Monday, August 21, 2017

முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து -இரெங்கையா முருகன்
முத்துக்குமாரசுவாமி எனும் நூலக நல்முத்து

  தமிழ் ஆய்வுலகில் மிக  முதன்மையான இடத்தை வகிப்பது மறைமலையடிகள் நூலகம். அந்த நூலகத்தின் தோற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் தாமரைச் செல்வர் வ.சுப்பையா(பிள்ளை). அந்த நூலக வளர்ச்சிக்குத் தனது அளப்பரிய ஆற்றலைச் செலுத்தியவர் அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசுவாமி. ‘நூலக உலகில் நல் முத்து’ என்று போற்றப்படும் முத்துக்குமாரசுவாமி (வயது 80) கடந்த செவ்வாய் அன்று காலமானார்.
  உலக அளவில் தமிழ் அறிஞர்கள் பலரின் ஆய்வுகளில் உதவியவர் முத்துக்குமாரசுவாமி. தமிழாய்வு தொடர்பான குறிப்புதவிகளைத் தனது நினைவுகளிலிருந்தே தந்து உதவுவார். கிடைக்காத குறிப்புகள் எங்கே கிடைக்கும் என்பதையும் கூறி, அவை கிடைக்கவும் ஆவன செய்யும் தன்மை இவருக்குண்டு என்று பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ம.இரா. அரசு குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் முதல் முயற்சி!
  மறைமலையடிகள் நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக முத்துக்குமாரசுவாமி பதவிவகித்தபோது பல முன்மாதிரியான முயற்சிகளை முன்னெடுத்தார். ‘இந்திய நூலகத் தந்தை’ என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சார்ந்த  எசு.ஆர்.இரங்கநாதனின் ‘நிறுத்தக்குறி பகுப்பு முறை’ (Colon Classification System) உலகின் மிக முதன்மை நூலகப் பகுப்பு வரிசைப் பட்டியலில் இடம்பெற்றது. நிறுத்தக்குறி பகுப்பு முறையைப் பயன்படுத்தி இந்தியாவில் முதல்முயற்சியாக எசு.ஆர்.இரங்கநாதனும் முத்துகுமாரசுவாமியும் இணைந்து தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் மூலமாக 39 ஆண்டுகளில் வெளியான 1,008 நூல்களையும் பகுப்புப் பட்டியலிட்டு, நிறுத்தக்குறி பகுப்பு முறையின் குறியீடுகளுக்கு மாற்று அட்டவணை கொடுத்தனர். கூடவே, உரோமன் எழுத்துகளுக்கும், பகுப்பு எண்களுக்கும் இணையாகத் தமிழில் பட்டியல் எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு முன்மாதிரியான நூல் பட்டித் தயாரிக்கப்பட்டு வெளியானது.
  கழக வெளியீட்டின் ‘பாராட்டு விழா நூல்பட்டி’ வெளியாவதற்கு முன்பு, 1934- இல் கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம் 1893 முதல் 1933 வரை வெளியான புத்தகப் பட்டியலை வெளியிட்டது. இரண்டாவதாகப், பிரித்தானிய நூலகத்தாரால் 1949- இல் ‘பிரித்தானிய தேசிய நூல் பட்டி’ வெளியானது.  இத் தேசிய நூல்பட்டிப் பதிப்பாசிரியர்,  தாங்கள் எசு..ஆர்.இரங்கநாதனுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், இந்த நூல்பட்டி வெளியாக அவரது கருத்து தங்களுக்கு உந்துதலாக இருந்தது என்றும் குறிப்பிடுகின்றனர். மூன்றாவதாகத் தமிழகத்தில் கழகப் பாராட்டு நூல்பட்டி வெளியாகி நூற்பதினிடுமுறை(லிப்ராமெட்ரிக் ஆய்வு)க்கு முன்னோடியாக இந்தப் பகுப்புப் பட்டியல் விளங்கியது. இந்தப் பகுப்புப் பட்டியலைத் தயாரிக்கும்போது எசு.ஆர்.இரங்கநாதன் 100 மணிநேரமும் முத்துக்குமாரசுவாமி 1,000 மணி நேரமும் செலவிட்டு இந்தியாவில் முதல்முயற்சியாக இதை முன்னெடுத்துச் சென்றனர். இந்திய அளவில் கழக வெளியீட்டுப் புத்தகங்களின் முகப்புத் தலைப்பில் கோலன் பகுப்பு எண் இட்டு அனைத்து நூல் களும் வெளியாவதற்கு உறுதுணையாக இருந்தவர் முத்துக்குமாரசுவாமி.
