நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்! 2/3 – நாகலட்சுமி சண்முகம் : சந்தர் சுப்பிரமணியன்
அகரமுதல 198, ஆடி21, 2048 ஆகத்து 06, 2017
நல்ல தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும்!
2/3
நீங்கள் மொழிபெயர்த்த நூல்களின் எழுத்தாளர்கள் – அப்துல் கலாம் தவிர – மற்றவர்கள் அமெரிக்க எழுத்தாளர்கள் இல்லையா?
ஆம்! எனினும், அண்மையில் இந்திய எழுத்தாளரான ஆனந்த நீலகண்டன்
அவர்களின் ‘அசுரா’ என்ற புதினத்தை ‘அசுரன்’ என்ற பெயரில்
மொழிபெயர்த்துள்ளேன். இது இராவணனின் கண்ணோட்டத்தில் இராமாயணம் குறித்த
நூல்.
பொதுவாக, தன்முன்னேற்ற நூல்கள் கட்டுரைகளாக வரும். புதினம் என வரும்பொழுது, மொழியாக்கத்தில்
அதில் வரும் அத்தனைப் பாத்திரங்களின் தாக்கத்தையும் கொண்டு வருதல்
கட்டாயமாகிறது. கட்டுரைகளை மொழியாக்கம் செய்வதற்கும், புதினங்களை மொழியாக்கம் செய்வதற்கும் இடையே உள்ள அந்த வேறுபாட்டை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
உண்மையாகச் சொல்லப் போனால், அது கடினமான வேறுபாடாகத் தெரியவில்லை. ஏனெனில், மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதன்று. கருத்தை உள்வாங்கிக்கொண்டு, அதன் சாரத்தை நம் மொழியில், நம் வழக்குக்கேற்ப எழுதுதலே!
‘அசுரா’ புதின மொழியாக்கத்தின்பொழுது எனக்கு உறுதுணையாக அமைந்தது, அதில்
வரும் உரையாடல். எனக்கு முன்னரே இருந்த நாடகப் பட்டறிவின்(அனுபவத்தின்)
காரணமாக அப்பணி மேலும் இலகுவாயிற்று. திரு.ஔவை நடராசன்
அவர்கள்தாம் அதற்கு அணிந்துரை வழங்கியவர். அவரது உரையில் “இந்த நூல்
பொழிபெயர்ப்புக்கு இலக்கணமாக அமையும்” என்று எழுதியுள்ளார்.
அம்மொழிபெயர்ப்பு மிகப்பெரிய அளவில் எனக்குப் பெயரைப் பெற்றுத் தந்தது.
மேலும், என்னுடைய மொத்த மொழிபெயர்ப்புகளில் எனக்கு மிகவும் பிடித்ததும்
‘அசுரா’தான்.
இதைத் தவிர தன்முன்னேற்றக் கட்டுரைகள் அல்லாத மொழிபெயர்ப்புகள் வேறு ஏதேனும் உள்ளனவா?
இரிசிகேசு(Rishikhesh) மடத்தில் வாழ்ந்து
வரும் பெயர் பெற்ற இறையியல்(ஆன்மிகம்) சொற்பொழிவாளர் தேவி வனமாலி அவர்களின்
‘இராமாயணம்’ என்னும் புதினத்தை மொழிபெயர்த்துள்ளேன். இதுவும் மிக அழகான
நூல்.
சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் போன்றவற்றை மொழியாக்கம் செய்துள்ளீர்களா?
சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை செய்ததில்லை; செய்வதில் விருப்பம் உண்டு. கவிதைக்கான முயற்சிகள் இன்னும் வசப்படவில்லை.
மொழியாக்கத் திறனுக்காக விருதுகள், ஏற்பிசைவுகள் (அங்கீகாரங்கள்) ஏதேனும் கிடைத்துள்ளனவா?
தமிழ்நாட்டில் திரு.நல்லி குப்புசாமி
அவர்களின் ‘திசையெட்டும்’ அமைப்பின் சார்பாக, எனது ‘இறுதிச் சொற்பொழிவு’
என்னும் நூலுக்காக 2014ஆம் ஆண்டு விருது பெற்றேன். அதே ஆண்டு திருப்பூர்
தமிழ்ச் சங்கத்தின் சார்பாக என்னுடைய மொத்த மொழிபெயர்ப்புப் பணிக்காக ஒரு
விருது வழங்கப்பட்டது. அண்மையில், தமிழ்நாடு அரசின் தற்பொழுதைய 2016ஆம்
ஆண்டுக்கான மொழிபெயர்ப்பாளர் விருதும் கிடைத்துள்ளது. இவை தவிர, நூல்களைப்
படித்த, முகம் தெரியாத அன்பர்கள் பலரின் பாராட்டுகள் என்னை மிகவும்
புளகாங்கிதப்படுத்தியுள்ளன.
உங்களுடைய முதல் ஆங்கிலப் படைப்பான ‘மந்திர மணத்தின் மறந்த மறைபொருள்கள்’ (The Forgotten Secrets of a Magical Marriage) குறித்துச் செய்திகளை அறிய ஆவல்! இந்த நூலுக்கான கரு உங்களுக்கு எவ்வாறு தோன்றியது?
இந்த நூல் முதலில் தமிழில் எழுதப்பட்டு,
பின்னர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஒருசேர வெளியிடப்பட்டது. மும்பையில்
பெரியார் சீர்திருத்த முறையில் ஒரு திருமணம் நடைபெற்றது. அதை நடத்தி வைக்க,
தமிழ்நாட்டிலிருந்து அவர்கள் எதிர்பார்த்திருந்த பேச்சாளர் வரவில்லை என்ற
காரணத்தினால், அவர்கள் என்னைப் பேசச் சொன்னார்கள். அதுவரை திருமண
நிகழ்ச்சிகளில் பேசிய பட்டறிவு இல்லாவிட்டாலும், ‘திருமணத்தில் காதலின்
இன்றியமையாமை’ என்ற தலைப்பில் இருபது மணித்துளிகளுக்கு உரை நிகழ்த்தினேன்.
பின்னர் என் கணவர், “இதைப் போன்றே வெவ்வேறு தலைப்புகளில் திருமணத்தைப்
பற்றிய கட்டுரைகள் எழுதிப் பார்” என்றார். அப்படி உருவானதே இந்த நூல்.
உங்களுடைய சொந்தப் படைப்பான இந்த நூலுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?
நான் இதுவரை 60 நூல்களுக்கு மேல் மொழிபெயர்த்து உள்ளதால், என் பெயர் பரவலாக அறியப்பட்டுள்ளது.
என்றாலும், என் படைப்பாக இந்த நூல் வெளியிடப்பட்ட பின்னர் இன்னும்
சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன். தவிர, அதற்கான விளம்பரம் அவ்வளவாக
இல்லை. ஆயினும் அண்மையில் பிரெஞ்சு நாட்டிலிருந்து அன்பர் ஒருவர்
தொலைபேசியில் அழைத்து இந்த நூலின் 40 படிகள் வேண்டுமெனக் கூறினார். ‘தினமணி’ செய்தித்தாளில் திரு.இராமகுருநாதன்
அவர்களின் இந்த நூல் குறித்த நயவுரையைப் படித்த பின்னர், சென்னையிலிருந்து
வழக்கறிஞர் ஒருவர் படிகள் வேண்டினார். இன்னும் பரவும் எனவே நினைக்கிறேன்.
இறைவனிடம் நான் விட்டுவிட்டேன். அதைக் குறித்து நான் ஏதும் விளம்பரம்
செய்வதில்லை.
தமிழிலிருந்து ஆங்கிலத்தில் நீங்கள் மொழியாக்கம் செய்த ஒரே நூல் உங்களுடைய சொந்தப் படைப்பு மட்டும்தானா அல்லது வேறேதேனும் உண்டா?
இல்லை. இதுவரை இந்த ஒரு நூலே அவ்வாறு அமைந்தது. ஆனால், எனக்கு ஆர்வம் உள்ளது. என்னுடைய தாத்தாவின் நூலான ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் எனும் ஆவல் எனக்கு வெகு நாட்களாக உள்ளது. இன்னும் நேரம் வரவில்லை.
உங்களுடைய நூலை எழுதிய பிறகு, “நாம் ஏன் இன்னும் பிறர் எழுதிய படைப்புகளை மொழியாக்கம் செய்து கொண்டிருக்க வேண்டும்” என்ற எண்ணம் ஏற்பட்டதா?
இல்லவே இல்லை! மொழிபெயர்ப்புப் பணியே
எனக்கு எழுதும் பழக்கத்தைக் கொடுத்துள்ளது. அதற்கு முன்னர் நான்
படித்ததுமில்லை; எழுதியதுமில்லை. எனவே, எனக்கு நீங்கள் சொல்லும் வண்ணம்
எண்ணம் ஏற்பட்டதே இல்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கிருந்த சிந்தனை
வளம் இம்மொழிபெயர்ப்புப் பணிகளால், கண்டிப்பாக இப்பொழுது மிகவும்
செறிவடைந்துள்ளது எனலாம். அச்செறிவே எனக்கு ஊக்கம் அளிக்கிறது.
(தொடரும்)
இலக்கிய வேள் சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல், சூலை 2017
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
Comments
Post a Comment