விடுதலைப் பள்ளு 2017
[இராகம் – முகாரி; தாளம் – சோற்றுத்தாளம்]

பல்லவி
ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று
ஆடுவோமே!

உருவடி-௧
நல்லாரைத் தலைவரென்னும் காலமும்  போச்சே! –  வெற்று
வீணரைக் கொண்டாடும் காலமும் ஆச்சே! – நல்
நீதியே பெரிதென்ற காலமும் போச்சே! – சமய,
சாதிக்கு வாக்களிக்கும் காலமும் ஆச்சே!

ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
அழகான  விடுதலை அடைந்து விட்டோ மென்று
ஆடுவோமே!

உருவடி-௨
எங்கும்  பொதுவரி* என்பதே பேச்சு! – நாம்
எல்லாரும் கிறுக்கரென்று உறுதியாச்சு!
பாரத அன்னைக்குப்போற்றி# என்போமே! – நாம்
பசுக்காக மனிதரையே போடுவோமே!
ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று
ஆடுவோமே!

உருவடி-௩
மீனவர் பிணம்எண்ணும் காலம் வந்ததே! – அணு
மின்சாரம் என்கின்ற காலன் வந்ததே! – இந்தி
தேசம் முழுக்கவுமே ஆள வந்ததே! – உயிர்
தாய்மொழி எதற்கென்னும் நாளும் வந்ததே!

ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
அழகான  விடுதலை அடைந்து விட்டோ மென்று
ஆடுவோமே!

உருவடி-௪
உழவுக்கும் தொழிலுக்கும் பாடை கட்டுவோம்! – நம்
உழைப்பெல்லாம் வெளிநாட்டுக் காகக் கொட்டுவோம்!
மானியம் ஏதும்இனி கேட்க மாட்டோம்! – நல்ல
மாநிலக் கூட்டாட்சியெனப் பேச மாட்டோம்!

ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று
ஆடுவோமே!

உருவடி-௫
நாமிருக்கும் நாடு நமதில்லை உணர்வோம்! – அதை
அம்பானி களுக்கேநாம் விற்று வளர்வோம்!
நாடென்ன செய்ததெனக் கேட்க மாட்டோம்! – ஆதார@
அட்டையின்றி இனி யாரும் சாக மாட்டோம்!

ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே!
அழகான விடுதலை அடைந்து விட்டோ மென்று
ஆடுவோமே!
 – இ.பு.ஞானப்பிரகாசன்

*  GST
 # பாரத் மாதா கீ சே
@ ஆதார்