமான செய்தியாக இரலைமான் பற்றிய செய்தியை உணர்ந்தால் “திரிமருப்பு இரலை” என்று இதன் பெயர் என்பதும் இதனை பிற இலக்கியங்களான இராமகாதை “இரலைமான் குன்றம்” (ரிசிபமுக பருவதம்) என்று கூறியிருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
சங்க இலக்கியம் காட்டும் சில பறவைகள் பற்றிய செய்திகளின் சாரமாக வலியன் வங்கா, கிளி, வானம்பாடி முதலியவற்றை காண்போம்.
வலியன்
இதைக் காரி என்றும் வலியன் என்றும் நிகண்டுகள் குறிக்கும். பிளவை, கஞ்சணம். கயவாய், கிகிணி, கஞ்சரீடம் என்ற பெயர்களும் உண்டு மலையமான் என்ற வேளிர்குடித்தலைவன் தன் குலப்பெயராக இப்பறவையின் பெயரான காரியை கொண்டிருந்ததால் அவனுக்கு திருமுடிக்காரி என்ற பெயரும் கொல்லி மலையை ஆண்ட வில்லில் வல்ல வல்வில் ஓரி தன் குலப்பெயராக ஓரியை (நரியை) கொண்டதால் அவனுக்கு வல்வில் ஓரி என்ற பெயரும் வழங்கியுள்ளதாக வரலாறு காட்டுகிறது. வலியின் (காரி) கண்களைப்போல் கண்ணன் என்ற புலவருக்கு இருந்ததால் அவருக்கு காரிக்கண்ணன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வழக்கத்தை “கட்சியுட் காரி கடிய குரலிசைத்து காட்டும போலும்” என்று குறிக்கின்றது.
‘‘ஆனை இறாய்ஞ்சி “ என்ற பழந்தமிழ்சசொல் காரியின் பெயராக காட்டப்படுகிறது. அதற்குரிய கரணியம் எதுவெனில் பிற வலிய பெரிய பறவைகள் இரைதனைக் கொண்டு செல்லும் போது அவற்றைத் தாக்கி அந்த இரையைத் தட்டிப்பறித்துச் செல்வதால் (இறாய்ஞ்சி-தட்டிப்பறித்தல்) அதற்கு இப்பெயர் ஏற்பட்டதாகவும் இதன் வலிமை பிற பறவைகளை விஞ்சியிருப்பதால் இப்பெயர் இட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரட்டைவால் கரிச்சான் அல்லது துடுப்புவால் கரிச்சான் அல்லது மலைவாழ்கரிச்சான் என்ற இரட்டை வால்பகுதியைக் கொண்டு இயல்பான கரிச்சானை விடச் சற்றுப் பெரியதாகவும் முரலில் ஒருவித கரகரப்பு மிகுந்த ஒலியை எழுப்புவதால் “கரிச்சுக்கொட்டும் ஒலி” என்று இதனைக் குறிக்கின்றது. கரிச்சுக்கொட்டும் ஒலியுடன் கத்துவால் இந்த ஒலியைப் போல் பூசலுக்கிடையில் நடைபெறும் உரையாடலில் கூட கரிச்சுக்கொட்டுகிறாள்(ன்) என்பதைக் கேட்கலாம். இக்குருவிக்குக் “காரடை” என்ற பெயரும் உண்டு. பறவைகளுக்கு அந்தக்காலத்தில் சாத்தன் சாத்தி என்று உயர்திணைப் பெயர்களை இடும் வழக்கம் உண்டு. அதன் அடிப்படையில் துடுப்புவால் கரிச்சானுக்கு ‘காரடையான் சாத்தான்’ என்ற பேரும் உண்டு. இதற்கு மற்றுமொரு காரணமாக, கரவடமுடைய பண்பினைத் (தந்திரமாக ஏமாற்றும் பண்பு) இப்பறவை கொண்டுள்ளதால் பூனைபோன்று குரல் எழுப்பி வேடர்களை திசைதிருப்பித் தப்பிச் செல்லும் பறவை என்பதால் ‘காரடையான்’ என்று அழைக்கப்படுவதாக மலையாள நாட்டில் தமிழ்நாட்டின் எல்லையோரப்பகுதியில் பொதுவாக வழங்கும் செய்தி; பிற பறவைகளின் (பெரிய பறவைகள் உள்பட) கண்களைத் தன் சிறகால் காயம் உண்டாக்கி அல்லது தாக்கிவிடும் பழக்கம் என்பதால் இதை பறவைகளின் அரசன் என்று அடைமொழியுடன் அழைப்பதும் உண்டு. தமிழில் ‘கோக்கயம்’ என்ற பட்டப்பெயர் உண்டு அதற்கும் பறவைகளின் அரசன் என்ற பொருள் காணலாம். 
இப்பறவை மரத்தின் உச்சியில் கூடு கட்டியிருந்தால் அந்த கூட்டுக்குக் கிழேயுள்ள கிளைகளில் பிற சிறு பறவைகள் கூடு கட்டி வாழுவதாகவும் அதனால் கரிச்சானின் பார்வைக்கும் தாக்குதலுக்கும் பயந்து போய்ச் சிறுபறவைகளை வேட்டையாடும் பெரிய பறவை ஒருங்கிச் சென்றுவிடும் என்றும் பறவையியல் வல்லுநர்கள் குறிப்பர். அதனால் வடமாநிலங்களில் இதற்கு காவல் பறவை என்ற பெயரும் உண்டு.
ஆப்பிரிக்காவில் சினம் மிகுந்த சிறுத்தையின் பெயரால் இப்பறவை அழைக்கப்படுகிறது. அதனால் இப்பறவையை புறப்பொருள் வெண்பாமாலை
‘‘வெட்சி மலையவிரவார் மணி நிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்
என்று சிறப்பிக்கும்.
வங்கா
இப்பறவையின் உடல்பகுதி மஞ்சள் கலந்த கருப்புக் கோடுகள் நிறைந்தாக இருக்கும். மாம்பழத்தான் என்றும் மாங்குயில் என்றும கூறுவர். ஆனால் இது குயில் வகை அல்ல. இப்பறவைக்கு சங்கக் காலத்தில் ‘வங்கா’ என்று பெயர்
‘‘வங்காக் கடந்த செங்காற் பேடை. . . . . . . . . . வென்னாது”
என்று குறுந்தொகைப் பாடலில் வங்கா என்ற பறவையின் பேடையின் மேல் எழால் என்னும் வல்லூறு வீழ்ந்ததால் ஆண் வங்கா நிங்கப்பெற்ற பேடை வங்கா குழலிசைபோல குறுகிய ஒலியுடன் பலதடலை அகவியதாக கூறப்படுகிறது. மயிலின் குரலுக்கு ‘அகவுதல்’ என்பதைப்போல் வங்காவின் குரலுக்கும் அகவுதல் என்ற சொல் தொன்மைநாளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம்.
வேய்ங்குழலின் ஓசையைப்போல் இதன் குரல் இருப்பதாலும் வங்கியம வங்கால் போன்ற இசைக்கருவிகள் தமிழில் உள்ளதாலும் வங்கு என்ற வேர்ச்சொல்லுக்கு உள்ளே துளையாக இருக்கும் பொருள் என்பதை வரையறுத்துக் கூறுவதால் மூங்கிலால் ஆன இயத்தை (புல்லாங்குழல்) ‘வங்கியம்’ என்றும் ஆச்சாமரத்தால் ஆன நீண்ட குழல் கருவியான நாயனத்தை ‘பெருவங்கியம்’ என்றும கூறுவதை ஒப்புநோக்கினால் ‘வங்கா’ என்ற பெயர் சாலப்பொருத்தம் உடையது என்பதை உணரலாம். இதில் கருப்புவங்கா, செவ்வரி வங்கா என்ற இருவகை உண்டு.
செந்தார்க்கிளி