நிறுத்தக்குறி பகுப்புக்கு முதலிடம்
  தமிழகத்தைச் சார்ந்த எசு.ஆர்.இரங்கநாதனின் நிறுத்தக்குறி பகுப்புப் பட்டியல் உலக அளவில்  முதன்மை பெற்றாலும் காலப்போக்கில் தமிழகத்தில்கூடத் தொடர முடியாமல் கைவிட்டனர். ஆனால் மறைமலையடிகள் நூலகத்தில் நிறுத்தக்குறி பகுப்பு முறையில் புத்தகங்களை வரிசைப்படுத்தி இரங்கநாதனுக்கு புகழைச் சேர்த்தவர் முத்துக்குமாரசுவாமி.
  குறிப்பாக, ஆய்வுக்குச் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கும், உடனடியாகத் தகவல்களைப் பெறுவதற்கும் தமிழ் ஆய்வாளர்களுக்காகப் பல்வேறு நூலடைவுகள் செய்துவைத்தவர் முத்துக்குமாரசுவாமி. ‘செந்தமிழ்ச்செல்வி’ மாத இதழின் ஆசிரியராக அவர் இருந்தபோது அந்த இதழில் தொடக்கக் காலத்திலிருந்து வெளியான கட்டுரைகள் அனைத்தையும் தட்டச்சுசெய்து நூலடைவு செய்திருந்தது அந்தக் காலகட்டத்தில் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
இந்தி எதிர்ப்புப் போர் ஆவண காப்பகம்
1948, 1965-களில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துப் பல இதழ்களில் வெளியான செய்திகளை முத்துக்குமாரசுவாமி ஆவணப்படுத்தி நல்ல முறையில்  கட்டிட்டு(பைண்டிங் செய்து) ஆவணப்படுத்தினார். அதேபோல், பல சமய, தோத்திர, துதி, சிறு-குறு நூல்கள்,  பாடற்செய்தி (குச்சிலி / குசிலி) பதிப்பு சில்லறைக் கோர்வைப் புத்தகங்கள்  முதலான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைக் கட்டிட்டுப், பக்க எண் இட்டு முகப்பு பக்கத்தில் அனைத்து நூலுக்குமான பட்டியலை அழகு தமிழில் எழுதிய ஆவணங்கள் அவருடைய சீரிய உழைப்புக்குச் சான்றுகள்.  குடியேற்றக் காலகட்டத்தில் முற்கால அச்சுக்கூடங்கள் வழியாக வெளியான பல அரிய நூல்களைத் துறைவாரியாகப் பட்டியலிட்டதோடு மட்டுமல்லாமல் அனைத்து அரிய நூல்கள், இதழ்களின் வரலாறு குறித்த தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் முத்துக்குமாரசுவாமி.
பன்முகப் பொறுப்புகள்
  நூலகராக மட்டுமல்லாமல் பதிப்பாளராகவும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப்பணியாட்சிப் பொறுப்பாளராகவும், உலகத் தமிழ் மாநாட்டு பணியாட்சி, மலர்க்குழுக்களிலும், பபாசி பணியாண்மையிலும் தன்னுடைய சீரிய உழைப்பைச் செலுத்தியவர். புத்தக விற்பனையாளர்களிடையே நிகழும் சில சச்சரவுகளை அவருக்கே உரித்தான பாணியில்  இணக்கமாகத் தீர்த்து வைத்ததிலும், நூலக ஆணைக்காக முயற்சி எடுத்ததிலும்,  உடன் பதிப்பாளர்களுக்கு விழா எடுத்துச் சிறப்பித்ததும் (குறிப்பாக வெள்ளையாம்பட்டு சுந்தரத்துக்கு) இவரது பங்களிப்பு உண்டு.
 தமிழாய்வு உலகுக்கு மறைமலையடிகள் நூலகத்தின் பங்கு மகத்தானது என்பதைப் போல முத்துக்குமாரசுவாமியின் தன்னலமற்ற உழைப்பும் முதன்மையானது. முத்துக்குமாரசுவாமியின் இழப்பு நூலகத் துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ் உலகுக்கும் பேரிழப்பு!
-இரெங்கையா முருகன்,
‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர்
.தொடர்புக்கு: murugan_kani@yahoo.com

தமிழ் இந்து 04.08.2048 / 20.08.2017

Friday, August 18, 2017

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 : சந்தர் சுப்பிரமணியன்

அகரமுதல 199,  ஆடி28, 2048  / ஆகத்து 13, 2017

உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3

இதைத் தவிர உங்களின் சொந்தப் படைப்புகள் வேறேதும் உளதா?
சொந்தப் படைப்புகள் என்று நிறையச் சொல்ல முடியாது. ‘சிந்தனைச் சுவடுகள்’ என்கிற என் பட்டறிவு சார்ந்த படைப்பு உள்ளது. இது நான் வாழ்க்கையில் கண்ட – சந்தித்த – நிகழ்வுக் குறிப்புகளின் தொகுப்பு. ஆனாலும், என்னுடைய தமிழ்க் கட்டுரைகள் 8 தொகுதிகளாக உள்ளன. அதில் வரும் அத்தனை கட்டுரைகளும் மொழி, குமுகாயச் (சமுதாயச்) சிந்தனைகள் குறித்தவை. இவை யாவும் நான் பல பல்கலைக் கழகங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் சென்று உரையாற்றிய தலைப்புகள்.
ஆங்கிலத்தில் உங்கள் சொந்தப் படைப்பேதும் உள்ளதா?
இதுவரை இல்லை. ஆனாலும், பல்வேறு செய்தித்தாள்களில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலாகப் பதிப்பிட எண்ணியுள்ளேன்.
தேசிய வேளாண் நிறுவனத்தில் உங்களுடைய பங்கு என்ன?
தேசிய வேளாண் நிறுவனம் திரு சி.சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தது. அது சுவையான நிகழ்வு! அவர் இந்திய முதல் பசுமைப் புரட்சியின் தந்தை எனலாம். ஆசிய வங்கியிலிருந்து பணி ஓய்வு பெற்று 1998ஆம் ஆண்டு இந்தியா திரும்பினேன். திரு சி.எசு., அவர்கள் 2000ஆம் ஆண்டு மறைந்தார். அவர் என் நெருங்கிய நண்பர் என்பதால், அந்த மூன்றாண்டுகளில் அவருடன் மிகவும் அண்மையில் இருந்தேன். அவருடன் உரையாடுவது என்பது அலாதியான இன்பம். அவருடைய 90ஆவது பிறந்த நாள் வரவிருந்ததால், அது குறித்து ஏதாகிலும் விழா வைக்கலாமா என்று கேட்டபொழுது அவர் அதை மறுத்து விட்டு, தான் இரண்டாம் பசுமைப் புரட்சியைக் குறித்துச் சிந்தித்து வருவதாகவும், அதற்காக ஏதேனும் மையம் தொடங்கலாம் என்றும் கூறினார். முதல் பசுமைப் புரட்சி என்பது ‘விதையிலிருந்து தானியம் வரை’ என்று கொண்டால் இரண்டாம் பசுமைப் புரட்சி என்பது ‘மண்ணிலிருந்து சந்தைக்கு’ என்று கொள்ளலாம். தேசிய வேளாண் நிறுவனம் அந்த வகையில் முழுமையான அமைப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது.  அதன் அறங்காவலராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
தமிழ் மொழி – பண்பாட்டு ஆய்வு மையமான ‘மொழி’ அறக்கட்டளையிலும் அறங்காவலராகப் பணியாற்றி வருகிறீர்கள் என அறிகிறேன். அம்மையத்தின் செயல்பாடுகள், அதன் மூலமாக நீங்கள் ஆற்றி வருபவை குறித்து நேயர்களிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்!
முனைவர் பி.ஆர்.சுப்பிரமணியம் என்பவரை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு ‘மொழி’. இவர் கிரியா அகராதியின் தலைமைப் பொறுப்பேற்றவர். கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழ்மொழி சார்ந்த பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொள்வதே இதன் முதற்கடமை. சங்கக் காலச் சொற்களை ஆய்ந்து, அச்சொற்கள் எவ்வாறான வேறுபட்ட பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆயும் பணியைத் தற்போது மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு சொல்லோடு அவற்றுக்கான வெவ்வேறு பொருள்களும், அதன் பொருளில் அமைந்த ஆங்கிலச் சொற்களும் நிரல்படுத்தப்படுகின்றன. இன்னுமோர் ஆய்வாக, சொற்சேர்க்கை அகராதியும் உருவாகி வருகிறது. இதன் மூலம் தமிழில் ஒரு சொல் எவ்வாறெல்லாம் மற்ற சொற்களோடு இணையும் என்பது நிரலிடப்படுகிறது. இன்னுமொரு முதன்மையான ஆய்வு, சங்கக் காலம் முதல் சோழர்கள் காலம் வரை அமைக்கப்பட்ட கல்வெட்டுகளின் உரைகளை ஆய்ந்து அக்கல்வெட்டுகளைப் பல்வேறு வகைமைகளின் கீழ்ப் பிரிக்கும் பணியாகும். இப்பணி மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்னர் சாகித்ய பேராயத்தின்(அகாதமியின்) தமிழ் அறிவுரைக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளீர்கள். அப்பணியில் அடைந்த பட்டறிவு குறித்து?
ஐந்து ஆண்டுகள் அங்கே பணியாற்றினேன். பணியாற்றினேன் என்பதை விட, எவ்வகையில் அங்கு நடைபெறும் பணிகள் சீர்கெடாமல் இருக்க வேண்டுமோ அதற்கான செயல்களைச் செய்து கொண்டிருந்தேன் எனலாம்.
மொழிபெயர்ப்புகள் உண்மையிலேயே ஒரு மொழியின் வளத்தை உயர்த்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
மொழிபெயர்ப்புப் படைப்புகளைப் படித்தால் மட்டுமே இது இயலும்.
இந்திய அளவில் சாகித்திய பேராயம் (அகாதமி)தவிர வேறேதாகிலும் ஓர் அமைப்பு, இந்திய மொழிகளுக்குள்ளேயான மொழியாக்கங்களுக்கு மையமாகச் செயல்படுகின்றதா? இல்லையெனில், அப்படியான ஒரு தேவையை நீங்கள் உணர்கின்றீர்களா?
மைசூரில் உள்ள மத்திய மொழியாய்வு நிறுவனம் அத்தகைய சேவையைச் செய்து வருகிறது. அதைத் தவிர கொல்கொத்தாவில் அது போன்று வேறொரு நிறுவனம் இருப்பதாக நினைக்கிறேன். அரசு அப்படியொரு தேவையை உருவாக்கலாமெனவே நினைக்கிறேன்.
உங்களுடைய நேரம் ஒதுக்கி இந்த நேர்காணலுக்கு உதவியது குறித்து நன்றி! வணக்கம்!
வணக்கம்!
இலக்கிய வேள் சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல், சூலை 2017
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்

நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்அகரமுதல 199,  ஆடி28, 2048  / ஆகத்து 13, 2017


நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 3/3 – நாகலட்சுமி சண்முகம்

  வெறும் படியெடுத்தல் எனப் பொதுவாக அறியப்படும் மொழிபெயர்ப்பை எப்படி ஒரு கலையாக நீங்கள் உணர்கிறீர்கள்?
மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி. தொழிலாக மட்டுமின்றி, அது நம் சிந்தனைத்திறனையும் வளர்க்கும் முறையெனவே நான் கருதுகிறேன்.
மொழியாக்கம் செய்யக்கூடிய நூல்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர்களா?
சில நேரங்களில் தேர்ந்தெடுப்போம்; சில நேரங்களில், பதிப்பகங்கள் அவர்களது தேர்வைச் சொல்வது வழக்கம். எப்படியானாலும், நான் மொழியாக்கம் செய்யும் நூல் தரமானதுதான் என்னும் எண்ணம் ஏற்பட்ட பின்னரே நான் அந்த நூலை மொழிபெயர்க்க ஒத்துக் கொள்வேன். பல நேரங்களில், பாலுணர்வைத் தூண்டுகிற, விடலை வயதினரை இலக்காகக் கொண்ட நூல்கள் மொழிபெயர்க்கக் கேட்டு வந்துள்ளன. எனினும், அவை போன்றவற்றைத் தவிர்த்தே வருகிறேன்.
அத்தகைய நிலையில், மொழி ஆங்கிலமாயினும், படைப்புகளில் விரவி வரும் மொழிப்பயன்பாடும் சொற்றொடர்களும் அம்மண்ணுக்கே உரித்தான குணங்களைக் கொண்டு வருவது இயல்பு. அப்படிப்பட்ட நூல்களை மொழிபெயர்க்கும்பொழுது மொழிபெயர்ப்பில் அவற்றுக்கு இணையாகத் தமிழின் வெவ்வேறு பேச்சு வழக்குகளை ஆளுகிறீர்களா அல்லது நடுநிலையான எழுத்து வழக்கையே பயன்படுத்துகிறீர்களா?
நான் மொழிபெயர்த்தவற்றில் பெரும்பான்மையானவை தன்முன்னேற்ற நூல்கள் என்பதால் அத்தகைய முயற்சிகளில் வழக்குமொழி என்பது கிடையாது; பொதுத்தமிழாகவே இருக்கும். புதினங்கள் நிறையச் செய்ததில்லை. பொதுவாக, நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
உலகளாவிய முறையில் ஆங்கில மொழிபெயர்ப்பு – அல்லது பொதுவாக மொழிபெயர்ப்பு – எப்படி அமைதல் வேண்டும் என்று ஏதேனும் நெறிமுறைகள் உள்ளனவா?
உலகளாவிய நிலையிலும், இந்திய அளவிலும் இதைக் குறித்த பல கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. நான் முழுக்க முழுக்கப் பட்டறிவின் பேரில்தான் செய்து வருகிறேன். என் பட்டறிவின் மூலம் எனக்கென ஒரு கொள்கையை வரையறுத்துக் கொண்டுதான் பணியைச் செய்கிறேன். எடுத்துக்காட்டாக, மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொற்கள் இருத்தல் கூடாது; வடமொழிச்சொற்கள் 99 விழுக்காடு தவிர்க்கப்படுதல் வேண்டும். இலக்கணத் தூய்மையாக வரிகள் அமைதல் வேண்டும். இவற்றைப் போன்று பல நெறிகளை நானும் என் கணவரும் அமைத்துக் கொண்டுள்ளோம். குறிப்பாக, மொழிபெயர்ப்பு என்பதில் மொழிபெயர்ப்பாளரின் சொந்தக் கருத்துகள் அமைதல் கூடாது; அதே சமயம், மூல மொழியின் சொற்களையோ சொற்றொடர்களையோ அப்படியே எழுதுதலும் கூடாது. தமிழின் இயல்பான நடையில் அமைதல் முதன்மையானது.
மொழியாக்கங்களைத் தரம் பிரிக்க வேண்டுமாயின் அதற்கான அளவுகோல்களாக எவற்றை நீங்கள் முன்வைக்கிறீர்கள்?
இலக்கணப் பிழைகளற்ற, சரளமான மொழி நடையுடன் அமைதலே மொழியாக்கத்தின் எதிர்பார்ப்பு. எந்த ஓரிடத்திலும் படிப்பவர் மனத்தை நெருடுதல் கூடாது. பேச்சு வழக்கு வெகுவாக அமைதல் கூடாது. ஒவ்வாத, நடைமுறையில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு முறை பன்னாட்டுத் தொலைக்காட்சி ஒன்றிலிருந்து ஒரு நிகழ்ச்சியின் உரையைத் தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு வந்தது. “நீங்கள் தூயதமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். பேச்சுவழக்கில் அமைதல் வேண்டும்” என்று கேட்கப்பட்டது.
உங்களுக்கான திட்டங்கள் ஏதேனும் உளவா?
என் கணவர் சில நூல்களைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார். நான் இப்பொழுது, குழந்தைகள் வளர்த்தல் குறித்து ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். பின்னர், வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு நூல் எழுதவும் திட்டமிட்டுள்ளேன். கணவன் மனைவி உறவு – பெற்றோர்கள் குழந்தைகள் உறவு – குழந்தைகள் ஆசிரியர்கள் உறவு – ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறவு இப்படியான ஒரு வட்டம் அமைதல் வேண்டும் என்பதால், இந்த நான்கு தலைப்புகளில் என் சொந்தப் படைப்புகளை எழுதுவதாகத் திட்டமிட்டுள்ளேன். அதன் முதல் படியே நான் எழுதிய திருமணம் குறித்த நூல். இன்னும் மூன்று நிலைகள் உள்ளன. எழுதும் இத்தகைய நூல்களின் கருவை மையமாகக் கொண்டு உரையாற்றுவதையும் என் குறிக்கோளாக வைத்துள்ளேன். தற்பொழுதைய நிலையில் இலக்கு என்பது மிகவும் தவிர்க்க இயலாதது. அத்தகைய இலக்குகளை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும், இலக்குகள் அடையும் வழிகள் – முறைகள் குறித்தும் சொல்ல வரும் நூல்கள், உரையாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றைச் செய்வதுமே என்னுடைய எதிர்காலத் திட்டங்கள்.
‘இலக்கியவேல்’ நேயர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகள் ஏதேனும் உண்டா?
நான் என் இளம் வயதில் நிறையப் படிக்கவில்லை; படித்திருந்தாலும் வெறும் பொழுதுபோக்குப் படிப்பே. நல்லவேளையாக எனக்கு நல்ல கணவர் வாய்த்ததால், நான் படிப்பின்பால் வழிப்படுத்தப்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளேன். இளம் வயதில், நம்மை வளர்த்துக் கொள்வதற்கும் நம் திறன்களை உயர்த்திக் கொள்வதற்குமான நூல்களைப் படித்தல் இன்றியமையாதது என உணர்கிறேன். குழந்தைகளுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுதல் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஐம்பது நூல்களையாவது கொண்ட ஒரு நூலகம் அமைத்துக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாதது. நூலுக்குச் செலவு செய்ய மக்கள் தயங்கக் கூடாது. அத்தகைய நிலையே நல்ல ஒரு குமுகாயத்தை (சமுதாயத்தை) உருவாக்கும் என்பதே என் நிலைப்பாடு.
உங்கள் நேரத்தை ஒதுக்கி உரையாற்றியதற்கு நன்றி! வணக்கம்!
வணக்கம்!
இலக்கிய வேள் சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல், சூலை 2017
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்