கிளிகளில் பதினேழுவகை உண்டென்று பறவையியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிறுகிளி வகைதான் செந்தார்க்கிளி என்பதாகும். இதன் அழகு வடிவும், தோற்றம், அமைப்பு இவற்றை பேசவந்த இலக்கியமான அகநானூறு ‘‘எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச். . . . . . . . . உயிர்த்தன பால் நாள்” என்று குறிக்கும் வானத்தில் தோன்றுகின்ற வானவில்லை போன்று இருமுனையும் சேராத பச்சைமாலையை கழுத்தில் அணிந்துள்ள சிறுகிளி என்றும் ‘‘தார்” என்ற சொல்லுக்கு இருமுனைகள் ஒன்று சேராத மாலை என்பதால் அதைக் குறிக்கும் வகையில் ஆண்கிளியின் செந்தாரிலும் , பெண் கிளியின் பைந்தாலிலும் முனைகள் ஒன்று சேர்வதில்லை என்பதை,

‘‘பைந்தாட் செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம்
செந்தார்க்கிள்ளை நம்மொடு கடிந்தோன் என்று அகநானூறும்
ஏனற் செந்தினைப் பாலார் கொழுங்குரல்
குறுகிளி கடிகஞ் சென்றும். . . .
 என்று நற்றிணையும் பேசும்.
இதுபோல பல உயர்ந்த சிறப்புமிக்க செய்திகளை உள்ளடக்கிய பழந்தமிழ் இலக்கிய பனுவல்களில் விரவியுள்ள வனவியல் செய்திகளை திரட்டினால்  அவற்றைப் படலமாக தொகுக்கலாம்.

அரவரசன்வனஅலுவலர்தேவக்கோட்டை
– சிறகு, பிப்., 23.02.2019 

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue